1. கே: சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை மாற்றப்படாமல் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் மறு வரையறை செய்ய முற்படுவது ஏற்புடையதா?
– கே.கோபி, திருவண்ணாமலை.
ப: பொதுவான முந்தைய நடைமுறையில் முதலில் இதைச் செய்து, பிறகு தொகுதி என்ற இந்த நடைமுறை எல்லாம் ஒன்றிய அரசு அதிகாரத்தில் என்பதால் அவர்கள் நினைப்புப்படி– விருப்பப்படிதானே எல்லாம் நடக்கும்? – அரசமைப்புச் சட்டமே பல ஆணைகள், சட்டங்கள் மூலம் வளைக்கப்படுகிறதே! இது மட்டும் என்ன அதிசயமா?
2. கே: மொழிச் சுமையை ஏற்றுவதற்கு மாற்றாக தொழில்நுட்பத்தைக் கற்றுத் தருவதே பயன்தரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– த.ராம், ஆரணி.
ப : வரவேற்க வேண்டிய கருத்து – (நாம் பல மேடைகளில் அண்மைக் காலங்களில் பேசி வருவது) செயற்கை நுண்ணறிவு படிப்பு – அது போல பல மின்னணுப் படிப்புகள் வளர்ந்துள்ள தற்காலத்தில் மொழித் திணிப்பு, கலாச்சாரத் திணிப்பு விரும்பத்தக்கதல்ல. மாணவர்களுக்கு முன்னுரிமை அதுதான் – பாராட்ட வேண்டிய முற்போக்குச் சிந்தனை அவருடைய சிந்தனை.

3. கே: மாநிலங்கள் தன்னாட்சி பெறுகின்றவரை தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்வதே சிறந்தது என்று ‘இந்து தமிழ்திசை’ கட்டுரை கூறியுள்ளதை ஏற்கலாமா?
– பே.செந்தில், கும்பகோணம்.
ப: வரவேற்கலாம்.
4. கே: ஜாதி ஒழிப்பில் அதிக அக்கறை செலுத்தும் உயர்நீதிமன்றம், ஜாதி ஒழிப்புக்காகப் பாடுபடும் இயக்கங்கள், சிந்தனையாளர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து, அவர்களின் பரிந்துரைகள் அடிப்படையில், அரசுக்குச் சில செயல் திட்டங்களைப் பரிந்துரைக்கலாம் அல்லவா?
– ச.பிரபாகரன், விழுப்புரம்.
ப: நல்ல அரிய யோசனை.

5. கே: தமிழகத்தை எடுத்துக்காட்டி, ஆங்கிலத்தின் கட்டாயத்தை வலியுறுத்தும் சந்திரபாபு நாயுடு, ஒன்றிய அரசிடம் அதை வலியுறுத்தாதது ஏன்? மொழித் திணிப்பால் அவரது மாநிலமும் பாதிக்கப் படுகிறதல்லவா?
– கே.வெங்கட், தஞ்சாவூர்.
ப: ‘ஹி.. ஹி.. ஹி..’ அவரது அரசுக்குப் பல தேவைகள் உள்ளனவே! எனவே, பா.ஜ.க. மைனாரிட்டி அரசு எதைச் செய்தாலும் அவர் ‘ஓ.கே.’ போடுகிறார் போலும்!
6. கே: கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கிய லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்யும் ஒன்றிய அரசு, ஏழைகள் வங்கிகளில் பெற்ற கடன் தொகையைத் திரும்ப வசூலிப்பதில் மட்டும் தீவிரம் காட்டுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியுமா?
– க.தணிகாசலம், சூளை.
ப: நீதிமன்றங்களில் தான் எல்லாவற்றுக்கும் உரிமை தேட முடியுமா? அத்தீர்ப்புகளும் சில சமூகநீதி, பொருளாதார நீதிக்கு எதிராக அமைந்துவிடுகின்றனவே!

7. கே: அமலாக்கத் துறை மூலம் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு நெருக்கடி தர சதியா? இதை எப்படி தமிழ்நாடு எதிர்கொள்ள வேண்டும்?
– கரு.செல்லப்பன், காரைக்குடி.
ப: அதிலென்ன அய்யம்? மக்கள் மன்றத்திடம் நியாயத்தை எடுத்துக் கூறி, பரப்ப வேண்டும்.

8. கே: தமிழ்நாட்டு மீனவர்களை மட்டும் இலங்கை அரசு குறி வைத்துத் தாக்குவதில் உள்நோக்கம் உண்டா?
– பா.தேசப்பன், நாகப்பட்டினம்.
ப: நிச்சயமாக; அவர்களுக்கு இனவெறியும் கூடச் சேர்ந்து விடுகிறதோ என்னவோ!