மனமின்றி அமையாது உலகு (12) அச்சம், பயம், பதற்றம்

2025 உளவியல் ஜனவரி-1-15-2025

மருத்துவர்
சிவபாலன் இளங்கோவன்,
மனநல மருத்துவர்

மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இன்றைய நிலையை அடைவதற்கு முன் அவன் பல்வேறு படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறான். ஆதிமனிதனாக காடுகளில் அலைந்து திரிந்தபோது, கொடிய உடல் வலிமை மிகுந்த விலங்குகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வது அவனுக்கு எளிமையானதாக இருக்கவில்லை. பிழைத்திருப்பது என்பது அப்போது அவனுக்கு அத்தனை பெரிய சவாலான ஒன்றாக இருந்திருக்கிறது. பல்வேறு ஆபத்துகளில் இருந்து தப்பித்து, முப்பது ஆண்டுகள் வாழ்வது என்பதே அப்போது மிகப்பெரிய சாதனை. மனிதனுக்கு மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்குமே பிழைத்திருப்பது என்பது ஒரு மிகப்பெரிய பரிணாம சவால்.

ஆபத்துகளை உணர்ந்து கொள்வது, அதில் இருந்து விலகி ஓடுவது அல்லது ஆபத்தை எதிர்கொண்டு அழிப்பதே பிழைப்பதற்கான வழி. அதனால் பிழைத்திருப்பதற்கான உள்ளுணர்வு (survival instinct) ஆகியவை படிப்படியாக அவனையும் அறியாமல் அவனது மரபணுக்களில் பொதிந்துவிட்டன. எந்த ஓர் ஆபத்தை எதிர்கொள்ளும் போதும் இந்த உள்ளுணர்வு தூண்டப்பட்டு அந்த ஆபத்தை எதிர்கொள்ளவோ அல்லது தப்பித்துச் செல்லவோ உடல் ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் தயாராகிறான். உணர்வு ரீதியான மாற்றமே பயம் என்றும், உடல் ரீதியான மாற்றங்களையே நாம் பதற்றம் என்றும் நாம் பின்னாளில் அழைக்கப் பழகிவிட்டோம்.
இன்று நாகரிக மனிதன், காடுகளிலிருந்து நிலங்களுக்குப் புலம்பெயர்ந்து விட்டான் (அல்லது இடம் மாற்றிவிட்டான்). கொடிய விலங்குகளால் இன்று அவனுக்கு ஆபத்து இல்லை, அவற்றில் இருந்து தப்பிப்பதும், பிழைப்பதும் கூட அவனுக்கு முதன்மையானதாக இல்லை. ஒரு சமூக விலங்காக தன்னைத் தக்கவைத்துக்கொள்வதும், தனது சந்ததியின் நீட்சியை உறுதி செய்வதும் தான் அவனுக்கு இன்று தலையாய பிரச்சினை. அதனால் ஆபத்து என்பது கொடூரமான விலங்குகளினால் இல்லை மாறாக அவன் சார்ந்திருக்கும் சமூகமே அவனுக்கு ஆபத்தானதாக இருக்கிறது, அன்றாட வாழ்க்கையில் அவன் அது போன்ற பல ஆபத்துகளைக் கடந்து வரவேண்டியிருக்கிறது. பிழைத்திருப்பதற்கான அவனது உள்ளுணர்வு (survival instinct) என்பது அன்றாட வாழ்க்கையில் அவன் எதிர்கொள்ளும் இது போன்ற ஆபத்துகளால் மேலும் தூண்டப்படுகிறது. அதனால் மனிதன் இன்றும் பயப்படுகிறான், பதற்றமடைகிறான்.

வகுப்பு ஒன்றில் கணித ஆசிரியர் ஒருவர் சிக்கலான கணக்குகளை விளக்கிக் கொண்டிருக்கிறார், மதிய உணவிற்குப் பிறகான வகுப்பு என்பதாலும், சுவாரசியமற்ற கணக்கு என்பதாலும் மாணவர்கள் அனைவரும் தூக்கத்தில் சொக்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகுப்பே அத்தனை அமைதியாக இருக்கிறது. திடீரென ஒரு மாணவனின் மீது சாக்பீஸைத் தூக்கி ஆசிரியர் அடிக்கிறார், அவனருகே வேகமாகச் சென்று அவனது கன்னத்தில் அறைகிறார் ‘‘என்னடா தூக்கம்?’’ என்று சத்தமாக அவனைப் பார்த்துக் கத்துகிறார். அதைப் பார்த்த மற்ற மாணவர்கள் நடுங்கிப் போகிறார்கள், நம்மையும் அடித்து விடுவாரோ என்று பதறுகிறார்கள், அத்தனை பேருக்கும் சோம்பல் கலைந்து தூக்கம் போய்விட்டது, உள்ளுக்குள் படபடப்பும், பயமும் கூடிக்கொண்டே செல்கிறது, இப்போது அங்கிருந்து ஓடவேண்டுமென்றால் அத்தனை மாணவர்களும் ஓட்டப்பந்தய வீரனை விட அதிவேகமாக அங்கிருந்து ஓடி விடுவார்கள்.

