மனமின்றி அமையாது உலகு (13)-ஸ்ட்ரெஸ் – நார்மலா?

2025 உளவியல் ஜனவரி-16-30-2025

ஸ்ட்ரெஸ். இந்தக் காலத்தில் மக்களிடையே அதிகமாகப் புழங்கும் வார்த்தையாகியிருக்கிறது. சின்னக் குழந்தை முதல் பெரியவர்கள் வரை, யாரைக் கேட்டாலும் ஸ்ட்ரெஸ். ஸ்கூலுக்குப் போறதே ரொம்ப ஸ்ட்ரெஸ் சார், எங்க அப்பா, அம்மா கூட இருக்குறது அத விட பெரிய ஸ்ட்ரெஸ் சார் என்று அய்ந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன் அண்மையில் எம்மிடம் சொன்னான்.

இன்றைய காலத்தில் நமது அனைத்துப் பிரச்சினைகளுக்குமே கூட இந்த ஸ்ட்ரெஸ்தான் காரணமாய்ச் சொல்லப்படுகிறது. அத்தனை பிரச்சினைகளின் விளைவாகவும் ஸ்ட்ரெஸ் தான் இருக்கிறது என நம்பப்படுகிறது. உண்மையில் ஸ்ட்ரெஸ் என்றால் என்ன? அது நார்மலா அல்லது அப்நார்மலா? அதன் விளைவுகள் என்ன? எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் நுணுக்கத்
தோடும், ஆழ்ந்த ஈடுபாட்டோடும், மிகக் கறாராகவும், அத்தனை ஒழுங்குடனும் செய்யக்கூடிய நிலையைத் தான் நாம் ஸ்ட்ரெஸ் என்று சொல்லலாம்.

அதாவது ஸ்ட்ரெஸ் என்றால் பொறுமை, கவனம், கறார்த் தன்மை, ஒழுங்கில் சிரத்தை ஆகிய பண்புகளே. இத்தனை பண்புகளோடு நாம் செய்யும் வேலைகள் அனைத்தும் ஸ்ட்ரெஸ் அதிகமான வேலைகளே. ஒரு வகையில் பார்த்தால் ஸ்ட்ரெஸ் என்பது அவசியமானதே. ஏனென்றால் அந்த மனநிலை தான் நமது வேலைகளை நேர்த்தியாகச் செய்யவைக்கிறது.

இப்போது இப்படி எடுத்துக்கொள்வோம், எனக்குப் பிடித்த ஒரு வேலையை நான் இந்தப் பண்புகளோடுதான் செய்ய நினைப்பேன், அப்போது இந்தப் பண்புகள் எனக்குத் தேவையானதாக இருக்கிறது, ஒருவேளை எனக்குப் பிடிக்காத வேலையையோ அல்லது எனக்காக இல்லாமல் பிறருக்காகச் செய்யவேண்டிய வேலையையோ நான் இதே போல செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் அது என்னை அயற்சியாக்குகிறது. அப்போது இந்த ஸ்ட்ரெஸ் எனக்குப் பாரமாக இருக்கிறது. ஒரு நாள் என்றால் அந்தப் பாரத்தைப் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், தினம் தினம் இந்த நிர்ப்பந்தம் வந்தால்? நிச்சயம் என்னை அது சோர்வடைய வைக்கும்.

ஸ்ட்ரெஸ்ஸின் போது
உடலில் என்ன நடக்கிறது?

பொறுமை, கவனம், கறார்த் தன்மை, ஒழுங்கில் சிரத்தை, ஏராளமான ஆற்றல் ஆகியவை ஒரு நேர்த்தியான செயலுக்குத் தேவை என்ற நிலை வரும்போது அதற்கு ஏற்றவாறு உடல் தனது செயல்பாட்டை அமைத்துக்கொள்கிறது. மூளை தனது மற்ற சிந்தனைகளை எல்லாம் நிறுத்தி விட்டு, அது தனது முழுக் கவனத்தையும் அந்தச் செயலின் மீது செலுத்துகிறது, அந்த நீடித்த கவனத்திற்கு ஏராளமான ஆற்றல் மூளைக்குத் தேவைப்படுகிறது. ஆற்றலை உடல் எப்படிப் பெற்றுக்கொள்கிறது? அதற்குத்தான் அட்ரினலின் சிஸ்டம் இருக்கிறது.

