மணப்பாறை கோ.நடராசன்- வள்ளியம்மை இணையரின் மகள் சுமதிக்கும் மற்றும் அன்பழகன்- கல்யாணி இணையரின் மகன் வெற்றிச் செல்வனுக்கும் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வை மணப்பாறை செல்வலட்சுமி மகாலில் 2.3.2006 அன்று காலை நாம் நடத்தி வைத்து, சுயமரியாதைக் கருத்துகளை விளக்கிக் கூறிச் சிறப்புரையாற்றினோம்.
பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் உட்கோட்டை கிராமத்தில் தந்தை பெரியார் சிலையையும், பெரியார் படிப்பகத்தையும் எமது பெயரில் (கி.வீரமணி) அமைந்த நூலகத்தையும் 2.3.2006 அன்று வியாழன் மாலை 6 மணிக்கு மாவட்டத் தலைவர் சி.காமராஜ் தலைமையில் திறந்து வைத்தோம். பெரியார் பெருந்தொண்டர் உட்கோட்டை சி.பரமசிவம் வரவேற்புரையாற்றினார். ஜனதா மாணிக்கம் முன்னிலை வகித்தார்.
உட்கோட்டையில் தந்தை பெரியார் படிப்பகம், சிலை, நூலகம் ஆகியவற்றைத் திறந்து வைக்கும் ஆசிரியருடன்
கழகப் பொறுப்பாளர்கள்…
விழாவில் தந்தை பெரியார் படிப்பகம், நூலகம், சிலை ஆகியவை அமைந்த இடத்தையும் கட்டடத்தையும் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு அளித்து பொதுச் சொத்தாக்கிய உட்கோட்டை ஜனதா மாணிக்கம், அவரது சகோதரர் இராமலிங்கம் ஆகியோரைப் பாராட்டி சால்வை அணிவித்து சிறப்புச் செய்தோம்.
இந்நிகழ்விற்குமுன் மாலை 5 மணிக்கு இளைஞரணி சார்பில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் பெ.அர்ச்சுனன், சா.செல்வம் ஆகியோர் 108 அலகுகள் குத்தி வந்ததும், மற்றும் மகளிரணியினர் கடவுள் இல்லை என்று கூறிக் கைகளில் தீச்சட்டி ஏந்தி வந்ததும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திச் சிந்திக்க வைத்தது.
அமெரிக்காவில் பிரபல டாக்டர் திருஞானசம்பந்தம் – விஜயலட்சுமி (இவர் ரோட் அய்லண்டு மாநிலத்தில் வசிக்கிறார். குடந்தை சொந்த ஊர்) ஆகியோரின் மணிவிழா குடந்தையில் 3.3.2006 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. டாக்டர் சோம.இளங்கோவன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ராமலிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.
விழா மேடையில் பெரியார் பேருரையாளர் புலவர் ந.இராமநாதன் அவர்கள் எழுதிய பெரியாரியல் பாடங்கள் 2ஆம் தொகுதி நூல் வெளியிடப்பட்டது. ச.ராமலிங்கம் அவர்களை சிறப்பாசிரியராகக் கொண்டு வெளிவரும் செய்தி மடலான ‘சோழபுரத்தார்’ முதல் பிரதியை நாம் வெளியிட்டோம். முடிவில், முதல்வர் காளத்திநாதன் நன்றி கூறினார்.
பிற்பகல் 2 மணியளவில் ‘பவர்’ (Power) அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மகளிர் தொழில் முனைவோர் உயர்வு குறித்து பேராசிரியர் முனைவர் பர்வீன் சிறப்புரையாற்றினார்.
மாலையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இதில் டாக்டர் எஸ்.டி.சம்பந்தம், ஞானகிருட்டினமூர்த்தி, ச.இராமலிங்கம், திருச்சிற்றம்பலம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றினர்.
தி.மு.க. 9ஆவது மாநில மாநாடு, இளைஞரணி வெள்ளி விழா மாநாடு திருச்சி மாநகரில், அறிஞர் அண்ணாநகரில் பெரியார் திடலில் முதல் நாள் மாநாடு 3.3.2006 அன்று மாலை 3 மணிக்குத் தொடங்கியது.
