பாரதம் என்னும்
பெயர்ச்சொல்லின் பின்புலம் :
பாரத் அல்லது பாரதம் என்னும் பெயர்ச் சொல்லின் சமஸ்கிருத வேர்ச்சொல் பர், பாரா (bhr, bhara) என்பதாகும். இந்த வேர்ச்சொல்லின் பொருள் சுமத்தல் அல்லது தாங்குதல் (To carry or To Bear) என்பதாகும். தமிழில் கூடப் பாரம் என்னும் சொல் புழக்கத்தில் இருந்தாலும் அதன் தமிழ்ச் சொல் சுமை என்பதாகும்.
யாகத்தில் வார்க்கப்படுகின்ற பொருட்களை எல்லாம் யாகத் தீயானது வானுலகில் வாழும் தேவர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஊடகமாகச் செயல் புரிவதால் நெருப்பிற்குப் ‘பரதா’ (bharatah – bharata) என்னும் பெயர் வழங்கப்படுகிறது.
அக்னி பகவானை ‘ஹவ்ய வாகனா’ என்ற பெயராலும் அழைக்கும் வழக்கம் உள்ளது. யாகத்தில் பெய்யப்படுகின்ற நெய்யை யாக நெருப்பானது தேவர்களிடம் கொண்டு சேர்ப்பதால் அது ‘ஹவ்ய வாகனா’ என்று அழைக்கப்பட்டது.
ஆதிசங்கரரும் தனது ‘சங்கர பிரகதாரன்யகா பாஷ்யா’ என்னும் நூலில் ‘அக்னி பரதா’ (agnir bharata) என்று நெருப்பினை அழைப்பார்.
ஆக, பரதா என்னும் சமஸ்கிருதச் சொல் சுமத்தலையும் தூக்கிச் செல்வதையும் குறிப்பிடும் சொல் என்பது தெளிவாகின்றது.
பாரதி என்பது பரதா என்னும் சொல்லின் பெண்பாற் பெயர் என்று தனது ரிக் வேத சம்ஹிதாவில் சயனாச்சாரியார் அவர்கள் குறிப்பிடுவார்கள். நெருப்பில் தோன்றும் ஒளியைச் சுமப்பவர் பாரதி என்று பின்னாளில் பாரதி என்ற சொல்லுக்கு ஒளி என்னும் பொருளும் வந்து சேர்ந்தது.
பாரத் என்னும் சொல் இந்திய மரபுச் சொல்லா?
பாரத் என்னும் சொல்லை ஒரு சமஸ்கிருத சொல்லாகக் குறிப்பிட்டாலும் அந்தச் சொல் பிராகிருத மொழியிலும் அதே பொருளை உணர்த்தும் சொல்லாக கையாளப்படுவது ஒப்பு நோக்கத்தக்கது.
மேலும் அய்ரோப்பிய ஈரானிய மொழிகளிலும் இதே பரா பரதா என்னும் சொல் சுமத்தலையும் தாங்குதலையும் குறிக்கின்ற ஒரு சொல்லாக வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் இந்தோ ஈரானியன் இந்தோ ஆரியன் குடும்பத்தின் பலமொழிகளும் தங்களுக்கு இடையே மொழிக் கட்டமைப்பில் ஒரு பொதுமையைக் கொண்டுள்ளன. இந்த மொழிகளின் அகர முதலியின்படி ‘பரதா’ என்னும் வார்த்தை எவ்வாறு கையாளப்படுகிறது என்பதைக் கீழே பார்ப்போம்:
புரோட்டோ இந்தோ ஈரானியத்தில் பரதா என்பது பாரதி என்றும், புரோட்டோ இண்டோ அய்ரோப்பியத்தில் அது பேரெதி என்றும்,
வேதகால சமஸ்கிருதத்தோடு நெருங்கிய தொடர்புடைய பழைய ஈரானிய அவஸ்தன் மொழியில் பாரைதி என்றும்,
பாரசீக மொழியில் பர்தன் என்றும், அராபிய மொழியில் பரடா என்றும், அழிந்து பட்ட ஜெர்மானிய கோத்திக் மொழியில் பாய்ரன் என்றும், லத்தீன் மொழியில் பெரோ போர்ட்டோ என்றும், ஜெர்மனிய மொழியில் ஜிபாரென் என்றும்,
ஆங்கிலத்தில் பியர், பர்டன் என்றும் வழங்கப்படுகிறது.
எனவே, பாரத் என்னும் சமஸ்கிருதச் சொல்லானது அதேபொருள் படும்படி இந்தோ ஆரியன் இந்தோ ஈரானியன் இந்தோ அய்ரோப்பிய மொழிக் குடும்பங்களில் பல மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே, பாரத் என்னும் சொல் இந்திய மரபுக்கு அதாவது சமஸ்கிருத மரபுக்கு மட்டுமே சொந்த மான ஒரு சொல் என்று கூறுவது ஒரு தவறான புரிதலால் சொல்லப்படும் கூற்றே ஆகும்.
ஆனாலும், பாரத் என்னும் சொல் ஓர் அயற் சொல் என்று நாம் கூறி விடவும் இயலாது.
பாரத் என்னும் சொல் ஒரு வேர்ச்சொல். இந்த வேர்ச் சொல்லானது தொடர்புடைய அத்தனை மொழிக் குடும்பங்களிலும் அதே பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதே உண்மை. பிற மொழிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருவதால் இது இந்திய சமஸ்கிருத மரபுக்குச் சொந்தமில்லாத சொல் என்றும் கூறி விட இயலாது.
