பெர்ட்ரண்ட் ரசல்
– பெரியார் சி ந்தனைகள்
ஒரு
கண்ணோட்டம்…
சென்றமாதம் சென்னையில் நடைபெற்ற பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒருவரை வியப்புடன் பார்த்து கைதட்டிப் பாராட்டினார். அவர் அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் தாமஸ் கிட்டோசி புரூக்சிமா அவர்கள். தன்னைத் தமிழில் அறிமுகப்படுத்தி திருக்குறளைத் தமிழிலும்
ஆங்கிலத்திலும் கூறி விளக்கம் கொடுத்து அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்கினார். மதுரை வலையப்பட்டிக்கு வந்திருந்த அவரைப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் நானும், கவிஞர் சொ.நே.அன்புமணி, மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகச்செயலாளர் இரா.லீ.சுரேசு ஆகியோர் சந்தித்து நூல்களை அளித்து வாழ்த்து தெரிவித்து உரையாடினோம். அப்போது எங்கள் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கையில்,
கேள்வி: சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் மதுரையைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். மதுரைக்கு எப்போது,எதற்காக வந்தீர்கள்?
பதில்: நான் அமெரிக்காவில் தத்துவத்துறை மாணவன்.வெளிநாட்டில் சென்று படிப்பதற்கான உதவித்தொகையோடு 1998ஆம் ஆண்டு நான் மதுரைக்கு, அமெரிக்கன் கல்லூரிக்கு வந்தேன்.அப்போது எனக்கு வயது 22. நான் எனது ஆராய்ச்சியோடு ஆங்கிலத்தில் பேசுவது எப்படி என்னும் வகுப்புகளை அமெரிக்கன் கல்லூரியில் நடத்தினேன். அதில் நிறைய மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அப்படி அந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட ஒரு மாணவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவரது அப்பா என்னிடம் இரண்டு நூல்களைக் கொடுத்தார். அதில் ஒன்று திருக்குறள். அது தமிழிலேயே இருந்தது. நீங்கள் தமிழைப் படித்து இந்தத் திருக்குறள் நூலைப் படிக்க வேண்டும் என்று அவர் எனக்குச் சொன்னார். திருக்குறள் பற்றி நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தேன். படிக்கவில்லை.
கேள்வி : திருக்குறள் எப்போது படிக்க ஆரம்பித்தீர்கள்?..
மதுரைக்கு வந்தவுடன் நான் மதுரை நகரத்துக்குள்ளேயே தங்கியிருந்தேன். பேச்சுத் தமிழ் மட்டும் முதலில் பழகினேன். பேருந்தில் மதுரைக்குள் பயணம் செய்வேன். பேருந்தில் திருவள்ளுவர் படம் போட்டு, திருக்குறள் எழுதப்பட்டிருக்கும். எனக்கு அது திருக்குறள் என்று தெரியும். ஆனால், படிக்கத் தெரியாது. அதுதான் எனக்கு முதல் அறிமுகமாக இருந்தது. பிறகு எழுத்துக்கூட்டி பேருந்தில் போகும்போது திருக்குறளை வாசிக்கும் அளவிற்குத் தமிழைப் படித்தேன். ஆனால், அந்தத் திருக்குறளுக்குப் பொருள் எனக்குப் புரியாது. நான் எழுத்துத் தமிழ் படிப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வரவில்லை. நாம் எதற்காக வந்தோமோ அதைப் பார்ப்போம். பின்னர் தமிழ் எழுதப் படிக்க முடிந்தால் படிப்போம் என்று நினைத்தேன். பேச்சுத் தமிழ் மட்டும் பழகினேன். நான் முதலில் மதுரை அமெரிக்கன் கல்லூரிக்குள்ளேயே தங்கி இருந்தேன். அப்போது தமிழில் பேசுவதற்கு எனக்கு ஆள் கிடைக்கவில்லை. என்னைப் பார்த்தவுடன் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிப்பார்கள். நான் தமிழில் பேச ஆசைப்படுவேன். என்னோடு தமிழில் பேசுங்கள் பேசுங்கள் என்று நான் கேட்டுக் கொள்வேன். அப்படி இரண்டு மூன்று நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களோடு தமிழில் பேசிக்கொண்டே இருப்பேன். அப்படியே இரண்டு ஆண்டுகள் முடிந்தபிறகு அமெரிக்கா போய்விட்டேன்.
