அன்னை மணியம்மை அன்பின் திருவுருவம்
தன்னலம் எண்ணாத தன்மானப் பெண்அரிமா!
துன்புற்று நோயாலே துயர்ப்பட்ட அய்யாவைத்
தொண்ணூற்றைந் தாண்டுவரை காத்துக் கொடுத்திட்டார்!
பின்னரும் அய்ந்தாண்டு பேரியக்க நற்றலைமை
ஏற்றவர் தன்இளமை ஈகமும் செய்திட்டார்!
நெருப்பாய்க் கனன்ற நெருக்கடிக் காலத்தில்
பெருமிதமாய் இயக்கத்தைப் பீடுறவே காத்திட்டார்!
நம்கழகத் தோழர்களை, நாளேடாம் விடுதலையைத்
தம்விழியாய் எண்ணித் தகுதி உயர்த்தியவர்!
ஆதரவே இல்லாக் குழந்தைகள் தாயானார்!
மாதர்குல முன்னேற்றம் எண்ணி உழைத்திட்டார்!
இந்தித் திணிப்பை எதிர்த்துச் சிறைசென்றார்!
தந்தை பெரியார் தமக்கீந்த சொத்துகளைச்
சொந்தமாய் ஆக்காமல் நல்லறக் கட்டளையால்
மக்கள் பயன்படவே மாண்பார்ந்த நற்செயல்கள்
ஆற்றியவர்! அய்யா பெரியார் திடல்முகப்பில்
ஏற்றமுற ஏழடுக்கு மாளிகை தாமமைத்தார்!
பண்பில்லார் ஏசும் பழிச்சொற்கள் தாங்கியே
நன்னயமாய்த் தொண்டாற்றும் நற்குணத்தில் – தேர்ந்திட்டார்!
தென்புலத்தார் போற்றும் திராவிடப் பேரியக்கம்
என்றும் சிதறுண்டு போகாமல் காத்திட்டார்!
அன்றோர் அறமன்றில் யாதுமதம் என்று கேட்க
திண்ணமுற எங்கள் திராவிடமே என்றுரைத்தார்!
நெஞ்சத் துணிவோ(டு) இராவண லீலாவை
அஞ்சாமல் தாம்நடத்தி நற்புகழ் பெற்றிட்டார்!
நாத்திகம் மற்றும் பகுத்தறிவுப் பேரியக்கம்
காத்திட்ட சீர்சால் தலைமைப் பொறுப்பேற்றார்!
தொண்டறச் செம்மலாம் தூயர் மணியம்மை
எண்ணிலாச் சீர்த்தியை என்றும்நாம் போற்றுவோமே!
