வைக்கம் போராட்டம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான தொடக்கப் போர். அப்போரைக் கேரள மக்களின் தலைவர்கள் தொடங்கினாலும் அதைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை வந்தபோது, உரிய தலைவர் பெரியார்தான் என்பதை உணர்ந்த அத்தலைவர்கள் தந்தை பெரியாரை அழைத்தனர்.
தமிழகக் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருந்த தந்தை பெரியார் அவர்கள், உடனடியாக வைக்கம் சென்று தொய்வடைந்த போராட்டத்தைத் தூக்கி நிறுத்தி எழுச்சியுடன் நடத்தினார். அவரது பிரச்சாரம் கேரள மக்களை விழிப்பும் எழுச்சியும் கொள்ளச் செய்தது.
கேரள அரசு பெரியாரின் புரட்சியை ஒடுக்க கடும் சிறைத் தண்டனை விதித்தது. என்றாலும் தந்தை பெரியார் போராட்டத்தில் வென்றார். ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமை மறுக்கப்பட்ட வீதிகளில் நடக்க அனுமதி கிடைத்தது. ஆதிக்கவாதிகளின் அடக்குமுறை அடித்து நொறுக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் எழுச்சிமிக்க நிகழ்வாக அதைக் கொண்டாடினர்.
வடஇந்தியாவில் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைப் போரை நடத்த பெரியாரின் இப்போராட்டம் ஓர் உந்து சக்தியாக அமைந்தது என்று அம்பேத்கர் அவர்களே கூறினார்.
ராஜாஜி தடுத்தும், காந்தியார் பின்வாங்கியும் களத்தில் வீறுகொண்டு நின்று உரிமைப் போரில் வெற்றியைப் பெற்றார் பெரியார். அதனால் ‘வைக்கம் வீரர்’ என்ற பெருமையும் பெற்றார்.
இந்த வெற்றி எளிதில் கிடைத்துவிடவில்லை. பெரியாரின் போராட்டத்தின் விளைவாய் வந்தது. வீதிவீதியாய் அனல்பறக்கும் பெரியாரின் பிரச்சாரங்கள் மக்களை விழித்தெழச் செய்தன. இருமுறை கொடுஞ்சிறைத் தண்டனையை அனுபவித்தார்.தன் நண்பரான திருவிதாங்கூர் மகாராஜாவை எதிர்த்தே போராட்டம் நடத்தினார். போராட்டத்தைக் கைவிட்டு தமிழ்நாட்டுக்கு வரும்படி பெரியாரை வற்புறுத்திய நிலையிலும் அதை மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்.
சில கயவர்கள் கற்பிப்பது போல போராட்டத்தில் இறுதியாகச் சென்று ஒட்டிக்கொண்டவர் அல்லர் பெரியார். அது உண்மைக்கு மாறான செய்தி. போராட்டத்தைத் தொடங்கியவர்கள் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், இனி போராட்டத்தை முன்னெடுக்க ஆளே இல்லையென்பதால் போராட்டத்தைக் கைவிடும் நிலையில், காந்தியாரின் உதவியை நாடிய நிலையில், அவரும் கைவிரித்துவிட்ட சூழலில், பெரியாரால் மட்டுமே போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியும் என்று உணர்ந்து, பெரியாருக்குக் கடிதம் எழுத, அதையேற்று போராட்டத்திற்கு முழுப் பொறுப்பேற்று போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியைப் பெற 94 நாள்கள் சிறைத் தண்டனையும் பெற்றார். எனவேதான் அவரை வைக்கம் வீரர் என்று அழைத்தார் திரு.வி.க.
இந்த வெற்றியைப் பெற்று 100 ஆண்டுகள் கடந்த நிலையில் 12.12.2024 அன்று வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர், கேரள முதலமைச்சர் மற்றும் நாமும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினோம். இந்த விழாவும் நாங்கள் மூவரும் ஆற்றிய உரைகளும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவையாக அமைந்தன.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரை :
‘‘தந்தை பெரியார் நினைவகம், நூலகங்களோடு பூத்துக் குலுங்கி காய்த்துக் கனிந்திருக் கின்ற இந்த அருமையான நிகழ்விற்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய மாண்புமிகு கேரள முதலமைச்சர், ‘மார்க்சிஸ்ட் மாடல்’ முதலமைச்சர், பெருமைக்கும், சிறப்புக்கும் உரிய மாண்பமை பினராயி விஜயன் அவர்களும், இந்த வெற்றி விழாவை உலக வரலாற்றில் பதிவு செய்வதற்காகஎல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்து, நடத்தி திராவிட ஆட்சி வரலாற்றின் மகுடத்தில், ஒரு முத்தாகப் பொதித்திருக்கின்ற ‘திராவிட மாடல்’ அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், நாமும் வைக்கம் வெற்றி விழாவினுடைய மகிழ்ச்சியால் உந்தப்பட்டு, உங்கள் முன்னால் நிற்கின்றோம்.
ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு ஆகியவைதான் நம்முடைய களம் என்னும் சிந்தனை நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கின்றது!
இரண்டு அரசுகளுடைய ஒத்துழைப்பும் மலர்ந்து, ஒரு நூறாண்டு அல்ல பன்னூறாண்டுகள் பேசக்கூடிய வரலாறாக அமையக்கூடிய இந்த வைக்கம் போராட்ட வெற்றி விழா நிகழ்ச்சிக்கு நாங்கள் வந்திருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரியதாகும்.
நூறாண்டுகளுக்கு முன்பாக, நம்மைப் போன்றவர்கள் பிறக்காத காலத்தில், தந்தை பெரியார் அவர்கள் இதே இடத்தில்தான், ஜாதியை ஒழிக்கவேண்டும் என்பதற்காகப் போராடினார். கேரளத்துத் தோழர்கள் பெருமைக்குரிய டி.கே.மாதவன் அவர்களுடைய முன்னெடுப்பால், கே.பி.கேசவமேனன், குரூர் நீலகண்டன் நம்பூதிரி அவர்கள், ஜார்ஜ் ஜோசப் அவர்கள் எல்லாம் இணைந்து நடத்திய அந்தப் போராட்டத்தை, அன்றைய அரசு அடக்கியது, ஒடுக்கியது, சிறைச்சாலைக்கு அனுப்பியது.
சமூகநீதி என்றைக்கும் வெல்லும், ஒருபோதும் சமூகநீதியை யாராலும் தோற்கடிக்க முடியாது! இதைக் காட்டும் வகையில் பெரியார் அவர்கள் போராட்டத்திற்குத் தலைமையேற்று நீண்ட பெரும் போராட்டமாக நடத்தி வெற்றி பெற்றார்.
நமது மக்களின்மீது திணிக்கப்பட்ட ஜாதி தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து நீங்கள் செய்த முயற்சிகளுக்கு நன்றி சொல்ல இந்த விழாவிற்கு நாங்கள் இங்கே வந்துள்ளோம்.
நமது இயக்கம், பெரியாரின் இயக்கம், திராவிட இயக்கம், தம் வழிகளில் மனித நேயத்தை வளர்க்கவும், மனிதத்தன்மை அற்ற நிலையிலிருந்து (dehumanize), மீண்டும் மனிதத் தன்மைக்குக் (rehumanize) கொண்டுவரப் போராடுகிறது. அதன் விளைவுதான் இந்த மாபெரும் இயக்கத்தின் வெற்றி.
இந்தப் போராட்டம் பரவ வேண்டும், தொடர வேண்டும், அதுவே நமது செய்தி! ஜாதி ஒழிப்புக்காகவும் தீண்டாமைக்கு எதிராகவும் பல போராட்டங்களில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். ஜாதிக் கொடுமைகளை எதிர்த்து முறியடிப்போம் ஜாதியை அழித்தொழிப்போம்!
அன்று ஜாதியின் கொடுமை வெளிப்படை யாகத் தெரிந்தது (patent); தொடக்கூடாது, பார்க்கக் கூடாது, நெருங்கக் கூடாது என்று வெளிப்படையாக ஜாதி வெறியுடன் நடந்துகொண்டார்கள். ஆனால், இன்று அவை மறைமுகமாக (latent) நடக்கின்றன. புரிந்து கொள்ள முடியாத அளவில் பாகுபாடு காட்டுகிறார்கள். ஒரு சில இடங்களில் நேரடி யாகவும் கொடுமைகள் தலைகாட்டுகின்றன.
எந்த வடிவத்தில் ஜாதிக் கொடுமைகள் நிகழ்ந்தாலும் அதை நாம் எதிர்த்து முறியடிப் போம். ஜாதியை அழித்தொழிப்போம்!
