இரண்டாவது உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம்.
காலி மாவட்டத்திலுள்ள அக்மீமனை என்னும் கிராமத்தில் லீலாவதி என்ற
ஓர் இளமங்கை வசித்து வந்தாள், அக்கிராம மக்களிடையே அவள் சிறந்த அழகியெனத் திகழ்ந்தாள், மற்றவர்களைப் போலின்றி லீலாவதியின் கையில் எப்பொழுதுமே பணம் இருக்கும்.
ஒவ்வொரு புதன்கிழமையும் கிராமத்திற்குப் புடவை விற்கவரும் மீராலெப்பை வியாபாரி முதலில் லீலாவதியைப் பார்த்துப் புடவையை விற்றுவிட்டுத்தான் வேறு இடங்களுக்குச் செல்வார். லெப்பைக்கு உதவியாகப் புடவை வண்டியைத் தள்ளிக்கொண்டு வரும் சரத் என்ற இளைஞனுக்கும் லீலாவதிமேல் ஒரு கண்.
லீலாவதியின் தந்தை அப்புஹாமி, காலி நகரிலிருந்த மளிகைக் கடையொன்றில் விற்பனையாளராகக் கடமையாற்றி வந்தார்.
அதிகாலையிலேயே வேலைக்குச் சென்று விடும் அவர் இரவு ஒன்பது மணிக்குத்தான் வீடு திரும்புவார்.
24 வயது நிரம்பிய லீலாவதியும், அவளது ஒன்றுவிட்ட பத்து வயது சகோதரி சிறியாவதியும் மட்டுமே அந்த வீட்டில் வசித்தனர்.
லீலாவதி பிறந்த ஒரு சில வருடங்களில் அவளின் தாய் இறந்தாள். அப்புஹாமி மறுமணம் செய்தார். சிறியாவதி பிறந்ததும் இரண்டாவது மனைவியும் இறந்து விட்டாள்.
இதனால் வீட்டுப் பொறுப்பு முழுவதும் லீலாவதி மேல் சுமத்தப்பட்டது. சிறியாவதியையும் தாயைப்போல் இருந்து வளர்த்து வந்தாள் லீலாவதி.
இச்சமயத்தில் தான் அப்புஹாமியுடன் கடையில் வேலை செய்துகொண்டிருந்த சோமபாலா என்ற இளைஞனுக்கும், லீலாவதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமணமும் இனிது நடந்தது.
புதுமண ஜோடிகள் இன்ப வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தனர்.
திருமணம் முடிந்து சரியாக நாற்பதாவது நாள் இராணுவத் தலைமைக் காரியாலயத்திலிருந்து சோமபாலாவுக்கு ஓர் அழைப்பு வந்தது.
ஏற்கனவே இராணுவத்தில் சேர சோமபாலா மனு செய்திருந்தார். அதன் பலன் இந்த அழைப்பு.
இராணுவத்தில் சேருவது என்ற முடிவுடன் சோமபாலா புறப்பட்டார்.
கண்ணீர் மல்க கணவனை வழியனுப்பி வைத்தாள் லீலாவதி.
நான்கு மாதங்கள் தியத்தலாவையில் பயிற்சி பெற்ற சோமபாலா, அய்ம்பது இராணுவ வீரர்களில் ஒருவராக யுத்தத்தில் போரிட மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கணவனின் பிரிவால் கவலையுற்றிருந்த லீலாவதி, அவன் எழுதும் கடிதங்களைக் கொண்டும், இராணுவ உடையுடன் உள்ள கணவனின் புகைப்படங்களைப் பார்த்து மகிழ்ந்தும் மனதைத் தேற்றிக் கொண்டாள்.
லெப்பை, சரத் உட்பட அயலவர்களுக்கும் இப்படங்களைக் காட்டி லீலாவதி மகிழ்ச்சி யடைவாள்.
தனிமையாக வீட்டிலிருக்கும் நேரங்களில் லீலாவதி நேரத்தை வீணாக்குவதில்லை. ரேந்தை பின்னி, லெப்பைக்கே விற்றுப் பணமாக்குவாள்.
அப்புஹாமி இல்லாத நேரங்களில் அவள் வீட்டுக்கு வரும் ஆண்கள் லெப்பையும், சரத்தும் மட்டுமே.
தங்கை சிறியாவதி பாடசாலைக்குச் சென்றபின் கணவனிடமிருந்துவரும் கடிதத்தை மிகவும் சிரமப்பட்டு படித்து முடித்துவிடுவாள் லீலாவதி. ஆனால், பதில் எழுத மட்டும் அவளுக்கு முடியாது.
