Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியார் திரைப்படத்திற்கு கலைஞர் அரசு நிதிஉதவி – இயக்க வரலாறான தன் வரலாறு (356)- கி.வீரமணி

இருபது ஆண்டுகாலம் வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் ச.இராசசேகரன் அவர்கள் பணியாற்றி, 12.7.2006 அன்று ஓய்வு பெற்றார். அதற்கான பாராட்டு விழா அங்கு நடைபெற்றது.

அவரைப் பாராட்டிப் பேசிய பெரியார் பாலிடெக்னிக் முதல்வர் இரா.மல்லிகா அவர்கள், ‘இவர் எங்கள் கல்வி ஆசான்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
எமது தலைமை உரையில், “இந்தக் கல்வி குடும்ப விழாவில் கலந்துகொள்வதில் பெருமிதம் அடைகிறோம். அவர் எமது குடும்பத்தின் மூத்த மகன் என்று பெருமையுடன் கூறினோம். அவர் இருபதாண்டுகள் இக்கல்லூரியின் முதல்வராக இருந்து தனது பணியைத் தொண்டறமாக மாற்றியிருக்கின்றார்” என்று அப்போது குறிப்பிட்டோம்.

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் முதல்வராக இருந்து ஓய்வு பெறும் ராசசேகரன்
அவர்களுக்குப் பாராட்டு

டாக்டர் ச.இராசசேகரன் தமது ஏற்புரையில், “எனக்குக் கிடைத்த பாராட்டுகள் யாவும், தமிழர் தலைவர் அவர்களுக்குக் கிடைத்த பாராட்டுகள்
ஆகும். ஏனெனில் தமிழர் தலைவர் அவர்கள்தான்

என்னை இயக்கினார். எனவே, எனக்குக் கிடைத்துள்ள அனைத்து புகழும், பாராட்டுகளும் தமிழர் தலைவர் அவர்களுக்கே உரித்ததாகும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் ச.இராசசேகரன்- அனுசூயா பெயரில் அறக்கட்டளை நிறுவ ரூ.25,000/- நன்கொடையாக டாக்டர் ச.இராசசேகரன் அவர்களால் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் அமெரிக்காவின் சான்டியாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்கா பேராசிரியை மற்றும் பிசியோ தெரபிஸ்ட் சுமதி சண்முகா, பாலிடெக்கின் முதல்வர் வெங்கட்ரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். பாலிடெக்னிக் முதுநிலை விரிவுரை யாளர் பா.உஷாராணி நன்றியுரையாற்றினார்.

கோகூர் தந்தை பெரியார் சிலைத் திறப்பு

எருக்காட்டூரில் நினைவுக் கொடி கம்பம் கல்வெட்டுத் திறப்பு விழாவும் அதைத் தொடர்ந்து கோகூரிலும் தந்தை பெரியார் சிலைகள் திறப்பு விழா நிகழ்ச்சிகள் 12.07.2006 அன்று மிகச் சிறப்புற நடைபெற்றன.

தந்தை பெரியார் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் உ.மதிவாணன் கலந்துகொண்டு உரையாற்றினார். அவரது உரையில்,
“நான் திராவிடர் கழகக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தந்தை உத்திராபதி தீவிர தந்தை பெரியார் தொண்டர். என் தந்தையார் மறைந்த பிறகு எங்கள் கிராமத்திற்கு வந்த தந்தை பெரியார் அவர்களிடம் திராவிடர் கழகத் தோழர்கள் எனது குடும்பத்தை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினர்.

அப்போது, என்னைத் தந்தை பெரியார் அவர்கள் மிக்க பாசத்துடன் அழைத்து, என் முதுகில் தடவிக் கொடுத்து நன்றாகப் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன் காரணமாகத்தான் நான் இன்று படித்து, வழக்குரைஞராகி, அமைச்சராகவும் ஆகும் வாய்ப்பை அமையப்பெற்றுள்ளேன்.
அந்நிகழ்வில் நாம் உரையாற்றுகையில், பலூன்கள் ஊசிபட்டு எப்படி வெடித்துச் சிதறுமோ, அதுபோல பெரியார் கொள்கைகளால் மூடநம்பிக்கைகள் காணாமல் போய்விடும்.

