தன்மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தாமே நேர்நின்று வாதாடி வென்ற ஆசிரியர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்ற போது சென்னையில் சில இடங்களில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அதை ஒட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
ஒரு வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதி முகோபாத்தியாயா, மாநிலத் தேர்தல் ஆணையர் நீதிமன்றத்திற்கு நேரில் வர வேண்டும் எனக் கூறியிருந்தார். தலைமைத் தேர்தல் ஆணையருக்கு (சந்திரசேகரன்) வாக்கு எண்ணிக்கைப் பணி அவசரமாக இருந்த காரணத்தால், தேர்தல் கமிசன் செயலாளர் தங்கசாமி (அய்.ஏ.எஸ்.) அவர்களை அனுப்பியதற்கு, குறிப்பிட்ட அதிகாரிதான் வரவேண்டும்; ‘பதிலாக’ அவரது பியூன் வரக்கூடாது” என்று உயர் ஜாதி ஆணவத்தோடு, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரியை அவமானப் படுத்தினார். மறுநாள் மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் அவர்கள் ஆஜரான நிலையில் வணக்கம் தெரிவித்தபோது, அதை ஏற்க முடியாது என்று அலட்சியமாக அவமானப்படுத்தினார். இவரது இந்த ஆணவத்தைக் கண்டித்து, திராவிடர் கழகத்தின் சார்பில் 1.11.2006 அன்று காலை சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. நீதிபதி முகோபாத்தியாயா “மன்னிப்புக் கேட்க வேண்டும்; அவரை வெளி மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்” நாம் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். காவல்துறை எம்மையும் கழகத் தோழர்களையும் கைது செய்தது. நம் பொது வாழ்க்கையில் நாம் கைது செய்யப்படுவது இது 41வது முறையாகும்.
இந்த நிகழ்வுக்கு வழக்குரைஞர் ஒருவர் 30.11.2006 அன்று எம்மீது தொடர்ந்த உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, விசாரணைக்கு உகந்ததல்ல என்று நீதியரசர் பி.டி.தினகரன் அவர்களால் தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வழக்கில் நாமே நேர் நின்று (Party in Person) வாதாடி வென்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகம்மையார் இல்லக் குழந்தைகளுடன் முதலமைச்சர் கலைஞர் ஆசிரியர் மற்றும் ஒன்றிய மாநில அமைச்சர்கள்
05.11.2006 அன்று காலை போடியில் ரகு பெரியார் லெனின் – நாகஜோதி திருமணத்தையும் மாலையில் மதுரையில் சிவஞானம்- மகேஷ்வரன் திருமணத்தையும் நடத்தி வைத்தேன்.
பெரியார் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில் மலேசியா நாட்டில் பெரியார் சுற்றுப்பயணக் காட்சிகளைப் படம்பிடிக்க படக்குழுவினர் மலேசியா சென்ற நிலையில், நாமும் நவம்பர் 9ஆம் தேதி அங்குச் சென்றோம். அமைச்சர் டத்தோ சாமிவேலு அவர்கள் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் டத்தோசிறீ சாமிவேலு அவர்கள் தந்தை பெரியார் பற்றியும் திரைப்படம் பற்றியும் ஒரு நெகிழ்ச்சியான உரையாற்றினார். சுகாதாரத்துறை அமைச்சர் ஒய்.பி.சுப்பையா, சிவகடாட்சம், ரெ.சு.முத்தையா
சிங்கப்பூர் கலைச்செல்வன் ஆகியோர் உரையாற்றினர்.
குரோம்பேட்டை பெரியார் படிப்பகம் திறப்பு விழா (19.11.2006)
அ.தி.மு.க. அவைத் தலைவரும், மேனாள் சட்டப்பேரவைத் தலைவரும், அமைச்சருமான கா.காளிமுத்து அவர்கள் 8.11.2006 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். கழகத்தின் சார்பில் சு.அறிவுக்கரசு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தார்க்கு நாம் இரங்கல் செய்தி தெரிவித்தோம்.
பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரியில் புதிய நூலகக் கட்டடத் திறப்பு விழா 11.11.2006 அன்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு வந்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நமது நிறுவனங்களைப் பார்வையிட்டார். பின்னர் நூலகத்தைப் பார்வையிட்டார். நாம் வரவேற்புரையாற்ற, மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நூலகத்தைத் திறந்து வைத்தார்கள். விழாவில் தமிழ்நாட்டு அமைச்சர்களும், ஒன்றிய அமைச்சர்களும் கலந்துகொண்டனர். அந்நூலகத்திற்கு “கலைஞர் மு.கருணாநிதி நூலகம்” என்று பெயர் சூட்டப்படுவதாக நாம் அப்போது அறிவித்தோம். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கலைஞர், ‘பெரியார் பூங்காவில் நுண்ணிய கொடியாக நான் இருப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று தெரிவித்தார்.
