அர்ப்பணிப்பும் அஞ்சாமையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த, ஆற்றல் மிக்க பெண் தலைமையாகச் சென்ற நூற்றாண்டில் வாய்த்தவர் அன்னை மணியம்மையார்!
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போலத் தன் இளமையிலிருந்து புறச்சார்பின்றித் தன்னைப் பற்றி, தன் வாழ்க்கையைப் பற்றி, தானே முடிவு எடுக்கும் சுய சிந்தனையோடு அவர் வளர்ந்திருப்பதைக் காண முடிகிறது.
“என்னைப் பொருத்தவரையில் வினா தெரிந்த காலத்திலிருந்து என் வாழ்வினையே அவர் தொண்டுக்கென அமைத்துக் கொண்டு விட்டவள். துடிப்பினை இதோ நிறுத்திக் கொள்கிறேன் என்று எனது இதயம் சதா எச்சரித்துக் கொண்டே படுக்கையிலே என்னைக் கிடத்திவிட்ட போதிலும் அய்யா அவர்களின் தூய தொண்டுக்கென அமைத்துக் கொண்ட என் வாழ்வினை என் இறுதி மூச்சு அடங்கும் வரையிலே அந்தப் பணிக்கே செலவிடுவேன் என்ற உறுதியினை உங்களுக்கு அறிவித்துக் கொள்கிறேன்!” என்ற அவருடைய திண்ணிய சொற்கள், அவர் யார் – அவர் தம் பணி என்ன என்பதையும், அதிலிருந்த உறுதிப்பாட்டையும், செயல்பாட்டையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது.
“கூட்டங்களில் அய்யா (பெரியார்) பேசி முடித்து வந்ததும் அன்போடு கேட்பார்கள் நான் பேசியதைக் கேட்டாயா? எப்படி இருந்தது? எங்கிருந்து கேட்டாய் என்பார்கள். நான் என்றைக்கும் மேடையில் அமரவோ விளம்பரப் பிரியத்திற்கோ விரும்பியதில்லை.உனக்கு என்ன குறை -கவலை என்று அடிக்கடி கேட்பார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கேதும் கிடையாது. என் கவலையெல்லாம் உங்களை எப்படியும் நூறாண்டு வாழ வைத்து விட வேண்டும் என்பதுதான் என்று சொல்வேன். அது முடியாமல் போய்விட்டதை எண்ணித் தான் வேதனைப்படுகிறேன்” என்ற அன்னை மணியம்மையாரின் கூற்று அவர் தம் பணியின் முழு அர்ப்பணிப்பை நமக்கு வெளிப்படுத்துகிறது.
“நான் ஓர் இலட்சியத்திற்காக வாழ்கிறேன், உன்னையும் ஓர் இலட்சியவாதியாக்கவே விரும்புகிறேன்” என்ற பெரியாரின் கூற்றை முற்றாகப் பின்னாளில் உணர்ந்தவராக அவர் மறைவுக்குப் பின், “புத்தன், ராவணன், இரணியன் போன்றவர்களை எல்லாம் ஒழித்து விட்டோம். இந்த ராமசாமிப் பெரியாரை மட்டும் ஒழிக்க முடியவில்லையே என்று ஏக்கமிட்டுக் கொண்டிருந்த ஆரியம் இன்றைக்கு ஒழிந்தாரே என்ற நிம்மதிப் பெருமூச்சு விடலாம். அந்த நிம்மதியைக் குலைப்பது தான் நம் இலட்சியம். பெரியாராவது தேவலாம்; அவர் தொண்டர்கள் நம்மை நிம்மதியாக வாழ விட மாட்டார்கள் போலிருக்கிறது என்று அவர்கள் எண்ணும்படி செய்ய வேண்டும்” என்று சூளுரைத்த போது அவர்தம் அடுத்த பரிமாணத்தையும், அவருக்குள் கட்டுண்டு கிடந்த ஆற்றலையும் இந்த உலகு கண்டு வியந்தது.
“1959 ஆம் ஆண்டில் திருச்சி பெரியார் மாளிகையில் 13 குழந்தைகளோடு நாகம்மையார் பெண்கள் விடுதி தொடங்கி அன்னை மணியம்மையாரிடம் ஒப்படைக்கும் போது பல பொருளாதார நெருக்கடியுடன் அந்தப் பெரும் சுமையைச் சுகமாக ஏற்றுக்கொண்டு அம்மா தன் தோளையே தொட்டிலாக்கி, நெஞ்சையே பஞ்சணையாக்கி இரவு பகல் பாராமல் அவர்களை வளர்த்து பின்னாளில் அனாதை என்று தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அய்யா அம்மாவின் பெயரைச் சேர்த்து ஈ.வி.ஆர்.எம். என்று பெயருக்கு முன்தலைப் பொழுத்தைக் (Initial) கொடுத்துப் பள்ளியில் சேர்த்தார்கள். பாட்டு பாடச் சொல்லி நடனம் ஆடச் சொல்லி நடிக்கச் சொல்லி ரசிப்பார்கள். இவை முடிந்ததும் எட்டு மணியிலிருந்து பத்து மணி வரை கூட படிப்பு தொடரும். கட்டிய கணவன் கைவிட்டாலும் நீ கற்றுக் கொண்ட தொழில் உன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று கைதேர்ந்த தையல் ஆசிரியரைக் கொண்டு தையல் வகுப்பையும் நடத்தினார்கள், எங்களைத் தயார்படுத்தினார்கள்” என்று அய்ந்து வயதில் அந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டு அங்கேயே படித்துப் பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பணியில் அமர்ந்து திருமணம் முடித்து வைக்கப்பட்டு அதே நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் காப்பாளராகிய தங்காத்தாள் தம் உள்ளத்தைத் திறந்து பாராட்டுவது அம்மாவின் கனிவு எத்தகையது என்பதை வெளிக்காட்டுகிறது.
