புதுடெல்லி ரயில் நிலையம் இரவு 7 மணி முதலே பயணிகளால் நிறைந்து வழிந்தது. சனிக்கிழமை வார விடுமுறை ஆதலால் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி மகா கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் புனிதநீராட, பிரயாக்ராஜ் செல்லும் இரயிலுக்காக அங்கும் இங்கும் பயணிகள் ஊசலாடிக் கொண்டிருந்தனர்.
சிவகங்கா எக்ஸ்பிரஸ், மகத் எக்ஸ்பிரஸ்; பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ், மற்றும் ஒரு சிறப்பு இரயிலும் இயக்கப்படுவதாக நிலைய ஒலிப்பெருக்கிகள் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் அறிவிப்பைக் காற்றில் உமிழ்ந்து கொண்டிருந்தன.
கல்லூரித் தோழி வா’வென்று அழைத்தாள் என்பதற்காக டெல்லி வரையில் வந்தது தவறோ என்று மனதில் பட்டது.
சென்னையில் இருந்து ஒரு இரவு, ஒரு பகல் என்று எப்படியோ டெல்லி வரையில் வந்தாகிவிட்டது. இங்கிருந்து இதோ கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜுக்குச் செல்ல வேண்டியதுதான். என்றது இன்னொரு மனது. இரயில் பயணத்தின்போது மதிய உணவுக்குப் பிறகு தண்ணீரைக்கூட வேண்டாத வயிற்றுக்கு இப்போது பசித்தது. பிளாட்ஃபார்ம் உணவுக் கடைகள் வெறிச்சோடிக் கிடந்தன. “ஜாயே… ஜாயே…” என்று தேநீர் விற்றுக்கொண்டு வந்தவரிடம் ஒரு கப் வாங்கிக் குடித்தேன்.
சிறிது தூரத்தில் இளைஞன் ஒருவன், இதுவரையில் மற்றவர் தேநீர் அருந்துவதையே பார்க்காதவன் போல, என்னையே வெறித்துப் பார்த்து நின்றான். அவன் பார்வை எனக்கு ஒரு விதமான கூச்சத்தை ஏற்படுத்தியது. பாதித் தேநீருடன் கோப்பையை வீசிவிட்டு அவன் பார்வையே படாத தூரத்திற்கு நடையைக் கட்டினேன்.
கைப்பேசி ஒலித்தது. தோழி அஞ்சலி தான் அழைத் தாள்.
“ஹலோ.அஞ்சலி”
“கோகிலா. இப்போ எங்க இருக்கே..?”
“இங்க டெல்லி இரயில் நிலையத்தில் தான் அஞ்சலி, பிரயாக்ராஜுக்கு வரும் எல்லா இரயிலும் லேட்டாம். ஒரே கூட்டமா இருக்கு, ஒரு பிளாட்பாரத்திலிருந்து இன்னொரு பிளாட்பாரம் மாறுவதற்கே மக்கள் சிரமப்படுறாங்க. எப்படியோ வந்து சேர்ந்திடுவேன். நீ அங்கே இரயில் நிலையத்துக்கு வந்துவிடு …”
“சரி கோகிலா, பார்த்து ஜாக்கிரதையாக வா …” என்ற தோழி அஞ்சலி கைப்பேசியை அணைத்து விட்டாள்.
நடைமேடை-12 சிவகங்கா எக்ஸ்பிரஸ் வந்தது. பயணிகள் படிகளில் தேனீக்களைப் போல தொற்றிக் கொண்டிருந்தனர். இன்றைய கடைசி இரயில் இது என்று எல்லோரும் நினைத்தார்களோ என்னவோ. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு எல்லாம் கலந்து ஒரே வகுப்பாக ஆகி, அந்த இரயில் கணப்பொழுதில் மனிதர்களால் நிறைந்து வழிந்தது. முதியவர்கள், சிறுவர்கள் என்று பலரும் இரயிலுக்குள் தங்களைத் திணித்துக் கொள்ள முடியாமல் நடைமேடையில் தத்தளித்தனர்.
அந்நேரம் மகத் எக்ஸ்பிரஸ் 14ஆம் நடைமேடையில் வந்து நின்றது. அதில் இடம்பிடிக்க நடை மேம்பால வழியாகச் சென்றால் தாமதமாகும் என்று ஒரு பெருங்
கூட்டம் தண்டவாளத்தில் குதித்து ஏறிக் கடந்து சென்றது.