கேள்வி: வலையபட்டி கிராமத்திற்கு எப்போது வந்தீர்கள்?
பதில்: அமெரிக்கன் கல்லூரிக்குள் தங்கி இருக்கும்போது நகரத்துக்குள் தங்காமல், கிராமத்தில் தங்கவேண்டும் என்று முடிவு எடுத்தேன். இந்த மக்களையும், மண்ணையும் புரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்தேன்.ஒரு நண்பர் மூலம் வலையபட்டியில் ஒரு வீடு கிடைத்தது. நானே பால் காய்ச்சி, சமைத்து சாப்பிட ஆரம்பித்தேன். அந்த வீட்டு உரிமையாளர்கள் என்னைச் சமைக்கவிடவில்லை. நீங்களாக எதற்கு சமைத்து சாப்பிடுகிறீர்கள், எங்கள் வீட்டிலேயே சாப்பிடுங்கள் என்று சொன்னார்கள். நான் ரொம்பத் தயங்கினேன், அவர்களுக்கு நான் ஒரு பாரமாக ஆகிவிடக்கூடாது என்று. ஆனால், அவர்கள் வலியுறுத்திக் கூறினார்கள். சரி என்று சொல்லிவிட்டேன். அன்று முதல் நானும் வலையபட்டியில் இந்த வீட்டில் ஒரு உறுப்பினராகி விட்டேன். எனது தம்பிதான் இவர். (வலையபட்டிக்காரர் வணக்கம் வைத்தார்.நாங்களும் வணக்கம் வைத்தோம். அவரது இணையர் தேநீர் கொண்டுவந்து கொடுத்து உபசரித்தார்). விவசாயம் இருப்பதால்தான் நாம் இருக்கிறோம். அதனால் விவசாயம் சார்ந்திருக்கிற மண்ணில் நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். திருவள்ளுவர் உழவுபற்றிக் கூட மிக அருமையாக பாடி இருக்கிறார் அல்லவா, எனவே இந்த விவசாய மக்கள் எனக்கு ரொம்பப் பிடித்துப் போனார்கள். எப்போது
வந்தாலும் இந்த வீட்டில், என் வீட்டில்தான் தங்குகிறேன் என்று உரிமையோடு சொல்கிறார்.
கேள்வி: எழுத்துத் தமிழ் எப்போது படிக்க ஆரம்பித்தீர்கள்?
2003ஆம் ஆண்டு அமெரிக்க பல்கலைக்கழகத்தின் நிதி உதவி மீண்டும் 3 ஆண்டுகளுக்குக் கிடைத்தது. மறுபடியும் மதுரைக்கு வந்தேன். வலையபட்டியில் தங்கினேன். தமிழ் எழுத்துப் படிக்க எனக்கு ஒரு நல்ல வாத்தியார் கிடைத்தார். மதுரை செளராஷ்ட்ரா கல்லூரியில் இருந்த பேராசிரியர் கு.வே. ராமகோடி என்பவர்தான் அந்த நல்ல வாத்தியார். அவர்தான் எனக்கு எழுத்துத் தமிழைச் சொல்லிக் கொடுத்தவர், கற்றுக் கொடுத்தவர். அவர்தான் தமிழைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தைக் கொடுத்தது மட்டுமல்ல, தமிழ் செய்யுள்களின் ஓசை இனிமையை எனக்குக் கற்றுக் கொடுத்தவர். கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்கப் படிக்க எனக்கு எழுத்துத் தமிழில் விருப்பம் வந்தது. நான் அமெரிக்காவில் படித்தது தத்துவம். தத்துவத்தில் ஒரு பகுதி நீதி.தமிழ் நீதி நூல்கள் எனக்கு மிகுந்த ஆர்வத்தைக் கொடுத்தன.
