தந்தை பெரியாரை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்!

2025 கட்டுரைகள் ஜனவரி-1-15-2025

பெரியார் பகுத்தறிவு எணினி நூலகத்தைத் திறந்து வைத்து முதல்வர் முழக்கம் !!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம். என்ன பேசுவது என்று புரியாமல் நான் விழித்துக் கொண்டிருக்கிறேன். காரணம் நம்மு
டைய அய்யா ஆசிரியர் அவர்கள் எனக்கு அளித்திருக்கக்கூடிய அந்தப் பரிசை வாங்குகின்ற போது என்னையே நான் மறந்திருக்கிறேன்.

வாழ்க்கையில் எத்தனையோ பரிசுகளை நாம் பெற்றிருக்கலாம், வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தப் பரிசுக்கு எதுவும் ஈடாகாது என்பதை நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். போதும், எனக்கு இது போதும். ‘திராவிட மாடல்’ என்றால் என்ன என்று கேலி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்தக் கைத்தடி ஒன்றே போதும். தாய் வீட்டிற்கு வந்திருக்கிறேன். தாய் வீட்டிற்கு வருகிறபோதெல்லாம் நான் உணர்ச்சியை, எழுச்சியைத் தொடர்ந்து பெறுவதுண்டு. ஆகவே, அதைப் பெற்று நான் இன்றைக்கு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

நம்முடைய இனத்திற்காக
அயராது உழைத்திருக்கக்கூடிய நம்முடைய ஈரோட்டுச் சிங்கம்!

ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட தமிழினம் ஒற்றுமை பெறவும், சுயமரியாதை உணர்வு பெற்று மேலெழுந்து நிற்கவும், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு, பல்வேறு தியாகங்களைப் புரிந்து, நம்முடைய இனத்திற்காக அயராது உழைத்திருக்கக்கூடிய நம்முடைய ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுடைய மறைந்த இந்த நாளில், அவருடைய கருத்துகளை, அவருடைய எண்ணங்களை, அவருடைய போராட்டங்களை, அவருடைய தியாகங்களை, அவருடைய வாழ்க்கை வரலாற்றை நம்முடைய இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல உறுதி எடுப்போம்! அதற்குத் துணை செய்யும் வகையில், “டிஜிட்டல் நூலகமாக, ஆய்வு மய்யமாக” இன்றைக்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது!

‘தந்தை பெரியார் அவர்கள் தனது பயணத்தை முடித்துக் கொண்டார். நாம் தொடர்வோம்’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னாரே! தந்தை பெரியாரின் தொண்டர்களான நாம் அந்தப் பயணத்தைத் தொடங்கி, இந்த முன்னெடுப்பை செய்திருக்கிறோம்!

அவர் வாழ்ந்த காலத்தில், அவர் பேசிய
முற்போக்குக் கருத்துகளுக்காக, மானுட
சமுதாயத்தின் விடுதலைக்கான கருத்துகளுக்காக
பழைமைவாதிகளிடமும், பிற்போக்குவாதி
களிடமும் கடுமையான எதிர்ப்பை அவர் சந்தித்தார்.
தந்தை பெரியாரின் தனித்தன்மை!

ஊருக்குள் வரக்கூடத் தடை; பேசத் தடை; கோயிலுக்குள் நுழைய தடை; எழுதத் தடை; பத்திரிகை நடத்தத் தடை; போராட்டம் நடத்தத் தடை. அத்தனை தடைகளையும் தகர்த்தவர் தந்தை பெரியார். இந்த மண்ணுலகில் வாழக்கூடிய அத்தனை பேரின் மனங்களிலும் நுழைந்திருக்கிறார் அவர்தான் தந்தை பெரியார் அவர்கள்! அதனால்தான், தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 50 ஆண்டுகள் ஆன பிறகும், இன்றைக்கு அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம், அவரைப் பற்றி புகழ்ந்து கொண்டிருக்கிறோம், அவருடைய வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவரை இன்றைக்கு நினைவுபடுத்தி, அந்த உணர்வுகளை நாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதுதான் தந்தை பெரியாரின் தனித்தன்மை!

இந்த நூலகத்தை சிறப்புற உருவாக்கித் தந்தி ருக்கக்கூடிய ஆசிரியர் அவர்களுக்கும், தம்பி அன்புராஜ் அவர்களுக்கும் நான் இந்த நேரத்தில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்போதும் பயனுள்ள பணிகளைப் பார்த்து, பார்த்து செய்யக்கூடியவர் நம்முடைய ஆசிரியர்!

நினைத்துப் பார்க்கிறேன்… அய்யா வருகிற போது சொன்னார். 1974ஆம் ஆண்டு நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, இதே திடலிற்கு வந்து, பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்தை அன்றைக்குத் திறந்து வைத்திருக்கிறார். அதற்குப் பிறகு பெரியார் திடலில் எல்லா வகைகளிலும், பயன்படக்கூடிய வகையில், இங்கு உருவாக்கப்பட்டுள்ள பெரியார் டிஜிட்டல் நூலகத்தை அவருடைய மகனாக இருக்கக்கூடிய ஸ்டாலின், முதலமைச்சராக வந்து இன்றைக்கு இந்த ஆய்வு மய்யத்தை நான் தொடங்கி வைத்திருக்கிறேன். எப்போதும் பயனுள்ள பணிகளைப் பார்த்து, பார்த்து செய்யக்கூடியவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள். எனவே, திராவிடர் கழகத் தோழர்களையும், இதற்கு உறுதுணையாக இருக்கின்ற உங்கள் அத்தனைப் பேரையும் இந்த நேரத்தில் நான் மனதார வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன்.
நம்முடைய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுக்கு எனது இனமான வணக்கத்தை இந்த நேரத்தில் செலுத்துகிறேன்.

வைக்கம் விழாவினைச் சிறப்பாக நடத்தினோம்!

ஆசிரியர் அய்யா குறிப்பிட்டுச் சொன்னார், அண்மையில், கேரளா மாநிலத்தில் இருக்கக்கூடிய வைக்கம் போராட்டத்தை நினைவுபடுத்தி, வைக்கம் வீரராக வலம் வந்த தந்தை பெரியாருக்கு அங்குப் புதிய மாளிகையும், கம்பீரமான சிலையையும் திறந்தோம்; இளைய சமுதாயத்தினருக்குப் பயன்படக்கூடிய வகையில் ஒரு பெரிய நூலகமும், திறந்து வைக்கப்பட்டு வைக்கம் விழாவினைச் சிறப்பாக நடத்தினோம்.

இன்னும் என்னைப் பாராட்ட வேண்டும், வாழ்த்த வேண்டும் அதற்காக நான் காத்திருக்கிறேன்! அப்போது நான் உணர்ந்தது என்னவென்று கேட்டால், அய்யா ஆசிரியர் அவர்கள் அப்படியே மெய்மறந்து அந்த நிகழ்ச்சிக்கு வந்தார். வந்தது மட்டுமல்ல, என்னை மனதாரப் பாராட்டினார் – வாழ்த்தினார். இன்னும் என்னைப் பாராட்ட வேண்டும், வாழ்த்த வேண்டும் அதற்காக நான் காத்திருக்கிறேன். காத்திருக்கிறேன் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் சொல்லி, அய்யா புகழ் வாழ்க! வாழ்க! வாழ்க! என்று தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி, வணக்கம்.

(ஆசிரியர் உரை அடுத்த இதழில்….)