அந்தக் குழந்தைகளுக்குக் காலை வணக்கம் சொல்வதற்குப் பதிலாக “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று தினமும் சொல்லச் சொல்லியே அந்த
உணர்வை அம்மா வளர்த்தெடுத்தது, மும்மொழிக்கொள்கையைத் திணித்து, தமிழ்நாட்டை வஞ்சிக்க எண்ணும் ஒன்றிய அரசுக்கு எதிராக வலிமையாகப் போராடும் இன்றைய காலத்திலும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்க முடிகிறது.
பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார்.” கல்வி கற்ற பெண்கள் கண்டிப்பாய் சமையல் வேலைக்குப் போகக்கூடாது. சமையல் வேலைக்கும் குடும்ப நிருவாகத்திற்கு மட்டும் பயன்படுத்த பெற்றோர்கள் திருமணம் செய்வித்தால் கண்டிப்பாகப் படித்த பெண்கள் அதை மறுத்து விட வேண்டும். பெற்றோர்கள், கட்டாயப்படுத்தினால் வீட்டை விட்டு வெளியேறி விட வேண்டும். பெண்கள் சுதந்திரத்திற்காகப் படிக்க வேண்டும்; படித்த பெண்கள் அடிமையாகக் கூடாது. இதற்கு மாதர் சங்கம் பயன்பட வேண்டும்” என்று பேசியது சரி பகுதியான பெண் குலம் உலகிற்குப் பயன்பட வேண்டும்’’ என்ற பெரியாரின் கருத்தை கவனமாக வலியுறுத்துகிறது.
நம்முடைய இழிவைக் காட்டிக் கொள்ளும் சின்னம் கருப்பு நிறம் என்று சொல்வதில் சில தோழர்கள் வெட்கப்படுகிறார்கள். இழிவுக்கு வெட்கப்படாமல் அதைப்பற்றிச் சொல்வதற்கும் பேசுவதற்கும் வெட்கப்பட்டு அவற்றை மூடி மறைத்து இழிவில்லாதவர்கள் என்று காட்டிக் கொண்டதன் பயன்தான் சட்டத்தில் சாஸ்திரத்தில் அரசியலில் மற்ற ஆதாரங்களில் நடப்புகளில் இந்த நூற்றாண்டிலும் பட்டாங்கமாய் இருந்து வருகிறது. ஆகவே தாராளமாக நம் இழிவுகளை வெட்கப்படாமல் வெளியில் சொல்ல வேண்டும். அதற்காக வெளிப்படையாகத் துக்கப்பட வேண்டும். விடிவு நீங்க என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற துணிவு கொண்டு அதற்குத் தக்க நடப்பில் நடந்து கொள்ள வேண்டும் என்று ஏரல் திராவிடர் கழக மாநாட்டில் கொடியேற்றி வைத்து திராவிடர் கழகக் கொடியின் இலட்சியம் என்ன என்று அம்மா கூறிய விளக்கம் இன்றைய நாளில் பெண்ணுரிமைக்கும் மிகப் பொருத்தமான ஒன்றாக இருக்கிறது.
கொஞ்சம்கூட நாகரிகமின்றிப் பொதுவெளியில் பெண்களைப் போகப் பொருளாக விமர்சித்து வரும் சீழ் பிடித்த வாயர்கள் ஊடகங்களில் சதா உலவி வரும் இந்நாள்களில், பெண்கள் அறிவும் மானமும் பெற்று இழிவுகளைத் தட்டிக் கேட்கும் துணிவு பெற வேண்டும் என்பதையும் அன்னையார் நமக்கு இதன்மூலம் பாடம் எடுக்கின்றார்.
ஆங்கில இலக்கியம் படித்து ஆசிரியர் பணியில் இருந்த திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த கனிமொழி என்பவர் தமிழ்நாட்டின் ஆம்னி பேருந்து ஓட்டும் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்று இரவில் 620 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓட்டிச் செல்கிறார் என்பதும், ஆரணி பெஸ்ட் மெட்ரிக் பள்ளியில் உலக சாதனை நிகழ்ச்சியாகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நோக்கில் அவர்களின் மன உறுதியை வெளிப்படுத்தும் வகையில் தொடர்ந்து 8 மணி நேரம் 150 மாணவிகள் சிலம்பம் சுற்றிய நிகழ்வும், அவற்றின்மூலம் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” என்ற முட்டாள்தனமான பெண் இலக்கணத்தைத் தூக்கி எறிந்து விட்டு
அறிவும் துணிவுமே இலக்கணம் என்பதைப் பெண்கள் கையிலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மகிழ்கிற இந்த நேரத்தில் பெண்களுக்கு வலியப் பூட்டப்பட்ட அத்தனை கட்டுகளையும் தகர்த்தெறிந்து இலக்கணத்தை மாற்றி வைத்து, “தோழியர்களே நீங்கள் பகுத்தறிவுப் பாதையில் செல்லுங்கள்- முன்னேறுங்கள்” என்று முன்னேராய்
வாழ்ந்து காட்டிய அன்னை மணியம்மையாரை முற்றாகப் படித்துப் பாடப் புத்தகமாக வரித்து நெஞ்சில் உரம் பெறுவோம்!