Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மும்மொழி என்ற முகமூடிக்குள் ஹிந்தி சமஸ்கிருத மயமாக்கும் சதி ! எச்சரிக்கை! எச்சரிக்கை !- மஞ்சை வசந்தன்

மும்மொழிக் கொள்கை, நீட்தேர்வு என்பதெல்லாம் கல்வி சார்ந்த செயல்திட்டங்கள் என்று எண்ணினால் அது அறியாமையாகும். கல்வித்துறையின் செயல்திட்டமாக இவை செயல்படுத்தப்பட்டாலும், இதன் உண்மையான நோக்கம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான சமஸ்கிருத மயமாக்கல் என்ற இலக்கை அடைவதுதான்.

இந்தியா முழுவதும் சில ஆயிரம் பேர்கள் மட்டும் பேசக்கூடிய சமஸ்கிருதத்தை எப்படி 150 கோடி மக்கள் மீது திணிக்க முடியும்? இது சாத்தியமா? என்றுதான் எல்லோரும் எண்ணுவர். மேலோட்டமாகப் பார்த்தால் இந்தக் கேள்வி சரியாகப்பட்டாலும், இத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ள தொலைநோக்குத் திட்டத்தை புரிந்துகொண்டால், நாம் கூறுவது எந்த அளவிற்கு உண்மை, சரியென்பது விளங்கும்.

நீட்தேர்வும் ஹிந்தித் திணிப்பும்

நீட் தேர்வு வருவதற்குமுன், தமிழ்நாட்டில் மாநிலக் கல்வித் திட்டப் பள்ளிகள்தான் அதிகம் இருந்தன. சி.பி.எஸ்.சி. பள்ளிகள் மிகக் குறைவாகவே இருந்தன. அப்படி குறைவாக இருந்த சி.பி.எஸ்.சி. பள்ளிகளிலும் மிகக் குறைவான எண்ணிக்கையிலே மாணவர்கள் படித்தனர். எடுத்துக்காட்டாக நெய்வேலியில், ஜவகர் சி.பி.எஸ்.சி. பள்ளியும், ஜவகர் ஸ்டேட்போர்டு பள்ளியும் அருகருகே உள்ளன. நீட்தேர்வு வருவதற்கு முன் ஜவகர் ஸ்டேட்போர்டு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயில்வர், ஜவகர் சி.பி.எஸ்.சி., பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்களே படிப்பர். ஸ்டேட்போர்டு பள்ளியில் இடம் பெறுவது சிரமம். சி.பி.எஸ்.சி. பள்ளியில் மாணவர்கள் சேரவே வரமாட்டார்கள்.

ஆனால், நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டு, சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின்படி நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டதும், சி.பி.எஸ்.சி. பள்ளியில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் சேர்ந்தனர். ஸ்டேட்போர்டு பள்ளியில் மாணவர்கள் மிகக் குறைவாகவே சேர்ந்தனர்.

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் இருந்த பெரும்பாலான ஆங்கில வழிப் பள்ளிகள் சி.பி.எஸ்.சி பள்ளிகளாக மாற்றப்பட்டன. நான்கு அய்ந்து ஆண்டுகளிலே சி.பி.எஸ்.சி பள்ளிகளின் எண்ணிக்கையும், அதில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்துவிட்டன.
சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம் படிப்பது திணிக்கப்படுகிறது. தமிழ், ஆங்கிலம் மட்டும் படித்த மாணவர்கள், சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளைப் படிக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

நாளைக்கே நீட்தேர்வு நீக்கப்பட்டால் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் மாணவர் சேராமல், ஸ்டேட்போர்டு பள்ளிகளில் சேர்ந்துவிடுவார்கள். ஹிந்தியும், சமஸ்கிருதமும் மாணவர்களால் படிக்கப்படாமல் ஒதுக்கப்படும். இதுவே உண்மைநிலை.