நீதியரசர் ஜனார்த்தனம் அவர்கள் ஆசிரியர் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி சந்திப்பு

இன்று இரண்டு வெற்றிகளால் மகிழ்ச்சி அடைகிறோம். இழந்த சுயமரியாதை திரும்பவும் கிடைத்திருக்கிறது. அதுபோன்று இந்த விழாவில்
தமிழ்நாடு அமைச்சரவைக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தோம். இரண்டாவதாக, தந்தை பெரியாரின் சிலை திறப்பு.
தந்தை பெரியாருக்குச் சிலை வைப்பது என்பது ஒரு சடங்கு அல்ல; சம்பிரதாயம் அல்ல. மாறாக, நன்றி உணர்ச்சியின் அடையாளம்” என்று உரையாற்றினோம்.

தந்தை பெரியார் சிலையை நன்கொடையாக வழங்கிய கோகூர் என்.கஜேந்திரன், விழாவிற்குச் சிறப்புச் சேர்த்திட உழைத்த வட்டாரக் கழகத் தலைவர் அருணாசலம், வடகரை சவுந்தரராஜன், ச.செல்வராசு, எம்.ராசு, தொழுவத்துமேடு நடராஜன், பக்கிரிசாமி, கணேசன், ப.பன்னீர்செல்வம், எஸ்.செல்வம் ஆகிய தோழர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டினோம்.

பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் குடும்பத்தின் சார்பாக பெரியார் திரைப்படத்திற்கு
ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட்டது.

விழாவின் இறுதியில் மாவட்டக் கழகச் செயலாளர் என்.பாலகிருஷ்ணன், நன்றி தெரிவித்தார்.

மறுநாள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்ட நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்கள் எம்மைச் சந்தித்தார். அன்று மாலை சென்னையில் நடைபெற்ற பொறியாளர் வேல் சோ.நெடுமாறன் இல்ல அறிமுக விழாவில் பங்கேற்றோம். அவர்தம் குடும்பத்தின் சார்பில் பெரியார் திரைப்படத்திற்கு ரூபாய் 1 லட்சம் நிதி வழங்கினர்.

தஞ்சை பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட பெரியார் சுற்றுச்சுழல் மற்றும் எரிசக்தி மேலாண்மை மய்யத்தினை 15.7.2006 அன்று அன்றைய ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ.இராசா தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினோம். மத்திய தேர்வாணைய உறுப்பினர் சலாம் இதில் பங்கேற்றார். மாலை திருச்சி பெரியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்றோம்.

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகத் தயாரிக்கப்படுவதற்கான படப்பிடிப்பு, காரைக்குடியருகில் தேவக்கோட்டை
யில் 2006ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி தொடங்கப்பட்டது.

தந்தை பெரியாராக ‘இனமுரசு’, ‘நாத்திக ‘நன்னெறிச் செம்மல்’ சத்யராஜ் அவர்கள் நடிக்க, ஞான. இராசசேகரன் அய்.ஏ.எஸ். அவர்கள் திரைக்கதை, வசனம், இயக்குநர் பொறுப்புகளை ஏற்று உருவாக்க, இயக்குநர் தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்திற்கான தொடக்க விழா நடைபெற்றது.
நாம் 18.7.2006 அன்று தேவக்கோட்டை சென்று அங்கு படப்பிடிப்புகளை நேரில் பார்த்து, படப்பிடிப்புக் குழுவினரைப் பாராட்டி ஊக்கப்படுத்தினோம்.
உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் பெண்களை நீதிபதியாக்கவும், சிறுபான்மை யினரை – தாழ்த்தப்பட்டோரை நீதிபதியாக்கவும், நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியை நிலைநாட்டிட வேண்டியும் 20.7.2006 அன்று காலை பதினோரு மணிக்கு சென்னை மெமொரியல் ஹாலின்முன் திராவிடர் கழகம் சார்பில் எமது தலைமையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, “இப்போராட்டம் இன்றுடன் முடியக்கூடியதல்ல, வெற்றி கிட்டும்வரை இந்தப் போராட்டம் ஓயாது. சென்னையில் இன்று (20.7.2006) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதே நோக்கங்களை வலியுறுத்தி மதுரை நீதிமன்றத்தின் முன்பாகவும், இந்த மாத இறுதிக்குள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்தோம்.