இந்த நிகழ்வை. ஆதி மனிதனோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம், ஒரு குகையில் நல்ல தூக்கத்தில் இருக்கும் அந்த மனிதன் ஏதோ சத்தம் கேட்டு எழுந்து பார்க்கும்போது, அங்கு ஓர் ஓநாய் நாக்கைத் தொங்கவிட்டபடி அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறது, உடனடியாக அவனுக்குத் தூக்கம் கலைந்து போகும்; சோம்பல் நீங்கும்; பயம் கூடும்; படபடப்பு அதிகமாகும். அங்கிருந்து ஓடுவதற்குத் தயாராவான்.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் மனிதனுக்குள் நடக்கும் இந்த மாற்றங்களான சட்டென வரும் அச்சம், பயம், பதற்றம், உடலுக்குள் திடீரென வரும் அதிவேக ஆற்றல் ஆகியவை ஒன்று போலவே இருக்கின்றன, சூழல் தான் மாறியிருக்கிறது. முன்பு கொடிய விலங்குகள்; இப்போது சகமனிதன்.முன்பு உயிர்பிழைப்பதற்கான முனைப்பு; இப்போது சமூக மதிப்பின் மீதான நம்பிக்கை. இரண்டு சூழலுமே மனிதனின் உள்ளுணர்வைத் தூண்டியிருக்கின்றன. இரண்டு சூழலும் அச்சமும், பதற்றமும் மனிதனிடம் வெளிப்பட்டிருக்கின்றன. இந்த உள்ளுணர்வு என்பது அடிப்படையில் நமது பரிணாம வளர்ச்சியில் நாம் இப்போதிருக்கும் நிலையைப் பொறுத்து மாறுபடுகிறது. ஆனால், மனிதனைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கம் மட்டும் அப்போதும், இப்போதும், எப்போதும் ஒன்றுபோலவே இருக்கும். அதனால் பயம் என்பது ஓர் உயிரினத்தின் மிகப்பெரிய ஆயுதம்.

பயம் – என்றால் என்ன?

பயம் என்பது ஓர் உள்ளுணர்வு. அது இயல்பிலேயே எல்லா உயிர்களுக்கும் இருக்கக்கூடியது ஆனால், எதற்குப் பயப்பட வேண்டும் என்பதை நாம் இந்த உலகத்தில் வளர வளர கற்றுக்கொள்கிறோம் (Learning process). உதாரணத்திற்கு, ஒரு வயதுக் குழந்தை ஒன்று உட்கார்ந்திருக்கிறது; அதற்கு முன்னால் ஒரு பெரிய நாகம் ஒன்று படமெடுத்து தலையை ஆட்டிக்கொண்டிருக்கிறது, அந்தக் குழந்தைக்கு அந்த நாகத்தைப் பார்த்துப் பயமில்லை. அதைத் தொட்டு விளையாட நினைத்து அதன் அருகில் செல்கிறது; அதே போல தீ எரிவதைப் பார்க்கும் சிறு குழந்தை அதன் வெளிச்சத்தைக் கண்டு அதைத் தொட்டுப் பார்த்துவிட நினைக்கும். குழந்தையைப் பொறுத்தவரை நாகமோ அல்லது தீயோ எதன் மீதும் அதற்குப் பயம் இல்லை. ஆனால், அதனால் சீண்டப்படும்போது அது ஏற்படுத்தும் வலியின் வழியாக குழந்தையின் உள்ளுணர்வு தூண்டப்படுகிறது. உடனடியாக மூளையின் ‘சர்க்யூட்கள்’ அதிரடியாகச் செயல்பட்டு நாகத்தையும், தீயையும் ஆபத்தானதாக மூளைக்குள் பதிந்து கொள்கிறது. பின்னாளில் அதை எதிர்கொள்ள நேரும்போது, ஏற்கனவே பதிந்திருந்த அனுபவங்கள் உடனடியாக சுதாரித்துக்கொண்டு பயம் என்ற உள்ளுணர்வைக் கொடுக்கிறது. இந்தப் பயம் என்ற உள்ளுணர்வு தான் ஆபத்துகளை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்ற கட்டளையை மூளைக்குக் கொடுக்கிறது.

பதற்றம் என்றால் என்ன?

