அன்னை மணியம்மையார் அவர்கள் தொண்டின் அடையாளம், தியாகத்தின் மறுவடிவம். தந்தை பெரியாரின் தொண்டர்களான வி.எஸ்.கனகசபை – பத்மாவதி இணையரின் மூத்தமகள். அவருக்கு பெற்றோர் இட்டபெயர் காந்திமதி. கனகசபை வேலூரில் விறகு வணிகம் செய்தவர். இவர் 1943 மே 15ஆம் தேதி இறந்துபட, அய்யா பெரியாரின் உடல்நலம் காக்கும் உதவியாளராக அம்மையார் 1943 செப்டம்பர் 11ஆம் தேதி தமது 23ஆம் வயதில் வந்து சேர்ந்தார். தந்தை பெரியாருக்கு அப்
போது வயது 65. பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்.
தந்தை பெரியார் தனது மனைவி நாகம்மையார் இறந்தபின் வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனவே, பெரியாரின் முதுமையில் அவருடைய செவிலியராகப் பணி செய்வது கட்டாயம் என்று உணர்ந்து மணியம்மையார் அப்பணி செய்தார்.
அய்யாவின் உடல்நலம் காக்கும் பணியோடு, 7.6.1946இல் ‘விடுதலை’ ஏட்டின் ஆசிரியராகவும் பொறுப்பேற்றார். 1949ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்பதாம் நாள், தன் சொத்துக்களுக்கும், நிறுவனங்களுக்கும் வாரிசாக்க, மணியம்மையாரைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மற்றபடி இத்திருமணம் எதிரிகள் கொச்சைப்படுத்துவது போல, உடல் இச்சைக்குச் செய்யப்பட்ட திருமணம் அல்ல. உடல் இச்சைக்காகத் திருமணம் என்றால் நாகம்மையார் 1933இல் இறந்த போதே திருமணம் செய்திருப்பார். தமது 54ஆம் வயது முதல் 70ஆம் வயது வரை மறுமணமோ, பெண் துணையோ இன்றித்தான் வாழ்ந்தார்.
இதைத் தந்தை பெரியார் அவர்களே கீழ்க்கண்டவாறு தெளிவுபடுத்துகிறார். ‘விடுதலை’ பத்திரிகைக்கும் ‘விடுதலை’ பத்திரிகையைப் பிரசுரிக்கும் திராவிடன்
பிரஸுக்கும் (அச்சகத்திற்கும்) ஈ.வி.ஆர்.மணியம்மாள் அவர்கள் சொந்தக்காரராகவும் வெளியிடுவோராகவும் உரிமையாளராகவும் இருந்து வந்ததானது மாற்றப்பட்டு, இன்று முதல் பதிவு செய்யப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார ஸ்தாபனமே ‘விடுதலை’ பத்திரிகைக்குச் சொந்தக்காரராகவும் டிக்ளரேஷன் செய்யப்பட்ட உரிமையாளராகவும் பிரசுரகர்த்தாவாகவும் ஆக்கப்பட்டு இருப்பதுடன், ‘விடுதலை’ பதிப்பிக்கப்படும் திராவிடன் அச்சகமும் மேற்கண்ட ஸ்தாபனத்
தின் பெயராலேயே பதிவு (டிக்ளரேஷன்) செய்யப்பட்டுவிட்டது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ஈ.வி.ஆர்.மணியம்மையார் இன்று முதல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார ஸ்தாபனத்தின் செயலாளர் (செக்ரெட்டரி) என்ற முறையில் ‘விடுதலை’ பத்திரிகைக்கும் திராவிடன் அச்சகத்திற்கும் நிர்வாகஸ்தராயிருந்து வருகிறார்.” -ஈ.வெ.ராமசாமி.
அதேபோல் அன்னை மணியம்மையார், “என்னைப் பொறுத்தவரையில் வினாத் தெரிந்த காலத்திலே இருந்து என் வாழ்வினையே அவர் தொண்டுக்கென அமைத்துக்கொண்டுவிட்டவள்” என்று கூறியுள்ளார்.