அட்ரினலின் சுரப்பி நமது இரண்டு சிறுநீரகங்களின் மேலேயும் இருக்கக்கூடிய முக்கியமான ஹார்மோன் சிஸ்டம், இதிலிருந்து சுரக்கும் அட்ரினலின், நார்அட்ரினலின், ஸ்டீராய்ட் போன்ற ஹார்மோன்கள் உடலின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமானவை. ஒரு நெருக்கடி நிலையை நாம் சந்திக்கும் போது இந்த அட்ரினலின் சிஸ்டம் தூண்டப்பட்டு, அதன் விளைவாக இந்த ஹார்மோன்கள் உடனடியாகச் சுரந்து உடலின் இயக்கத்தைத் துரிதப்படுத்துகின்றன. அதன் விளைவாக இதயத்துடிப்பு அதிகரிக்கிறது, இதயத்தின் பம்ப் செய்யும் திறனும் அதிகரிக்கிறது, இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, குளுக்கோஸ் வெளியேறுகிறது. அதிலிருந்து ஆற்றலைப் பிரித்தெடுக்க இன்சுலின் வெளியேறுகிறது. உடலின் இந்தத் துரிதமான செயல்பாட்டின் காரணமாக அந்த நெருக்கடி நிலையை அல்லது ஒரு நேர்த்தியான வேலையைச் செய்யக்கூடிய ஆற்றல் உடலுக்கு – குறிப்பாக மூளைக்குக் கிடைக்கிறது.

அப்படியென்றால், ஸ்ட்ரெஸ் என்ற மனநிலை உடலின் இயக்கத்தைப் பல்வேறு செயல்பாடுகளின் வழியாகத் துரிதப்படுத்தும் ஒன்றாக இருக்கிறது.

ஒரு வேலையை நாம் திட்டமிட்டு, தெளிவாக, சரியான வகையில் செய்து முடிக்க இந்த ஸ்ட்ரெஸ் உதவியாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதனால் ஸ்ட்ரெஸ் என்பதை தேவையான ஒன்றாகவே நாம் பார்க்க வேண்டும். எப்போதெல்லாம் நமது உடல் துரிதமாகச் செயல்படுகிறதோ அப்போதெல்லாம் நாம் ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கிறோம் என்று பொருள். இந்த ஸ்ட்ரெஸ் இரண்டு வகையாக இருக்கிறது. ஒன்று, நல்ல ஸ்ட்ரெஸ் (Eustress), மற்றொன்று கெட்ட ஸ்ட்ரெஸ் (Distress).

துரிதமான உடலின் செயல்பாடு, ஆக்கப்பூர்வ மானதாக, பயனுள்ளதாக, உதவிகரமானதாக, தேவையானதாக இருந்தால் அது நமது மனநிலையை இலகுவாக்கும்.அப்படி இருக்கும் ஸ்ட்ரெஸ் நல்ல ஸ்ட்ரெஸ். உதாரணத்திற்கு, ஒரு  காரியத்தைச் சாதிக்கும்போதும் அதில் வெற்றியடையும்போது கிடைப்பது நல்ல ஸ்ட்ரெஸ்.

அதுவே இந்த ஸ்ட்ரெஸ், சுமையானதாக, சேதப்படுத்துவதாக, தொல்லை கொடுப்பதாக, பயனற்றதாக இருந்தால் அது நமது மனநிலைக்கு நீண்ட உளச்சலைக் கொடுக்கும், அப்படிப்பட்ட ஸ்ட்ரெஸ்தான் கெட்ட ஸ்ட்ரெஸ். உதாரணத்திற்கு, நாம் செய்யும் செயலால் நமக்கு எந்தப் பலனும் கிடைக்காமல் போகும் போதும் அல்லது அதில் கொட்டப்பட்ட நமது உழைப்பு நமக்கு பயனற்றதாக ஆகும்போதும் உருவாகும் கோபம், இயலாமை, வருத்தம் எல்லாம் கெட்ட ஸ்ட்ரெஸ்.

அன்றாட வாழ்க்கை என்பது நல்ல ஸ்ட்ரெஸ்களாலும், கெட்ட ஸ்ட்ரெஸ்களாலும் சூழப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்த இரண்டு ஸ்ட்ரெஸ்களுமே நார்மலான ஒன்று தான். இரண்டுமே ஒருவகையில் நமக்குத் தேவையானவை. கெட்ட ஸ்ட்ரெஸ் என்பவை தான் நமக்கு அனுபவங்களாகவும், வாழ்க்கையில் முக்கியமான பாடத்தைச் சொல்லித் தருபவையாகவும் இருக்கின்றன. அதனால் இரண்டுமே நமது வாழ்க்கைக்குத் தேவையான மனநிலைகளே!

கேள்வி :

வணக்கம் டாக்டர்,

சுகர், பிரஷர் என உடல்நிலை பற்றிப் பேசுவதைப் போல மனநிலை பற்றிப் பேசத் தயக்கம் இருக்கிறது. நாம் பழகும் எல்லோரிடமும் ஒரு equation இருக்கிறது. நாம் அவர்கள் மனநிலை பற்றிப் பேசினால் அது கெட்டு விடுமெனத் தோன்றுவதாலேயே அதைப் பேசுவதைத் தவிர்க்கிறோம் அது ஏன்?

