Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வார சந்தா செலுத்துங்கள்..

‘புதிய இந்தியா எனும் கோணல் மரம்’

நூல் குறிப்பு : 
நூல் : ‘புதிய இந்தியா எனும் 
கோணல் மரம்’ 
ஆசிரியர் : பரகால பிரபாகர் 
தமிழில் : ஆர். விஜயசங்கர் 
எதிர் வெளியீடு – 
முதல் பதிப்பு : ஜனவரி 2024 
பக்கங்கள் : 319 
விலை : ரூ.399/-
கோணலான மரத்தைக் கொண்டு நேரான எந்தப் பொருளையும் உருவாக்க முடியாது என்பது அனுபவம் தரும் உண்மை! அந்த உண்மையை இன்றைய இந்தியாவோடு பொருத்திப் பார்த்த பின்னர் – நாடாக இருந் தாலும் அதே நிலைதான் எனத் தெளிந்து தனது பல கேள்விகளுக்குக் கிடைத்த விடைகளைப் பல்வேறு சமயங்களில் சமூக வலைத் தளங்களில் பதிவிட்டதை ஒரு சிறந்த தொகுப்பு நூலாக தந்துள்ளார் நூலாசிரியர் பரகால பிரபாகர்!
நூலை ஆங்கிலத்தில் The Crooked Timber of New India என்று எழுதிப் பாராட்டுகளை அள்ளிக் குவித்த பரகால பிரபாகர் பற்றி – தில்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக் கழகத்திலும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸிலும் பட்டம் பெற்றார். 2014 – 2018 வரை ஆந்திரப் பிரதேச அரசின் ஆலோசகராக இருந்தார்!
பிரபாகர் தற்போது ஹைதராபாத்தில் ஒரு தனியார் நிறுவனத்தின் இயக்குநர். இவருடைய ‘மிட்வீக் மேட்டர்ஸ்’ என்ற யூடியூப் சேனல் புகழ் பெற்றது. அதில் இந்தியாவின் அரசியல், பொருளாதாரம், சமகால சமூகம் பற்றி விவாதிக்கிறார். இவர் மோடியின் பா.ஜ.க. அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர்!
நூலைத் தமிழில் சிறப்பாக மொழி பெயர்த் துள்ள ஆர். விஜயசங்கர் பற்றி – இந்து குழுமத் திலிருந்து வெளிவரும் ஃபிரண்ட்லைன் ஆங்கில இதழின் பொறுப்பாசிரியராகவும், ஆசிரியராகவும் 33 ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கிறார். சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் தொடர்ந்து பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்!
அச்சே தின் (நல்ல நாள்) சப்கா சாத் – சப்கா விகாஸ் (எல்லோரையும் சேர்த்து – எல்லோருக்கும் வளர்ச்சி) மற்றும் ‘குஜராத் மாடல்’ போன்ற பெரும் ஆரவாரத்தோடும் கோஷத்தோடும் 2014ஆம் ஆண்டு மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது!
தற்போது பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் – 2024இல் மோடியின் கோஷங்களின் தாக்கம் என்னவாயிற்று என்பதை அறிந்து கொள்ள இந்த நூலை முழுமையாகப் படித்துப் பார்த்தாலே உண்மை விளங்கிவிடும்!
நூலின் விரிவான முகவுரையைப் படிக்கும் போதே நூலாசிரியர் பிரபாகர் தான் சொல்ல வருகின்ற கருத்துகளை எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாத வகையில் மிகுந்த தைரியத்தோடு எடுத்து வைக்கிறார்! மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் அதிகரித்து வரும் இடைவெளி கண்கூடாகத் தெரிகிறது என்கிறார்!
மோடியின் ‘புதிய இந்தியா’ என்ற கோஷம் பொய்த்து விட்டன. புதிய இந்தியா அது உலகத்திற்கே வழிகாட்டும் ‘விஸ்வ குரு’
என்றெல்லாம் கதை அளந்து விட்டார்கள். உண்மையில் இந்த தேசம் பெரிய நெருக்கடியில் இருக்கிறது என்று எச்சரிக்கிறார்! அதை விளக்குவதற்காக பல்வேறு தரவுகளையும் புள்ளி விவரங்களையும் அடுக்குகிறார்!