மாலை 3 மணிக்கு நாகூர் ஹனிபா அவர்களின் இசை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்கியது. 7.15 மணிக்கு கலைஞர் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்.
அடுத்து, ‘நாஞ்சிலார்’ சுயமரியாதைச் சுடர் மாடத்தை நாம் திறந்துவைத்து, எழுச்சியுரையாற்றினோம். அய்ம்பது நிமிடங்கள் ஆற்றப்பட்ட அவ்வுரையை லட்சக்கணக்
கானோர் உணர்வுப் பெருக்குடன் கேட்டனர்.
மாநில மாநாட்டு மலரை தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறார் ஆசிரியர்
மாநாட்டு விழா மலரை கலைஞர் அவர்கள் வெளியிட, பேராசிரியர் அவர்களும் நானும் பெற்றுக்கொண்டோம்.
அதனைத் தொடர்ந்து தி.முக. துணைப் பொதுச்செயலாளரும், இளைஞர் அணிச் செயலாளருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுச்சிமிகு தலைமையுரை ஆற்றினார்.
எண்ணூர் அன்னை சிவகாமி நகர் கழகத்தலைவர் வெ.மு. மோகன்- விஜயா இணையரின் மகள் மோ.சத்யா மற்றும் பா.ராமதாஸ்- பங்கஜவள்ளி இணையரின் மகன் நரசிம்ம வல்லவன் ஆகியோரின் இணையேற்பு விழா வரவேற்பு நிகழ்வு எண்ணூர் சிவகாமி நகரில் 5.3.2006 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. வல்லபாய் பட்டேல் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ப.கவுதமன் தலைமை உரையாற்றினார். அ.குணசீலன், வி.குப்பன், பிரேம்குமார், ரகுநாதன், க.பார்வதி, பி.மகாலட்சுமி, இனமான நடிகர் மு.அ.கிரிதரன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினர்.
நிறைவாக நாம் மணமக்களைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கிப் பேசுகையில் ‘‘தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் நாங்கள். அந்த வகையில் இங்கே மணமக்கள் மிகப் படித்தவர்களாக உள்ளனர். இதற்குக் காரணம் தந்தை பெரியார், கல்வி வள்ளல் காமராசர் ஆகியோர்தான்’’ எனக் குறிப்பிட்டோம்.
புதுவையில் கழகத்திற்குப் புதிதாகப் பணிமனை வாங்கப்பட்டது. இதற்கான ஆவணங்களை புதுவை திராவிடர் கழகத் தலைவர் வ.சு.சம்பந்தம், செயலாளர் இர.இராசு, புதுவை மாநில மேனாள் அமைச்சரும் சி.பி.அய். கட்சியின் மாநிலப் பொறுப்பாளருமான விசுவநாதன் மற்றும் தோழர்கள் 6.3.2006 அன்று சென்னையில் எம்மைச் சந்தித்து ஒப்படைத்தனர்.
புதுவையில் கழகத்திற்கு வாங்கப்பட்ட பணிமனையின் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளும் ஆசிரியர்.
சென்னை பூந்தமல்லி ராஜா நகரைச் சேர்ந்த சண்முகம் – கமலா இணையரின் செல்வன் வடிவேல் மற்றும் குன்றத்தூரைச் சேர்ந்த நாராயண மேனன் – தங்கமணி இணையரின் மகள் இலட்சுமி ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பில் சென்னை பெரியார் திடலில் 6.3.2006 அன்று நண்பகல் 1.30 மணியளவில் எமது தலைமையில் நடைபெற்றது.
மணப்பெண் மணமுறிவு பெற்றவர். 7 வயது குழந்தைக்குத் தாய். இது ஒரு எடுத்துக்காட்டான ஜாதி மறுப்புத் திருமணமாகும்.
