Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வார சந்தா செலுத்துங்கள்..

மதவெறி வேண்டாம் !- முனைவர் கடவூர் மணிமாறன்

எப்படி யேனும் இத்தமிழ் நாட்டில்
செப்படி வித்தை பலவும் காட்டிக்
குழப்பம் விளைத்துக் குளிர்காய்ந் திடவே
உழக்கில் கடலை அளக்க முயல்வோர்
நாட்டின் அமைதியைச் சீர்குலைக் கின்ற
ஆட்டம் காட்டி அகமகிழ் கின்றார்!
பொறுப்பை மறந்து புன்மை விழைந்து
வெறுப்பு அரசியல் விருப்பாய்க் கொண்டார்!
மதமெனும் பாறையில் மல்லிகை மலரா!
உதவார், உணரார் ஓலமும் பெரிதே!
வருணா சிரம, சனாதன வஞ்சகர்
பெருமை இழந்து பிதற்றித் திரிவர்!
சிறுமை விளைப்பர்! சிந்தனை மறப்பர்!
குறுகிய நோக்குடன் குழிபறிக் கின்றார்!
உலகியல் நடப்பை ஒதுக்கித் தள்ளிக்
கலகம் புரிவோர் கயமை நாடகம்
நடத்தி வருவதை நாடே அறியும்!
மடமைச் சேற்றுள் மயங்கித் தவிப்பார்
“மதமோ மக்கள் அபினே” என்றார்
மதிப்புறு அறிஞர் மார்க்சும் அந்நாள்!
சாதியும் மதமும் சமயமும் பொல்லா
வேதியர் புரட்டென விளம்பினார் பெரியார்!
எல்லா ருக்கும் எல்லாம் கிடைத்திட
எல்லா உரிமையும் பெண்களும் பெற்றிடச்
சமத்துவம் நாட்டில் மலர்ந்து மணந்திடச்
சமூக நீதியும் தழைத்தோங் கிடவே
புரட்சிக் கொடியை உயர்த்திப் பிடிப்போம்!
புரட்டும் பொய்யும் அறத்தைக் கொல்லும்!
பதறிடச் செய்தே பண்பினை அழிக்கும்
மதவெறி வீழ்த்தி “மனிதம்” காப்போம்!
மூடநம் பிக்கை முடமாய் ஆக்கிடும்
நாடெலாம் வாழ்த்திட நலம்சேர்ப் போமே!