மனமின்றி அமையாது உலகு 18
அமைதியான சுற்றுப்புறச்சூழல் என்பது ஓர் ‘அய்டியல்’ அவ்வளவு தானே தவிர, அது முழுமையாக அமையக்கூடியதாய் இருப்பதில்லை. ஆனால் முடிந்த வரை நாம் இருக்கும் சூழ்நிலையை அமைதியானதாக குறைந்தபட்சம் நம் மனநிம்மதியைக் கெடுக்காத தாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நம் உடனிருப்பவர்களை முழுமையாகப் புரிந்து
அறிந்து கொண்டிருக்க வேண்டும், அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் பற்றிய புரிதல்களும் வேண்டும். பெரும்பாலான நேரங்களில் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மை முழுமையாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நம்மிடம் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோமே தவிர, நாம் மற்றவர்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நினைப்பதில்லை.
அன்றாடப் பணிகளில் நமக்கு வரும் மனக்கசப்புகள் இப்படி சின்னச் சின்னப் புரிதலின்மையாலும், உணர்ச்சிவயப்படுவதாலுமே வருகின்றன. அவை நமது மன அமைதியைத் தொடர்ந்து குலைத்துக்கொண்டே வருகின்றன, இதனால் ஒரு கட்டத்தில் நாம் செய்யும் வேலையே நமக்குப் பெரிதும் ‘ஸ்ட்ரெஸ்ஃபுல்லான’ ஒன்றாக மாறிவிடுகிறது. நாமும் சிறிய பிரச்சினை தானே என்று அவற்றைக் கடந்துவிடுகிறோம். அப்படி அலட்சியப்படுத் தாமல் இந்தச் சிறு கசப்புகளையும், உணர்ச்சி வயப்படுதலையும் அதற்கான காரணங்களையும் உணர்ந்து நிதானமாகச் சரிசெய்தால் சூழல் அமைதியாகும், மனமும் அமைதியாகும்.
நல்லுறவைப் பேணுதல்
இன்றைய காலகட்டத்தில் எல்லா செயல்களுமே ஓர் அவசரகதியில் இயங்குவது போலத் தெரிகின்றன. எதிலுமே நிதானம் இல்லை, எதிலுமே பொறுமை இல்லை. சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு நாம் சிந்திப்பதைக் குறைத்துக்கொண்டோமா என்று கூட யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் எந்த ஒரு செயல்பாட்டையும் நாம் அப்போதைய மனநிலையை வைத்தே மதிப்பிடுகிறோம், அதை அப்போதைய உணர்வுகளின் வழியாக விவாதிக்கிறோம். இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது, இதன் நிலைத்தன்மை என்ன? ஏன் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது? உண்மையில் அதன் பின்னால் இருக்கும் பிற கோணங்கள் என்ன என்பதெல்லாம் நாம் பார்ப்பதில்லை. உடனடியாக அந்தச் செயல்பாடு சார்ந்து நிலவும் கருத்துகளில் ஒன்றை நாம் எடுத்துக்கொள்கிறோம் பிறகு நாம் ஏற்றுக்கொண்ட கருத்து சரியானது என்பதற்கு சாதகமாகக் கிடைப்பவற்றை மட்டுமே கொண்டு அதில் உறுதியாக நிற்கிறோம்.
சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்திய இந்த நிதானமில்லாத, பக்குவமில்லாத மனநிலை களையே நாம் மற்ற செயல்பாடுகளுக்கும் பயன்படுத்திக்கொள்கிறோம், குறிப்பாக உறவுகளைக் கையாள்வதில் நாம் முன்னெப் போதையும் விட நிதானமில்லாமலும், பக்குவமில்லாமலும் இருக்கிறோம்.
நெருங்கிய உறவுகளுக்கிடையேயான சிக்கல்களும், கசப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குடும்ப வன்முறைகள் பெருகிக்கொண்டே செல்கின்றன. மிகச் சிறப்பான குடும்ப அமைப்பைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்தியாவில்தான் குடும்ப வன்முறைகளால் ஏற்படும் தற்கொலைகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. மனவுளைச்சல், மனச்சோர்வு போன்ற பல்வேறு உளவியல் பிரச்சினைகள் அதிகமாவதற்கும் உறவுகளுக்கிடையேயான மனக்கசப்புகளும், அவர்களுக்கிடையேயான வெறுப்புணர்ச்சியும் முக்கியமான காரணங்களாயிருக்கின்றன.
கொரோனா காலகட்டத்தில், வீட்டிலேயே இருப்பதால் கணவன் மனைவிக்கிடையேயான பிணைப்புகளும், புரிதல்களும் அதிகமாகும் என ஊரடங்கு தொடங்கிய போதும் நம்பப்பட்டது. ஆனால், நடந்தது என்ன? ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறைகள் உலகம் முழுக்க அதிகரித்தன. ஒரே வீட்டில், அதிக நேரம் தனது இணையருடனான செலவிடும் வாய்ப்பு வந்தபோது பிணைப்பை விட, பிரச்சினைகள்தாம் அதிகரித்தன; சண்டைகள் அதிகரித்தன. விவாகரத்துகள் கூட அந்தக் கால கட்டத்தில் அதிகரிக்க வாய்ப்பு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
அதிகமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதும், மற்றவர்களைப் பற்றி மேலோட்ட மாகவே புரிந்து கொண்டிருப்பதும், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளத் தவறுவதும், மிகவும் சுய நலமாக மனிதர்கள் மாறிவருவதும் தான் உறவுகளுக்கிடையேயான சிக்கல்களுக்கு இந்தக் காலத்தில் காரணமாக இருக்கின்றன. மனிதர்களை அவர்களின் குணநலன்களை பார்த்துப் புரிந்து கொள்ளாமல், அவர்களைச் சார்ந்து நமக்கிருக்கும் விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டு புரிந்து கொள்வதும் முக்கியமான காரணம்.
இன்றைய உறவுகள் மேலோட்டமானதாகவும், புரிதலின்மையோடும், சுயவிருப்பங்களை அடிப்படையாகக் கொண்டதாகவும், பரஸ்பர புகார்கள் நிறைந்ததாகவும் இருக்கின்றன. ஏதாவது ஓர் உறவின் மீது ஆழ்ந்த பிணைப்பென்பது, நெருக்கடியான சூழ்நிலையில் நம்மை மீட்கும் வலிமை பெற்றது. பெரும்பாலான நேரங்களில் பதற்றமோ அல்லது ஸ்ட்ரெஸ்ஸோ நீண்டு கொண்டே செல்வதற்கு எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையற்ற மனநிலைதான் முக்கியமான காரணம். ஆழமான, சுயநலமற்ற உறவுகள் என்பவை அந்த நேரத்தில் நம்மைத் தாங்கிப் பிடிக்கக்கூடியவை; நம்மீது கருணை காட்டுபவர்களாய் அவர்கள் நம்மருகே இருப்பது நம்பிக்கை அளிக்கக்கூடியவை. அப்படிப்பட்ட உறவுகளை உருவாக்கிக்கொள்வது எப்போதும் தேவையானது. அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு, சுயநல நோக்கங்கள், புரிதலின்மை போன்ற
வற்றை உணர்ந்து, அதைத் திருத்திக்கொண்டு உறவுகளை வலுப்படுத்துவது எந்த ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தும் நாம் மீண்டு வருவதற்கு அவசியமானது.