1. கே: ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்கவில்லையென்று கூறும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தினகரன் போன்றோரின் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– ப.ரமேஷ், கோபிசெட்டிபாளையம்.
ப: பரிதாபப்பட்டுப் பார்க்கிறோம். அண்ணாவும், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அவரை மன்னிப்பார்களா? என்று தனிமையில் சிந்திக்கட்டும். ஆனாலும், அவர் மீதுள்ள வழக்குகளும் சிக்கல்களும் ஒன்றிய பா.ஜ.க. மைனாரிட்டி அரசால் தீர்க்கப்படவில்லையே! அதற்காக நம் பரிதாபப் பார்வை!
2. கே: அப்பட்டமாகத் தமிழ்நாட்டுக்குப் பச்சைத் துரோகம் செய்யும் ஒன்றிய ஆட்சிக் கட்சியான பா-.ஜ.க.வுடன் கூட்டணி சேர வலியுறுத்தும் ஒ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன் போன்றவர்களை எப்படிக் கருதுவது?
– கே.கோமதி, பாளையங்கோட்டை.
ப: விபீஷணர்கள் ‘சிரஞ்சீவிகள்’(நிரந்தரமானவர்கள்) என்ற வாக்கு சரியே என்பதற்கான சரியான சாட்சியங்கள் இவர்கள் போன்றோர்!
3. கே: ஒன்றிய அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவதற்குப் பதிலாக, தமிழ்நாடு அரசு நடத்தவேண்டும் என்று வலியுறுத்திப் போராட்டம் அறிவிக்கும் பா.ம.கவின் நிலைப்பாடு சரியா?
– தே.பரமேஷ், பரமக்குடி.
ப: சரியில்லை. ஜாதிவாரி கணக் கெடுப்பின் மூலம் அவர்களும் நாமும் எதிர்பார்க்கும் சமூகநீதி கிட்ட, மாநில அரசு ஏற்பாடு செய்வது முழுப்பலன் தராது. ஒன்றிய அரசு நடத்திடத் தயங்கி நிலுவையில் உள்ள, மத்திய சென்சஸ் கணக்கெடுப்புடன் இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட்டால் உச்சநீதிமன்றத்தாலும் மறுக்க முடியாது.நமது கோரிக்கை எவரும் மறுக்க முடியாதது (All Proof) ஆக இருக்கும்.
பிரதமர் மோடியுடன் தேர்தல் பிரச்சாரத்தின்போது மேடைமீது நின்று கையை உயர்த்திப் பிடித்த பா.ம.க. நிறுவனர் அன்பிற்குரிய மருத்துவர், அவரை வலியுறுத்துவதைவிட்டு, அதை எதிர்க்காது, அக்கொள்கையை ஏற்ற தமிழ்நாடு முதலமைச்சரை எதிரிபோல் ஏன் சித்திரிக்க வேண்டும்?
தட்டவேண்டியது டெல்லிக் கதவு என்பதை ஏனோ மறந்தோ, மறைத்தோ செயல்படுகின்றனர். புரியவில்லை!
4. கே: “மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை”, என்று ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கூறி
யுள்ளது பற்றித் தங்கள் கருத்து என்ன?
– கே.வேலாயுதம், கன்னிகாபுரம்.
ப: மக்களால் இரண்டு முறை தோற்கடிக்கப்பட்ட அவர், அமைச்சராக அமர்ந்து நீடிக்கிறார் என்பது ‘நவீன ஜனநாயகம்’. அவர் அதனால்தான் தீண்டாமைக்குப் புது அர்த்தம் கூறுகிறார். சமஸ்கிருதம் கடவுள் பாஷை— தமிழ் நீஷபாஷை என்பது ‘அதிநவீன தீண்டாமை’ அல்லவா? இதற்கு அவர் பதில் சொல்வாரா?
5. கே: “மொழி ரீதியிலான பிரிவினை முயற்சிகளை மக்கள் புறந்தள்ள வேண்டும்!” என்று மோடி கூறியுள்ள கருத்து அவரது அமைச்சரவையில் உள்ள மந்திரிக்குப் பொருந்தாதா?
– த.காமாட்சி, செங்குன்றம்.
ப: மொழிரீதியாக மக்களைப் பிரித்து இரண்டாந்தர, நாலாந்தரக் குடிமக்களாக்கி வருவது யார் என்பது உலகறிந்த உண்மையாயிற்றே-! இதைத் திசை திருப்பும் முயற்சியே இப்பேச்சு!
6. கே: மாட்டிறைச்சி பற்றிக் கவனம் செலுத்துவதற்குப் பதில் மக்கள் பிரச்சினையில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றக் கருத்து சரிதானே?
– க. தாரணிகா, ஒரகடம்.
ப: நூற்றுக்கு நூறு சரியானது. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு நமது பாராட்டு!
7. கே: மும்மொழித் திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்று பிடிவாதம் பிடிப்பதற்கு எதிராய் சட்டப்படியான தீர்வு உண்டா?
– பெ. காந்தி, ஆரணி.
ப: தீர்வு கிடைக்க அதுதான் வழி என்றால் அதையும் முயற்சி செய்யலாம்!
8. கே: ஒத்திசைவுப் பட்டியலில் கல்வி இருக்கும்போது, கல்வி சார்ந்த கொள்கை முடிவுகளில் மாநிலங்களை ஒன்றிய அரசு கட்டாயப்படுத்த முடியுமா? சட்டப்படி சரியா? தவறு என்றால் உச்சநீதிமன்றத்தில் தீர்வு காண முடியுமா?
– கே. குரு, தாம்பரம்.
ப: மேற்சொன்ன விடையே இதற்கும்! என்றாலும் இறுதித் தீர்ப்பு மக்கள் மன்றம் மூலமே கிட்டக்கூடும்.