அதேபோல் இந்தியா என்னும் சொல்லும் இந்திய சமஸ்கிருத மரபின் வழி வந்த சிந்து எனும் அகவழக்குச் சொல்லின் கிரேக்க மொழியில் வழங்கும் புறவழக்குச் சொல் ஆகும்.
பரதப் பழங்குடியினர்
முந்தைய வேத காலத்தில் பரதர் என்னும் பழங்குடியினர் சரஸ்வதி எனும் புராண நதிக்கரையில் வசித்து வந்துள்ளனர். அந்த இடம் தற்காலத்தில் ஹரக்ஸ்வதி நதி அல்லது ஹெல்மான்ட்-அர்கன்டாப் என்னும் ஆப்கானிஸ்தானத்தின் நதிப் பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
இந்தப் பழங்குடியினர் பற்றிய பல குறிப்புகள் ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தில் பல இடங்களில் வருகின்றது. இந்தப் பழங்குடியினர் ஹிந்துகுஷ் மலையில் அமைந்துள்ள கைபர் கணவாயையும் அய்ந்து நதிகள் பாய்கின்ற பஞ்சாப் பகுதியையும் கடந்து வந்து இறுதியாகக் கங்கைச் சமவெளிப் பகுதியில் குடியேறியுள்ளார்கள்.
பரதா என்பது சுமந்து செல்லும் ஊடகம் என்பதை நாம் முன்னரே கண்டுள்ளபடி இந்தப் பரதப் பழங்குடியினர் இந்தோ ஆரியப் பண்பாட்டை மேற்கிலிருந்து கிழக்கிற்குச் சுமந்து வந்ததால் பரதப் பழங்குடியினர் எனப் பெயர் பெற்றனர்.
இந்தப் பழங்குடியினர் பற்றிய நுணுக்கமான பல குறிப்புகளும் இவர்களின் இடப்பெயர்வுகளும் இவர்கள் பங்கேற்ற பல போர்களைப் பற்றிய குறிப்புகளும் ரிக் வேதத்தின் மூன்று மற்றும் ஏழாவது மண்டலங்களில் குறிப்பிடப்படுகின்றது.
இந்தப் பழங்குடியின் தலைவர்களாக திவோதாசா மற்றும் சுதாஸ் ஆகியோரின் பெயர்களும் இவர்களுக்கு உதவி செய்தவர்
களாக பரத்வாஜா விசுவாமித்ரா வசிஷ்டா ஆகியோரின் பெயர்களும் ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்தில் வருகின்ற காயத்ரி மந்திரத்தில் குறிப்பிடப்படுகிறது. இடம்பெயர்ந்து யமுனை நதிக்கரைக்கு வந்து சேர்ந்த இந்தப் பரதப்பழங்குடியினர் அந்தப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த பேடா மன்னனைத் தோற்கடித்துப் புரு இனத்தவரோடு சேர்ந்து குரு ராஜ்யத்தை நிறுவுகின்றனர்.
மகாபாரத இதிகாசம் இந்தக் குரு வம்சாவளியினரைப் பற்றிக் குறிப்பிடுகையில் சகுந்தலை-துஷ்யந்தன் ஆகியோருக்குப் பிறந்த பரதன் என்பான் மன்னனாக நாடாண்டதைக் குறிப்பிடுகின்றது.
சந்திர வம்சத்தைச் சேர்ந்த இந்தப் பரத மன்னனின் பெயராலேயே இந்த நாடு பாரத நாடு என்று அழைக்கப்படுகின்றது என்றும் நம்பப்படுகிறது. ஆனால், இந்தப் பரத மன்னன் சந்திர வம்சத்தைத் தோற்றுவித்தவன் அல்ல. சந்திரவம்சாவளியிலே இடையில் வந்த ஒரு மன்னன். அவன் பெயரால் நாடு அழைக்கப்படுவது என்பது ஏற்புடைத்தன்று.
இந்தப் பரத மன்னன் ஒரு வரலாற்று மாந்தர் அல்ல; அதற்கு மாறாக மகாபாரதம் என்னும் இதிகாசக் கதையின் பாத்திரம். அந்தக் கதையின்படி பரத மன்னன் 27000 ஆண்டுகள் நாட்டை ஆண்டான் என்றும் இந்தப் பூமியில் அமைந்திருந்த எல்லா நாட்டையும் தோற்கடித்துக் கைப்பற்றினார் என்றும் அறிவியலுக்கும் வரலாற்றுக்கும் பொருந்தாத கட்டுக்கதைகளால் வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரமே பரத மன்னன் என்னும் மகாபாரத பாத்திரம் ஆகும்.
மகாபாரதத்தின் பீஷ்ம பர்வதத்தின் ஜம்பு கண்ட நிர்மாணப் பகுதி ஒன்பதில் பரதா என்னும் சொல் கையாளப்படுகின்றது. ஆனால், அது பரத மன்னனைக் குறிக்கவில்லை அது பரதப் பழங்குடியைக் குறித்தது.
திருதுராஷ்டிரனை ‘ஓ பரதா’ என்று சஞ்சயன் அழைப்பதாக ஓர் இடம் வருகின்றது. இது பரதப் பழங்குடியினரைப் பரதா என்றழைக்கும் பழக்கம் இருந்துள்ளதைக் காட்டுகின்றது. எனவே, பரத கண்டம் பரதவர்ஷா என்பது பரதப் பழங்குடியினர் ஆண்டிருந்த நிலப்பகுதியைக் குறித்தது எனலாம்.
தமிழாக்கம் : பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம்