Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வார சந்தா செலுத்துங்கள்..

சிந்திக்கச் சொன்னவர் பெரியார்

மணிமேகலை பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டாள். பதினொன்றாம் வகுப்பில் சேர வேண்டும். அறிவியல் பாடம் எடுத்து படிக்க விரும்பினாள். அதில் சேரவும் செய்தாள்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவள் நாள்தோறும் காலை எட்டு மணிக்கு வீட்டிற்கு வெளியே வந்து வானத்தை அண்ணாந்து பார்ப்பாள். உயரே பறந்து செல்லும் ஆகாய விமானத்தைத்தான் அவ்வாறு பார்ப்பாள். சிறியதாகத் தெரியும் அந்த விமானத்தைப் பார்த்து அது பறப்பதை நினைத்து வியப்படைவாள். விமானத்தை நேரில் அருகில் சென்று பார்க்க மிகவும் விரும்பினாள். இதுபற்றி ஒருநாள் தன் தந்தை தனவேலிடம் தன் ஆசையைத் தெரிவித்தாள்.

“அப்பா, எனக்கு விமானத்தை நேரில் பார்க்க ஆசையா இருக்கு. அழைச்சிகிட்டு போய் காட்டுங்க”, என்று ஒரு நாள் தந்தையிடம் கேட்டாள்.

“சரி. ஒரு நாள் சென்னைக்குப் போகலாம்”, என்று அவளது ஆசையை நிறைவேற்றும் வண்ணம் பதில் சொன்னார் தனவேல்.
ஆனால், அவள் அம்மாவிற்கு அவள் கேட்டது பிடிக்க வில்லை.

“படிக்கிற வேலையை விட்டுட்டு என்னடி ஏரோப் பிளேனைப் பார்க்க வேணும்னு சொல்ற”, என்று கடுப்படித்தார்.

ஆனாலும், அவர் மணிமேகலை யைச் சென்னைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்துவிட்டார். ஒருநாள் அழைத்தும் சென்றார்.

விமான நிலையத்தில் விமானங்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். விமானம் புறப்படு வதையும் தரை இறங்குவதையும் பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். விமானம் எப்படி பறக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் அறிவியல் ஆசிரியரிடம் கேட்டு அறிந்துகொள்ள விரும்பினாள்.

அப்பாவிடம் சில கேள்விகள் கேட்டாள்.

“அப்பா, நான் பைலட் ஆக விரும்புறேன். படிக்க வைப்பீங்களா?” என்றாள்.

“உன் விருப்பத்துக்கு நான் தடையாக இருக்க மாட்டேன்,” என்று பதில் சொன்னார் தனவேல். மகிழ்ச்சியுடன் பேச்சைத் தொடர்ந்தாள் மணிமேகலை.

“அப்பா, அந்த விமானத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அப்படின்னு எழுதியிருக்கே.’’

“ஆமாம்மா. அந்த விமானம் சிங்கப்பூர் நாட்டிற்குச் சொந்தமானது. அதுபோல் ஒவ்வொரு நாட்டின் விமானத்திற்கும் பெயர் வைத்திருப்பார்கள்.”

“நம் நாட்டிற்குச் சொந்தமான விமானத்தின் பெயர் என்னப்பா?”
இதற்கு தனவேல் பதில் ஏதும் சொல்லவில்லை.
தன் மகளை வருத்தப்பட வைக்க அவர் அந்தத் தருணத்தில் விரும்பவில்லை. பேச்சை மாற்றினார்.

“அதோ பார் மணிமேகலை. அமெரிக்க நாட்டு விமானம் பக்கத்தில் தாய்லாந்து விமானம். எவ்வளவு பெரியதாக உள்ளது பார்”, என்று பல நாட்டு விமானங்களைக் காட்டினார்.

அனைத்தையும் பார்த்து வியந்தாள். மகிழ்ச்சியும் அடைந்தாள். அடுத்த நாள் பள்ளிக்கு வந்த மணிமேகலை தன் வகுப்பில் படிக்கும் பிள்ளைகளிடம் தான் சென்னை சென்று விமானங்களைப் பார்த்து வந்ததை பெருமையுடன் சொன்னாள்.
அவளிடம் பலரும் விமானங்களைப் பற்றிக் கேட்டனர்.