மோடி அரசு நாள்தோறும் நடத்துகின்ற அத்துமீறல்களை அவர் ஒவ்வொன்றாகச் சொல்லி வரும் போது – நாம் எதை நோக்கிப் பயணிக்கிறோம் என்ற அச்சம் ஏற்படுகிறது!
1) எல்லையற்ற அதிகாரத்தை அடைவதற்காக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்கள் மீது பா.ஜ.க. அரசு வருமான வரித்துறையின்
(IT Raid) திடீர் சோதனைகளை ஏவி விடுவது!
2) எதிர்க்கட்சியினருக்குச் சம்மன் அனுப்பும் அமலாக்கத்துறை (ED) பல மணிநேரம் விசாரணை நடத்தி அவர்களைச் சிறுமைப் படுத்துவது! சில சமயங்களில் சிறைக்கு அனுப்புவது!
3) அந்த எதிரிகள் பா.ஜ.கவில் சேர்ந்து விட்டால் திடீர் சோதனை, விசாரணைகளையும் உடனடியாக நிறுத்தி விடுவது!
4) காவல்துறையும் எதிரிகளை அச்சமூட்டும் கருவியாகிவிட்டது!
5) பத்திரிகையாளர்களைச் சிறைப்படுத்தி  எச்சரிக்கை செய்வது!
6) பல்கலைக் கழகங்களில் கலகங்கள் பெருகி அவை தாக்கப்படுகின்றன!
7) தற்போது புலனாய்வு செய்திகளே இல்லாமல் போய்விட்டது!
8) நவம்பர் 2016இல் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற நாசகார அறிவிப்புக்குப் பின் பொருளாதாரம் சீரழிந்தது!
இவைகள் மட்டுமா ?… இதோ: ஸ்கில் இந்தியா.
மேக் இன் இந்தியா.
ஸ்டார்டப் இந்தியா.
ஸ்டாண்டப் இந்தியா.
டிஜிட்டல் இந்தியா.
கேலோ இந்தியா.
ஸ்வச் பாரத்.
ஆத்மநிர்பர் பாரத்.
ஸ்மார்ட் சிட்டீஸ்.
புல்லட் ரயில்.
ஜன் தன் யோஜனா.
அமிர்த் கால் …
இவ்வாறு ஜும்லா ( Jumla ) எனப்படும் போலி வாக்குறுதிகளின் இரைச்சல்கள் தான் மோடியின் பத்து ஆண்டுகள் ஆட்சியில் மக்கள் கண்ட சாதனைகள் அல்லது’ கோணல் மரங்கள்’ .. என்று மிகக் கவலையோடு தெரிவிக்கிறார் பிரபாகர்!
“பல லட்சக்கணக்கான இளம் இந்தியர்கள் தேசபக்தியைக் கண்மூடித்தனமான வரலாற்று வழிபாட்டுடனும், ராணுவ வலிமைக்கு முன்னுரிமை கொடுக்கும் கொள்கையுடனும், மூர்க்கத்தனமான அடையாளத்தோடும், ஆளும் கட்சிக்கும், அதன் தலைவர்
களுக்கும் கொள்கைகளுக்கும் ஆதரவாக உள்ளார்கள்!
இவர்கள் வன்முறை சார்ந்த இந்துத்துவாவின் காலாட்படை வீரர்கள் ஆகிவிட்டனர்! அவர்களால் எதையும் கட்ட முடியாது! இடிக்கவும் அழிக்கவும் மட்டுமே முடியும்” என்று உண்மையான அக்கறையோடு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்!
இந்த அடிப்படையில் தான் – புதிய இந்தியா எனும் கோணல் மரத்திலிருந்து நேரான எதையும் உருவாக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளார் நூலாசிரியர் பரகால பிரபாகர்!