ஆக, பெரியார் – மணியம்மையார் திருமணம் என்பது சட்டப்படியான வாரிசு ஏற்பாடு மட்டுமே! தந்தை பெரியார் 1973 டிசம்பர் 24 அன்று இயற்கை எய்தினார். 6.1.1974 அன்று அன்னை மணியம்மையார் திராவிடர் கழகத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
20 வயதிலே தனக்குத் திருமணம் வேண்டாம் என்று முடிவெடுத்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள். இயக்கத்தைப் பாதுகாத்து இச்சமுதாயம்
விழிப்புகொள்ள வேண்டும், எழுச்சி பெற வேண்டும், மாற்றம் காண வேண்டும் என்றும், அதற்குப் பெரியாரைப் பாதுகாக்கவேண்டும் என்பதுமே அவரது இலட்சிய நோக்கமாக இருந்தது.
தந்தை பெரியாரைத் திருமணம் செய்து கொண்ட பின்பும், பெரியார் பேசும் பொதுக் கூட்டத்தில் ஒரு மூலையில் தரையில் அமர்ந்து நூல்களை விற்பார். ஆடம்பர உடை உடுத்த மாட்டார். தன்னை அலங்கரித்துக் கொள்ளமாட்டார். சொத்துமீது ஆசை கொள்ள மாட்டார். புகழ், பாராட்டுக்கும் விருப்பம் கொள்ள மாட்டார். இழிசொற்கள், அவதூறுகள் தன்மீது அளவற்று வீசப்பட்ட போதும் அதைப் பொருட்படுத்தமாட்டார்.
தன் சொத்துக்களை மக்களுக்கான அறக்கட்டளைகளாக்கினார். தந்தை பெரியாரைக் காத்தது போல, பெரியார் திடலையும் விற்கப்படாமல் காத்து நிறுத்தியவர் அன்னையார் அவர்கள்.
பெரியாருக்கு மட்டுமா தாய்? ஆதரவற்றோருக்கும் தாய்! தந்தை பெரியாரை இறுதிவரை காத்த அம்மையார், ஆயிரக்கணக்கான ஆதரவற்ற பிள்ளைகளுக்கும் தாயாக இருந்து ஆதரவு தந்து, வளர்த்து, படிக்க வைத்து பதவி பெறச் செய்தார்.
ஆதரவற்ற பிள்ளைகளை விடுதியில் சேர்த்து வளர்த்தபோது, அவர்களை அனாதைகள் என்று அழைக்கவோ, கருதவோ, நடத்தவோகூடாது என்றார். நம் இல்லத்தில் சேர்க்கப்பட்டபின் அவர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல. நாம் அவர்களுக்காக இருக்கிறோம். எனவே, “நாகம்மையார் குழந்தைகள் இல்லம்” என்றே பெயரிட்டார். அவர்களுக்கு அம்மா, அப்பா பெயர்களுக்குப் பதில் பெரியார் பெயரையும் தன் பெயரையும் இணைத்து ஈ.வெ.ரா.ம(E.V.R.M) என்று தலைப்பெழுத்தும் (Initial) தந்தார்.
நாகம்மையார் இல்லத்தில் வளர்க்கப்படும் பிள்ளைகளுக்கு வருங்காலத்தில் உதவும் வகையில் 5000 ரூபாய் ஒவ்வொரு குழந்தைக்கும் வங்கியில் போட்டிருந்தார்.
குழந்தைகளுக்கு நல்ல உணவும், நல்ல பாதுகாப்பும், உடல்நலம் பாதிக்கும்போது மருத்துவர்களை விடுதிக்கே அழைத்து மருத்துவமும் தந்து பாதுகாத்தார்.
அவர்களுக்கு பள்ளியில் முறையான கல்வி, உடற்பயிற்சி, ஒழுக்கம், கட்டுப்பாடு, பொது அறிவு என்று பலவும் கிடைக்கச் செய்தார்.