இதனால், இன்னொருவரின் உதவியை நாடவேண்டிய நிலை அவளுக்கு ஏற்பட்டது.
இருமுறை சரத்தின் உதவியால் கடிதம் எழுதினாள்.
சில காலம் சென்ற பின்பு கணவனிடமிருந்து கடிதம் வருவது குறைந்தது. காலப்போக்கில் முற்றாக நின்று விட்டது.
ஆனால், மணி ஆர்டர் பணம் வருவது மட்டும் நிற்கவில்லை.
லீலாவதியின் மகிழ்ச்சி படிப்படியாக மறைந்து கொண்டிருந்தது! லெப்பைக்கும் லீலாவதியால் இப்பொழுது லாபம் கிட்டவில்லை. மாறாக அவளது மனக்குறைகளைக் கேட்க வேண்டிய துர்ப்பாக்கியமேற்பட்டது.
லாபமில்லாத இடத்தில் வேலையில்லையென்று லெப்பை அங்கு வருவதை நிறுத்திக் கொண்டார்.
ஆனால், சரத் மாலை நேரங்களில் வந்து போவான். சரத்தின் உதவியுடன் கடைசியாக ஒருமுறை லீலாவதி கடிதம் எழுதினாள். அதற்கும் பதில் வரவேயில்லை.
இதைத் தொடர்ந்து சரத், லீலாவதிக்கு ஆறுதல் கூற முற்பட்டான்.
“எவ்வளவோ நல்ல குணமுள்ள இளைஞர்கள்கூட இராணுவத்தில் சேர்ந்து கெட்டுவிடுகிறார்கள். உன் கணவனும் அங்கு வேறு எவளாவது ஒருத்தியைப் பிடித்திருப்பான், அதுதான் உன்னை மறந்துவிட்டான்” என சரத் லீலாவதிக்கு அடிக்கடி கூறுவான்.
லீலாவதியும் கண்ணீர் மல்க அவன் கூறும் கதைகளைக் கேட்டுக் கொண்டிருப்பாள்.
நாட்கள் நகர நகர சரத்-லீலாவதி உறவில் நெருக்கம் ஏற்படலாயிற்று.
சரத்திடம் தன் கவலைக்கு மருந்து தேடலானாள் லீலாவதி.
மாலை ஆறு மணிக்கு லீலாவதி வீடு வரும் சரத் இரவு ஒன்பது மணிக்குத்தான் அங்கேயிருந்து செல்வான். அதுவரை லீலாவும், சரத்தும் கணவன்-மனைவி போல் நடந்து கொள்வார்கள்.
லீலாவதிக்கு சோமபாலாவின் நினைவுகள் மறைந்து சரத்தைப் பற்றிய சிந்தனைகளே ஆட்கொள்ளலாயின.
நாட்கள் நகர்ந்தன.
சரத்தின் வருகை குறைய ஆரம்பித்தது. முடிவில் அவன் ஊரைவிட்டே போய்விட்டான்.
காலையில் சென்று இரவு வீடு திரும்பும் அப்புஹாமிக்கு இந்த நாடகங்கள் தெரிய வெகுநாட்களாயின. தெரிந்தபோது வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது.
லீலாவதி கர்ப்பிணியாகிவிட்டாள்.
1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் லீலாவதி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
அப்புஹாமி பேரனின் ஜாதகத்தைப் பார்த்தார். பெரும் கல்வியும், செல்வமும் பெற்று பணக்காரப் பெண்ணை மணம் செய்து ஒரு தலைவனாக வரக்கூடிய அறிகுறிகள் இருப்பதாக ஜாதகம் கூறியது. ஆனால், முதல் அய்ந்து வருடங்கள் சனி ஆட்சி செலுத்துவதால் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென்றும் எச்சரிக்கப்பட்டது.
அப்புஹாமியின் ஆலோசனையின் பேரில் லீலாவதி தன் மகனை மிகமிகக் கவனமாகவும், பாசத்துடனும் வளர்த்து வந்தாள்.
1946ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதினொராம் தேதி லீலாவதிக்கு தந்தியொன்று வந்தது. அதில், கணவன் சோமபாலா போரில் மாண்டுவிட்டதாகக் கூறப்பட்டிருந்தது.
லீலாவதி அழுது புலம்பினாள்.
அப்புஹாமிக்கும், சோமபாலாவின் உறவினர்
களுக்கும் தகவல் பறந்தது.
எல்லோரும் கூடி லீலாவதிக்கு ஆறுதல் கூறினர்.
