Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வார சந்தா செலுத்துங்கள்..

காதலிக்க நேரமில்லை… ஆனால் இந்த படம் பார்த்தாக வேண்டும்!-வழக்குரைஞர் சோ.சுரேஷ்

முற்போக்கு முற்போக்கு என்று பொதுவெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசிக்கொண்டே இருப்போர் மத்தியில் அதைப் பொதுப்புத்திக்கு உரைக்கும் வகையில் மிக தைரியமாகச் சமரசமின்றி இயக்குநர் கிருத்திகா உதயநிதி உருவாக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை.

பெங்களூருவில் தன் அப்பாவுடன் மட்டும் வசிக்கும் கட்டிட வடிவமைப்புப் பொறியாளரான சித்தார்த்திற்கு இரண்டு நண்பர்கள் அதில் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர். அவர் எதிர் காலத்தில் தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளரைத்தான் வாழ்க்கைத்துணையாக திருமணம் செய்துக் கொள்வதாகவும், அப்பொழுது தனக்கு ஒரு குழந்தை வேண்டும் எனச் சொல்லி தன் உயிரணுவைச் சேமிக்க வேண்டும் என்று தன் நண்பர்களிடம் சொல்கிறார். திருமண உறவு முறையே நிர்பந்தம் மற்றும் குழந்தையையே வேண்டாம் எனும் கருத்தில் இருக்கும் சித்தார்த் முதலில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிறகு அவனது நண்பர்களின் விருப்பத்திற்காக தாங்களும் உயிரணுவைச் சேமிக்கச் சம்மதித்து விந்தணு சேமிப்பு மய்யத்திற்குச் சென்று சேமித்து வைக்க வேண்டுமென கொடுத்து விட்டு வருகின்றனர். சித்தார்த் சேமிக்கக் கொடுத்த விந்தணு நர்சின் தவறுதலால் விந்தணு கொடையாளர் பகுதியில் வைத்து விடுவார்கள். சித்தார்த் விந்தணு கொடுத்த தகவல் அவனது காதலி நிரூபமாவிற்குத் தெரிந்து விடுகிறது. நிரூபமா திருமணத்திற்குப் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தினை சித்தார்த்திடம் கூற அதற்கு வேண்டாம் என்று மறுப்பு சொல்லிவிடுவார். இந்தக் காரணத்தினை வைத்தே நிரூபமா தனக்கும், சித்தார்த்திற்கும் நடக்கவிருந்த திருமண நாள் உறுதி செய்யும் அன்று அனைவரும் காத்திருக்கும் வேளையில் தனக்கு இதில் விருப்பமில்லை என்று தன் தந்தை மூலமாக கடிதத்தைக் கொடுத்து அனுப்பியிருப்பார். இந்த நிகழ்விற்கு பின் மேலும் வெறுப்பாகி விடுவான் சித்தார்த்.

மற்றொரு புறம் கட்டிட பொறியாளரான ஸ்ரேயா அம்மா அப்பாவுடன் சென்னையில் வசித்து வருகிறார். நான்கு ஆண்டுகள் காதலித்து வந்த காதலர்கள் வெளிநாடு செல்வதற்காக வேண்டி அம்மாவின் எதிர்ப்பையும் மீறி பதிவுத் திருமணம் செய்கிறார்கள். ஒரு நாள் தன் கணவரைச் சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு வரும் மனைவி ஸ்ரேயா அங்கு தன் கணவர் வேறொரு பெண்ணுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவனிடமிருந்து பிரிந்து விடுகிறார். ஒரு கட்டத்தில் கணவனின்றி குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து தனது தோழி வேலை செய்யும் செயற்கை கருத்தரிப்பு மய்யத்தை அணுகினார். அங்கு தவறுதலாக நன்கொடையாக இருந்த சித்தார்த்தின் விந்தணு ஸ்ரேயாவிற்கு செலுத்தப்பட்டு கருத்தரிக்கிறார். அவளின் வீட்டிற்குத் தெரிந்து அவளது அம்மா மிகக்கடுமையாக எதிர்ப்புக் காரணமாக தன் குடும்பத்தினரை விட்டு வெளியேறி தனி வீட்டிற்கு செல்கிறார். இவ்வாறு இருக்கும் சூழலில் தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது காவல்துறையால் கைது செய்யப்பட்ட குற்றவாளி தனது விந்தணுவைத் தானமாகக் கொடுக்கும் வழக்கத்தினை உடையவர் என்று சொன்னவுடன், தனக்கும் பிறக்கும் குழந்தைக்கும் இவ்வாறாக இருந்து விடக்கூடாது எனக் கருதி தனது தோழியிடம் தனக்குச் செலுத்தப்பட்ட விந்தணு யாருடையது எனக் கேட்டு அவரைப் பார்க்க பெங்களூருவிற்கு செல்கிறார்.