வளர்ந்து ஆளாகிய பின்னர் அவர்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப வாழ்விணையர்களைத் தேர்வு செய்து திருமணமும் செய்து வைத்தார். பெற்ற தாயினும் உற்ற தாயாய் பேணிப் பாதுகாத்து பிள்ளைகளின் வாழ்வைச் சிறப்புறச் செய்தார்.
இந்தித் திணிப்பு
எதிர்ப்புப் போராட்டம்
1926ஆம் ஆண்டு குடிஅரசு இதழில், “தமிழுக்குத் துரோகமும் இந்தியின் ரகசியமும்” என்ற தலைப்பில் பெரியார் இந்தித் திணிப்பை எச்சரித்து எதிர்த்தார்.
ஒவ்வொரு சுயமரியாதை மாநாட்டிலும் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தீர்மானங்கள் போட்டார்.
1938ஆம் ஆண்டு இந்தித் திணிப்புப் போராட்டம் நடத்தி, ஆறு மாதம் சிறைத் தண்டனை பெற்று சென்னை, பெல்லாரி, கோவை சிறைகளில் இருந்தார்.
1948இல் தமிழ்நாட்டில் பல இடங்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினார்.
கும்பகோணத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தடையை மீறிப் போராட்டம் நடத்த தி.க. நிர்வாகக்குழு எடுத்த முடிவின்படி (14.2.1948) 19.12.1948 முதல் தடையை மீறிப் போராட்டம் நடத்தப்பட்டது.
மணியம்மையார் கே.ஏ.புஷ்பாவதியுடன் கும்பகோணத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தடையை மீறிக் கலந்துகொண்டனர்.
இருவரையும் காவல்துறை கைது செய்து பாபநாசம் சிறையில் அடைத்தனர். இதுவே அம்மையாரின் முதல் கைது.
அப்போது, துணையாட்சியர் சட்டத்தை மீறுவது சரியா என்று அம்மையாரிடம் வினா எழுப்பிய போது, ‘சட்டம் நாட்டின் மொழி வளர்ச்சியைக் கூட ஒழிப்பதாய் இருப்பதால்’ என்று நெஞ்சுறுதியோடு பதில் அளித்தார்.
மதத்தை, ஜாதியை மறுத்த மணியம்மையார் மேலும், துணையாட்சியர், ‘உங்கள் மதம் என்ன?’ என்று கேட்டதற்கு, “எனக்கு எந்த மதமும் கிடையாது!” என்று பளிச்சென்று பதில் அளித்தார்.
அடுத்து துணையாட்சியர், ‘உங்கள் ஜாதி என்ன?’ என்று கேட்தற்கு, “திராவிட ஜாதி” என்று கம்பீரமாய்க் கூறினார். “சட்டமீறலுக்கு ஏன் தண்டனை தரக்கூடாது என்ற காரணம் கூறுவீர்களா?” என்று துணையாட்சியர் கேட்டதற்கு, “தண்டனையை ஏற்கத் தயாராய் வந்துள்ளேன்.
உங்கள் கடமையைச் செய்யுங்கள்!” என்று துணிவுடன் பதில் கூறினார். இரண்டு மாத வெறுங்காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்தார்.
ஜாதி, மதத்திற்கெதிரான நிலைப்பாட்டில் இறுதிவரை உறுதியாக இருந்தார்.
உணவு விடுதிப் பெயர் பலகையில் ‘பிராமணாள்’ பெயர் அழிப்புப் போராட்டம் தென்னிந்திய ரயில்வே உணவு விடுதியில், மற்றும் தனியார் உணவு விடுதிகளில் “பிராமணாள் நீக்கப்பட வேண்டும் என்ற போராட்டம் பெரியாரால் முன்னெடுக்கப்பட்டு, 1957 மே மாதம் 5ஆம் தேதி முதல் நாடு முழுவதும் நடத்தப்பட்டது.