ஈழத் தமிழர்கள் தினந்தோறும் சிங்கள இராணுவப் படையினரால் சுட்டுக் கொல்லப் படுவதைக் கண்டித்தும், ஈழத் தமிழர்கள் பட்டினியால் சாக வேண்டும் என்ற சிங்கள அரசின் கொலை வெறிச் செயலைக் கண்டித்தும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றிடவும் திராவிடர் கழகத்தின் சார்பில் 12.11.2006 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் எழுச்சியோடு நடைபெற்றது.
நாம் தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றினோம். அன்று காலை வா.அனிதா- வெ.முரளி ஆகியோர் திருமணத்தை நடத்திவைத்தோம். மணமகள் அனிதா பெரியார் பெருந்தொண்டர் சாமி. நாகராஜன் பேத்தியாவார். இந்தத் திருமண நிகழ்வில் மலர் மன்னன்- ஆனந்தி ஆகியோரின் குழந்தைக்கு அன்புச்செல்வன் என்று பெயரிட்டேன்.
புலவர் பா.வீரமணியின் ‘கீதையின் மறுபக்கம்
– ஆழமும் அகலமும்’ புத்தகம் வெளியீட்டு விழா
மதுரை மாவட்டம் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் விருதுநகர் மாவட்டம் கொட்டக்கச்சியேந்தல் ஆகிய கிராமங்களில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள் பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்டதால் நீண்ட காலமாக தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் நாம் தொடர்ச்சியாக அந்தப் பகுதிகளில் எப்பாடுபட்டாவது உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கடும் முயற்சி எடுத்து அந்தப் பகுதிகளில் தேர்தலை நடத்தி ஊராட்சி மன்ற தலைவர்கள் அக்டோபர் 25 அன்று பொறுப்பேற்றனர். 13.11.2006 அன்று சென்னை கலைவாணர் அரங்கில், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் ஊராட்சி மன்றங்களுக்கு தாழ்த்தப்பட்டோர் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான பாராட்டு விழா சமத்துவத் திருவிழாவாகத் தமிழ்நாடு அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது. கழகத்தின் சார்பில் நாம் கலந்து கொண்டோம். முதலமைச்சருக்கும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தோம். மேலும் அதன் ஊராட்சி மன்றத் தலைவர்கள் முறையே பெரியகருப்பன், பாலுச்சாமி, கணேசன், கருப்பன் ஆகியோருக்குப் பொன்னாடை அணிவித்து, பாராட்டுத் தெரிவித்தோம்.
பெரியார் பெருந்தொண்டர் அரங்கசாமி இல்லத் திருமணம்
குரோம்பேட்டை லெட்சுமிபுரத்தில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் பெருந்தொண்டர் மு.நீ.சிவராசன், கமலக்கண்ணன், மூவேந்தன் ஆகியோர் முயற்சியால் கட்டப்பட்ட பெரியார் படிப்பகத் திறப்பு விழாவும், அண்ணா அரங்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் 19.11.2006 அன்று நடைபெற்றன. நாம் பெரியார் படிப்பகத்தைக் திறந்து வைத்தோம். நிகழ்வில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இ.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னை பெரியார் திடலில் 20.11.2006 புலவர் பா.வீரமணி அவர்கள் எழுதிய ‘கீதையின் மறுபக்கம் – ஆழமும் அகலமும்‘ என்னும் புத்தக வெளியீட்டு விழா புதுமை இலக்கியத்தென்றல் சார்பில் நடைபெற்றது. இந்நூல் நாம் எழுதிய கீதையின் மறுபக்கம் நூலினை ஆய்வு செய்து எழுதப்பட்ட ஆய்வு நூலாகும்.
நூலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வெளியிட காங்கிரஸ் மூத்த தலைவர் உ.பலராமன் பெற்றுக்கொண்டார்.
நீதிபதி சத்தியேந்திரன் இல்லத் திருமணம்
பாகிஸ்தான் நட்புறவு அமைப்பினர் இந்தியாவில் பயணம் செய்து நவம்பர் 21 அன்று தமிழ்நாட்டுக்கு வருகை தந்தனர். பெரியார் திடலுக்கு வந்து எம்மையும் சந்தித்தனர். நாம் தந்தை பெரியார் பற்றியும் திராவிட இயக்கம் பற்றியும் பல்வேறு செய்திகளை அவர்களுக்குப் பேட்டியாகக் கொடுத்தோம்.