அங்கே சென்று பார்த்த போது அந்த முகவரியில் ஒரு மதுபான பார் இருக்கும். அதனைப் பார்த்துவிட்டு சரி பசிக்குது ஏதாவது சாப்பிடலாம் என்று திரும்பும்போது சித்தார்த் ஸ்ரேயாவைப் பார்த்து விட்டு கீழே வந்து ஸ்ரேயாவிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு அழைப்பார். ஆனால், நேரம் இல்லையென்று சொன்ன சிறிது நேரத்தில் சென்னைக்குச் செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டதால் சித்தார்த்துடன் வீட்டிற்கு செல்வார் ஸ்ரேயா. மறுநாள் காலை சென்னை திரும்பி விடுவார். பின்னர் ஸ்ரேயாவுடன் அவரது சித்தி வந்து தங்கிக்கொள்வார். குழந்தை பிறந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் கால்பந்து விளையாடிக்கொண்டிருக்கும் அவளது குழந்தையான பார்த்தீவின் பந்து வேலை நிமித்தமாக அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்குவதற்காக வந்திருக்கும் சித்தார்த்திடம் கிடைக்க பந்தை ஒரே உதையால் தொலைத்து விடுவார். இதனால் பார்த்தீவை விளையாடுவதற்கு அவரது குழுவில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். இதனால் கவலையுடன் இருந்த

பார்த்தீவிடம் கேட்ட ஸ்ரேயா யாருடா அவனுடன் கேட்பதற்கு வந்த இடத்தில் தான் சித்தார்த்தை மீண்டும் பார்க்கிறார் ஸ்ரேயா.
திடீரென்று ஒரு நாள் பார்த்தீவ் காணாமல் போய் விடுகிறான் பின்னர் சித்தார்த்தின் மூலமாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உதவியால் ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து மீட்கப்படுகிறான். பின்னர் பார்த்தீவ் பள்ளியில் கால்பந்து அணியில் சேர்வதற்காகச் சித்தார்த் முறையாக பயிற்சி கொடுத்து பள்ளியின் அணியில் தேர்வாகிறான் பார்த்தீவ். ஸ்ரேயா மற்றும் சித்தார்த் இருவரும் தான் பணி செய்யும் நிறுவனத்திற்காக ஒப்பந்தக் கூட்டம் பெங்களூருவில் நடக்கவிருக்கும் சூழ்நிலையில் ஸ்ரேயாவின் சித்திக்குத் திடீரென்று குளிர் காய்ச்சல் வந்து விட்டதால் ஸ்ரேயா தனது பயணத்தை ரத்து செய்து விடுகிறார். ஸ்ரேயாவின் சித்தி உன் நீண்ட நாள் திட்டம் எனக்காக இதை ரத்து செய்வது சரியல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சித்தார்த் உள்ளே நுழைகிறார். அப்பொழுது சித்தார்த் நான் காரில் தான் பெங்களூரு செல்கிறேன் நீயும் என்னுடன் வா கூட்டிச்செல்கிறேன் என்பார். அப்பொழுது ஸ்ரேயா தன் மகன் இருக்கிறான் என்றவுடன் அவனையும் உடன் அழைத்துச் செல்வோம் என்று கூறிச் செல்கிறார்கள்.

சித்தார்த்தின் வீட்டில் அவருடைய தந்தையுடன் பார்த்தீவ் பழகும் விதம், சித்தார்த்துடன் இருக்கும் நெருக்கத்தினைப் பார்த்து ஸ்ரேயாவிற்குச் சித்தார்த்தின் மீது காதல் ஏற்படுகிறது. அப்பொழுது எதிர்பாராத விதமாக சித்தார்த்தின் முன்னாள் காதலி வீட்டிற்குள் வருகிறாள். அப்போது இருவருக்குள்ளும் ஒரு வித குழப்பமான பார்வை ஏற்படுகிறது. பெங்களூருவில் இருந்து சென்னை திரும்ப கிளம்பும் போது நிரூபமா சித்தார்த்துடன் வருவதாகவும், அவனது வீட்டிலேயே தங்குவதாகவும் சொல்லி வருகிறார். ஒரு கட்டத்தில் பார்த்தீவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சித்தார்த்தும் அவனது முன்னாள் காதலியும் வரவேண்டும் என்று ஸ்ரேயா அழைப்பு விடுகிறார். சரி என்று சொன்ன பிறகு சித்தார்த்தைத் செல்லக் கூடாது எனச் சொல்லி முன்னாள் காதலி நாம் இருவரும் வெளியே செல்வோம் வா என்று கூப்பிடும் போது சித்தார்த் இல்லை பார்த்தீவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குச் செல்வேன் என்று சொல்கிறான்.