இங்கு நான்கு முக்கிய செய்திகளை மக்கள் சார்பாக வலியுறுத்திச் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மாநிலங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்.

டில்லியில் சட்ட அமைச்சராக உள்ள பரத்வாஜ் சமூகநீதிக்கு எதிராக பச்சைப் பார்ப்பன எண்ணத்தோடு செயல்பட்டுக்கொண்டு வருகின்றார். இதில் மாற்றம் தேவை.

எங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கை சமூகநீதித் தத்துவத்தில் ஒத்த கருத்துள்ளவர்களை அழைத்து இன்றைக்கு நடைபெற்றதைப் போல நாடு தழுவிய அளவிலே இந்தப் போராட்டத்தை நடத்துவோம்.

சமூகநீதிப் போரில் வெற்றிகிட்டும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என அப்போது குறிப்பிட்டோம்.

டாக்டர் கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு பதவியேற்றபின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரான இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் 22.7.2006 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அதில் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுவதைப் பாராட்டி ரூ.95 இலட்சம் அறிவித்திருந்ததுடன், சென்னை பல்கலைக் கழகத்தில் திராவிட இயக்க ஆய்வு மய்யம் அமைத்தல் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் மேலாண்மை மய்யம் தொடக்க விழா

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பிற்கு, 24.7.2006 அன்று மாலை சி.அய்.டி நகரில் உள்ள கலைஞர் அவர்களின் இல்லத்திற்குச் சென்று நன்றி தெரிவித்தோம். எம்முடன் இயக்குநர் ஞானராசசேகரன், சத்யராஜ், வழக்குரைஞர் கோ.சாமிதுரை வரியியல் அறிஞர் ச.ராசரத்தினம் ஆகியோர் வந்திருந்தனர்.

இந்த நிதியை (காசோலையை) 04.08.2006 அன்று தலைமைச் செயலகத்தில் திரைப்படத் தயாரிப்பாளரிடம் கலைஞர் அவர்கள் வழங்
கினார். அப்போது எம்முடன் இயக்குநர் ஞான.இராசசேகரன், வழக்குரைஞர் கோ.சாமிதுரை, ச.இராசரத்தினம், அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோ.சி.மணி, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் இருந்தனர்.

பெரியார் படக் குழுவினருடன் சந்திப்பு

அன்று மதியம் திராவிடர் கழக வடசென்னை மாவட்டத் தலைவர் ப.கவுதமன் படுகொலை செய்யப்பட்டதையொட்டி, அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி இரங்கல் கூட்டத்தில் உரையாற்றினோம்.

மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருவூலத்தைப் பார்வையிட்டோம். முதலமைச்சர் கலைஞர் உடனிருந்து பழைய நிகழ்வுகளைப் பகிர்ந்து

கொண்டார். பெரியார் வாழ்கிறார் என்னும் குறும்படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டுகளை அங்குள்ள ஏட்டில் பதிவு செய்தோம்.

ஆகஸ்ட் 8ஆம் தேதி சிங்கப்பூர் புறப்பட்டுச்சென்றோம். செப்டம்பர் இரண்டாம் தேதி வரை சிங்கப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.
அங்கிருந்த நேரத்தில் 14.8.2006 அன்று ஒரு செய்தியை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். ஈழத்தில் செஞ்சோலை எனப்படும் குழந்தைகள் இல்லத்தில் இலங்கை ராணுவம் குண்டு வீசியதால் 61 குழந்தைகள் இறந்தார்கள் என்கிற செய்தி தான் நம்மை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்திய அந்தச் செய்தி. சொந்த நாட்டு மக்கள் மீது இத்தகைய கொடூரத் தாக்குதலை நடத்தும் இலங்கை ராணுவத்தைக் கண்டித்தும் இலங்கை ராணுவத்திற்கு எந்தவித உதவியும் செய்யக்கூடாது என்று இந்திய அரசை வலியுறுத்தியும் காட்டமான அறிக்கையை வெளியிட்டோம்.