நாம் இங்கு போராட வந்துள்ளோம். இன்று நாம் அறைகூவல் விடுக்கிறோம். கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளையும் சார்ந்த இளைஞர்களுக்கு நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
‘திராவிட மாடல்’, ‘மார்க்சிய மாடல்’ ‘காந்திய மாடல்!’ எல்லாம் சேர்ந்து இங்கே சத்தியாக்கிரகம் எப்படி பயன்பட்டு இருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறீர்கள்! இந்தக் கட்டுமானம் இந்தச் சிந்தனைகளின் வெற்றியின் அடையாளம்.
எனவே, எங்களுடைய தலைதாழ்ந்த வணக்கத்தை உலகெங்கும் இருக்கக்கூடிய பெரியாரிஸ்டுகள் மட்டுமல்ல, பகுத்தறிவாளர்கள் மட்டுமல்ல, நாத்திகர்கள் மட்டுமல்ல, மனிதாபிமானிகள், சமூகநீதியாளர்கள் அனைவரின் சார்பாகத் தெரிவிக்க விரும்புகிறோம்.
தோழர்களே, அனைவருக்கும் ஒரே ஒரு விண்ணப்பம்தான்! ஜாதி ஒழிப்பு என்ற பொதுவான இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். பெரியார் தனது 94ஆம் வயதில் இறுதியாக நடத்திய ‘‘தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு’’ மாநாட்டில் பேசும்போது, அனைத்து அரசுகளுக்கும் ஓர் ஆலோசனையை வேண்டுகோளாக விடுத்தார்: அது எந்த அரசாக இருந்தாலும், எந்த வண்ணமாக இருந்தாலும், ஜாதியை அரசமைப்புச் சட்டத்தின்படியே ஒழித்துவிட வேண்டும். அதை நம்முடைய அரசுகளுக்கு வேண்டுகோளாக நான் முன் வைக்கிறேன்’’ என்றார்.
இது பெரியாரின் வேண்டுகோள், பெரியாரின் கோரிக்கை; பெரியாரின் விண்ணப்பம்.
‘‘அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 17-இன், படி ‘தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று இருக்கிறது. அதில் ‘தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது’ என்பதற்குப் பதிலாக, ‘ஜாதி ஒழிக்கப்பட்டுவிட்டது’ என்று மாற்றப்பட வேண்டும். சட்டத்தின்படியே ஜாதி ஒழிக்கப்பட்டாக வேண்டும். அதற்கு நாம் போராட வேண்டும்.’’
ஏனெனில், ஜாதி என்பது தான் நிரந்தரத் தீமை. தீண்டாமை என்பது ஜாதியின் விளைவு.
ஜாதியை ஒழித்துவிட்டால் தீண்டாமை தானாகப் போய்விடும். வேர் அறுந்துவிட்டால், பிறகு தானாகக் கிளை முறிந்துவிடும். ஜாதிதான் மூலப் பிரச்சினை. சிறப்புக்குரிய பங்கேற்பாளர்களே, இதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கும் இந்தக் கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என்று நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
வாருங்கள், ஜாதியற்ற உலகத்தை, புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். அதுதான் நாம் ஏற்கின்ற உறுதிமொழி. அதுவே நமது சிந்தனை, அதை நோக்கி, நாம் செல்ல வேண்டும். நாம் பல களங்களில் வெற்றி பெற்றுள்ளோம், ஆனால், போர் இன்னும் முற்றுப் பெறவில்லை. போர்வீரர்களாக உறுதியேற்போம். அதற்காகவே இந்த மேடை. அதுவே நமது உறுதிமொழி. அனைவருக்கும் நன்றி!
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களின் உரைசமூக சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர் பெரியார். கேரள மக்கள் நாராயணரை ‘குரு’ என்று அழைப்பதுபோல், தமிழ்நாடு மக்கள் ஈ.வெ.ராவை ‘பெரியார்’ என்று அழைக்கின்றனர். ‘பெரிய’ ஆள் என்ற சொல்தான் பெரியாராக மாறியது. சுதந்திரம் மற்றும் சமூக சீர்திருத்தச் சிந்தனையாளரான பெரியார், உழைப்பாளி வர்க்கத்தினர், கம்யூனிஸ்ட் அமைப்பினருடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தார். எம்.சிங்காரவேலு, ப.ஜீவானந்தம் ஆகியோருக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்தார்.
