இன்னுமா தூங்குவாய் என்தமிழ்த் தோழா!
எழுந்துநீ பாரடா ஆரியக் கூட்டம்
இந்தியைத் திணிக்கக் கங்கணம் கட்டுது
எண்ணும் எழுத்தும் தமிழுக்குப் பெருமை
எந்தப் பெருமையில் இந்தி நுழையுது
எத்தனை முறைதான் துரத்தி அடிப்பது
உன்னுடையத் தோளில் ஏறிக் கொண்டே
உன்றன் தமிழை அழிக்கப் பார்க்குது
உனக்குப் புத்தி எங்கே போனது
உண்ணும் உணவில் நஞ்சைக் கலந்து
ஒன்றாய்ச் சேர்ந்து உன்னை அழிக்குது
உள்ள சமூக நீதியும் அழிக்குது
ஆசை விரிக்குது அறிவை மயக்குது
அறவே கல்விக் கொள்கைக் கெடுக்குது
ஆமாம் போட்டே ‘நீட்’டை நுழைக்குது
காசை விரித்தே கண்ணை மறைத்து
குள்ள நரிகள் எல்லாம் கூடி
கயமைத் தனத்தில் ஆட்சி நடத்துது
ஓசைப் படாமல் உள்ளே நுழைந்து
உயர்ச்சா திக்கே திட்டம் தீட்டுது
உன்னைத் தூண்டிச் சீண்டிப் பார்க்குது
மீசை உனக்கு அழகாய் இருக்கு
மறவர் குலமென மீசை முறுக்கு
மாநில உரிமை எங்கே இருக்கு
கங்கை வென்றான் கடாரம் வென்றான்
கொள்கை மன்னன் ஆண்ட நாடடா!
குனிந்து கிடப்பது இனியும் கேடடா!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
என்ற கவிஞன் வாழ்ந்த நாடடா!
இனத்தின் பகைவர் ஆள்வது கேடடா
சிங்கம் புலியெனச் சீறி நில்லடா!
சமத்துவப் பெரியார் கொள்கைச் சொல்லடா
சாவதும் ஓர்முறை நினைவில் கொள்ளடா!
இங்கே என்னடா! நாடா! காடா!
ஏடா! தமிழா! எழுந்துநீ நில்லடா!
இனியும் தூங்கினால் இழப்பாய் நாடடா!