“இந்தப் போராட்டம் எங்களால் தொடங்கப்படவுமில்லை, எங்களோடு முடியப்போவதுமில்லை. மனிதனை மனிதன் சுரண்டும் சமூக அமைப்பு மாறும் வரை இப்போராட்டம் தொடரும் பாலுக்கு அழாத குழந்தையும் கல்விக்கு ஏங்காத மாணவனும், வேலைக்கு அலையாத இளைஞனும் உள்ள நாடே என் கனவு இந்தியா” என்றார் பகத்சிங்.
பகத்சிங் கண்ட கனவு தமிழ்நாட்டில் ஓரளவிற்கு நனவாகியுள்ளது என்றே சொல்லலாம்.
‘விடுதலை’ திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனைக் கதை என்று அதன் இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்ததாலும், சிலர் மார்க்சியத்தை விடுதலை திரைப்படத்தில் தேட முடியாது என்று கூறுவதும்,
அதீதமான, அதிதீவிர இடதுசாரி அரசியலையும், ஆயுதப் போராட்டத்தையும், தமிழ்தேச அரசியலையும், தமிழ்நாடு விடுதலைப் படையின் வரலாற்றையும் பேசியுள்ளது வெற்றிமாறனைக் கைது செய்ய இந்து மகாசபை கோரிக்கை வைப்பதும், நடந்துகொண்டிருக்கிறது.
பல்வேறு தரப்பு மக்களைச் சென்றடைய வேண்டியது திரைப்படம். ஆகவே, தன்னால் முடிந்த அளவிற்கு தமிழ்நாட்டில் நடைபெற்ற கூலி உயர்வுக்கான, மனித உரிமைக்கான, ஜாதி தீண்டாமை ஒழிப்புக்காக, இயற்கை வளச் சுரண்டலுக்கு எதிராக நடந்த போராட்டங்களையும், அப்போதைய புரட்சிக்கு எதிரான தலைவர் எப்படி அடக்கி ஒடுக்கினர் என்பது இதுவரை காட்சிப்படுத்தாமல் இருந்த தமிழ் சினிமாவில், துணிச்சலாக முதல் முறையாக படமாக்கி இருப்பதை மனமுவந்து எல்லோரும் பாராட்ட முன்வர வேண்டும். செயற்கை நுண்ணறிவு வந்துவிட்ட காலகட்டத்தில், வலதுசாரி அரசியல் கோலோச்சும் இந்தக் காலகட்டத்தில், ஒரு காட்சி ஊடகமான, பொதுத்தளத்தில்,
சினிமாவில் பொதுவுடைமை இயக்கம் மற்றும் சுயமரியாதை இயக்கம் இந்தத் தமிழ்ச் சமூக மேம்பாட்டிற்காக எவ்வளவு தியாகங்களைச் செய்துள்ளது என்பதை மிகத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். அதோடு மட்டுமல்லாமல் இந்த இரண்டு கோட்பாடுகள் குறித்து அறியாத மக்களிடத்தில் கம்யூனிசத்தையும், சுயமரியாதை இயக்கத்தின் பங்களிப்பையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தியுள்ளார் என்பது போற்றுதலுக்கு உரியது.
கீழத்தஞ்சையில் தொடங்கும் விடுதலையின் இரண்டாம் பாகம் கூலி உயர்வுக்கும் ஜாதிய அடக்குமுறைக்கும் எதிராகப் பொதுவுடைமை இயக்கங்களும், திராவிடர் இயக்கமும் எவ்வாறு போராடின என மிகச்சரியாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.
ஒரு கட்டத்தில் கூலி உயர்வுக்குப் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கும் போது, கீழத் தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த பண்ணையார் பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்தவர்களிடம் சொல்வார் – ‘‘நீ கொடி பிடிச்சுட்டு வந்துட்டா நான் இந்தக் கூலிக்காரப் பசங்க கிட்ட பேச்சுவார்த்தை நடத்தணுமா? என்னைக்கு சிகப்புச் சட்டையும், கருப்பு சட்டையும் ஊருக்குள்ள வந்தீங்களோ அன்றிலிருந்து தாண்டா பிரச்சினை,’’ என்று.
உண்மையும் அதுதான். ஏனெனில், கீழத்தஞ்சை மட்டுமல்ல, பொதுவாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் திராவிடர் கழகம் இல்லாத ஊரே இல்லை என்று சொல்லும் அளவில் பட்டி தொட்டி எங்கும் இயக்கம் பரவி விரவி இருந்தது.
திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம் தஞ்சை மாவட்டத்தில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டது, அப்போதைய காலகட்டத்தில் நாகை எஸ்.எஸ்.பாட்சா எனும் திராவிடர் கழக முன்னோடி அழைத்தும் நாகப்பட்டினத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிராக ஜாதிய வன்கொடுமை நிகழ்த்திய பார்ப்பனப் பண்ணையாருக்கு எதிராக எந்த அமைப்பும் வராத போதும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் நாகை பாட்சா தலைமையில் போராடி அந்தப் பார்ப்பனப் பண்ணையாரின் அடக்குமுறைக்குத் தீர்வு கண்டது என்பதும் வரலாறு.
கதையின் நாயகன் விஜய் சேதுபதி ஒரு தமிழ் ஆசிரியராக இருந்து எப்படி ஒரு ஆயுதப் போராட்டக்குழுவின் தலைவராக மாறுகிறார், பின்பு அவரே மக்களை அரசியல் படுத்தாமல், மக்களை அணி திரட்டாமல் தனியாகச் சென்று போரிடுவதன் மூலம் எந்த மாற்றமும் வரப்போவதுமில்லை, மக்களை அரசியல் படுத்தும்போது அவர்கள் செலுத்தும் வாக்கு கூட ஆயுதம் தான் என்று ஆயுத வழிப் போராட்டம் மட்டுமே போராட்டமல்ல; மாறாக, ஜனநாயக ரீதியில் போரிடுவோம் என அழுத்தமாக விஜய் சேதுபதி பேசும் வசனம் விடுதலை திரைப்படத்தை உள்ளபடியே ஒரு காவியமாக மாற்றியுள்ளது.
திருமணம் செய்த இளம்பெண்களைக் கடத்திச் சென்று வல்லுறவு செய்யும் அந்தப் பண்ணையாரின் வீட்டிற்கே சென்று தாக்குதல் நடத்தும் கென் கருணாஸ் சிறப்பாக நடித்துள்ளார், ஆதிக்கத் தரப்பினரை தாக்கும்போது, ‘‘அவன்தாண்டா வீரன், எத்தனை பேர் அடிச்சாலும் எல்லோரையும் சமாளிக்கிறானே இந்தக் கறுப்பன்தாண்டா வீரன்’’ என்பார் பண்ணையாரின் மகனாக நடித்துள்ள போஸ் வெங்கட்- அப்போது கருப்பன் பாத்திரத்தை ஏற்ற கென் கருணாஸ், ‘‘இது பல ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிரான கோபம்டா, இந்த வீரத்தை நீ பார்த்து தாண்டா ஆகணும்’’ எனத் தாக்குவார், உயிரைக் கொடுத்தேனும் சுயமரியாதையைப் பெறுவோம் என்ற பெரியாரின் சொற்களே நினைவில் வந்து சென்றது.
‘‘கருப்பா, பள்ளிக்கூடத்துக்கு வந்து படிடா’’ என வாத்தியார் கூப்பிடும்போது, ’’நான் பள்ளிக்கூடத்திற்கு வந்தால், எல்லோரையும் சமமாக அமர வைத்து பாடம் எடுப்பீங்களா சார்’’ எனக் கேட்பதும், என் திருமணத்திற்கு கருப்புச் சட்டை எடுக்க கடைக்கு போகிறேன் என்பதும், அப்போதைய சுயமரியாதை இயக்கத்தின் தாக்கத்தைக் காட்டுகிறது.
விஜய் சேதுபதி- மஞ்சு வாரியர் இணை ஏற்பு நிகழ்வு – சுயமரியாதைத் திருமணம் முழுமையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி
சுயமரியாதைத் திருமணம் காட்சிப்படுத்தப் பட்டிருப்பது விடுதலை திரைப்படத்தில் தான் என்பது பெரும் மகிழ்ச்சி. அந்த சுயமரியாதைத் திருமணத்தின் போது திராவிடர் கழகத் தோழர்கள் கலந்துகொண்டு தலைவர் பெரியாரின் புகைப்படத்தை வழங்குவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சிறப்பு.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக பண்ணையார்கள் ஒர் அமைப்பை உருவாக்கும் போது அதற்கு ஆதரவாக காவல்துறை இருப்பதும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் குறிப்பாக பெண்கள் எந்த அளவிற்கு காவல்துறையினரின் கொடூரக் கரங்களின் சித்ரவதைக்கு உள்ளாகினர் என்பதும் தற்போது தான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மனநிறைவைத் தருகிறது.
வர்க்க முரண்பாடு, பொதுவுடைமை இயக்கம், அரசியல் வகுப்புகள் குறித்தான காட்சிகள் பொதுத்தரப்பினருக்குக் கொஞ்சம் புரிதலின்மையை ஏற்படுத்துகிறது. அதுவும் கூட பலமுறை தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டதன் விளைவே.
‘‘நாம் என்ன படிக்க வேண்டும், என்ன உண்ண வேண்டும், எந்த மொழி பேச வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்’’ அதாவது அந்தந்த தேசிய இனங்களே முடிவு செய்ய வேண்டும்’’ என விஜய் சேதுபதி பேசும் வசனம் தற்போதைய அரசியலுக்கும் நிகழ்வுகளுக்கும் பொருந்திப் போகிறது.