ஆபத்து என்பதைத் தெரிந்து கொண்ட மூளை, உடனடியாக அந்த ஆபத்துடன் மனிதனைப் போராட வைக்க வேண்டும் அல்லது அங்கிருந்து அவனைத் தப்பிக்க வைக்க வேண்டும் (Fight or Flight).
ஆபத்தை எதிர்த்துப் போராடவோ அல்லது தப்பிக்கவோ ஒரு மனிதனுக்கு என்ன தேவை? ஏராளமான சக்தி தேவை. அந்தச் சக்தியை

எப்படி உடல் உடனடியாகப் பெறும்?

அதற்காக மூளை ஒரு உடனடித் திட்டத்தை எப்போதும் வைத்திருக்கும். அதாவது உடலின் அத்தனை செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்திவிட்டு, ஒட்டு மொத்த உடலையும் ஆற்றலை உற்பத்தி செய்யும்படி தூண்டிவிடும். இதயம் அதிகமாக துடிக்கும், மூச்சு அதிகமாக வாங்கும், ரத்த ஓட்டம் அதிகமாகும். சேர்த்து வைத்திருந்த ஆற்றலை உடனடியாக கை, கால்களுக்கும், தசைகளுக்கும் கொடுக்கும், அதாவது தற்காலிகமாக உடலின் மற்ற பாகங்கள் தங்களது இயக்கத்தை நிறுத்திக்கொண்டு அவை சேமித்து வைத்திருந்த ஆற்றலை எல்லாம் கைகளுக்கும், கால்களுக்கும், தசைகளுக்கும் கொடுக்கும். அதை வைத்து அந்த மனிதன் அந்த ஆபத்துடன், போராடலாம் அல்லது தப்பியோடலாம், ஆபத்து நீங்கிய பிறகு உடல் இயல்பு நிலைக்கு வந்து திரும்ப பழைய வேலைகளைத் தொடங்கும். ஆபத்து என்று உணர்ந்து கொண்ட பிறகு நடக்கும் உடல் ரீதியான இந்த மாற்றங்களைத் தான் (Fight or Flight Response) நாம் பதற்றம் என்கிறோம்.

பதற்றம் எப்போது நோயாகிறது?

ஆபத்து ஒன்றை நாம் எதிர்கொண்டவுடன், முதலில் பயம் வருகிறது, சில கணங்களிலேயே இதய துடிப்பு அதிகமாகிறது, மூச்சு வாங்குகிறது, வியர்த்துக் கொட்டுகிறது. இந்த உடல் ரீதியான மாற்றங்களைத் தான் நாம் பதற்றம் என்று சொல்கிறோம். இந்தப் பதற்றம் வருகிறதென்றால், மூளை தனது பாதுகாப்பு சிஸ்டத்தை ஆக்டிவேட் செய்து விட்டது என்று பொருள். எப்போது பதற்றம் வந்தாலும் நமது கவனம் ஓரிடத்தில் குவிந்து விடும், நமது எச்சரிக்கையுணர்வு அதிகரிக்கும், அதனால் நம்மைச் சுற்றி சாதாரணமாக நடக்கும் ஒன்றைக்கூட நாம் கூர்ந்து கவனித்து அதில் ஆபத்து இருக்குமோ என சந்தேகம் கொள்வோம்; அதனால் ஆபத்தில்லை என உறுதி செய்து கொள்ள நினைப்போம்; வழக்கமாக வரும் சிந்தனைகள் தடைபடும்.நம்மால் சரியாக யோசிக்க முடியாது, சரியாக முடிவெடுக்க முடியாது, ஆபத்தைத் தவிர வேறு எதிலும் கவனம் இருக்காது. ஆபத்து முடியும் வரை நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது. இவை எல்லாம் மூளையில் பாதுகாப்பு சிஸ்டம் ஆக்டிவேட் ஆனபிறகு நடப்பவை. எந்த ஆபத்தும் இல்லை என்று மூளை உணர்ந்த பிறகே மூளை இந்த ஆக்டிவேட் சிஸ்டத்தை நிறுத்தும். அதற்கு பிறகே நம்மால் இயல்பாக இருக்க முடியும், நிதானமாக யோசிக்க முடியும், தெளிவாகச் சிந்திக்க முடியும். ஒரு வேளை ஆபத்து நீங்கிய பிறகும் அல்லது ஆபத்து என்று எதுவும் இல்லாமலேயே மூளையின் இந்தப் பாதுகாப்பு சிஸ்டம் ஆக்டிவேட் ஆகி அது நீடித்துக்கொண்டே இருந்தால் என்னவாகும்? அதைத் தான் நாம் பதற்ற நோய்கள் (Anxiety Disorders) என்கிறோம்.