ஜம்முவில் உள்ள கத்ராவுக்குச் சென்று கொண்டிருந்த, உத்தர் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ்.
பிளாட்பார்ம் 15இல் காலதாமதமாக வந்திருப்ப தாக ஒலிபெருக்கி கூவியது. அதிலிருந்தும் நூற்றுக்கணக்கான பயணிகள் பிரயாக்ராஜுக்குச் செல்வதற்காக இறங்கினர். இருந்த கூட்டத்திற்கு இரண்டாவதாக வந்த இரயிலும் போதவில்லை.
கைப்பேசி மீண்டும் ஒலித்தது. எடுத்துப் பார்த்த போது சென்னையில் இருந்து இப்போது அம்மா அழைத்திருந்தாள்.
“ஹலோ… அம்மா..!”
“என்னம்மா… அங்கு சென்று சேர்ந்தாச்சா..?”
“இல்யேம்மா… இப்போ டெல்லியில் இருக்கேன்”
“ஏன்? இந்நேரத்துக்கெல்லாம் சென்றி
ருக்கலாமே..!?” என்றார் அம்மா,
இப்போது அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது என்ற குழப்பத்தில் நின்றேன்.
‘உன்னால்தான் நான் இத்தனை சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறேன்’ என்று சொல்லி விடலாமா? பிறகென்ன. முக்கூடல் சங்கமத்தில் புனிதநீராட வேண்டும் என்ற அவளின் வேண்டுதலை, உடல்நிலையைக் காரணம் காட்டி என் தலையில் கட்டியது எந்தவகை நியாயம்?
இதையெல்லாம் பெரிதாக நம்ப வேண்டாம் என்று, தாத்தாவின் டைரிக் குறிப்பிலிருந்து எப்போதோ படித்ததைக் கூட அம்மாவிடம் சொன்னேன்.
‘மனிதன் செய்கின்ற பாவமெல்லாம் தண்ணீரில் மூழ்கி எழுவது மாதிரியான காரியங்களால் தீர்ந்து போவதாயிருந்தால், உலகத்தில் எந்த மனிதனாவது பாவகாரியங்
களைச் செய்யத் தவறுவானா? தயங்குவானா?’ அனுபவக் குறிப்பில் தாத்தா எழுதி இருந்ததை எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லையே அம்மா!
எதிரே ஒருவரையொருவர் தள்ளுவதும், முந்துவதுமாக இருந்தனர். அவ்விடத்தில் ஓர் அசாத்தியமான சூழல் நிலவுவதை உணர்ந்தேன். மூச்சு விடுவதற்கே சிரமமாக இருந்தது.
“ஹலோ.. கோகிலா, கேக்குதா..?”
“ரயிலில் ஏறணும், நான் பிறகு பேசுறேம்மா” என்று எரிச்சலுடன் கைப்பேசியை அணைத்து வைத்தேன்.
அந்தப் பத்து நபர்களும் கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு இரயிலுக்குள் புகுந்துவிட முயன்றனர். அவர்களுடன் வந்த அந்தச் சிறுவன் நெரிசலில் அகப்பட்டு தரையில் சரிந்தான். பயணிகள் ஒருவர் பின் ஒருவராக அவன் முதுகில் கால்பதித்து ஓடிக்கொண்டிருந்தார்கள். அவன் ஏதோ மொழியில் அபயக் குரல் எழுப்பினான், அது எந்த மொழியாக இருந்தாலும் அவன் ‘அம்மா’ என்றுதான் குரல் கொடுத்திருக்க வேண்டும். நான் உதவிட நினைத்து அவனை நெருங்கினேன். அதற்குள் அவனது கண்கள் வழியே உயிரின் கடைசி சொட்டும் கரையத் தொடங்கியது. நான் கால் இடறி விழுந்து, சுதாரித்து எழுந்தேன். என்னைப் போன்று பலரும் இடிபாட்டில் தட்டுத்தடுமாறி சரிந்தனர், அவர்களில் பெரும்பாலும் பெண்கள்.