24.11.2006 அன்று தூத்துக்குடியில் பெரியார் பெருந்தொண்டர் காளிமுத்து அவர்களது இல்லத் திருமணத்தை நடத்தி வைத்தோம்.
சென்னையில் 27.11.2006 அன்று பெரியார் பெருந்தொண்டர் அரங்கசாமி அவர்களின் பேத்தியும் டாக்டர் மீனாம்பாள்- சந்திரக்குமார் அவர்களின் மகளுமான டாக்டர் சந்தனா- டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் திருமணத்தை தவத்திரு பொன்னம்பல அடிகளார் தலைமையில் நடத்தி வைத்தோம்.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் மேனாள் முதல்வர் டாக்டர் இராசசேகர் அவர்களின் மகன் தென்னவன் சத்தியேந்திரன் – டினா மணவிழாவை 1.12.2006 அன்று திருச்சியில் நடத்தி வைத்தோம். அந்தக் குடும்பம் பாரம்பரியமிக்க இயக்கக் குடும்பம் என்பதை விளக்கி உரையாற்றினேன்.
தூத்துக்குடி பெரியார் பெருந்தொண்டர் காளிமுத்து இல்லத் திருமணம்
ஊற்றங்கரையில் 3.12.2006 அன்று, காலை ஜாதி ஒழிப்பு மாநாடும் இரவு பெரியார் சிலை திறப்பு விழாவும் நடைபெற்றன.
காலையில் ஜாதி ஒழிப்புக் கருத்தரங்கமும் தீர்மான அரங்கமும் நடைபெற்றன.
தந்தை பெரியார் சிலைத் திறப்பு விழா (ஊற்றங்கரை)
மாலை கருஞ்சட்டைப் பேரணியும், அதனைத் தொடர்ந்து சிலை திறப்பு நிகழ்வும், சிறப்புரையும்மக்கள் எழுச்சியும் விழிப்பும் பெறும் வகையில் நடைபெற்றன. நாம் காலையில் சேலத்தில் சேலம் ராஜு அவர்களின் மகள் இரா.தமிழ்ச்சுடர் – லோ.சங்கர் ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தோம். தோழர் ராஜு அன்று முதல் இன்று வரை மலர் தயாரிப்பில் பேருதவியாற்றி வருகிறார். நாம் மிசாவில் சிறையில் இருந்தபோது அன்னை மணியம்மையாருக்குத் துணையாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.
7.12.2006 அன்று சென்னை மணவழகர் மன்ற பொன்விழாவில் பங்கேற்றோம், மேனாள் தலைமை நீதிபதி பு.இரா. கோகுலகிருஷ்ணன் கலந்து கொண்டு நினைவுப் பரிசை வழங்கினார் அடுத்த நாள் மயிலாடுதுறை செல்வராஜ்- விஜயா ஆகியோரின் மகன் வினோத்- சரஸ்வதி திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினோம்.
புதுடில்லியில் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களையும், மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களையும் 12.12.2006 அன்று சந்தித்துப் பேசினோம். மேலும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன்சிங் அவர்களைச் சந்தித்து முக்கியச் செய்திகளைப் பற்றி உரையாடினோம். குறிப்பாக உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு விளக்கங்கள் அளித்தோம். அதன்பின் இரண்டு நாட்கள் கழித்து ஒன்றிய அரசு நடத்தும் உயர்கல்வி நிறுவனங்களில் மண்டல் ஆணையப் பரிந்துரைப்படி 27% இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது.
சேலம் ராஜு இல்லத் திருமணம் (சேலம்)
ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக் குரலாக ஒலித்தவரும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பேச்சாளருமான ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் தமது 68ஆம் வயதில் 15.12.2006அன்று மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம். அவர் மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டோம்.
சிறீரங்கத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் சிலை அமைக்கும் முயற்சி தொடங்கப்பட்டு முறையாக சிறீீரங்கம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான இடம் சிறீரங்கம் காவல் நிலையம் அருகில் வருவாய்த் துறையினரால் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் அமைக்கப்பட்டு திறக்கப்படவிருந்த அந்தச் சிலையினை 7.12.2006 அன்று காலை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தினர். இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அய்ந்து பேர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தமிழ்நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. இது தொடர்பாக சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். பல கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உரையாற்றினர். அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வணிகர்களும் கடையடைப்புச் செய்தனர்.
திராவிடர் கழக இளைஞரணி ரத்தக் கையெழுத்து
இந்த நிலையில் உடனடியாக மாற்றுச் சிலை ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் சிலர் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த
சென்னை உயர் நீதிமன்றம் 12.12.2006 அன்று தடை விதிக்க மறுத்து அம் மனுவைத் தள்ளுபடி செய்தது. புதுப்பிக்கப்பட்ட சிலையின் திறப்பு விழா 16.12.2006 அன்று நடைபெற்றது.