எங்கோ நாக்பூரில் உள்ளவர்கள் தமிழ் நாட்டு மக்களின் வாழ்வியலைத் தீர்மானிக்கக் கூடாது என்கிறார் இயக்குநர். போராளி இயக்கங்களுடன் சட்டக்கல்லூரி
யில் இருந்து சட்ட ரீதியான தொடர்பில் இருந்ததால் அவர்களின் நியாயங்கள் நன்கு அறிவோம். திராவிட இயக்கத்தில் பயணிப்பதால் தொலைவில் இருந்தும், அருகில் இருந்தும் பார்த்து உடன்பட்டும், முரண்பட்டும் இருந்திருக்கிறோம், முரண்படாமல் இருந்திருந்தால் இந்நேரம் நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டியிருப்பார்கள் அது வேறு கதை.(!!)
விடுதலை திரைப்படம் முதல் காட்சியில் தமிழ்நாடு விடுதலைப் படை பற்றி தவறாகக் காட்சிப்படுத்தபடுகிறதோ எனத் தோன்றினாலும் அதன் அடுத்த பகுதியில் அந்த ரயில் கவிழ்ப்பின் உண்மைச் செய்தியை அதை அரசு தான் வலிந்து நடத்தியது என்பதை இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியினூடாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அழகான மலைக்கிராமத்தை மிக அற்புதமான விதத்தில் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்- அந்த இயற்கை சூழ் மலையின் வளங்களைக் கொள்ளையடிக்க கார்ப்பரேட் கம்பெனி முயற்சிப்பதும் அதற்கு அப்போதைய எம்.ஜி.ஆர் அரசு துணை போவதும் அப்பட்டமாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது அதே வேளையில் அந்த கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடும் மக்கள் விடுதலைப் படையின் போராட்டத்தைச் சாதுர்யமாகப் படமாக்கியிருப்பது சிறப்புக்குரியது.
ஒரு கடை நிலைக் காவலராக நேர்மையான வழியில் பணி செய்தால் அவர் எந்த அளவிற்கு மேலதிகாரிகளால் பழிவாங்கப்படுவார் என்பதை துல்லியமான முறையில் காட்சிப்படுத்தியுள்ளார் வெற்றி மாறன். ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின், பழங்குடி மக்களின் போராட்டக் குணத்தைக் காட்சிப்படுத்திய விதம் சிறப்பு! போராளிக் குழுவினருடன் நடைபெறும் சண்டையில் போராளிகள் வெற்றி பெற்று, தப்பிச் செல்வதை ஏற்க முடியாமல் சக காவல்துறையைச் சேர்ந்தவரைச் சுட்டுக்கொல்லும் போது ஒரு கொடூரமான காவல்துறை அதிகாரியைக் கண் முன் நிறுத்துகிறார் சேத்தன் (!!) சாமானிய மக்களுக்குத் தேவை இருக்கிறது, தேவை உள்ளவன் தான் போராடுவான், உண்டு கொழுத்தவன் ஒருபோதும் போராட வரமாட்டான்.
வலி மிகுந்த கனமான கதையைத் தூக்கிச் சுமந்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. உள்ளபடியே விஜய் சேதுபதியின் நடிப்பு மெச்சத்தக்கது.
கூலி உயர்வுக்காக, சமத்துவத்துக்காக, மனித உரிமைக்காக, இயற்கை வளத்தைப் பாதுகாக்க நடக்கும் போராட்டத்தின் ஊடே ஒரு மெல்லிய நீரோடையாக விஜய் சேதுபதிக்கும் – மஞ்சு வாரியருக்கும் இடையே உள்ள காதல் கவிதை போல் விரிகிறது.
விஜய் சேதுபதி தனது அசாத்திய நடிப்பால் ஒரு போராளி இயக்கத் தலைவர் என்பதை நிரூபிக்கிறார்.
போராளி இயக்கத்தைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க அவர்களது உறவினர்களைச் சிறைபிடித்து, நிர்வாணப்படுத்தி அடித்து பாலியல் வல்லுறவு செய்யும் கொடூரத்தை காவலர்கள் செய்வார்களா எனக் கேட்கும் அரசு சார்பானவர்கள் இன்னும் இந்த அமைப்பு முறையின் உண்மை முகத்தைப் பார்க்கத் தவறியவர்கள் தான் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?
தமிழ்நாட்டில் நடந்த வாழ்வுரிமைக்கான போராட்டங்களின் தொகுப்பாகவும், காவல்துறை வன்கொடுமைகளின் ஆவணமாகவும் விடுதலையின் இரண்டாம் பாகம் அமைந்தது என்பது நிதர்சனம்.