அய்யாவின் பாசறையில் அவர்க்குப் பின்னர்
அஞ்சாத மறவரெனத் திகழ்ந்தார் அண்ணா!
மெய்யான தமிழினத்தார் இழிவை மாற்றி
மேன்மையுறச் செய்திடவே உழைத்தார்! நாளும்
பொய்ம்மைகளை அவிழ்க்கின்ற புரட்டர் கூட்டம்
பொடிப்பொடியாய்ப் போவதற்கே அறிவு வித்தால்
உயர்ந்திடநல் மாற்றத்தை விளைத்தார்! பொல்லார்
உறுதுயரம் அனைத்தையுமே வீழ்த்த லானார்!
கண்மூடிப் பழக்கமெலாம் மண்ணாய்ப் போகக்
கருத்துகளை விதைத்திட்டார்! கடமை யோடு
கண்ணியத்தை ஒருங்கிணைந்த கட்டுப் பாட்டைக்
காத்திடவே கற்பித்தார்! தொண்டர் கூட்டம்
வண்டாகப் பின்தொடரும் எழுச்சி தந்தார்!
வையமெலாம் வாழ்கின்ற தமிழ ருக்கே
அண்ணனவர்! எந்நாளும் தமிழி னத்தின்
அரசியலும் வரலாறும் ஆனார் அண்ணா!
முக்கனியின் சுவையிருக்கும் அண்ணா பேச்சில்;
முத்தமிழும் குடியிருக்கும் அவரின் நாவில்!
நக்கலுடன் நகைச்சுவையும் நடனம் ஆடி
நதிநீராய்ப் புரண்டுவரும்! ஆரி யத்தின்
மிக்கபெரும் இழிவுகளைச் சாடு கின்ற
மிடுக்கெல்லாம் வாள்சுழற்றும் வாழ்நாள் தம்மில்!
எக்குறையும் இல்லாத தலைவர் அண்ணா!
எதிரிகளும் பாராட்டும் இமயம் அண்ணா!
தென்புலத்துக் கதிரோனாய் ஞாலம் போற்றும்
திராவிடத்துப் புகழ்நிலவாய்ப் பெருமை சான்ற
மன்னவர்தம் அவையெல்லாம் சிறக்க வாழ்ந்த
மாத்தமிழாய் அண்ணாவும் காட்சி தந்தார்!
பொன்னெழுத்தில் பொறிக்கின்ற புரட்சி தன்னைப்
புத்துணர்வால் தமிழகத்தில் படைத்தார்! தூய
அன்பாலே தமிழர்தம் நெஞ்சம் போற்ற
அருந்தமிழாய் என்றென்றும் வாழ்கின் றாரே!