“விமானம் எவ்வளவு பெரிசு இருக்கும்”
“இறக்கை எவ்வளவு நீட்டு இருக்கும்”
“எத்தனை சக்கரங்கள் இருக்கும்”

இப்படிப் பலப்பல கேள்விகளைப் பள்ளித் தோழர்கள் கேட்டனர்.

இடைவேளையின் போது வகுப்பறை முழுவதும் இதுபற்றிய பேச்சாகவே இருந்தது. அடுத்தப் பாடவேளை வரும் வரையில் பேச்சுக்குரல்கள் அதிகமாக இருந்த நிலையில் அறிவியல் ஆசிரியை சாவித்ரி உஷா வகுப்பறையில் நுழைந்தார்.

மாணவர்கள் நடுவில் அமைதி நிலவியது.

“நான் இங்க வர்ரப்போ ஒரே சத்தமா இருந்துச்சு. ஏன் அப்படி? என்ன பேச்சு?”, என்று கடுமையாகக் கேட்டார்.
“நான் சென்னை சென்று விமானங்களைப் பார்த்து வந்தேன். அது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். வேறொன்றும் இல்லை டீச்சர்”, என்று பதில் சொன்னாள் மணிமேகலை.

“படிக்கிற வேலையை விட்டுட்டு ஏரோப்பிளேனைப் பத்தி பேசிண்டு இருக்கீங்களா? ஏரோப்பிளேனைப் பார்த்து என்னடி செய்யப்போறே! பெரிய பைலட் ஆயிடுவியோ! ஏரோப்பிளேனைக் கண்டுபிடிச்சது யார் தெரியுமா?” என்று கடுகடுப்புடன் கேட்டார் அந்த ஆசிரியை.

எல்லா பிள்ளைகளும் பயத்தில் எந்தவிதமான பதிலும் சொல்லவில்லை. ஆனால், மணிமேகலை மட்டும் பதில் சொன்னாள்.
“ரைட் சகோதரர்கள்” என்றாள்.

“அதெல்லாம் புத்தகத்தில் இருப்பது. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இராமாயண காலத்திலேயே பாரத நாட்டில் புஷ்பக விமானம் இருந்தது என்பது உனக்குத் தெரியுமா?” என்று சற்று கோபத்துடன் கேட்டார் சாவித்ரி உஷா.

“தெரியாது டீச்சர்”, என்று பதில் சொன்னாள் மணிமேகலை.

“ராவணன் சீதையைத் தொடாமலேயே புஷ்பக விமானத்தில் ஏற்றி வான்வழியாக கானகத்திலிருந்து இலங்கைக்குத் தூக்கிச் சென்றான். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது நமது நாட்டில்தான் முதன்முதலாக விமானம் தயாரிக்கப்பட்டது. அதைக் கண்டு பிடித்தவர்கள் பாரதவர்கள்”, என்றார் அந்த ஆசிரியை.

இதைக் கேட்ட மணிமேகலைக்கு ஒரே குழப்பமாகப் போய்விட்டது. ஏன் இந்த டீச்சர் இப்படி பேசுகிறார்? புராண, இதிகாசங்களில் சொல்லப்படுவதை உண்மை என நம்பச் சொல்கிறாரே!” என எண்ணினாள்.

ஆனாலும் துணிவுடன் அவரைப் பார்த்து கேள்விகள் கேட்டாள்.

“டீச்சர். இராவணன் காடு மலைகளைத் தாண்டி புஷ்பக விமானத்தில் சீதையைத் தூக்கிச் சென்றதாக கதை சொல்லப்படுகிறது. இராமன் எப்படி சீதையை மீட்கச் சென்றான்”, என்று கேட்டாள்.

இந்தக் கேள்வியை அவளிடமிருந்து ஆசிரியை எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் பல மாணவர்கள் நடுவில் அவர் பதில் சொல்லும் கட்டாயத்தில் இருந்தார்.

“கடலில் பாலம் கட்டிச் சென்று சீதையை மிட்டார்” என்றார்.