ஆக, நீட்தேர்வின் முதன்மை நோக்கம், ஹிந்தி, சமஸ்கிருதத்தை இந்தியா முழுவதும் மாணவர்கள் மத்தியில் திணிக்க வேண்டும் என்பதேயாகும். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. மாணவர்கள் ஸ்டேட்போர்டு பள்ளியிலும் படிக்கிறார்கள். சி.பி.எஸ்.சி. பள்ளியிலும் படிக்கிறார்கள். ஆனால், நீட்தேர்வு கேள்விகள் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்திலிருந்தே கேட்கப்படுகின்றன. சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்திலிருந்து கேள்வி கேட்கப்படுவதால், மாணவர்கள் சி.பி.எஸ்.சி பள்ளியில் சேர்ந்துவிடுகிறார்கள். ஹிந்தியும், சமஸ்கிருதமும் கட்டாயம் படிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

எனவே, ஹிந்தி, சமஸ்கிருதத்தை மாணவர்கள் மத்தியில் திணிக்க உருவாக்கப்பட்ட திட்டமே நீட்தேர்வு என்பது.
அதுமட்டுமல்லாமல் மத்திய அரசால், மாநிலங்களில் தொடங்கப்படும் எந்தப் பள்ளிகளாக இருந்தாலும் அங்கு ஹிந்தியும் சமஸ்கிருதமும் திணிக்கப்படுகின்றன. இப்போது அடக்குமுறையின், ஆதிக்கத்தின் உச்சத்திற்கு சென்று ஒன்றிய அரசின் நிதியைப் பெற வேண்டுமென்றால், மும்மொழிக் கொள்கையை, புதிய கல்வித்திட்டத்தை ஏற்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, பாசிச ஆட்சியின் பச்சையான, மக்களாட்சிக்கு விரோதமான செயலாகும்.

மும்மொழி எதற்கு?

எந்தவொரு மாநிலமாக இருந்தாலும் அந்த மாநிலத்திற்கென்று தாய்மொழி ஒன்று உண்டு, அந்த மொழி கட்டாயம் படிக்கப்பட வேண்டும். உலகத் தொடர்புக்கு ஆங்கிலம் கட்டாயம். எனவே ஆங்கிலமும் படிக்கப்பட வேண்டும். இந்த இரண்டு மொழிகளே போதும் என்னும் போது மூன்றாவது மொழி எதற்கு? அது மாணவர்களுக்குக் கூடுதல் சுமைதானே! ஒரு மொழியைக் கூடுதலாகப் படிக்க விரும்புகிறவர் அதற்கென்று உள்ள அமைப்புகளில் படிக்க யாரும் தடை சொல்லவில்லை. அப்படியிருக்க எல்லோர் மீதும் மூன்றாவது மொழியைத் திணிக்கவேண்டிய கட்டாயம் ஏன்?
மத்திய அரசு ஹிந்தி, சமஸ்கிருதம் போன்ற வேறு மொழிகளைப் படிக்க விரும்புகின்றவர்களுக்குக் கட்டணமில்லாமல் இலவசமாகக் கற்க நிறுவனங்களை நிறுவி கற்பித்துக்கொள்ளட்டும். மாறாக மாநிலக் கல்வி நிறுவனங்களில் ஏன் கூடுதல் மொழியைத் திணிக்கவேண்டும்? இது உரிமையைப் பறிக்கும் செயல்

இல்லையா?
மாநில மொழிகளை அழிக்கும் திட்டம்

மாணவர்கள் மூன்றாவது மொழியைக் கற்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தால், மாணவர்கள் கல்வி பயில அளிக்கப்படும் நிதியை நிறுத்துவார்களா? மும்மொழியை ஏற்றால்தான் நிதி தருவோம் என்று ஆதிக்கம் செலுத்துவார்களா? வழங்கப்படும் நிதியை கொடுத்துவிட்டு, கொள்கை முடிவுகளை இரு அரசுகளும் பேசுவதுதானே சரியான அணுகுமுறையாக இருக்கும். அப்படியில்லாமல் மும்மொழி ஏற்கவில்லையென்றால் நிதி கிடையாது