இன்றைய வட இந்தியாவிலும் வட மேற்கு இந்தியாவிலும் மக்களின் மன நிலையை எந்த அளவுக்கு பா.ஜ.க. அரசு மாற்றிவிட்டது என்பதை எளிதில் புரிய வைக்கிறார் பிரபாகர்.
‘உண்மையான இந்தியனாக இருப்பதற்கு இந்துவாக இருக்க வேண்டும்! உண்மையான இந்தியனாக இருப்பதற்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும்! உண்மையான இந்துவாக இருப்பதற்கு இந்துத்துவா அரசியலை ஆதரிக்க வேண்டும்!’… என்ற மத,
மொழி, அரசியல் சார்புடைய மக்களாக, அவர்களைப் பெரிய வாக்கு வங்கிகளாக மாற்றியுள்ளது!
நாம் (இந்துக்கள்) அவர்கள் (சிறுபான்மை யினர்) என்ற செயற்கையான இடைவெளியைக்
கடந்த பத்தாண்டுகளாக பா.ஜ.க. அரசு தெளிவாகவும் பெரிதாகவும் ஆக்கிவிட்டது. அதன் விளைவு பற்றிப் பிரபாகர் தனது சொந்த அனுபவத்தை இவ்வாறு பதிவிட்டுள்ளார்:
“கடந்த குஜராத் தேர்தலின் போது நான் அங்கிருந்தேன். தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்றது பற்றிப் பலரிடம் நான் விசாரித்தேன். அதற்கு அவர்கள், ‘இந்த அரசு அவர்களுக்கு (சிறுபான்மையினர்) பாடம் கற்பித்து விட்டது’ எனக் கூறினார்கள். இந்த மனநிறைவைப் பெறுவதற்கு மக்கள் பா.ஜ.கவை ஆதரிக்கிறார்கள்!”
இந்திய நாடு ஏன் ஒரு கோணல் மரமாகப் போய்விட்டது என்பதற்கு இவையெல்லாம் சான்று!
புதிய இந்தியா எனும் கோணல் மரம் பற்றி விரிவாக எழுதிய பிரபாகர், இந்த தேசிய பேரிடரை எப்படி தவிர்ப்பது என்பது பற்றி தனது முகவுரையிலேயே விளக்கிச் சொல்கிறார்.
“நம் குடியரசின் வாழ்வில் புதிய இந்தியா எனப்படும் கோணல் மரம் என்பதைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது! அதனை எதிர் கொள்ள தேவையான தத்துவார்த்த வளமும்; நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாடும் தேவை! தேர்தல் அரசியல் விளையாட்டில் கிடைக்கும் குறுகிய கால உடனடி பலன்களை எதிர்பாராமல், புகழ் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியிருந்து செய்ய வேண்டிய பணி அது!”
பிரபாகர் சொன்னதை இன்னும் எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால், பெரியாரைப் போன்ற தலைவரையும் அவர் துவக்கிய தேர்தல் அரசியலில் பங்கு பெறாத திராவிடர் கழகம் போன்ற தத்துவார்த்த இயக்கமும்தான் தற்போதைய தேவை என்பதே!
இந்த அருமையான நூலை எழுதிய பரகால பிரபாகரின் மன தைரியத்தையும், அர்ப்பணிப்பையும் அவரது நேர்மையையும் எவ்வளவு பாராட்டினாலும் போதாது! தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்த விஜயசங்கரும் பாராட்டிற்குரியவர். நேரடியாக தமிழில்
எழுதி வெளியான நூலைப் படிப்பது போன்று அமைந்துள்ளது சிறப்பு!
இவர்கள் இருவருக்கும் மதச்சார்பற்ற இந்தியாவைக் காப்பாற்ற நினைக்கும் ஒவ்வொருவரும் நன்றிக் கடன் பட்டுள்ளார்கள்!
பரகால பிரபாகரின் இந்த நூலை அவசரகால எச்சரிக்கை மணியாக எண்ணி – ஒவ்வொருவரையும் படிக்கச் சொல்லுங்கள்! ஒவ்வொருவரையும் பரப்பச் சொல்லுங்கள்!!