“விமானத்தில் சீதையைக் கடத்திச் சென்றவன் கடவுளா? மலையையே பெயர்த்து அப்படியே தூக்கிச் சென்ற அனுமன் கடவுளா? அந்தத் திறமையோ வலிமையோ இல்லாமல் சீதையைப் பற்றிக் கவலைப்படாமல் மெதுவாகப் பாலம் கட்டிச் சென்ற இராமன் கடவுளா? டீச்சர்”,

மணிமேகலை இப்படிக் கேட்பாள் என்று அந்த ஆசிரியை கனவிலும் நினைக்கவில்லை. கடும் கோபம் கொண்டார். அவர் உள்ளத்தில் தீயானது கொழுந்து விட்டு எரிந்தது. அதில் பெட்ரோலை ஊற்றுவதுபோல் மற்றொரு கேள்வியையும் கேட்டு வைத்தாள் மணிமேகலை.

“விமானத்தைக் கண்டு பிடித்தவர் யார் என்று தேர்வில் கேள்வி கேட்டால் ரைட் சகோதரர்கள்
என்று எழுதினால் மார்க் போடுவீர்களா?

இராவணன் என்று எழுதினால் மார்க் போடுவீர்களா?”

இதைக் கேட்ட ஆசிரியை ஒரு கோபப் பார்வையை வீசியபடியே வகுப்பறையை விட்டு வெளியேறிவிட்டார்.
அன்று இரவு பள்ளியில் நடைபெற்ற நிகழ்வை அப்பாவிடம் சொன்னாள் மணிமேகலை.

“அப்பா, படிச்சவங்களே இப்படிப் பேசலாமா?” தனது மகளுக்குச் சிந்திக்கும் ஆற்றல் வந்து
விட்டதை எண்ணி மகிழ்ந்தார் தனவேல்.

அவளது சிந்தனை வளர்ந்தமைக்கான காரணமும் அவருக்குத் தெரியவந்தது. தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் ஒன்றினை வாங்கி வைத்திருந்தார் தனவேல். அதை அவள் எடுத்துப் படித்திருக்கக்கூடும் என நம்பினார்.
“மணிமேகலை, நீ ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். படிப்பிற்கும், சிந்தனைக்கும், அறிவிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. சமூக விஞ்ஞானிகள்- சொல்லும் கருத்துகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

“அது என்னப்பா சமூக விஞ்ஞானிகள்! அறிவியல் படித்தவர்கள் தானே விஞ்ஞானிகள்!”
“அறிவியல் படிப்பு வேறு, அறிவியல் மனப்பான்மை வேறு. சமூக விஞ்ஞானிகள் என்பவர்கள் சமூகச் சீர்திருத்தவாதிகள். அவர்களின் அறிவியல் மனப்பான்மை பகுத்தறிவுடன் கூடியது. சமூகப் பிணிகளை அகற்ற வல்லது. பகுத்தறிவுடன் கூடிய அறிவியல் வல்லுநர்களின் கூற்றுகளே ஏற்கத்தக்கவைகளாக இருக்கும். அறிவியலில் மதவெறி கூடாது.”

“இன்னும் சொல்லுங்க அப்பா.” “தமிழ்நாட்டில் தந்தை பெரியார் ஒரு சிறந்த சமூக விஞ்ஞானி. படிக்காதவர். ஆனால், பகுத்தறிவுடன் கூடிய அவரது சிந்தனைகள் படித்த அறிவியல் அறிஞர்கள் பலருக்கு உந்து சக்தியாக இருந்துள்ளது. ஜி.டி.நாயுடு ஒரு தலை சிறந்த விஞ்ஞானி. பல பயனுள்ள பொருட்களைக் கண்டுபிடித்து உருவாக்கினார். அவர் பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்
பட்டவர். அது போலத்தான் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்.”