என்பது மாநில மொழியை ஒழிக்கும் முயற்சிதானே?
பல மாநில மொழிகள் அழிக்கப்பட்டன

இந்தித் திணிப்பால் இந்தியாவில் பல மாநில மொழிகள் அழிக்கப்பட்டுள்ளன. சுதந்திரம் அடைந்த போது (1947இல் இராஜஸ்தானில்,) 70 சதவிகிதம் மக்கள் இராஜஸ்தானி பேசினர். தற்போது 90 சதவிகிதம் பேர் அம்மாநிலத்தில் இந்தி பேசுகின்றனர். இராஜஸ்தானி அழிக்கப்பட்டுவிட்டது. பா.ஜ.க. முதல்வராய் இருந்த வசுந்தராஜ சிந்தியாவே இந்தித் திணிப்பை எதிர்த்துள்ளார். டில்லி ஜந்தர்மந்தரிலே போராட்டம் நடத்தியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் வங்காளமொழி ஒடுக்கப்பட்டு ஹிந்தி ஆதிக்கம் மிகுந்துள்ளது. மேற்குவங்கத்தில் இது சார்ந்த போராட்டங்கள் நடக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தில், பிரஜ்பாஷா, அவதிபோஜ்புரி; பீகாரில் போஜ்புரி, மைத்திலி, அங்கிகா, மகஷி, பஜ்ஜிகா; உத்ரகாண்டில் கார்வாலி, கோமாலி; ஹரியானாவில், ஹரியாண்டி, ஹிமாபகடி; மத்தியப்பிரதேசத்தில், குத்தேலி, பகேலி, கோண்டி; சத்தீஷ்கரில் சத்திஷ்கரி, ஒரிசாவில் கோசலி போன்ற 80 மொழிகள் ஒடுக்கி மறைக்கப்பட்டு, அம்மக்கள் ஹிந்தி பேசுகின்றவர்களாக ஆக்கப்பட்டு அம்மொழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
போஜ்புரி மக்கள் இன்றைக்கும் தங்கள் மொழியைக் காப்பாற்றப் போராடுகின்றனர். ஆனால், அம்மொழிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.
மராட்டி மொழியும் புறக்கணிக்கப்பட்டு ஹிந்தி ஆதிக்கம் மிகுந்துவருகிறது.

இப்படி இந்தியா முழுக்க பல மொழிகளை அழித்து ஹிந்தியை வளர்க்கின்றனர்.

சமஸ்கிருத மயமாக்கலே நோக்கம்

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அமைப்புகளுக்கு ஹிந்தி மொழியை வளர்க்க வேண்டும் என்பதோ ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதோ உண்மையான நோக்கம் அல்ல. மாறாக சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்க வேண்டும்; இந்தியாவை சமஸ்கிருத மயமாக்க வேண்டும் என்பதே உண்மையான நோக்கம். அதற்கு ஹிந்தியைத் திணிப்பது வளர்ப்பது இடைக்கால ஏற்பாடு என்பதே உண்மையான நோக்கம்.

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அமைப்புகளின் பிதாமகனான கோல்வால்கர் கூறியதை அறிந்துகொண்டால் இந்த உண்மையை நீங்கள் அய்யமின்றிப் புரிந்துகொள்ள முடியும், ஏற்றுக்கொள்ள முடியும்.

“As a solution to the problem of ‘lingua fanca’ till the time Sankskrit takes that place, we shall have to give priority of Hindi on the score of convenience.”
(Bunch of Thoughts 8ஆவது அத்தியாயம்-பக்கம் 113)

அதாவது “மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது. சமஸ்கிருத ஆட்சி மொழியாக வருகின்ற வரை ஹிந்திக்கே நாம் முன்னுரிமை தந்து, நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண்டும்” என்கிறார்.

இதைவிட ஆரியத்தனம் வேறு இருக்க முடியுமா? இதற்கு முன் நாம் குறிப்பிட்டதுபோல, செத்துப்போன, நாற்பதாயிரம் பேர்கூட பேசாமல் உலக வழக்கொழிந்த ஒரு மொழியை (சமஸ்கிருதத்தை) இந்தியாவில் ஆட்சி மொழியாக்க வேண்டுமாம். அவ்வாறு ஆட்சி மொழியாகின்ற வரை இந்தியைப் போனால் போகட்டும் என்று ஆட்சி மொழியாக வேண்டுமாம்.

இது மட்டுமல்ல, 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டாக்டர் முகர்ஜி தலைமையில் ஜனசங்கம் நிறைவேற்றிய தீர்மானம் என்ன தெரியுமா?
“நாடு முழுவதும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும். அதே நேரத்தில் சமஸ்கிருதக் கருத்துகளைப் பிரபலப்படுத்த வேண்டும். எல்லா இந்திய மொழிகளுக்கும் சமஸ்கிருத எழுத்துகளையே பொது எழுத்தாக அறிவிக்க வேண்டும். உபநிடதங்கள், பகவத்கீதை, இராமாயணம், மகாபாரதம் ஆகியவையே இந்தியாவின் இலக்கியங்கள்; ஹோலி, தீபாவளி, ரக் ஷபந்தன் ஆகியவையே தேசியப் பண்டிகைகள் என அறிவிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றினர். தங்கள் மொழிக்குத் தகுதியே இல்லாமல் போனாலும், ஒரு சதவிகிதம் பேர்கூட அதைப் பேசாமல் போனாலும் தங்களுடைய மொழியே கட்டாயம் போதிக்கப்பட வேண்டும்; மற்ற மொழிகளெல்லாம் சமஸ்கிருத எழுத்தையே பயன்படுத்த வேண்டும் என்றால் இது எப்பேர்ப்பட்ட அடாவடித்தனம்; ஆதிக்கப் போக்கு, பேட்டை ரவுடிகள்கூட இப்படிப் பேச மாட்டார்களே!