காலையில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்மாநாட்டிற்குத் தலைமை ஏற்றார். வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் மாநாட்டைத் திறந்து வைத்தார். மாலையில் தந்தை பெரியார் சிலையினை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தலைமையில் நாம் திறந்து வைத்தோம். மாவட்டத் தலைவர் மு.சேகர், திருச்சி மாநகர துணை மேயர் மு.அன்பழகன், தீட்சதர் பாலசுப்ரமணியன், தமிழ்நாடு வனத்துறை அமைச்சர்
என்.செல்வராஜ், ஒன்றிய வனத்துறை சுற்றுச்சூழல் அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான மனிதச் சங்கிலி
இவ்விழாவில் வேட்டவலம் திருமலை- அம்பிகா ஆகியோர் வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்திவைத்தோம். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்குப் பாதுகாப்புக் கோரி தமிழ்நாடெங்கும் மனிதச் சங்கிலி அறப்போராட்டம், திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. தி.மு.க., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் பங்கேற்றனர்.
பெரியார் பட ஒலி நாடா வெளியீட்டு விழா முதலமைச்சர் கலைஞர் வெளியிட கமல்ஹாசன் பெறுகிறார்.
சென்னையில் மெமோரியல் ஹால் முன்பு நமது தலைமையில் மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது. டி.கே.எஸ்.இளங்கோவன் (தி.மு.க.) கு.செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), சி.மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) செஞ்சி ராமச்சந்திரன் (ம.தி.மு.க.) ஆகியோர் உரையாற்றிய பின் நாம் நிறைவுரையாற்றினோம். கவிஞர் கலி.பூங்குன்றன் நன்றி கூறினார். தமிழ் இன உணர்வாளர்கள் பலரும் பங்கேற்றனர்.
வடலூர் வெ.நாராயணசாமி 80ஆம் ஆண்டு விழா
‘பெரியார்’ திரைப்படத்தின் பாடல்களின் ஒலிநாடா, குறுந்தகடு வெளியீட்டு விழா 23.12.2006 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் வெளியிட, கலைஞானி கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். சத்யராஜ், வைரமுத்து, ஞான.ராசசேகரன், இராம.நாராயணன், வித்யாசாகர், தங்கர்பச்சான், குஷ்பு ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். நாம் அனைவரையும் வரவேற்று, தமிழ்நாடு அரசுக்கும் கலைஞருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினோம். கழகப் பொருளாளர் வழக்குரைஞர் ‘கோ.சாமிதுரை அவர்கள் ‘லிபர்டி கிரியேசன்ஸ்’ சார்பில் அனைவருக்கும் நன்றி கூறினார்.
அரசியல் மேதை ஆண்டன் பாலசிங்கம் படத்திறப்பு நினைவேந்தல்
ஆண்டன் பாலசிங்கம் அவர்களின் படத்திறப்பு இரங்கல் கூட்டம் 21.12.2006 அன்று பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது. இதில் நம்முடன் கவிஞர் கனிமொழி,
இரா.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பங்கேற்று இரங்கலுரையும் புகழுரையும் வழங்கினர். நிறைவாக நாம் அவரது பெருமைகளை எடுத்துக்கூறி இரங்கலுரையாற்றினோம்.
படுகொலை செய்யப்பட்ட வடசென்னை மாவட்டத் தலைவர் ப.கவுதமன் (க.பலராமன் அவர்களின் மகன்) படத்திறப்பு புதுவண்ணையில் 29.12.2006 நடைபெற்றது. அதில் பங்கேற்றுகவுதமன் படத்தினைத் திறந்து வைத்தோம்.
சுயமரியாதைச் சுடரொளி ப.கவுதமன் படத் திறப்பு
வடலூரில் அஞ்சல் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவரும் ‘விடுதலை’ முகவருமான கே.வி.நாராயணசாமி அவர்களின் எண்பதாம் ஆண்டு பிறந்தநாள் விழாவும் லீலாவதி ராமசாமி அவர்கள் 75ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவும் இணைந்த பாராட்டு விழா குறிஞ்சிப்பாடியில் பத்மாவதி திருமண மண்டபத்தில் 3.1.2007 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று தலைமை உரையாற்றினோம். நல்ல. கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். நாராயணசாமி அவர்களின் மருமகனும் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளருமான துரை. சந்திரசேகரன் வரவேற்புரையாற்றினார். சன்மார்க்க நெறி ஆய்வு மய்யத்தின் நிறுவனர் ஊரன் அடிகள், பேராசிரியர் கே.என்.இராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர் களும் கழகப் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.
(நினைவுகள் நீளும்..)