சென்னையில் திருவல்லிக்கேணி முரளி கபே ஓட்டலில் எழுதப்பட்டிருந்த “பிராமணாள்” என்பதை அழிக்க முற்பட்டபோது, உரிமையாளர் எதிர்த்தார். அழிக்கும் வரை போராட்டம் தினமும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை தொடரும் என்று அறிவித்துப் போராட்டம் தொடர்ந்தது. நகர எல்லைக்குள் போராட்டம், ஊர்வலம் நடத்தக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்ட நிலையிலும் தடையை மீறிப் போராட்டம் தொடர்ந்தது. மணியம்மையார் தடையை மீறி, 1957, மே 8ஆம் நாள் எம்.கே.டி. சுப்பிரமணியன் தலைமையில் மு.பொ.வீரனுடன் போராட்டக் களத்திற்கு வந்தார். காவல்துறை அவர்களைக் கைது செய்தது. மறுநாள் காலை 11 மணிக்கு பிரதம மாஜிஸ்ட்ரேட் முன் விசாரிக்கப்பட்டனர்.
50 ரூபாய் அபராதம்; கட்டத் தவறினால் இரு வாரங்கள் சிறைத் தண்டனை விதித்து ஆணையிட்டார் மாஜிஸ்ட்ரேட்.
அம்மையாரின் இப்போராட்டம் பின்னாளில் பெரும் வெற்றி பெற்றது. அந்த விடுதியின் உரிமையாளர் நேரில் வந்து மன்னிப்புக் கேட்டார். மனமாற்றம்தானே நமக்கு வெற்றி. அது கிடைத்தது.
உடல்மீட்புப் போராட்டம்
இந்திய அரசமைப்புச் சட்டத்தின், அடிப்படை உரிமைகள் பகுதியில், உட்பிரிவு 13(2), 25(1), 26, 29(1), (2),368 மதத்தையும் ஜாதியையும் பாதுகாக்கின்ற வகையில் உள்ளன. எனவே, இதை மாற்றி எழுதியாக வேண்டும் என்றும், ஜாதி, மதங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பாதுகாப்புப் பிரிவுகளை அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று பெரியார் கோரிக்கை வைத்து, அரசுக்கு 23.11.1951 முதல் 15 நாள் அவகாசம் கொடுத்தார். (2 லட்சம் பேர் கூடியிருந்த தஞ்சாவூர் மாநாட்டில்).
26.11.1957 அன்று பெரியார் திடலில் உரை நிகழ்த்திவிட்டு அந்தக் குறிப்பிட்ட சட்டப் பிரிவுகளைத் தீயிட்டுக் கொளுத்தத் திட்டமிட்டிருந்தார் பெரியார். ஆனால், 25ஆம் தேதியே பெரியார் கைது செய்யப் பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். ஆனால், திட்ட மிட்டபடி திராவிடர் கழகத் தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் 10,000 பேர் இந்திய அரசமைப்புச் சட்டத்தை எரித்தார்கள். 3000 தோழர்களுக்கு மேற்பட்டோர் ஆறுமாத சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
அன்னை மணியம்மையார் தமிழ்நாடு முழுக்க பல்வேறு சிறைகளுக்குச் சென்று தோழர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். திருச்சிச் சிறையில் இருந்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தனர். அவர்களின் உடல்கள் சிறைக்குள்ளே புதைக்கப்பட்டன. இதை அறிந்த அம்மையார், 10.03.1958 அன்று காமராசரைச் சந்தித்து முறையிட்டார். காமராசர் போலீசார் செயலைக் கேட்டு கோபப்பட்டு, உடனே அந்த இருவரின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஆணையிட்டார்.