மணவிழாவில், கழக மணமகள் உறவினர்களான மாந்தநேயன், குழல், குமார் மற்றும் உறவினர்களும் மணமகன் உறவினர்களான இசை இன்பன், பெரியார் மாணாக்கன், செல்வி, மு.பசும்பொன், கற்பகம், மாட்சி. இறைவி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோரை உள்ளடக்கி அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கங்களின் மூன்றாம் அகில இந்திய மாநாடு புதுடில்லி மாவ்லங்கர் அரங்கத்தில் மார்ச் 8, 9 ஆகிய நாள்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்க மாநாட்டில்
உரையாற்றுகிறார் ஆசிரியர்
மாநாட்டின் தொடக்க விழா, 8.3.2006 மாலை 6 மணிக்குத் தொடங்கியது பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி அனைவரையும் வரவேற்றதுடன், கூட்டமைப்பின் கோரிக்கை
களையும் விவரித்தார். கூட்டமைப்பின் தலைவரும் தெலுங்கு தேசக் கட்சியின் நாடாளுமன்றத் தலைவருமான திரு.கே.எர்ரான் நாயுடு தலைமையேற்று உரை நிகழ்த்தினார். கூட்டமைப்பின் காப்பாளரும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளருமான திரு.வே.நாராயணசாமி எம்.பி. (புதுவை மேனாள் முதலமைச்சர்)அவர்கள் மாநாட்டில் தொடக்க உரை நிகழ்த்தினார். மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாசு, ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராம்கிருபால் யாதவ், அலோக் மேத்தா, எஸ்.கே.கார்வேந்தன், டாக்டர் ஆர்.செந்தில், பேராசிரியர் மு.ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். நீதியரசர் பி.எஸ்.ஏ.சாமி, மத்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் டாக்டர் பாபுராவ் வர்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். நான் இறுதியாக சிறப்புரையாற்றினேன். பீகார் மாநிலம் ரவீந்திரராம் நன்றியுரை ஆற்றினார்.
அன்னை மணியம்மையார் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று படத்திற்கு கழக மகளிரணியினர் புடை சூழ
மாலை அணிவித்து மரியாதை செய்கிறார் ஆசிரியர்.
இரண்டாம் நாள் மாநாடு 9.3.2006 காலை 11 மணிக்குப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. பிற்பகல் 3.00 மணிக்கு மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்றது. செயல் தலைவர் எம்.கங்கையன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், கே.வி.தங்கபாலு, வி.அனுமந்தராவ் ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். குருசேத்திரா பல்கலைக்கழக வரலாற்றுத் துறை மேனாள் பேராசிரியர் கே.சி. யாதவ், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் தினேஷ் சிங், பூர்வாஞ்சல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பதஞ்சலி மத்திய தொழிலாளர் ஆணையக் குழுவின் தலைவர் காம்பீர் யாதவ் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.
தேசிய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் திரு.சந்திரஜித் யாதவ் மாநாட்டின் நிறைவுரை ஆற்றினார். ரயில்வே சங்கத்தின் தலைவர் எம்.நடராசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. நாச்சியப்பன் குழு அறிக்கையை மத்திய அரசு முழுவதுமாக ஏற்றுக்கொண்டு அதன் பரிந்துரைகளான
அ. பதவி உயர்வில் இடஒதுக்கீடு
ஆ.கிரிமிலேயர் முறை முற்றிலுமாக நீக்குதல்.
இ. அய்ம்பது விழுக்காட்டுக்குமேல் இட ஒதுக்கீடு கூடாது எனும் தடை நீக்குதல்.
ஈ. அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீடு போன்றவை நிறைவேற்றப்பட வேண்டும்.
2. மண்டல் குழுப் பரிந்துரைகளை முழுவதுமாக நிறைவேற்றி, தனியார் துறையில் இடஒதுக்கீடு, நீதித்துறையில் இடஒதுக்கீடு அளித்திட வேண்டும்.
3. மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கென தனியார் அமைச்சரவை உருவாக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோரின் நலத் திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
4. பிற்படுத்தப்பட்டோருக்கு நாடாளுமன்றக் குழு.
5. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு உரிய அதிகாரம்.
மேற்குறிப்பிட்ட தீர்மானங்கள் மத்திய அரசினால் உடனடியாக நிறைவேற்றிட கூட்டமைப்பின் 3ஆம் மாநாடு வலியுறுத்தியது.
