வண்டிக்கு முன்னால் குதிரையா? குதிரைக்கு முன்னால் வண்டியா?

2025 ஆசிரியர் பதில்கள் ஜனவரி-1-15-2025
1. கே: சம்பல் பகுதியில் நடைபெற்ற வன்முறைக்கு ராகுல் கண்டனம் தெரிவித்திருப்பது- இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான நாடகம் என்று மாயாவதி விமர்சனம் செய்துள்ளதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– க.காசி, தூத்துக்குடி.
ப: நமது அன்பிற்குரிய மாயாவதி  அவர்கள் அரசியலில், கான்ஷிராம்  அவர்களது மறைவிற்குப் பின் திசை மாறிய- – தவறான பாதையில் பயணமாகி அதுவே அவரது செல்வாக்கு அரசியலிலும் சரி, பொது வாழ்விலும் சரி, மிகவும் கீழே இறங்கி வருகிறது நாளும் என்பது, அவரது நலம் விரும்பிகளான நமக்குப் பெரும் வேதனையைத் தருகிறது.
2. கே: தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள், எத்தனை இடம் கேட்பது என்பது பற்றி இப்போதே பொதுவெளியில் பேசுவது, பேர வலிமைக்கு உதவும் என்பதை
விட, அதன் எதிர்விளைவுகள் பாதிப்பை உண்டாக்கும் என்ற கருத்து சரிதானே?
— ம.சங்கர், பல்லாவரம்.
ப: நூற்றுக்கு நூறு சரியானது. வண்டிக்கு முன்னால் குதிரையா? குதிரைக்கு முன்னால் வண்டியா? யோசிக்க வேண்டும் நமது கூட்டணித் தோழர்கள்.
3. கே: தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தலைவரைத் தேர்வு செய்யாமல் முன்கூட்டியே முடிவு செய்வது என்று எல்லாவற்றிலும் சர்வாதிகாரப் போக்கு தொடர்வதைக் கூட சந்திரபாபு நாயுடுவும்,  நிதீஷும் அனுமதிப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– பா.ஞானவேல், குடியாத்தம்.
ப: இது முதல் கீறல்-, விரிசலின் துவக்கம்.  போகப்போக என்ன நிலையோ!
4. கே: அம்பேத்கருக்கு எதிரான கருத்தைக் கூறிய அமித்ஷாவைக் கண்டித்து தமிழ்நாட்டில் ஏற்பட்ட எழுச்சியைப் போல வடமாநிலங்களில், குறிப்பாக மராட்டியத்தில் கூட ஏற்படாதது ஏன்? மதவுணர்வு ஊட்டப்பட்ட அளவிற்கு சமூகநீதிக் கருத்துகள் அங்கே பரப்பப்படவில்லையா?
– த.வாணிதா, வேலூர்.
ப: அப்படியல்ல. எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள ஊடகங்களின் இரும்புத் திரையால் அது வெளிச்சமாகவில்லை என்பதே உண்மை!
5. கே: 2019 நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோது காஷ்மீரில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தியபோது, மாநிலத் தேர்தலை நடத்தும் சூழல் இல்லை என்று  நிறுத்தி வைத்தவர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கூறுவது பித்தலாட்டம் அல்லவா?
– வே. கனகா, அடையாறு.
ப: ‘பேசுநா இரண்டுடையாய் போற்றி! போற்றி!’ ஆரிய மாயையின் வித்தை இதுதான்!
6. கே: அம்பேத்கர் எழுதிய சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மநுநீதி சட்டமாக வேண்டும் என்ற கோரிக்கையைக் கண்டிக்காதது எதைக் காட்டுகிறது?
– கே.ராஜன், காஞ்சிபுரம்.
ப: ஒரு நீதிபதி இப்படியெல்லாம் அரசியல் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்து பதவியில் உள்ளபோது இப்படிப் பேசுவதை சட்டமும் சமூகமும் அனுமதிக்கலாமா?
மநுராஜ்யம் எப்படி  பார்த்தீர்களா?
7. கே: இந்திய நீதிமன்றங்களில் 1,122 நீதிபதிப் பணியிடங்களில் 757 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு 32% இடங்கள் காலியாக உள்ளன. இதுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசின் சாதனையா? உச்சநீதிமன்றம் எதுவும் செய்ய முடியாதா?
– ச.சந்தானம், ஆவடி.
ப: மனமிருந்தால் மார்க்கமுண்டு. உச்சநீதிமன்றம் ஒரு பொதுநல வழக்கை தாங்களே எடுத்து விசாரித்து தீர்ப்புக் கூறி நிரப்ப ஆணை பிறப்பிக்கலாமே! சட்டத்தில் இடமுண்டு! மனதில் துணிவும் தெளிவும்தான் தேவை.
8. கே: தேர்தல் ஆணைய விதிகளில் திருத்தம் செய்து ஜனநாயகத்தின்மீது தாக்குதல் நடத்தும் பா.ஜ.க. அரசின் செயலை சட்டரீதியில் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
– ம.கெளரி, மாங்காடு.
ப: காங்கிரஸ் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது, நீதிமன்றம் என்ன சொல்கிறது என்பது ஒருபுறமிருக்கட்டும். மக்கள் மன்றத்தில் இவற்றைக்கொண்டு தற்போதுள்ள இத்தேர்தல் ஆணையத்தின்மீது மக்களுக்கு – வாக்காளர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தீர்மானங்கள் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டும்.
9. கே: நாட்டின் செல்வ வளங்களைப் பகிர்ந்தளித்தல் குறித்த இராகுல் காந்தியின் கருத்துப் பற்றி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– கே.ஜானகி, 
வண்ணாரப்பேட்டை.
ப: எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தி அவர்களை நாடாளுமன்றத்திற்குள் எதிர்கொள்ள முடியாததால், இத்தகைய கேவலமான முயற்சி போலும்!