பெரியார் திரைப்படத்திற்கு ரூபாய் 95 லட்சம் வழங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் 

சிங்கப்பூர் திருமதி நவநீதம் நாகரெத்தினம் அவர்கள் 17.08.2006 அன்று விடியற்காலை 2.30 மணியளவில், மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தோம். மும்பையிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய அவரது மகன் மற்றும் உறவினர்களுடன் அம்மையாருக்கு இறுதி மரியாதைச் செலுத்தினோம். பிற்பகல் மூன்று மணியளவில் அவரது உடல் மண்டாய் மின் தகன மய்யத்தில் எரியூட்டப்பட்டது. அப்போது இருந்த உறவினர்களுக்கு ஆறுதல் கூறி இரங்கல் உரையாற்றினோம். தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆறுதல் செய்தியை தொலைநகல் மூலம் அனுப்பியிருந்தார்.

10.09.2006 அன்று தஞ்சையில் வெ.கோவிந்தராசன் – டாக்டர் தமிழ்மணி ஆகியோர் மகள் சிந்தனா – பாலமுருகன் ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தோம். மணமகள் சிந்தனாவின் தந்தை திராவிடர் கழகத்தின் முன்னோடி அணுக்கத் தொண்டர் களில் ஒருவர்.

11.9.2006 அன்று அரியலூர் மாவட்டத் தலைவர் ஜெயங்கொண்டம் காமராஜ் அவர்களின் வாழ்விணையர் கலைச்செல்வி அவர்கள் படத்தை செங்குந்தபுரத்தில் அவரது இல்லத்தில் திறந்து வைத்து உரையாற்றினோம்.

தந்தை பெரியார் 128ஆம் பிறந்த நாள் விழா 17.9.2006 அன்று சென்னை பெரியார் திடலில் பெருவிழாவாக நடைபெற்றது. முற்பகல் 11 மணியளவில், இன்று மிகவும் தேவைப்படுவது “சமூகநீதியே”, “மதவாத ஒழிப்பே” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பின்னர், பெரியாரின் கொள்கைகளை விளக்கி நாம் சிறப்புரையாற்றினோம்.

கலைஞர் கருவூலத்தைப் பார்வையிடும்
டாக்டர் கலைஞர் அவர்களும் ஆசிரியரும்

மாலை 6.30 மணியளவில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆறு. அழகப்பன் அவர்கள் எழுதிய ‘பெரியார் ஈ.வெ.ரா.’ என்னும் நூலை நாம் வெளியிட உயர்கல்வி மன்றத் துணைத் தலைவர் முனைவர் ஏ.இராமசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார். கேரள பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின், ‘மனுதர்மம் என்னும் நூலை நாம் வெளியிட, வழக்கறிஞர் கோ.சாமிதுரை அவர்கள் பெற்றுக்கொண்டார். தென்சென்னை தோழர் மதியழகன் முயற்சியில் உருவாக்கப்பட்ட ‘வண்டிக்காரன் மகன் மண்டிக்காரன்’ என்ற நூலை நாம் வெளியிட, சு.அறிவுக்கரசு அவர்கள் பெற்றுக்கொண்டார்.
சென்னை வானொலியில், இரவு 7.00 மணிக்கு “தந்தை பெரியாரின் முடிவெடுக்கும்திறன்” என்ற தலைப்பில் நாம் ஆற்றிய உரை ஒலிபரப்பப்பட்டது. அடுத்து “பெண்ணுரிமைப் போர்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

நிறைவாக, “கிரீமிலேயர்” உத்தரவை எரிப்போம்! “இந்தித் திணிப்பை எதிர்த்து மீண்டும் போர் தொடங்குவோம்!” என்று நாம் உரையாற்றினோம். இரா.வில்வநாதன் நன்றி உரையாற்றியாற்றிட, நிகழ்வு சிறப்புடன் நிறைவுற்றது.

10.09.2006 அன்று தஞ்சையில் வெ.கோவிந்தராசன்
– டாக்டர் தமிழ்மணி ஆகியோர் மகள் சிந்தனா – பாலமுருகன் ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தோம்

திராவிடப் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் அதுவும் தந்தை பெரியார் 128ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, பல்கலைக்கழக வளாகத்தில் “பெரியார் பவன்” என்ற கட்டடத் திறப்பு விழா, தந்தை பெரியார் உருவப்படத் திறப்பு விழா, பேராசிரியர் முனைவர் கே.பி.கிருஷ்ணா எழுதிய நூல் வெளியீட்டு விழா ஆகியவற்றில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுப் பங்கேற்றோம்..