கூட்டத்தை ஒழுங்கு செய்ய இரயில் நிலைய ஊழியர்களோ, காவல்துறையோ எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்பது மனித நேயத்தின் மரண சாட்சி. அங்கு டிஜிட்டல் பிரதமர் உருவப் படத்துடன் பளிச்சிட்ட பதாகை அருகே நின்று. ஆடையைச் சரி செய்து கொண்டு. அடிபட்ட எனது வலதுகாலை குனிந்து நீவிவிட்டுக் கொண்டி
ருந்தேன்.
சில இளைஞர்கள் ஆத்திரத்தில் தங்களது ஷூ கால்களால் உதைத்து இரயில் கண்ணாடிகளை உடைக்கத் தொடங்கினர். இரயிலில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் கத்தினார்கள். ஒரு முதியவர் சுவாசப் பிரச்சனையால் மயங்கி விழுந்தார். உதவிக்கு என்று யாரும் முன் வரவில்லை.
‘அய்யோ… அவரைத் தூக்குங்க..’ என்று கத்தினேன்.
நிலையத்திற்குள் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது. இப்போதுதான் நிலைய அதிகாரிகளையும், காவலர்களையும் பார்க்க முடிந்தது. மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்சில் இருந்து ஸ்ட்ரெச்சரை இறக்கிக்கொண்டு ஓடிவந்தனர். 40க்கும் மேற்பட்டோரைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு ஆம்புலன்ஸ் பறந்தது.
சிறு குழந்தை ஒன்று கண்ணைக் கசக்கிக்கொண்டு அழுதபடி எனது கால் அருகே வந்து நிற்கவும். புருவம் சுருக்கி குழந்தையைப் பார்த்த எனது கண்கள் அவளது பெற்றோரைத் தேடியது. குழந்தையைத் தேடி யாரும் அருகில் இருப்பதாகவே எனக்குத் தோன்றவில்லை. ஆடை முழுதும் இரத்தக்கறை படிந்திருந்தது. இவளது அப்பா – அம்மா இருவருக்குமே ஏதாவது ஆகி இருக்குமோ..! நினைக்கையில் மனம் படபடத்தது. குழந்தையைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டேன்.
கைப்பேசி சிணுங்கவும் எடுத்தேன். அம்மா தான் அழைத்தார்.
“ஹலோ..”என்றேன் உடைந்த குரலில்.
“கோகிலா.இப்போ எங்கே இருக்கே..? இரயில் இல்லாம சனங்க நெரிசலில் மாட்டிக் கிட்டாங்களாமே. டிவி’யில சொல்றாங்களே, நீ பத்திரமா இருக்கே தானே?” என்றார் அம்மா.
“இருக்கேன்மா.எனக்கு ஒன்னும் இல்லை. நீங்கள் பயப்படாம இருங்க..” என்றேன்.
“கோகிலா. பார்த்து பத்திரமா போகணும் என்ன, 144 வருஷத்துக்கு ஒருமுறை வரும் கும்பமேளாயிது, ரொம்ப ஸ்பெஷல். இப்போது போகாவிட்டால் அடுத்து பத்து தலைமுறைகள் கழித்துதான் வரும். அதனால் முக்கடல் சங்கமத்தில் மூழ்கியெழுந்து சாமியை வேண்டிக்கிட்டு பத்திரமா வந்துடு கண்ணு…” என்றார்.
“அய்யோ. போதும் சாமி, போனை வை.” என்று கத்திவிட்டு தொடர்பைத் துண்டித்தேன்.
முதலில் குழந்தையை இரயில்வே காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று. கூட்டத்தைச் சமாளித்துக் கொண்டு நிலைய நுழைவு வாயிலில் இருந்த பாதுகாப்பு அறையை நோக்கி நடந்தேன்.
நடை மேம்பாலத்தில் இரண்டு பெண்மணிகள் ஹிந்தியில் ஏதோ புலம்பியபடி தலையில் அடித்துக் கொண்டு அழுதனர். ஓரளவுக்குப் புரிந்த வகையில் அவர்களின் கழுத்து நகையை யாரோ திருடிச் சென்றிருக்கிறார்கள்.