அன்று மாலை நாலு மணி இருக்கும். அழுது புலம்பியதால் அசந்து போயிருந்த லீலாவதி திடீரெனக் கைகளை உயர்த்தியபடி எழுந்தாள். அவளின் உடல் விறைத்தது. கண்கள் நாலா திசையிலும் சுழன்றன.
ஒரு பயங்கரமான ஓலம் அவளிடமிருந்து வெளிப்பட்டது.
ஆணின் குரல் போன்று அவளின் குரல் மாறியிருந்தது.
“உனக்கு நல்ல பாடம் படிப்பிக்கிறேன்; என் மனைவியை ஏமாற்றி விட்டாய். உன்னையும் உன் பிள்ளையையும் கொல்லப் போகிறேன். நான் மனித இரத்தத்தைப் பார்த்திருக்கிறேன். பலரைச் சுட்டுத் தள்ளியிருக்கிறேன். சரத்தையும், அவன் பிள்ளையையும் பழிவாங்கிய பின்பே நான் இங்கிருந்து போவேன்.
இப்படிக் கத்தியபடியே ஆடினாள். பின்பு மயங்கி விழுந்தாள். மயக்கம் சுமார் பதினைந்து நிமிட நேரம் நீடித்தது. அங்கு குழுமியிருந்தோர் இது சோமபாலாவின் ஆவி தான் என உறுதிப்படுத்தினர்.
லீலாவதி பேசியபோது, உச்சரிப்பும் குரலும் சோமபாலாவைப் போலவே இருந்தன.
அங்கிருந்த உறவினர்கள் லீலாவதியின் மகனைப் பாதுகாக்கும்படி எச்சரித்தனர். சோமபாலாவின் ஆவி இப்பிள்ளையைக் கொலை செய்யக்கூடுமென அச்சம் தெரிவித்தனர்.
அவர்கள் எச்சரித்தது போன்றே, லீலாவதி யைச் சோமபாலாவின் ஆவி பிடித்துக்கொண்ட போதெல்லாம் பிள்ளையைக் கொலை செய்ய முயற்சித்தது.
இதனால், பிள்ளையை உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட முயன்றனர். ஆனால், லீலாவதி இடம் கொடுக்கவில்லை.
அவள் சுய உணர்வுடன் இருந்தபோது மகன்மேல் அளவில்லாத பாசத்துடன் நடந்து கொண்டாள்.
சோமபாலாவின் ஆவி புகுந்து கொண்டபோது “இந்தப் பிள்ளை எனக்கு எதிரி” எனப் பிள்ளையைக் கொல்ல முயற்சித்தாள்.
தினமும் இரவு உணவுக்குப் பின்பு, லீலாவதி பேய் ஆட்டம் ஆடுவது சகஜமாகி விட்டது.
ஆவி பிடித்தவுடன், ‘லெப்ட்… ரைட்….’ என்று கத்தியபடி வீட்டைச் சுற்றி வீறுநடை போடுவாள்.
சரத்தை எப்படியாவது கொன்று விடுவேன் எனப் பேய்க் கூச்சலிடுவாள்.
இதன் காரணமாக இரவு நேரங்களில் லீலாவதியின் மகனை அப்புஹாமியே கவனித்துக் கொள்வார். தன்னுடன் நித்திரை கொள்ள வைத்துக்கொள்வார்.
இந்த நிலை இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தது.
காலப் போக்கில் லீலாவதியின் நிலைமையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
அப்புஹாமி ஒரு முடிவிற்கு வந்தார். மாந்திரீகர்களை அழைத்து வந்து, லீலாவதியிடம் குடிகொண்டிருக்கும் ஆவியை விரட்ட எண்ணினார். அந்த முடிவுக்கு ஏற்ப ஜிந்தோட்டைப் பகுதியிலிருந்து பல பிரபல மாந்திரீகர்கள் வரவழைக்கப்பட்டனர்.
பிரம்மாண்டமான முறையில் பேய்விரட்டும் ‘தொவில்’ நடனம் நடைபெற்றது.
நள்ளிரவு தாண்டிவிட்டது!
மேளங்களின் ஓசை அப்பகுதியையே ஆட்டங் காண வைத்தது. மாந்திரீகர்களும் ஆவேசமுடன் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர்.
லீலாவதியும் எழுந்து ஆட ஆரம்பித்தாள்.
நூற்றுக்கணக்கான மக்கள் நித்திரை விழித்து இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தலைமை மாந்திரீகர் திடீரென லீலாவதியின் நெற்றியில் கையை வைத்து ஜெபித்தார். அடுத்துக் கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தார்.
