மனமின்றி அமையாது உலகு (16)
அண்மைக் காலத்தில், ஆயுஷ் என்ற தனி அமைச்சகம் அமைக்கப்பட்டு ஆயுர்வேதா, சித்தா, யுனானி போன்ற சிகிச்சை முறைகளுக்கு தனி அங்கீகாரம் அளித்ததற்குப் பிறகு, எல்லா நோய்களுக்குமான சர்வரோக நிவாரணிகள் என்று இந்தச் சிகிச்சை முறைகள் முன்னிறுத்தப்படுகின்றன. அதுவும் குறிப்பாக யோகா. யோகா சாதாரணம் உடல் உபாதைகள் முதல் புற்றுநோய் வரை குணப்படுத்தும் தன்மை கொண்டது என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் கூட, கபசுரக் குடிநீர் கொரோனாவை வராமல் தடுப்பதோடு மட்டுமல்லாமல், வந்தாலும் முழுமையாகக் குணப்படுத்தி விடும் என்று அரசாங்கமே அந்தக் கருத்தைப் பரப்பியது. இவையெல்லாம் உண்மையா என்று செல்வதற்கு முன்னால் நாம் ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு நோயை எதிர்கொள்ள இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன
1. நோய் வராமல் தடுக்கும் முறைகள்
2. நோய் வந்ததற்குப் பிறகு அதற்கான வைத்திய முறைகள்.
உதாரணத்திற்கு, டெங்குக் காய்ச்சலை எடுத்துக்கொள்வோம். டெங்கு வராமல் தடுப்பதற்காக வீதியெங்கும் கொசு மருந்து அடிக்கிறார்கள். நாம் கொசு தங்கும் நீர் நிலைகளைச் சுத்தப்படுத்துகிறோம், அங்கும் கொசு மருந்து அடித்து டெங்குக் கொசுவை அழிக்கிறோம். இது தடுப்பு முறை. ஒருவேளை ஒருவருக்கு டெங்கு வந்துவிட்டால் அவர் மீதா கொசு மருந்து அடிக்கிறோம்? அவருக்குச் சரியான மருத்துவச் சிகிச்சையைக் கொடுக்
கிறோம். அவரின் நோய் அறிகுறிகள் என்ன, எந்த நிலையில் இருக்கிறது என்றெல்லாம் பார்த்து அதற்கு ஏற்ற மருத்துவச் சிகிச்சை வழங்கப்படுகிறது. அதே போல் தான் எல்லா நோயிலும், தடுப்பு முறைகள் என்பது வேறு, சிகிச்சை முறைகள் என்பது வேறு. ஆனால் யோகாவாக இருக்கட்டும், கபசுரக் குடி நீராக இருக்கட்டும் அதுவே தடுப்பு மருந்து, அதுவே சிகிச்சை முறை, அதுவே சர்வரோக நிவாரணியாகத்தான் சொல்லப்படுகிறது. அது எப்படி சாத்தியமாகும்?
இதை நான் சொல்வதற்குக் காரணம், நான் மனநலம் தொடர்பாகப் பேசச் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு கேள்வியைத் தொடர்ச்சியாக எதிர்கொள்கிறேன்; “யோகா பண்ணினால் மனம் ரிலாக்சாக ஆகிவிடும், எந்தவித மன நலப் பிரச்சினைகளும் வராது எனச் சொல்கிறார்களே, அது உண்மையா?”
ஒரு நெருக்கடியான சூழலில், அந்தச் சூழலில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் ஒருவரின் நிலையைப் புரிந்து கொண்டு அவரை அங்கிருந்து மீட்பதற்கு என்ன செய்ய முடியும் என்று ஆக்கப்பூர்வமாக யோசிக்க வேண்டும், அதை விடுத்து “அங்கேயே படுத்துக்கொண்டு யோகா செய்யுங்க” படபடப்பு, பயமெல்லாம் சரியாகிவிடும் என்று சொல்வது அபத்தமானது. அந்த வேலையைத் தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
இந்த நீடித்த பதற்றம், மனஅழுத்தம் (stress)இவற்றை எப்படி தடுப்பது? இந்த நோய்களைத் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?:
முதலில் பதற்றம், மனஅழுத்தம் போன்ற நிலைகளைப் பற்றிய நல்ல புரிதல் வேண்டும். எது இயல்பானது, எது நோய் என்கின்ற தெளிவு வேண்டும்.
சூழல் சார்ந்து நமக்குள் ஏற்படும் பதற்றங் களையும், மனஅழுத்தங்களையும் கண்டு பயப்படத் தேவையில்லை. அவை முழுக்க முழுக்கத் தேவையான ஒன்று.
அதே நேரத்தில் இந்தப் பதற்றமும், மனஅழுத்தங்களும் தேவையற்ற நேரங்களில் வரும்போதோ அல்லது நீண்ட நாட்கள் நீடிக்கும்போதோ அதை அலட்சியம் செய்யாமல் தகுந்த மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ‘எல்லாம் நம் மனதில் தான் இருக்கிறது, நாம் நினைத்தால் இதில் இருந்தெல்லாம் எளிதில் வெளியேறிவிடலாம்’ என்ற அலட்சியப் போக்குகளை எல்லாம் நிச்சயம் கைவிட வேண்டும்.
பதற்ற நோய்கள் வராமல் தடுப்பதற்காக ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளான தினமும் உடற்பயிற்சி, சரிவிகித சமநிலையான உணவு, உணர்வுகளை மேம்படுத்துவது, எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்வது, சிக்கனமான வாழ்க்கை எனத் திட்டமிட்டுக் கொள்ளலாம். இந்த வாழ்க்கை முறைக
ளெல்லாம் பதற்றத்தினால் உண்டாகும் நோய்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளே தவிர தீர்வுகள் அல்ல. பதற்ற நோய் என வந்த பிறகு அதற்கான வைத்தியத்தைத் தான் நாட வேண்டுமே தவிர தினமும் நடந்தால் சரியாகிவிடும், யோகா செய்தால் சரியாகிவிடும் என நம்பிக்கொண்டு வீட்டிலேயே இருந்து விடக் கூடாது.
“எமோஷனல் இண்டலிஜன்ஸ்” என்பது நிறைய விவாதிக்கப்படும் ஒன்றாக தற்போது மாறியிருக்கிறது. அதாவது நமது உணர்வுகளின் மீது நமக்கிருக்கும் புரிதல், கட்டுப்பாடு ஆகியவை அன்றாட வாழ்க்கை தரும் பல பிரச்சினைகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கக் கூடியவை. சட்டென நமக்குள் வெளிப்படும் உணர்வுகளை நாம் எவ்வளவு பக்குவமாகக் கையாள்கிறோம், முறைப்படுத்துகிறோம் மற்றும் வெளிப்படுத்துகிறோம் என்பது முக்கியமானது.அதை நாம் கற்றுக்கொள்வதன் வழியாக இந்தப் பதற்றம், மனஅழுத்தம் போன்றவற்றில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம்.
நவீன காலத்தில் உறவுகளின் வடிவமும், முக்கியத்துவமும் மாறிவிட்டன. இன்றைய காலகட்டத்தில் உறவுகளின் பின்னணியில் சுயநலங்கள் அதிகமாகிவிட்டன. உறவுகளின் தன்மை கூட இன்று மிகவும் மேலோட்டமாகவே இருக்கிறது. இன்று ஒருவருடன் சேர்வதும் மிக எளிது, பிரிவதும் மிக எளிதான ஒன்றாக மாறியிருக்கிறது. உறவுகள் சார்ந்த மதிப்புகள் 80s kid, 90s kid என்று கேலி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உறவுகள் மேலோட்டமானதாக மாறிவிட்டதற்குப் தனிப்பட்ட நபர்களின் சுயநலம் முக்கியஙபகாரணமாக இருக்கின்றன. இதனால் நெருக்கடி நிலைகளின் போது சக மனிதர்களிடமிருந்து கிடைக்கக் கூடிய ஆறுதலும், பாதுகாப்புணர்வும் கிடைக்காத சூழல் உருவாகியிருக்கின்றன.
தனிப்பட்ட ஒருவர் அவரது பிரச்சினை களை அவரே தனியாக எந்த ஒரு ஆறுதலான வார்த்தைகளுமின்றி எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த நிலை அவர்களை மிக எளிதாகச் சோர்வடைய வைத்துவிடுகின்றன. மிகவும் உணர்வுப்பூர்வமாக இருப்பது, இம்பல்சிவ்வாக (Impulsive) அதாவது, மனக்கிளர்ச்சியால் உணர்ச்சி வயப்பட்டு நடந்து கொள்வதும் அவர்களைத் தவறான முடிவை நோக்கி நகர்த்துகின்றன. இன்றைய இளைய தலைமுறையினரிடம் நான் காணும் முக்கியமான பிரச்சினை இது. அவர்களால் இயல்பான பதற்றத்தையும், மனஅழுத்தத்தையும் கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அது அவர்களின் அன்றாட வாழ்க்கையின்மீதும் அவர்களின் உடல் நலத்தின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.