சென்னையிலிருந்து பெங்களூருக்குச் செல்லும் வழியில், சோலையார்ப்பேட்டையை அடுத்த தொடர்வண்டி நிலையம் குப்பம்.
பெயர்தான் குப்பம் என்றாலும், அது ஒரு பேரூராட்சியாகும். கருங்கற்களுக்குப் பெயர் போன இடமாகும். இந்த ஊரிலிருந்துதான் கருங்கற்கள் இந்தியா முழுமைக்கும் வியாபார நோக்கில் ஏற்றுமதியாகின்றன.

இந்த ஊரைத் தேர்ந்தெடுத்து இங்கு ஒரு திராவிடப் பல்கலைக்கழகத்தை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்குத் தோன்றியது என்றால், அந்த மனிதர் மாமனிதராக – தொலைநோக்குச் சிந்தனையாளராகத்தான் இருக்கவேண்டும். அவர்தான் பேராசிரியர் வி.அய். சுப்பிரமணியம் அவர்கள்.
ஆந்திரா, தமிழ்நாடு, கருநாடகா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தானே திராவிடர்கள். அந்த நான்கு மாநில அரசுகளின் உதவியோடு அங்கு ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவிட முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டார் (1997).

1,100 ஏக்கர் நிலம் இந்தப் பல்கலைக் கழகத்திற்காக ஆந்திர மாநில அரசால் ஒதுக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம் கலைச்செல்வி படத்திறப்பு

இந்தப் பல்கலைக்கழகம் உருவாவதில் நிதி உள்பட பெரும் பங்கு ஆந்திர மாநில அரசைச் சேர்ந்ததாகும்.

உலகில் மூத்த நாகரிகத்திற்குச் சொந்தக்காரர்கள் என்று வரும்பொழுது, திராவிடர் நாகரிகம் குறிப்பிடத் தக்கதாகும்.

திராவிட இனம், அதன் மொழிகள், பண்பாடு, வரலாறு குறித்து ஆய்வு நோக்கில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கம் என்பது தேவையானது மட்டுமல்ல – அறிவார்ந்த நோக்கில் மிகவும் அவசியமானதும் தானே? திருவனந்தபுரத்தில் திராவிட மொழிகள் ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் பேராசிரியர் வி.அய். சுப்பிரமணியம் அவர்கள் திராவிடக் கலைக் களஞ்சியம் (Dravidian Encyclopaedia) தொகுதிகளை வெளியிட்டவர்.

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து 18.9.2006 பிற்பகல் 3.45 மணியளவில் ‘லால்பாக்’ விரைவு இரயிலில் புறப்பட்டோம். எம்முடன் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சங்கங்களின் பொதுச்செயலாளர் கோ. கருணாநிதி, பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச்செயலாளர் வீ. குமரேசன் ஆகியோர் வந்தனர்.

கேரள பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின், ‘மனுதர்மம்’ என்னும் நூலை ஆசிரியர் வெளியிட, வழக்கறிஞர் கோ.சாமிதுரை அவர்கள் பெற்றுக்கொண்டார்

சோலையார்ப்பேட்டையில் கழகத் தோழர்கள் அன்பான வரவேற்பினை அளித்தனர்.திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.கே.சி.எழிலரசன் பயணத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்.

இரவு 7.30 மணிக்கு குப்பம் தொடர்வண்டி நிலையத்தை அடைந்த போது இடி முழக்கங்களோடு கருஞ்சட்டைத் தோழர்கள் வரவேற்றனர்.
திராவிடப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். கேர்லோஸ் (தமிழவன்) பேராசிரியர்கள் விஷ்ணுகுமாரன், பத்பநாதன், முனிசாமி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர்.