மாநாட்டில், அனைத்து மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு விழா நிகழ்ச்சிகளில் உணர்வோடு பங்கேற்றனர்.
அன்னை மணியம்மையார் அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியில் 10.3.2006 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
விழாவில் நாம் கலந்துகொண்டு மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினோம்.
திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் 10.3.2006 வெள்ளியன்று காலை 11 மணியளவில் தஞ்சாவூர் கவிதா மன்றத்தில் கழக செயலவைத் தலைவர் மானமிகு.ராசகிரி கோ. தங்கராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வழக்குரைஞர் அமர்சிங் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் இயக்கச் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். பின்னர், பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஒட்டியும் நாட்டு நடப்பை விளக்கியும் நாம் கருத்துரையாற்றினோம்
மாலையில் பொதுக்குழு தீர்மான விளக்கக்கூட்டம் நடைபெற்றது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் (மே 8, 2006) தி.மு.க. அணியை ஆதரித்து வெற்றி பெறச் செய்வது என்றும், தீண்டாமைக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தியும், மேலும் உள்ளிட்ட பல முக்கியத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தஞ்சையில் புகழ்பெற்ற டாக்டர் நரேந்திரன் அவர்களின் மகள் டாக்டர் பத்மபிரியா, டாக்டர் க.கார்த்திகேயன் ஆகியோரின் இணையேற்பு நிகழ்வு தஞ்சாவூரில் 10.3.2006 அன்று நடைபெற்றது. மணவிழா நிகழ்ச்சியில் எனது இணையர் மோகனா அவர்களுடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
பெரியார் பெருந்தொண்டர் கோ.முருகேசனார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆத்தூரில், 11.3.2006 அன்று நடைபெற்றது. கடம்பூர் பரமசிவம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நாம் கலந்துகொண்டு கோ.முருகேசனார் படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றுகையில், தொண்டர்களுக்கு கோ.முருகேசனார் அவர்கள்
உதவியும் ஊக்கமும் செய்யக்கூடிய மனப்பான்மையை விளக்கிக் கூறினோம். கோ.முருகசனார் நினைவு பெரியார் படிப்பகத்தை ‘நக்கீரன்’ இதழ் ஆசிரியர் கோபால் திறந்து வைத்து உரையாற்றினார்.
திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் 24ஆம் ஆண்டு விழா 11.3.2006 அன்று மாலை 5.30 மணியளவில் எமது தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் முதன்மையர் பேரா.முனைவர் இரா.செந்தாமரை அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கல்லூரியின் சாதனைகளை ஆண்டு அறிக்கையின் மூலம் விளக்கினார். நாம் தலைமையுரையாற்றினோம்.
பெரியார் பெருந்தொண்டர் கோ.முருகேசனார் படத்தைத் திறந்து வைத்து மரியாதை செலுத்துகிறார் ஆசிரியர் !
காது, மூக்கு, தொண்டை மருத்துவத்தில் தலைசிறந்த மருத்துவராக மத்திய அரசால் பத்மசிறீ விருது பெற்ற டாக்டர் மோகன் காமேஸ்வரன் அவர்களைக் கவுரவிக்கும் விதமாக நாம் அவருக்குப் பொன்னாடையும் நினைவுப் பரிசும் வழங்கி சிறப்புச் செய்தோம்.
டாக்டர் மோகன் காமேஸ்வரன் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்குகிறார் ஆசிரியர்.
இவ்விழாவிற்கு சிறப்புச் செய்யும் வகையில் மேனாள் மாணவர் சங்க உள்ளூர்க் கிளையை நாம் தொடங்கி வைத்தோம். தேசிய மற்றும் பன்னாட்டுக் கிளைகளை முறையே சிறப்பு விருந்தினர்கள் டாக்டர் மோகன் காமேஸ்வரன், டாக்டர் சோம. இளங்கோவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆண்கள் விடுதியை நாம் திறந்து வைத்தோம். முடிவில் பேரா.வீ.லோகநாதன் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.