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குச் சென்ற சித்தார்த் கை கழுவ சென்ற அறையில் இருந்த கம்யூட்டரில் டெண்டர் தொடர்பானவற்றை பார்க்கும் போது உள்ளே நுழைந்த ஸ்ரேயா சித்தார்த்தைப் பார்த்து இதற்காகத் தான் இங்கு வந்தாயா என்று கேட்டு உடனடியாக இங்கிருந்து கிளம்பி விடு எனச் சொல்லித் திட்டிவிடுவார். சித்தார்த் பெங்களூரு சென்ற சில நாட்களில் திடீரென்று ஒரு நாள் மீண்டும் பார்த்தீவ் காணாமல் போய்விடுவான். ஸ்ரேயா தான் குடியிருக்கும் அடுக்கு மாடிக்குடியிருப்பில் உள்ள சிறுவர்களிடமும், பெற்றோர், பாதுகாவலர் என அனைவரிடமும் விசாரித்து அயர்ந்து இருக்கையில் எட்டு ஆண்டுகளாக பேசாமல் இருந்த ஸ்ரேயாவின் அம்மாவும், அப்பாவும் எங்களை மன்னித்துவிடு என்று தன் மகளுக்கு ஆறுதல் கூறுவார்கள்.

அப்பொழுது ஸ்ரேயாவிற்கு ஒரு போன் வரும், எதிர் முனையில் பேசிய கம்பெனியின் சியூஒ ஒப்பந்தம் நமக்கு கிடைத்து விட்டது. மேலும் நமக்கு போட்டியாக இருந்த கம்பெனிகாரன் விலகியதோடு மட்டுமல்லாமல் நமக்கே கொடுக்க வேண்டும் என்று சிபாரிசும் செய்திருக்கிறான் என்று சொல்வார். அடுத்த நாள் கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சித்தார்த் ஸ்ரேயாவிடம், எதுவும் சொல்ல வேண்டாம் முதலில் போட்டி முடியட்டும் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று சொல்லி விட்டு சித்தார்த்தும், ஸ்ரேயாவும் பார்த்தீவின் கால்பந்தாட்டத்தைப் பார்த்துக்கொண்டே இருவரும் பேசிக்கொள்வார்கள்.

ஸ்ரேயா தனக்கு ஒப்பந்தம் கிடைத்திருக்கிறது என்று சொல்லிச் சித்தார்த்திற்கு நன்றி சொல்ல அதற்கு பதிலாகச் சித்தார்த் நீ எவ்வளவு பெரிய முடிவை இவ்வளவு சாதாரணமாக எடுத்திருக்கிற ஸ்ரேயா.. உன்னால் தான் நான் இத்தனை நாள் தயங்கிய முடிவை இன்று எடுத்திருக்கிறேன் என்று கூறி புதியதாக துவங்க இருக்கும் கட்டுமான நிறுவனத்தைச் சொல்வதோடு மட்டுமல்லாமல் ஸ்ரேயாவிடம் தன் காதலையும் வெளிப்படுத்திவிட்டு பார்த்தீவ்வையும் தன் மகனாகப் பார்த்துக் கொள்வேன் என்று சொல்லும் போது காதலை ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் திருமணம் வேண்டுமா? என்று கேட்கும் கேள்வியில் திருமணம் என்பது இருவரின் மனம் சார்ந்த ஒரு ஒப்பந்தமே என்பது தான் நினைவிற்கு வருகிறது.

அடுத்த நாள் சித்தார்த், ஸ்ரேயா, பார்த்தீவ் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள்
சூழ தன் நண்பன் சேது கையில் தனது விந்தணு வின் மூலமாகப் பெற்ற குழந்தையுடன் தன்பாலின ருக்கு மோதிரம் மாற்றிக்கொள்ளும் காட்சியுடன் காதலிக்க நேரமில்லை முடிவுக்கு வருகிறது. சித்தார்த் தாக நடித்திருக்கும் ரவி மோகனும், ஸ்ரேயாவாக வரும் நித்தியமேனனும் சிறப்பாக தங்களது கதாபாத்திரத்தினை நிறைவு செய்திருக்கிறார்கள். படத்தில் சித்தார்த்தின் நண்பனாக நடித்திருக்கும் யோகிபாபு வரும் காட்சிகள் சிரிக்கும் வகையில் இருக்கிறது. பாடல்களில் சரி, பின்னணி இசையிலும் சரி ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் தன்னை நிலை நிறுத்திச் செல்கிறார்.

ஒரு சில படங்களில் ஒரு நவீன வாழ்வியலை மய்யப்படுத்தி வந்திருக்கும், ஒரு சில படங்களில் முற்போக்கு பேசி வந்திருக்கும் ஆனால் ஒரே திரைப்படத்தில் செயற்கை கருத்தரிப்பு, திருமணமின்றி இருமனங்கள் இணைத்து வாழுதல், தன்பாலின ஈர்ப்பாளர்களின் எதிர்பார்ப்பு என கதை எழுதி, திரைக்கதை அமைத்து அதனைத் தொய்வின்றி அப்பட்டமாக வெட்டவெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கும் இயக்குநர் கிருத்திகா உதயநிதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
வாழ்த்துகள்… பாராட்டுகள்..!