தொடர்வண்டி நிலையத்திலிருந்து.8 கி.மீட்டர் தூரத்தில் பல்கலைக்கழகம் அமைந்திருந்தது. கார்கள் மூலம் இரவு 8 மணிக்கு பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகையை அடைந்தோம். விருந்தினர் மாளிகைக்கு (Emaenau) எமினே என்ற பெயரும், அந்தச் சாலைக்கு டி.பர்ரோ (T.Burrow) என்ற பெயரும் சூட்டப்பட்டு இருந்தன. இந்த இரு அய்ரோப்பிய ஆய்வாளர்கள் திராவிட மொழிகளின் வேர்ச் சொற்கள்பற்றி சிறந்த ஆய்வு செய்திருந்தமையால் அவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான சிறு உணவகத்தில் இரவு உணவு அளித்து உபசரித்தனர்.
தமிழ்த் துறையைச் சேர்ந்த பேராசிரியர் கேர்லோஸ் (தமிழவன்) உதவிப் பேராசிரியர்கள் விஷ்ணுகுமாரன், பத்மநாபன் ஆகியோர் கழகத் தலைவரிடம் பல்கலைக்கழகம் பற்றிய அரிய தகவல்களை எடுத்துக் கூறினர்.

அமைதியான சூழலில் சுற்றுச்சூழல் தூய்மை என்பதற்கு இலக்கணமாக அந்தப் பல்கலைக்கழகம் அமைந்த இடம் விளங்குகிறது.
விருந்தினர் விடுதியிலிருந்து இரண்டு கல் தொலைவில் உள்ள பல்கலைக் கழக வளாகத்திற்கு துணைவேந்தர் தம் கார் மூலம் அழைத்துச் சென்று வளாகத்தைச் சுற்றிக் காட்டினார்.

வேமண்ணா, திருவள்ளுவர், நாராயண குரு, பசவர் ஆகியோர் பெயர்களில் கட்டடங்கள் துலங்கின.

சரியாக 10 மணிக்கு பெரியார் பெயரால் அமைந்திருந்த (periyar Bhavan) கட்டடத்தைத் திறந்து வைத்தோம்.

பின்னர் அரங்கத்தில் நிகழ்ச்சிகள் தொடங்கின. பல்கலைக்கழகப் பதிவாளர் பி.ராஜசேகர் ரெட்டி வரவேற்புரை ஆற்ற, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் லட்சுமி நாராயணா தலைமை உரையாற்றினார்.

அவரது தலைமை உரையில், ‘‘பெரியார் பெயரில் இந்த கட்டடம் திறக்கப்படுகிறது என்றால் பெரியாருடைய தியாகத்தைப் பாராட்டி அவர் திராவிட மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்ததை நினைவு கூர்ந்திடும் வகையில் அவரது பெயரை இங்கே வைத்துள்ளோம். பெரியார் எதற்கும் சமாதானம் அடையக் கூடியவர் அல்லர். அவரது நோக்கத்தில் கொள்கைகள் வெற்றி பெற எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தார். மனித சமுதாயம் ஒன்றுபடவும் சமத்துவம் அடையவும் அவரது போராட்டம் இருந்தது. திராவிட மக்களின் ஒற்றுமைக்குப் பாடுபட்டவர்கள் இருவர், ஒருவர் பிஷப் கால்டுவெல் – மொழி ஒற்றுமையை வலியுறுத்தினார். அடுத்தவர், தந்தை பெரியார். தத்துவ ரீதியாக திராவிட முன்னே வலியுறுத்தினார். இத்தகைய சிறப்பு வாய்ந்த பெரியார் பேரால் அமைந்த கட்டடத்தைத் திறப்பதற்கு திராவிடர் கழகத்தின் தலைவரும் பெரியாரின் கொள்கைக்கு ஆதாரமாக விளங்கும் வீரமணி அவர்களை அழைத்து இருப்பது மிகவும் பொருத்தமானதாகும். திராவிடர் கழகம் அனைத்து திராவிட இயக்கங்களுக்கும் தாய்க் கழகம் ஆகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் நடைபெறும் இந்த விழாவானது இதுவரை நடந்த விழாக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு திராவிடக் கலாச்சாரத்தை நிறுவிட நடைபெறுகின்ற விழா என்றே நான் கருதுகிறேன் இந்த விழா என்னுடைய பணிக்காலத்தில் நடைபெறுவதைப் பெருமையாகக் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன் பிறகு கே.பி.கிருஷ்ணா அவர்கள் எழுதிய “தீ பொலிட்டிக்கல் பிலாசபி ஆப் டிரெவிடியன் லிட்ரேச்சர் ” என்னும் நூலினை நாம் வெளியிட்டோம்.

(நினைவுகள் நீளும்…)