– நவீன் J.V., சென்னை

ஆம் உண்மைதான். யாரையாவது நாம் சந்திக்கும் போதும் அவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி எப்படி இருக்கீங்க? என்பதே. அதே போல நல்லா இருக்கீங்களா? என்று நம்மைப் பார்த்து யாராவது கேட்கும் போதும் நாம் அதற்காக மகிழ்ச்சியடைகிறோம். அதற்குக் காரணம் நமது நலத்தின் மீது ஒருவருக்கு அக்கறை இருக்கிறது என்ற எண்ணமே நமக்கு மகிழ்ச்சியாகயிருக்கிறது. ஆனால் இங்கு நலம் என்பது உடல்நலம் என்பதாக இருக்கும் வரை தான் இந்த மகிழ்ச்சி. அதுவே ஒருவரிடம் சென்று உங்க மனசு நல்லா இருக்கா? என்று கேட்டால் சட்டென்று அவருக்கு நம்மீது கோபம் வந்துவிடும். ‘‘அப்படி என்றால் என்னைப் பார்த்தா என்ன கிறுக்குப் பிடிச்ச மாதிரி இருக்கா?’’ என்று பதிலுக்கு அவர் நம் மீது கோபப்பட்டு விடுவார்.

நமது உடல் நலத்தைப் பற்றி அனைவரும் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாம், நமது மனதை மட்டும் யாருக்கும் தெரியாமல் மறைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறோம். நம் மனதையாரும் பேசுவதையே கூட நம்மால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. மூன்று மிக முக்கியமான காரணங்களைப் பற்றி மட்டும் நான் இங்கு சொல்கிறேன்: முதலாவது, உடல் அளவிற்கான வெளிப்படைத் தன்மை மனதிற்கு இங்கு இல்லை. மனம் ரகசியமாய்ப் பொத்திப் பாதுகாக்கப்படுகிறது; மனதைப் பற்றி ஒரு வெளிப்படையான உரையாடலை இன்னமும் இந்தச் சமூகம் தொடங்கவே இல்லை. எங்கெல்லாம் வெளிப்படைத் தன்மை இல்லையோ அங்கெல்லாம் அதைப் பற்றி ஏராளமான கட்டுக் கதைகள் இடப்படும். மனிதனைப் பற்றி இருக்கும் ஏராளமான எதிர்மறையான இந்தக் கட்டுக் கதைகள்தான் மனதின் மீது ஓர் எதிர்மறையான பிம்பத்தை நமக்குள் ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் நாம் அதை வெளியே சொல்லாமல் நமக்குள் மறைத்துக் கொள்கிறோம்.
இரண்டாவது முக்கியமான காரணம், மனதில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தாலே நாம் அதை மனநோய் என்று நினைத்துக் கொள்கிறோம். மன நோய் என்பது வேறு; மனநலப் பிரச்சனைகள் என்பது வேறு.

மூன்றாவது, மன ரீதியில் எழும் எல்லாப் பிரச்சனைகளையும் நாம் நமது தனிப் பட்ட பலவீனங்களாக நினைத்துக் கொள்கிறோம்.

மேல் சொன்ன இந்த மூன்று கருத்தாக்கங்களும் தவறானவை. உண்மையில், உடல் அளவிற்கு மனமும் வெளிப்படைத் தன்மையுடனும் அணுக வேண்டும்; நாம் இருக்கும் சூழல் சார்ந்து, சில சந்தர்ப்பங்கள் சார்ந்து நம் மனம் சோர்ந்து போவது, பதற்றப்படுவது எல்லாம் மன நோய்கள் அல்ல. மனதில் இயல்பாகவே இதுபோன்ற சங்கடங்கள் ஏற்படும். இப்படி ஏற்படும் மன ரீதியான பிரச்சனைகள் எல்லாம் மனம் என்று ஒன்று இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஏற்படும். அதனால் இவை எல்லாம் நமது தனிப்பட்ட பலவீனங்கள் இல்லை. இதிலிருந்து நாம் எப்படி வெளி வருகிறோம், இந்த மோசமான உணர்வுகளிலிருந்து நம்மையும் மற்றவர்களையும் நாம் எப்படி காப்பாற்றிக் கொள்ளப் போகிறோம் என்பதுதான் முக்கியம். அதற்கு நமக்கு இருக்கும் இந்த மன ரீதியான பிரச்சனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியமான ஒன்று. மனதைப் பற்றிப் பேசாமல் மனதின் மீது இருக்கும் இந்த எதிர்மறைக் கட்டுமானங்களை எல்லாம் உடைக்க முடியாது. மனதோடு பேசுவது மட்டும் போதாது; மனதைப் பற்றி பேசுவதும் அவசியமான ஒன்று.

தொடரும்….