ஜாதி, மத, நிற வேறுபாடுகளை ஒழிப்பதற்கான போராட்டம்!
கடந்த 1952 இல் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிக்கு பெரியாரின் பங்களிப்பு நாம் அனைவரும் அறிந்த விடயம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உருவானபோது, பொலிட்பீரோ உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட பி.ராமமூர்த்தியின் திருமணத்துக்குத் தலைமை தாங்கியது பெரியார்தான். அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், பெரியாருக்கும் நெருங்கிய தோழமை இருந்தது. அவர் தனது சீர்திருத்தக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காகத்தான் ‘குடிஅரசு’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். கடந்த 1970 இல் திராவிடர் கழகத்தால் தொடங்கப்பட்ட ‘உண்மை’ என்ற பத்திரிகையில், பெரியார், ‘ஜனநாயக நாட்டில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாரும் இல்லை, அனைவரும் சமமே’ என்று எழுதினார். ஜாதி, மத, நிற வேறுபாடுகளை ஒழிப்பதற்கான போராட்டமே ‘வைக்கம் போராட்டம்’. அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே ‘சமதர்மம்’ என்று பெரியார் முழங்கினார்.
வைக்கம் கோயிலின் சுற்றுப்பாதை தடை விலக்கப்பட்டது மலையாள மக்களுக்கு மட்டுமே. ஆனால், இதை மலையாள மக்களுக்கான, திருவிதாங்கூருக்கான பிரச்சினையாகக் கருதாமல் ஒரு நாட்டின் பிரச்சினையாகக் கருதிப் போராடியவர்கள் பெரியார் மற்றும் இதர போராட்டவாதிகள். தேசத் தலைவர்கள் மற்றும் சீக்கியர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
எனவே, எல்லை தாண்டிய சகோதரத்துவமும், ஒத்துழைப்பும் இந்தப் போராட்டத்தில் நம்மால் பார்க்க முடிகிறது. அந்த மனநிலைமையை கேரளாவும், தமிழ்நாடும் இன்றும் தொடர்ந்து வருகின்றன. தமிழ்நாட்டின் பிரச்சினையில் கேரளாவும், கேரளாவின் பிரச்சினையில் தமிழ்நாடும் ஒன்றுக்கொன்று கைத்தாங்கலாகச் செயல்படுகின்றன. சகோதரத்துவம், ஒத்துழைப்புக்கு எடுத்துக்காட்டாக இந்த மாநிலங்கள் உள்ளன. இதைப் பிற மாநிலங்கள் பின்பற்றினாலும், தனிப்பட்ட சுயமரியாதையும் காப்பாற்றப்பட வேண்டும். தமிழ்நாடும், கேரளாவும் இப்படித்தான் நடந்து கொள்கின்றன. இதை மேலும் வலிமையுடன் கொண்டு செல்ல இரு மாநிலங்களாலும் முடியும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை :
‘‘இன்று வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்!
எந்த வைக்கம் நகருக்குள் நுழையக் கூடாது என்று தந்தை பெரியார் தடுக்கப்பட்டாரோ – எந்த வைக்கம் நகரில் கைது செய்யப்பட்டாரோ, அதே வைக்கம் நகரில் இன்று மாபெரும் நினைவகத்தை எழுப்பி, தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளின் சார்பில் மாபெரும் விழாவை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
தந்தை பெரியாருக்கு எதிராக யாகம் நடந்த ஊரில், இன்றைக்கு புகழ்மாலை சூட்டியிருக்கக்கூடிய நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதுதான் பெரியாரின் வெற்றி! பெரியாரியத்
தின் வெற்றி! திராவிட இயக்கத்தின் வெற்றி!
அந்த வகையில் சமூகநீதியின் வரலாற்றிலும், இந்த நாள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்!
பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களுடைய முன்னிலையில், பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான நான், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்புடன் இந்த நினைவகத்தைத் திறந்து வைப்பதில், எனக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய வரலாற்றுப் பெருமையாக அமைந்திருக்கிறது!
இந்த நேரத்தில், என் நெஞ்சின் அடி ஆழத்தில் ஒரு சின்ன வருத்தம் ஏற்பட்டிருக்கிறது. அது என்னவென்றால், இந்தக் காட்சியைக் காண நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் நம்மிடையே இல்லையே என்ற எண்ணம்தான் அந்த வருத்தத்திற்குக் காரணம்!
