கடந்த 15.02.2025 அன்று புதிய தேசியக் கல்விக்கொள்கை, PM SHRI திட்டத்தை தமிழ்நாடு ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய 2152 கோடி கல்விக்கான நிதித்தொகையைத் தரமாட்டோம் என ஆணவத்தோடு ஒன்றிய பா.ஜ.க. அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதையடுத்து தமிழ்நாடு அரசின் எதிர்வினைகளைத் தொடர்ந்து இந்த மும்மொழிக்கொள்கை இந்திய துணைக்கண்டம் முழுவதும் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
ஆரியம் Vs திராவிடம்
ஆரியம் பார்ப்பன ஆதிக்கத்தை வலியுறுத்துகிறது; திராவிடம் பிறப்பால் அனைவரும் சமம் என்கிற சமத்துவத்தை வலியுறுத்துகிறது. ஆரியம் மனுதர்மத்தைச் சட்டமாகக் கொண்டுவர முயற்சிக்கிறது; திராவிடம் ஜனநாயகத்திற்கான அரசியல் சட்டத்தை வலியுறுத்துகிறது. ஆரியர்களின் தாய்மொழி சமஸ்கிருதம்; திராவிடர்களின் தாய்மொழி தமிழ். ஆரியம் ஒரே நாடு (இந்துராஷ்டிரா) ஒரே மொழி (சமஸ்கிருதம்) ஒரே பண்பாடு என்கிற ஆரியப் பண்பாட்டை வலியுறுத்துகிறது. உண்மையில் பாஜக வுக்கும், திராவிட இயக்கத்திற்குமிடையே தமிழ்நாட்டில் நடப்பது அரசியல் போராட்டமல்ல; தந்தை பெரியார் கூறியது போல ஆரியர் திராவிடர் போராட்டம். இந்தக் கோணத்தில் இருந்து பார்த்தால்தான் மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதன் பின்னணியைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதே கல்வி
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 1976க்கு முன்பு வரை கல்வி மாநிலப் பட்டியலில் தான் இருந்தது. அதுவரை கல்வி சம்மந்தமாக மாணவர் சேர்க்கை, பாடத்திட்டங்கள், தேர்வுமுறைகள் போன்றவற்றில் முடிவெடுக்கும் உரிமை முழுக்க முழுக்க மாநிலங்கள் வசமே இருந்தது. நெருக்கடி காலத்தில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் 42ஆம் திருத்தமாக மேற்கொள்ளப்பட்டு கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்கு (Concurrent list) மாற்றப்பட்டுவிட்டது. இப்போதும் கூட கல்வி தொடர்பான முடிவுகளை ஒன்றிய அரசு மேற்கொள்ளும்போது மாநில அரசின் ஆலோசனையும் ஒப்புதலையும் பெற்றே நிறைவேற்றவேண்டும்.
ஆனால், நாங்கள் கொண்டுவருவதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் மாநிலத்திற்கான கல்வி நிதியைத் தரமாட்டோம் என ஒன்றிய அரசு கூறுவது எதேச்சாதிகாரமானது இல்லையா …
பா.ஜ.க. உண்மையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியா? அழிக்கும் கட்சியா?
உண்மையில் கல்வியை வளர்ப்பது நோக்கமாக இருப்பின் யார் கல்வியில் சிறந்து இருக்கிறார்களோ அவர்களை அல்லவா பின்பற்ற வேண்டும்? இவர்களது புதிய தேசியக் கல்விக் கொள்கையில் இலக்காக வைத்திருப்பது 2035ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு உயர்கல்வி செல்லும் மாணவர்களின் விகிதத்தை 50% ஆக உயர்த்துவதுதான் நோக்கம் எனக் கூறுகிறார்கள். தமிழ்நாட்டின் GER இப்பொழுதே 52% இருக்கிறது. அப்படியென்றால் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டுமா? அல்லது ஒன்றிய அரசை தமிழ்நாடு பின்பற்ற வேண்டுமா?
வடமாநிலங்களில் போதிய தரமான அரசுப் பள்ளிக்கூடங்கள் இல்லை, கல்லூரிகள் இல்லை, பல்கலைக்கழகங்கள் இல்லை, அறிவை வளர்க்கும் பாடத் திட்டங்கள் இல்லை, கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் இல்லை. பல பள்ளிக்கூடங்கள் மூடப்படுகின்றன. உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. அவற்றிலெல்லாம் கவனம் செலுத்தாமல் இந்த அரசு தீவிரமாக மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
இவர்கள் கல்வியை வளர்ப்பவர்களா?
புதிய தேசிய கல்விக்கொள்கையைக் கொண்டுவந்து 5ஆம் வகுப்பிலும், 8ஆம் வகுப்பிலும் பிஞ்சுக் குழந்தைகளுக்குப் பொதுத்தேர்வு வைத்து, அவர்களைத் தோல்வியுறச் செய்து படிப்பின் வாசனையே அறியாதவர்களாக ஆக்கச்செய்யும் சதி தான் இவர்களுடையது.
அதனால் தான் அடுத்ததாக அப்பன் தொழிலை பிள்ளைகளை செய்ய வைக்கும் வேலையை விஸ்வகர்மா யோஜனா எனும் பெயரில் ராஜாஜி 1953இல் தமிழ்நாட்டில் கொண்டுவந்ததை அகிலஇந்திய அளவில் கொண்டுவந்திருக்கிறார்கள். வழி வழியாக குடும்பத்தொழிலைச் செய்ய மாணவர்களைப் பயிற்றுவிக்கக் கடன் வேறு வழங்குகிறார்களாம்.
நம் பிள்ளைகள் மருத்துவம் படிக்கக் கூடாது என்பதற்காக மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் பிள்ளைகளுக்கு CBSE பாடத் திட்டத்தின் வழி NEET எனும் தேர்வைக் கொண்டுவந்தார்கள். அதிலும் வெற்றி பெற்று மேலும் படிக்கப் போனால் படிப்பை முடிக்க விடக்கூடாது என்பதற்காக NEXT தேர்வை கொண்டுவந்துள்ளார்கள். ஆக இவர்களது நோக்கம் கல்வியை வளர்ப்பது அல்ல ..
மனுதர்மத்தில் கூறியுள்ளபடி,
“ஒரு சூத்திரன் வேத மந்திரங்களை காதால் கேட்க நேர்ந்திடின் அவன் காதுகளில் உருக்கிய உலோகத்தினை ஊற்ற வேண்டும். அவன் வேத மந்திரங்களை ஓதினால் அவன் நாக்கை வெட்ட வேண்டும். அவன் சில வேதங்களை மனப் பாடம் செய்திருந்தானேயானால் அவனை கோடரியால் வெட்ட வேண்டும்”.
– (கவுதம தர்ம சூத்திரம் 2/3/4)
சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை கொடுக்காதே என்கிற கொள்கையைக் கடைப்பிடிக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தான் பாஜக என்பதை ஏனைய மாநிலங்கள் அறியாமல் இருக்கலாம். அதற்கான விளைவுகளைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கல்வியில் தமிழ்நாடு முன்னேறியிருப்பதற்கும், ஏனைய மாநிலங்கள் பின்தங்கியிருப்பதற்கும் இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு குறித்த விழிப்புணர்வின்மையே காரணம்.
இப்பொழுது தானா
இந்தி திணிக்கப்படுகிறது?
தற்போது புதிய கல்விக்கொள்கையின் போது ஒன்றிய அரசு கூறுகிறது – மூன்றாம் மொழியாக இந்தியைப் படித்தால் நல்லது என்று! அந்த நல்லது யாருக்கு என்பது தான் நமது கேள்வி? அப்படியென்றால் 1937லேயே ராஜாஜியால் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டது எதற்காக? ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்தபோது 1948இல் கட்டாயமாக்கப்பட்டது எதற்காக? பிறகு மீண்டும் 1963இல் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசின் அன்றைய உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி 1965 ஜனவரி 26இல் இருந்து இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என மசோதா கொண்டுவந்தது எதற்காக? அது மட்டுமா மறைமுகமாக அன்றிலிருந்து இன்றுவரை கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் இந்தியைத் திணித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள்.