அவர்களது இராமாயணமும் மகாபாரத முந்தான் இலக்கியங்களாம், நமது திருக்குறள் போன்ற உலக ஒப்பற்ற நூல்களெல்லாம் குப்பைகளாம்!
அவர்களது தீபாவளியும், ஹோலியுந்தான் பண்டிகைகளாம்; நமது அர்த்தமுள்ள ‘பொங்கல்’ எல்லாம் ஒதுக்கப்பட வேண்டியவையாம்!
எது தனதோ அதுவே வாழவேண்டும்; எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் மற்றவர்/களுடையது அழியவேண்டும் என்பதுதான் ஆரிய அரிச்சுவடி. அது அப்படியே இங்கு பிரதிபலிப்பதைப் பாருங்கள்.

வேதங்கள் எல்லாம் என்ன சொல்கின்றன. ஆரியர்கள் வாழவேண்டும்; அவர்களுக்கு எதிரானவர்களெல்லாம் நாசமாகப் போக/வேண்டும் என்பதுதானே! அதைத்தான் இங்கு தீர்மானமாகப் போட்டுள்ளார்கள்.

இப்போது புரிகிறதா? ஹிந்தியை அவர்கள் ஏன் பரப்பத் துடிக்கிறார்கள்; ஆட்சி மொழியாக்க அலைகிறார்கள் என்று?
ஹிந்தி இடத்தை சமஸ்கிருதம் பிடிப்பது எளிது

ஹிந்தியை இந்தியா முழுவதும் பரப்பி, ஆட்சி மொழியாக்கிவிட்டால் அடுத்து சில மாதங்களிலே சமஸ்கிருதத்தை ஹிந்திக்குப் பதிலாகக் கொண்டு வந்துவிடலாம் என்பதுதான். காரணம், ஹிந்தியும் சமஸ்கிருதமும் ஒத்துப்போகும் மொழிகள். தமிழ் + சமஸ்கிருதம் + உருது மூன்றும் சேர்ந்து உருவானதே, ஹிந்தி. எனவே, ஹிந்தியை எடுத்துவிட்டு அந்த இடத்தில் சமஸ்கிருதத்தை இந்தியா முழுக்கக் கொண்டு வரமுடியாது. காரணம் சமஸ்கிருதம் தற்போது சில ஆயிரம் பேர்கள் மட்டுமே பேசும் மொழி. ஆனால் ஹிந்தி பல கோடி பேர் பேசும் மொழி, எனவே, இந்தியைப் பரப்பி அந்த இடத்தில் சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவது எளிது. நேரடியாகச் சமஸ்கிருதத்தைப் புகுத்துவதே (பதிலீடு செய்வதே) எளிது என்பதாலே இப்படிப்பட்ட சூழச்சித் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., அமைப்பினருக்கு ஹிந்து மதத்தில்கூட பிடிப்பு இல்லை. அவர்கள் நடைமுறைப்படுத்த நினைப்பது ஆரிய சனாதன மதத்தை மட்டுமே. அவர்கள் ஒற்றை மதத்திட்டம் நிறைவேறினால், அடுத்த கட்டமாக ஹிந்துமதத்தை ஒழித்துவிட்டு ஸனாதன மதத்தை நிலைநாட்டி, வர்ணாஸ்ரமத்தை நடைமுறைப்படுத்தி, மனுதர்மத்தைச் சட்டமாக்கிவிடுவர்.