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் நாள், தோள்சீலைப் போராட்டத்தோடு 200 ஆம் ஆண்டு விழா நாகர்கோயிலில் நடந்தது. நானும், சகாவு பினராயி விஜயன் அவர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். வைக்கம் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று நான் குறிப்பிட்டுப் பேசினேன்.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி கேரள அரசின் சார்பில் மிகச் சிறப்பான விழாவை ஏற்பாடு செய்து, என்னையும் அழைத்திருந்தார் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள். இப்போது எங்களுடைய அழைப்பை ஏற்று வருகை தந்திருக்கிறார்.
இந்திய அளவில் ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கக் கூடியவர் பினராயி விஜயன் அவர்கள், பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் கட்டுவதற்கான அனுமதியைத் தந்தது முதல் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் அவர் உறுதுணையாக இருந்திருக்கிறார்.
அவருக்கும், கேரள அரசுக்கும், கேரள அமைச்சர் பெருமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் என்னுடைய அன்பையும், மரியாதையும், நன்றியையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கேரளம் இயற்கை எழில் கொஞ்சக்கூடிய சிறப்புக்குரிய ஒரு சுற்றுலாத் தலம். கேரளா கல்வியிலும், அரசியல் விழிப்புணர்ச்சியிலும் முன்னேறி இருக்கக்கூடிய மாநிலம். அப்படிப்பட்ட மண்ணில் சமூக அரசியல் போராட்ட வெற்றியின் சின்னமாக இந்த வைக்கம் நினைவகம் உருவாகி இருக்கிறது!
கேரளாவிற்கு வரும் அனைவரும் கட்டாயம் இந்த வைக்கம் நினைவகத்தைப் பார்த்து, ஒடுக்கப்பட்ட மக்கள், அடிமை விலங்கை
உடைத்த வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்!
முதலாவது வைக்கம் விருது வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு கொண்டாட்ட அறிவிப்புகளில் பெரும்பாலன
வற்றை நிறைவேற்றியிருக்கிறோம். அதோடு ஒரு பகுதியாக கருநாடக மாநிலத்தின் மொழி உணர்வுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் போராடி எழுத்துலகில் சாதனை படைத்த தேவநூர மஹாதேவா அவர்களுக்கு முதலாவது வைக்கம் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல, வைக்கம் போராட்ட நினைவகங்களையும் மிக விரைவில் வெளியிட இருக்கிறோம்.
நம்முடைய வெற்றியின் சின்னம்!
அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாரின் சிறப்பைப் பற்றிச் சொல்லும்போது குறிப்பிட்டதை நான் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.
‘‘ஒருவர் புறப்பட்டு ஓயாமல் உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாமல் பணியாற்றி, ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும் – எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றி பெற்ற வரலாறு இங்கு இல்லாமல் வேறு எங்கேயும் இருந்ததில்லை” என்று சொன்னார்.
அறிஞர் அண்ணா சொன்னதைப் போல, இது நம்முடைய வெற்றியின் சின்னம்! இனி அடைய இருக்கக்கூடிய வெற்றிகளுக்கும்
வழிகாட்டுகின்ற சின்னம்!
1924 ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் தொடங்கிய இந்த வைக்கம் போராட்டம், மகாதேவர் கோயில் தெருவில் அனைத்து
சமூகத்தவரும் நடந்து செல்ல வழிவகுத்த போராட்டம்!
மனிதர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்திய சமூகக் கொடுமையை எதிர்த்து நடந்த அந்தப் போராட்டத்தில், வரிசையாக கேரளத் தலைவர்கள் அனைவரும் கைதானார்கள். இங்கிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த தந்தை பெரியார் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். அந்தக் கடிதம் கிடைத்ததும், தந்தை பெரியார் அவர்கள் ஏப்ரல் 13 ஆம் நாள் இங்கு வந்தார்.
ஏதோ ஒருநாள் வந்துவிட்டு, அடையாளப் போராட்டம் நடத்திக் கொண்டு பெரியார் திரும்பிப் போகவில்லை. கிட்டத்தட்ட அய்ந்து மாத காலம் இங்கேயே தங்கி போராட்டத்தை நடத்தினார். இரண்டு முறை அவரைக் கைது செய்து, சிறையில் அடைத்தார்கள்.