பாதுகாப்பு அறையில் இருந்த அந்தப் பெண்மணியிடம். குழந்தையைக் கொடுத்து. “இந்தக் குழந்தையை யாரோ தவற விட்டு விட்டார்கள், உரியவர்களைக் கண்டறிந்து குழந்தையை ஒப்படைத்து விடுங்கள்” என்றேன் ஆங்கிலத்தில். அவளுக்கு ஆங்கிலம் தகராறு போல… அந்தப் பெண்மணி எரிச்சல் அடைந்தாள். அருகே நின்றிருந்த ஒருவர் நான் சொன்னதை ஹிந்தியில் மொழிபெயர்த்து அந்தப் பெண்மணிக்குப் புரியவைத்தார். பின்பு அவர்கள் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்து குழந்தையை வாங்கிக்கொண்டனர்.
அழுதழுது சோர்ந்துபோன அந்தக் குழந்தை பாவம், இப்போது அழுவதற்குச் சக்தியற்று என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. மனமில்லாமல் அங்கிருந்து திரும்பி நடந்தேன். நிலையத்திலிருந்த அந்த ராட்சத மணிக்கூண்டு இரவு – 12:30 நேரம் காட்டியது.16.2.2025 என்று அதுவே தேதியும் காட்டியது.
அந்த மூன்று, நான்கு சிறப்பு இரயில்களும் மக்களை அள்ளிச் சென்ற பிறகே, கூட்டம் கட்டுக்குள் வந்தது. நிலையத்தில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் இரயில்களின் அட்டவணையைக் காட்டிய நேரம்போக, ஹிந்தி சீரியல் ஒளிபரப்பினார்கள். “டெல்லி ரயில் நிலையம் குறித்து வதந்திகள் பரப்பினால் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என்று, ஒருவரி ‘பிளாஷ் நியூஸ்’ ஓடிக்கொண்டிருந்தது.
சக்தியற்று நின்றுபோக இருந்த கைப்பேசி ஒலித்தது. ஆனந்தி தான் அழைத்திருந்தாள்.
“ஹலோ ஆனந்தி” “கோகிலா இப்போ எங்க இருக்கே..? என்னென்னவோ பேசிக்கிறாங்க, இரயில் நிலையத்தில் 18 பேர் செத்ததா சொல்றாங்க, 20 பேருக்கு மேல் அடிபட்டு மருத்துவமனையில் இருப்பதாகவும் பேசுறாங்களே உண்மையா?”
“ஆமாம் ஆனந்தி உண்மைதான். எல்லோரும் பாவத்தைப் போக்க வந்து, இங்கே ஆபத்தில் சிக்கிட்டாங்க, கேக்குறேன்னு கோவப்படக் கூடாது ஆனந்தி. செய்தியைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டே தானே, இப்போ என்ன செய்யப் போறே..?” என்றேன்.
சிறிது நேரம் ஆனந்தியிடம் இருந்து பேச்சே வரவில்லை. நான் அப்படிக் கேட்பேன் என்று, அவள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டாள். “நாம என்னடி செய்ய முடியும்? இறந்தவர்களுக்கு இரங்கல்’னு சொல்லிவிட்டு, காயம்பட்டவங்க குணமாக ஆண்டவனைப் பிரார்த்திக்க வேண்டியதுதான். இதுதானடி நம்ம சம்பிரதாயம்” என்றால் ஆனந்தி.ஹ
எனக்கு வலி மறைந்து சிரிப்பு வந்தது. “ஆனந்தி, ஆண்டவனை வேண்டித்தான் அடிபட்டவர்களுக்குக் குணமாக வேண்டுமா? சக்தி இருந்தால் அந்த ஆண்டவனே முன்வந்து பக்தர்கள் அடிபடாமல் காப்பாற்றி இருக்கலாமே..!?” என்றேன்.
“என்ன கீர்த்தி, புறப்பட்டு வரும்போது நல்லாதானே வந்தே, உனக்கு ஏதும் அடிபடலையே… பார்த்து பத்திரமா வா…” என்றாள் தோழி.
“மன்னித்துவிடு ஆனந்தி… நான் சென்னைக்கே திரும்பிவிட்டேன். ஊர் சென்று சேர்ந்ததும் அழைக்கிறேன்” தோழியிடம் சொல்லி முடிப்பதற்குள் கைப்பேசி அணைந்தது.
மனது இப்போது தெளிவாக இருந்தது.