அன்றைக்கு இருந்தது காங்கிரஸ் அரசாங்கம். ஆனாலும் இன்றைக்கு பாஜக செய்யும் அத்தனையையும் காங்கிரஸ் செய்தது. காரணம், காங்கிரஸ் எனும் கட்சியல்ல, அதிலிருந்த பார்ப்பனர்கள். தொடர்ச்சியாக தங்களுக்கான வேலைகளைச் செய்தார்கள். இப்பொழுது தங்களுடைய கொள்கையை சித்தாந்தத்தை நேரடியாகப் பேசக்கூடிய கட்சியாக பாஜக வந்துவிட்டதால் பார்ப்பனர்கள் பாஜக வில் அய்க்கியமாக ஆரிய மேலாண்மையை நிறுத்தத் துடிக்கிறார்கள்.
பல்லாயிரம் பேர் போராடி, வாழ்க்கையை இழந்து, பல பேர் உயிரையே தியாகம் செய்து இந்தியைத் தடுத்து தமிழை, தமிழர்களை வாழவைத்த பெருமை தமிழ்நாட்டிற்குத் தான் உண்டு. எக்காரணத்தைக் கொண்டும் இந்தியை நுழையவிட்டோமேயானால் அது நம் பண்பாட்டைச் சீரழித்து பார்ப்பனியம் தழைக்க வழிவகுத்துவிடும்.
உண்மையில் ஆரியர்கள் கொண்டுவர நினைப்பது சமஸ்கிருதமே!
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், தொடர்பு மொழியாகவும் இந்தியைத் கொண்டுவருவதாக அவர்கள் சொல்வதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும் கூட, சமஸ்கிருத்தை முன்னிலைப்படுத்துவதற்குக் காரணம் என்ன? அரசின் திட்டங்களுக்கு, தொடர்வண்டிகளுக்கு தேஜஸ், வந்தேபாரத் எனவும், இந்திய அரசின் தண்டனை சட்டத்தை பாரதிய நியாய சன்ஹிதா (BNS) எனவும், பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் (BSA) எனவும் சமஸ்கிருதத்தில் மாற்றியுள்ளது. மேலும் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 24,821 பேர் மட்டுமே! அன்றைய ஒட்டுமொத்த இந்திய மக்களின் மக்கள் தொகை 126 கோடி. கடலளவு உள்ள மக்கள்தொகையில் கடுகளவு உள்ள ஆரியர்களின் தாய்மொழியின் வளர்ச்சிக்கு கடந்த பத்தாண்டுகளில் ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? RTI மூலம் ஒன்றிய அரசே கொடுத்த தகவல்படி 2869 கோடி. இதே காலகட்டத்தில் 8 கோடி மக்கள் பேசும் தமிழுக்கு அவர்கள் ஒதுக்கியுள்ள தொகை வெறும் 100 கோடி. அப்படியென்றால் இவர்கள் இறுதியாக முழுமையாகக் கொண்டுவர நினைப்பது சமஸ்கிருதத்தைத்தான் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரிந்துகொள்ள முடியும்.
இதற்கான ஆதாரத்தை RSSஇன் நிறுவனர் களின் ஒருவரான கோல்வால்கர் அவரது சிந்தனைக் கொத்து (Bunch of thoughts) எனும் நூலில் கூறியிருப்பதே சாட்சி. “மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது; சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற காலம்வரை, இந்திக்கே நாம் முன்னுரிமை தந்து, நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண்டும்.
– கோல்வால்கரின் ‘Bunch of thoughts’ அத்தியாயம் 8, பக்.113.
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை வைதீக மரபை மீட்டெடுப்பதும், சனாதன இந்துராஷ்டிராவைக் கட்டமைப்பதும், பார்ப்பனியத்தை நிலை நிறுத்துவதும் தான் நோக்கமன்றி வேறல்ல. எனவே, கல்விக்கான இந்தப் போராட்டத்தில் அரசியலைக் கடந்து தமிழ்நாட்டு மாணவர்களின் நலனுக்காக அனைவரும் தமிழ்நாடு அரசின் பக்கம் நின்று இருமொழிக் கொள்கையையே என்றும் நிலைக்கச் செய்ய வேண்டும்.