“அப்பா, மயில்சாமி அண்ணாதுரை நிலவுக்குச் சந்திராயன் விண்கலத்தை அனுப்பியவர் தானே”
“ஆமாம் மணிமேகலை. நிலவு மனிதர் என்று அழைக்கப்படும் அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் திட்ட இயக்குநராகப் பணியாற்றி ஏவிய விண்கலம்தான் உலகிலேயே முதன்முதலாக நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்தது. அவர் தனக்கு இந்தச் சாதனையை நிகழ்த்த உந்து சக்தியாக இருந்தது பெரியாரின் சிந்தனைகள்தான் என்று கூறியிருக்கிறார். இப்படி பகுத்தறிவுடன் கூடிய அறிவியலும், அதைச் செயல்படுத்தும் அறிவியலாளர்கள் மட்டுமே நம்மால் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்கள் சொல்லும் கருத்துகளைத்தான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

அப்பா சொன்னதை ஆர்வமுடன் கேட்டாள் மணிமேகலை.

“அப்பா, எனக்கு பைலட் ஆகவேண்டுமென்ற விருப்பம் உண்டு. படிக்க அனுமதிப்பீர்களா?” என்று கேட்டாள்.

“நிச்சயமாக எதையும் நீ ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும். தேர்ந்தெடுத்தத்துறையில் முதலாவ
தாகவும் விளங்கவேண்டும். விமானமென்ன, நீ ராக்கெட்டில் கூட பறக்கலாம்”, என்று உற்சாகப்படுத்தினார் தனவேல்.
“அது எப்படி சாத்தியமாகும் அப்பா?” என்றாள்.

“அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி பெரியாரும் அறிவியலும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் பேசும்போது நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்தமைக்குக் காரணம் “உன் சாஸ்திரத்தைவிட, உன் முன்னோரைவிட, உன் வெங்காயம் வெளக்குமாத்தைவிட, உன் அறிவு பெரியது” என்ற பெரியாரின் பொன்மொழியே என்று கூறியுள்ளார். அவர் பேசியது புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. அதைப் படித்தால் உனக்கும் பெரிய சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும்.”

கவனமாகக் கேட்ட மணிமேகலை ஒரு கேள்வியை முன்வைத்தாள்.

“பெரும் பதவியில் இருப்பவர், மருத்துவர் என்று சிலர் மாட்டு மூத்திரம் குடித்தால் எல்லா நோய்களும் தீரும் என்று சொல்கிறார்களே! அது உண்மையா?”

இந்தக் கேள்வியைக் கேட்டதும் மிகவும் வருத்தப்பட்டார் தனவேல்.
மதவெறி பிடித்த சிலர் படித்தும் அறிவற்று, பண்பாடற்றுக் கிடக்கும் சிலரால் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு விதைக்கப்படுவதை நினைத்து வருத்தப்பட்டார். இருப்பினும் அவள் கேள்விக்குப் பதில் சொன்னார்.

“அது தவறான கருத்து என்று 2023ஆம் ஆண்டு இந்திய கால்நடை ஆய்வு மய்யம் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. அதன்படி மாட்டு மூத்திரத்தில் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் 14 வகையான பாக்டீரி யாக்கள் இருப்பதும் உறுதியாகி உள்ளதாம். ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தைக் கொண்டுள்ள வர்கள்தான் இப்படி அறிவியலுக்குப் புறம்பாக பேசி வருகிறார்கள்.
“இப்படிப்பட்டவர்கள் நடுவில்தான் நாமும் படித்து முன்னேற வேண்டியுள்ளதா அப்பா?”, என்று கவலையுடன் கேட்டாள் மணிமேகலை.

“ஆமாம். விஷக்கருத்துகள் பரவி வரும் நிலையில் உன்னைப் போன்ற மாணவச் செல்வங்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். -“சிந்திப்பவன்தான் மனிதன், சிந்திக்க மறுப்பவன் மதவாதி, சிந்திக்காதவன் மிருகம், சிந்திக்கப் பயப்படுகிறவன் கோழை”, என்பது பெரியாரின் பொன்மொழி. இதை நீயும் உன் போன்ற படிக்கும் பிள்ளைகளும் கடைப்பிடிக்க வேண்டும்”, என்றார் தனவேல்.
“நிச்சயமாக அப்பா”, என்று மகிழ்வுடன் பதில் சொன்ன மகளைப் பெருமையுடன் பார்த்தார் தனவேல்.