புதைக்கப்பட்ட இரு உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. உடல்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானவர்கள் மரியாதை செலுத்த, இறுதியில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகப் போராட்டம்அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கை தந்தை பெரியாரால்
வைக்கப்பட்டு, அதற்கான போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட நிலையில், தந்தை பெரியாரின் இறப்பிற்குப்பின், அம்மா அவர்கள் இப்போராட்டத்தைத் தொடர்ந்து செய்தார். முதல் கட்டமாக மறியல் போராட்டத்தை நடத்தினார். 1974 ஏப்ரல் 3ஆம் நாள் சென்னை அண்ணாசாலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி அஞ்சல் நிலையம் முன் அடையாள மறியல் போராட்டம் நடத்தினார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அடுத்தகட்டமாக சென்னைக்கு வரும் ஒன்றிய அமைச்சர்களுக்குக் கருப்புக்
கொடி காட்டுவதெனத் தீர்மானித்து, அம்மையார் ஆணைப்படி 1974 மே மாதம் 6ஆம் தேதி ஆசிரியர், (கி.வீரமணி) தலைமையில் கருப்புக்கொடி காட்டினர். 26.05.1974ஆம் ஆண்டில் சென்னைக்கு வருகை தந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் ஒய்.பி.சவான் அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் அன்னையார் தலைமையில் நடந்தது.
இப்போராட்ட நடவடிக்கைகளின் விளைவாய், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அறிவித்தார். 15.4.1974ஆம் நாள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஒரு தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்கள். இத்தீர்மானம் ஒன்றிய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இத்தீர்மானத்தை ஒன்றிய அரசு பரிசீலிக்கும் என்று ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் ராம்நிவாஸ் மிஸ்ரா அறிவித்தார். இது அன்னையாரின் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
இராவணலீலா நடத்தி இந்தியாவையே அதிரச் செய்தார்
இராவணனின் உருவப் பொம்மையை எரித்துக்கொண்டாடப்படும் இராமலீலா நிறுத்தப்படவேண்டும் என்று 17.10.1974இல் திராவிடர் கழகம் சார்பில், அன்றைய பிரதமர்
இந்திராகாந்திக்குக் கடிதம் எழுதப்பட்டது. அப்போது அம்மையார் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அந்த நிலையிலும் பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் தந்தி கொடுத்தார்.
பிரதமர் இந்திராகாந்தி 24.10.1974 அன்று பதில் கடிதம் எழுதினார். அதில் இராவணலீலா கொண்டாடும் முடிவைக் கைவிட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்கும்படி கேட்டுக்கொண்டார். தென்னக மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தப்படக்கூடாது என்ற நியாயமான வேண்டுகோளை இந்திராகாந்தி பொருட்படுத்தவில்லை. இராமன் கதையைச் சிறப்பித்துக் கூறியிருந்தார்.
இந்திராகாந்தியின் பதில் கடிதம் கண்டதும், அன்னை மணியம்மையார் அவர்கள் மருத்துவமனையில் இருந்தபடியே “ராவணலீலா” திட்டமிட்டபடி பெரியாரின் நினைவு நாளன்று (24.12.1974) நடக்கும் என்று அறிவித்தார். அப்போது தமிழ்நாட்டில் கலைஞர் முதலமைச்சர். மத்திய அரசின் அழுத்தத்தால் இராவணலீலாவைத் தள்ளி வைக்கும்படி கலைஞர் வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளைக் காவல்துறை ஆணையர் ஷெனாய் அவர்களே நேரில் வந்து அன்னை மணியம்மையாரிடம் தெரிவித்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடந்தது.
“நாங்கள் எங்கள் முடிவின்படி இராவண லீலாவை நடத்துகிறோம். நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்” என்று அம்மையார் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
25.12.1974 அன்று சென்னை பெரியார் திடலில், “ராவணலீலா” நடைபெற்றது. இராவணனாக அணைக்கரை டேப்தங்கராசு வேடமிட்டு நடித்தார். இரவு 7 மணிக்கு ராமன், சீதை, லட்சுமணன் உருவப் பொம்மைகளுக்கு அன்னை மணியம்மையார் தீ வைத்தார். இந்நிகழ்வு இந்தியாவையே உலுக்கியது. அம்மையார் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டு, மறுநாள் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டனர். ஆனால், வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. எழும்பூர் 5ஆவது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்ட்ரேட் கோர்ட், தண்டனை விதித்தது. இதை எதிர்த்து செஷன்ஸ் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சோமசுந்தரம் 25.4.1977 அன்று தீர்ப்பு வழங்கி அனைவரையும் விடுதலை செய்தார். டில்லியில் நடக்கும் “இராமலீலாவிற்கு” எதிர்வினைதான் இந்த “இராவணலீலா”. இந்த நிகழ்விற்கு மக்களிடம் எதிர்ப்பு இல்லை. இந்நிகழ்வால் கலவரம் எதுவும் நிகழவில்லை. இது மதத்திற்கு எதிரான விழா அல்ல என்று தமது தீர்ப்பை வரலாற்றுச் சிறப்புமிக்கதாய் வழங்கியிருந்தார்.