“நான் தான் சோமபாலா. நான் கப்பலில் காலிக்கு வந்தேன். என் மனைவியைப் பார்க்க
வந்தேன். சரத் என் மனைவியை வஞ்சித்து
விட்டான். என் மனைவி அவனுக்குப் பிறந்த பிள்ளையை வைத்திருக்கக் கூடாது. சரத், அவன் மகன் இருவரையும் நான் கொல்ல வேண்டும். இரு உயிர்களை நீங்கள் பலிகொடுத்தால்தான் நான் இங்கிருந்து போவேன்.”
“நான் தோட்டத்தில் இருக்கும் பலா மரத்தில் ஏறிக்கொள்கிறேன். அந்த மரத்திலுள்ள ஒரு கிளையைக் குலுக்கி நான் ஏறிக்கொண்டதைக் காட்டுகிறேன்.”
இவ்வாறு மாந்திரீகரின் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தாள் லீலாவதி.
சிறிது நேரத்தில் ஆடிக்கொண்டிருந்த லீலாவதி மயங்கி விழுந்து விட்டாள்.
இரு சேவல்கள் சோமபாலாவின் ஆவிக்குப் பலி கொடுக்கப்பட்டன.
அந்த ஆவி பலா மரத்தில் ஏறிக் கொண்டதா என்பதைப் பார்க்க மாந்திரீகர் சென்றார். கூட்டமும் அவரைப் பின் தொடர்ந்தது.
இரவு ஒரு மணியாகிவிட்டது. மாந்திரீகர் பலா மரத்தின் கிளையொன்று குலுங்குவதாகக் கூறினார். ஆனால், அதை வேறு எவரும் பார்க்கவில்லை.
சோமபாலா யுத்தத்தில் இறந்தபோது மத ஆச்சாரப்படி அடக்கம் செய்யப்படவில்லை. அதனால்தான் அவரது ஆவி மனைவியைத் தேடி வந்து விட்டதெனத் தலைமை மாந்திரீகர் தீர்ப்பு வழங்கினார்.
இதன் பின் இரு வாரங்கள் லீலாவதி நன்றாக இருந்தாள்.
ஒரு நாள் ஆவி குடியேறிய பலா மரத்திலிருந்த பலாக்காய் ஒன்றைக் கறி சமைத்துச் சாப்பிட்டதனால் மீண்டும் சோமபாலாவின் ஆவி லீலாவதியைப் பிடித்துக் கொண்டது.
இதன் பிறகு பழையபடியே லீலாவதி நடந்து கொள்ள ஆரம்பித்தாள்.
தன் மகளுக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த அப்புஹாமி, தனது முதலாளியான திரு.தர்மதாசாவிடம் ஒரு நாள் இதுபற்றிக் கூறி, இதற்கு ஏதாவது ஒரு வகையில் விமோசனம் தேடும்படி கேட்டுக் கொண்டார்.
இச்சமயம் காலி ரிச்மண்ட் கல்லூரியில் ஆசிரியராக இருந்த திரு.ஆப்ரகாம் கோவூரை நெருங்கிய திரு.தர்மதாசா, லீலாவதியின் கதையைக் கூறினார். அப்புஹாமியை அழைத்து கோவூர் சகல விஷயங்களையும் தெரிந்துகொண்டார்.
அப்புஹாமிக்கு ஆறுதல் கூறிய அவர், லீலாவதியைத் தன்னால் குணப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
லீலாவதியை எந்தப் பேயும் பிடிக்கவில்லை. அவளைப் பிடித்திருப்பது ‘குளசொலேலியா’ என்ற மனநோயே என்பதைத் தெளிவாக விளக்கினார்.
கணவன் ஊரில் இல்லாத சமயம், மாற்றான் சரத்தோடு உறவு கொண்டுவிட்டது, லீலாவதியின் உள்ளத்தை உருக்கிக் கொண்டே இருந்தது. சரத், அவளைக் கைவிட்டுச் சென்றதும், அவனை எப்படியாவது பழி வாங்கிவிடவேண்டுமென்ற வைராக்கியமும் அவளுக்கு ஏற்பட்டு விட்டது. இந்தச் சமயத்தில்தான் தன் கணவன் போரில் இறந்துவிட்ட செய்தியும் அவளுக்குக் கிட்டியது. இச்செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்த லீலாவதி, பலவீனத்தாலும் மனதில் ஏற்பட்டிருந்த குழப்பங்களாலும் ‘குளசொலேலியா’ என்ற நோயினால் பீடிக்கப்பட்டாள்.