ஒற்றைச் சித்தாந்தம்

ஆதிக்கவாதிகள், பாசிஸ்டுகள் எப்பொழுதும் ஒற்றைச் சிந்தாந்தத்தைச் செயல்படுத்த முனைபவர்கள். ஒரே நாடு, ஒரு நபர் சர்வாதிகாரம், ஒற்றை ஆட்சி, ஒற்றை மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே சித்தாந்தம். இதுவே அவர்களின் செயல்திட்டம். ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அமைப்பினர் ஆதிக்கவாதிகள் என்பதால் அவர்கள் இந்தச் செயல் திட்டத்தை அப்படியே ஏற்றுச் செயல்படுத்துகின்றனர். ஹிட்லரை வழிகாட்டியாகக் கொண்டவர்கள் அவர்கள்.
அதனால்தான் ஒற்றைக் கலாச்சாரத்தை அவர்கள் ஒவ்வொன்றாகச் செயல்படுத்த முற்படுகின்றனர். எல்லா மதங்களையும் ஒழித்து அல்லது ஜீரணித்து ஒரே மதமாக ஸனாதன மதமாக்க முற்படுகின்றவர்கள், மற்ற மதத்தினர் ஸனாதன மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்கின்றனர். ஒரே தேர்தல் நடத்தத் தீவிரம் காட்டுகின்றனர். ஒரே தேர்வு முறை என்ற திட்டத்தையும் பெரும் அளவு செயல்படுத்திவிட்டனர். அடுத்து ஒரே மொழி என்ற கொள்கையைச் செயல்படுத்தவே இந்த மும்மொழிக் கொள்கை என்பதைத்தான் நாம் இதுவரை விளக்கிச் சொன்னோம்.

மொழியழிந்தால் பண்பாடும் அழியும்

இந்தியாவைப் பொறுத்தவரை இங்கு எதிர் எதிரான இரண்டு கலாச்சாரப் போர் சில ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. தமிழர் பண்பாடான திராவிடர் பண்பாடும் அதற்கு எதிரான ஆரியப் பண்பாடும் இங்கு தொடர்ந்து போட்டியிட்டு நிலை நிறுத்த முற்படுகின்றன.

இம்மண்ணின் பரம்பரைப் பண்பாடான திராவிடப் பண்பாட்டை ஆரியக் கலாச்சாரம் அழித்து தனது பாசிசக் கலாச்சாரத்தை நிலைநாட்ட தொடர்ந்து முற்படுகிறது என்றாலும் அதை திராவிடப் பண்பாடு முறியடித்தே வருகிறது. என்றாலும் அவர்கள் தத்தம் முயற்சியைக் கைவிடாது தொடர்ந்து முயன்று வருகின்றனர். மொழியை அழித்தால் பண்பாட்டை அழித்துவிடலாம் என்ற கொள்கையைப் புரிந்தே அவர்கள் இதில் தீவிரங்காட்டுகின்றனர். நாமும் அதை உணர்ந்து நம் பண்பாட்டைக் காக்க, நம் மொழியைக் காத்தாக வேண்டும்; அதற்கு விழிப்போடிருந்து போராடியாக வேண்டும்.

“போஜ்புரி” என்ற மொழியை நான்கு கோடி மக்கள் பேசுகின்றனர். என்றாலும் அம்மொழியில் கல்வி கற்க முடியாதபடி செய்து, ஹிந்தியில் கற்கும்படி செய்துவிட்டனர். அதே நிலையை தமிழுக்கும் மற்ற திராவிட மொழிகளுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்றே பி.ஜே.பி. அரசு முற்படுகிறது; முயற்சி செய்கிறது.
அரசு அங்கீகாரமும், அலுவலகப் பயன்பாடும், கல்வி கற்கும் வாய்ப்பும் இல்லாமல் போனால் அம்மொழி அசிந்து போகும். தமிழை அப்படி அழிக்க அவர்கள் முற்படுகின்றனர்.

தமிழை அழிப்பது எளிதல்ல என்றாலும் எதிரிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் புரிந்தே நாம் நமது எதிர்நிலைச் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். சில ஆயிரம் பேர் பேசக்கூடிய சமஸ்கிருதத்தை 150 கோடி மக்களின் மொழியாக்கிவிட முயல்பவர்கள் என்பதால், நாம் மிகவும் எச்சரிக்கையோடு எதிர்நிலை மேற்கொண்டு, எதிராளிகளின் முயற்சிகளை முறியடிக்க வேண்டும். அதற்கு மும்மொழிக் கொள்கையைப் புறந்தள்ளி இருமொழிக் கொள்கையிலே நாம் தொடர்ந்து செல்ல வேண்டும். எதிராளிகளின் முயற்சிகளை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.