இந்திராகாந்திக்கு எதிராய் கருப்புக்கொடி
நெருக்கடி காலத்தில் தமிழகத்தில் எதிரான செயல்களைச் செய்ததோடு, தி.க., தி.மு.க.வைத் தடைசெய்யவும் உள்துறை அமைச்சர் ஓம் மேத்தா இந்திராகாந்தியிடம் வேண்டுகோள் வைத்த நிலையில், தமிழகத்தின் எதிர்ப்பைக் காட்ட இந்திராகாந்திக்குக் கருப்புக்கொடி காட்ட முடிவு செய்தார். அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், மருத்துவர்கள் தடுத்தும் அன்னை மணியம்மையார் தாமே களத்தில் இறங்கினார். கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்குத் தடைவிதிக்கப்பட்டபோதும் தடையை மீறி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
‘மிசா’ கொடுமைகளை எதிர்கொண்ட அம்மா!
‘மிசா’ காலத்தில் தி.க.வும், தி.மு.க.வும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஆசிரியர் கி.வீரமணி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தமிழ்நாடு முழுக்க கழகத் தோழர்கள் சிறையில் வாடினர்.
அன்னையார் அவர்கள் அப்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டியைச் சென்னையில் சந்தித்து, தோழர்களை
விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தார். அதற்கு பிரம்மானந்த ரெட்டி, “தி.மு.க.வை ஆதரிக்க மாட்டோம் என்று எழுதிக் கொடுங்கள் உங்கள் இயக்கத்தோழர்களை விடுதலை செய்ய ஆவன செய்கிறேன்” என்றார்.
அதைக் கேட்டு ஆர்த்தெழுந்த அம்மா அவர்கள் “நான் உட்பட எங்கள் தொண்டர்கள் அவ்வளவு பேரும் இறந்தாலும் தந்தை பெரியாரின் கொள்கையை விடமாட்டோம்” என்று ஆவேசமாகக் கூறிவிட்டு வந்து
விட்டார்கள்.
தந்தை பெரியாரைக் காத்து, அவரது பேச்சும், எழுத்தும், போராட்டங்களும் நாட்டு மக்களுக்கு 95 வயது வரை கிடைக்கும்படி செய்த ஒப்பிலா தொண்டற வாழ்வுக்குச் சொந்தக்காரர் அம்மா அவர்கள். தந்தை பெரியாரின் இறப்பிற்குப்பின், இயக்கத்தை வழிநடத்தி, அதைச் சரியான பெரியாரின் வாரிசான ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ஒப்படைத்து, இயக்கமும், பணியும், பெரியார் கொள்கைகளும் உலகளவில் சென்று சேர வழிசெய்தவர் அம்மா அவர்கள்.
“கூப்பிட்டால் வந்துவிடுவார், கொடுத்தால் சாப்பிட்டுவிடுவார். இவை இரண்டிலும் பெரியார் குழந்தையே ஆவார்” என்று அன்னை மணியம்மையாரே கூறியுள்ளார்.
அதனால் பெரியாரை தாயைப் போலவே காத்தார் அன்னை மணியம்மையார்.
வாழ்க தந்தை பெரியாருக்கே தாயான அன்னை மணியம்மையாரின் புகழ்!