குளசொலேலியாவினால் பீடிக்கப்பட்டவர்கள் ஒருவரைப் போல் பேசுவதோ, நடப்பதோ, சேஷ்டைகள் செய்வதோ மிகச் சுலபம். அநேகர் பிரமை பிடித்தவர்கள் போல “பேய் பிடித்துக் கொண்டது” என்கிறார்களே அப்படியும் இருப்பார்கள். லீலாவதியும் இந்நிலைக்குத்தான் ஆளானாள்.
இவ்வாறு அப்புஹாமிக்கு விளக்கிய கோவூர், இதைப்போன்று தான் பலரைக் குணப்படுத்தியிருப்பதாகவும் கூறினார்.
அப்புஹாமி கூறிய கதையில் ஒரு சம்பவத்தைச் சுட்டிக் காட்டினார் கோவூர்.
“நள்ளிரவில் பலா மரத்தில் ஆவி ஏறியதாக மாந்திரீகர் சொல்லியிருக்கிறார். பலா மரத்தில் ஆவி ஏறியதை மாந்திரீகர் உணர்ந்திருக்கலாம். ஆனால், அந்த இருட்டு நேரத்திலே பலா மரக்கிளை குலுங்கியதைக் கண்டதாகச் சொல்லியிருக்கிறாரே அதுதான் மிக அபத்தமானதாகும். அவர் அதைப் பார்த்திருப்பாரானால், அங்கு குழுமியிருந்த மற்றவர்களும் பார்த்திருக்கலாமே! பேய் விரட்டப்பட்டு விட்டதென்ற நம்பிக்கை லீலாவதிக்கு ஏற்பட்டதினால் தான் சில தினங்கள் குணமடைந்திருக்கிறார். ஆனால், அதே பலாமரத்தின் காயைச் சமைத்து சாப்பிட்டு விட்டு பின்பு பேய் ஞாபகம் வந்துவிடவே மீண்டும் அவளுக்குப் பயமும், பீதியும் பீடித்து மனநோயை ஏற்படுத்திவிட்டது. மொத்தத்தில் லீலாவதி தான் செய்த தவறுகளை எண்ணி எண்ணியே இந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறாள்.
இப்படியான பல விஷயங்களை அப்புஹாமிக்கு அவர் எடுத்துச் சொன்னதுடன் லீலாவதியை அழைத்து வரும் படியும் கூறினார்.
ஒரு குறிப்பிட்ட தினத்தில் லீலாவதி கோவூரிடம் அழைத்து வரப்பட்டாள்.
அவளை ‘ஹிப்னாட்டிஸ்’ செய்த கோவூர், லீலாவதியின் உள்ளுணர்வுகளுக்குப் பல விஷயங்
களை விளக்கி இனிமேல் எதற்குமே பயப்படாமல் வாழும்படி தைரியம் கூறி சிகிச்சை அளித்தார்.
இது முடிந்தவுடன் இனிமேல் லீலாவதியைத் தனிமையில் இருக்க விடும்படி அப்புஹாமிக்கு அறிவுரை சொன்னார். இதன் பின்பு தகப்பனும், மகளும் புறப்பட்டுச் சென்றனர்.
சில மாதங்களின் பின்பு ஒரு நாள் கோவூர் தனது நண்பர் பியதாசாவுடன் அக்மீமனைக்குச் சென்றார். அங்கு லீலாவதி குணமடைந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
1947ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோவூர் காலி ரிச்மண்ட் கல்லூரியை விட்டு, கல்கிசை சென், தோமஸ் கல்லூரிக்கு வந்தார்.
அதே ஆண்டு மார்ச் மாதம் காலி நண்பர் தர்மதாசாவிடமிருந்து வந்த கடிதமொன்று கோவூரைப் பெரும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
போரில் இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட லீலாவதியின் கணவர் சோமபாலா உயிருடன் மனைவியிடம் வந்து விட்டார் என்பதுதான் அக்கடிதம் கூறிய தகவல்.
எதிரிகளால் சிறை பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், போர் முடிந்து விடுதலை செய்யப்பட்ட பின்பு சோமபாலா இலங்கை திரும்பியுள்ளதாகவும் திரு.தர்மதாசா தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதம் கோவூருக்கு ஒரு வகையில்மகிழ்ச்சியையும், இன்னொருபுறம் வேதனையையும் கொடுத்தது.பிரிந்தவர் கூடியதை அறிந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், அதேசமயம் உயிருடன் இருப்பவனின் ஆவியே உலவுகிறது என்று கூறும் மாந்திரீகர்களும், அதை நம்பும் மக்களும் இருக்கிறார்களே என்று எண்ணி வருத்தமும் அடைந்தார்.