தமிழ் படிக்கும் போது ,அதில் அவ்வையாரின் மூதுரை படிக்கும் போது கவிதை அமைப்பு அதன் இன்பம் அப்போதுதான் நான் உணர ஆரம்பித்தேன். மீண்டும் அமெரிக்கா போனேன். மறுபடியும் ஒரு இரண்டரை வருடம் எனக்கு அனுமதி கிடைத்தது. வந்தேன். அப்போதுதான் மூதுரை, திருக்குறள், தொல்காப்பியம் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் திருக்குறளைத் தமிழிலேயே படிக்க வேண்டும் என்று முயற்சி செய்து படிக்க ஆரம்பித்தேன். பரிமேலழகர், மணக்குடவர் மற்றும் 6,7 பேரின் உரைகளையும் தமிழில் படிக்க ஆரம்பித்தேன். 600, 700 திருக்குறள் பாடல்களை மனப்பாடம் செய்தேன். திருக்குறளை எப்படி அமைப்பது என்பதைப் பற்றிய ஒரு பயிற்சியும் மேற்கொண்டேன். வெண்பா எழுதக் கற்றுக் கொண்டேன். நானும் வெண்பா எழுதுவேன்.சீர், அடி, தளை என்பதைப் பற்றி எல்லாம் சொல்லும் யாப்பிலக்கணம் கற்றுக் கொண்டேன். நானும் எனது ஆசிரியர் கு.வே.ராமகோடியும் இணைந்து ஒரு புத்தகம் போட்டோம். பேச்சுத் தமிழைப் படிப்பது எப்படி என்பது பற்றிய புத்தகம் அது.
மறுபடியும் அமெரிக்கா போனேன். மறுபடியும் மதுரைக்கு வந்தேன்.
கேள்வி: தமிழைக் கற்றுக் கொள்வது எளிதாக இருந்ததா? கடினமாக இருந்ததா?
பதில்: கடினமாகத்தான் இருந்தது. (சிரிக்கிறார்). மிகக் கடினமாகத்தான் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கற்றுக் கொள்ள முடிந்தது. எனது பேராசிரியர் கு.வே.ராமகோடி அவர்கள் அவசரப்படாதே, கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள் என்று சொன்னார். அ, ஆ, இ, ஈ கற்றுக்கொள்ள மட்டும் எனக்கு ஒரு மாதம் பிடித்தது. முறையாக அவர் தமிழ் எழுத்துகளைச் சொல்லிக் கொடுத்தார். குறில், நெடில் இவற்றைப் பற்றி எல்லாம் கற்றுக் கொள்வது முதலில் கடினமாக இருந்தது. ஆனால், அவர் மிக அருமையாக சொல்லிக் கொடுத்தார், புரிந்து கற்றுக் கொண்டேன். ல,ள,ழ வேறுபாடுகளை எல்லாம் முறையாகச் சொல்லிக் கொடுத்தார். பயிற்சிக் கொடுத்து கொடுத்து என்னை அவர் உருவாக்கினார். ஆனால், வலையப்பட்டிக்கு வந்த பிறகு எனக்கு தமிழில் பேசுவது பிரச்சனையில்லை. இவர்களுக்குத் தமிழ் மட்டும்தான் தெரியும். அதனால் தமிழில் நானும் பேசினேன், அவர்களும் தமிழில் பேசினார்கள். பேச்சுத்தமிழ், எழுத்துத் தமிழ் என்னுள் வளர்ந்தது.
(தொடரும்)