‘பந்தனத்தில் நின்னு’ என்னும் புத்தகத்தில்…
அந்தச் சிறைவாசத்தில், அரசியல் கைதிகளுக்கான மரியாதை தரப்படாமல் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார். இதை கேரளத் தலைவர்களில் ஒருவரான கே.பி.கேசவமேனன் அவர்கள் ‘பந்தனத்தில் நின்னு’ என்னும் புத்தகத்தில் அதைப் பதிவு செய்திருக்கிறார்.
இப்படி, இறுதிவரைக்கும் போராடினார் தந்தை பெரியார்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடந்தபோது, காந்தியாரோடு இருக்கிறார் பெரியார்.
பெரியாரிடம் ஆலோசனை செய்து விட்டுதான் திருவிதாங்கூர் ராணியை காந்தியார் சந்திக்கிறார். கோயிலின் மூன்று பக்கம் முதலில் திறந்து விடப்படுகிறது. இது தொடர்பான வெற்றி விழா பொதுக்கூட்டத்திற்குப் பெரியார் தலைமை தாங்குகிறார்.
வைக்கம் போராட்ட வெற்றி விழா 29.11.1925 இல் நடந்தபோது, அதில் கலந்துகொள்ள பெரியாருக்கும், நாகம்மையாருக்கும் அழைப்பு வந்திருந்தது. தலைமை வகிக்கச் சொன்னார்கள். தலைமை வகிக்க மறுத்து, அதற்குப் பிறகு தந்தை பெரியார் அவர்கள் வாழ்த்திப் பேசினார். ‘‘உரிமையை மறுத்த அரசாங்கமே இப்போது நம்மை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு செல்கிறது. இதுதான் சத்தியாகிரகத்திற்கு ஏற்பட்ட மகிமை’’ என்று தந்தை பெரியார் பேசினார். பலாத்காரப் போராட்டம் நடத்தியிருந்தால்கூட இந்த வெற்றியை இவ்வளவு சீக்கிரம் பெற்றிருக்க மாட்டோம் என்று பேசினார் தந்தை பெரியார்.
இந்த வீரம் மிகுந்த போரில் மறக்க முடியாத இரண்டு பெண்கள், பெரியாரின் மனைவி அம்மையார் நாகம்மாளும், அவருடைய தங்கை அம்மையார் கண்ணம்மாளும்! வைக்கம் போராட்டத்தில் வெற்றிகண்ட தந்தை பெரியாரை அனைவரும் பாராட்டி
னார்கள்.
தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள், வைக்கம் வீரர் என்று பெரியாரைப் போற்றினார்!
மூதறிஞர் ராஜாஜி அவர்கள், தீரரைப் போற்றுகிறது தமிழ்நாடு என்று எழுதினார்! இதையெல்லாம்விட புரட்சியாளர் அம்பேத்கர் எழுதியது மிக முக்கியமானது. ‘‘இந்தச் சமூக அமைப்புக்கு எதிராக, தீண்டத்தகாத மக்கள் பொதுச் சாலையைப் பயன்படுத்தும் உரிமையைப் பெற 1924 இல் திருவிதாங்கூர் மாநிலத்தில் எடுத்த முயற்சி மிக முக்கியமானது” என்று புரட்சியாளர் அம்பேத்கர் குறிப்பிட்டார். இதற்குப் பிறகுதான் ‘மகத்’ போராட்டத்தைத் தொடங்கினார் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்.
”திரு. ராமசாமி நாயக்கர் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். தன் சிந்தனையிலும், செயலிலும் காந்தியத்தைக் கொண்டிருந்தாலும், சமூக மாற்றமே இந்தியாவுக்கு முதன்மையானது என்று உறுதியாக நம்புகிறவர்” என்று 1928 ஆம் ஆண்டு பாராட்டியவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்.
சமூகநீதிப் போராட்டங்களுக்கான
தொடக்கப் புள்ளி!
‘வைக்கம் போராட்டம்’ என்பது, கேரளத்திற்கான போராட்டம் மட்டுமல்ல; இந்தியாவில் தொடங்கிய பல்வேறு சமூகநீதிப் போராட்டங்களுக்கான தொடக்கப் புள்ளி!
அமராவதி கோயில் நுழைவு, பார்வதி கோயில் நுழைவு, நாசிக் நகரில் இருக்கும் காலாராம் கோயில் நுழைவு போன்றவற்றிற்குப் புரட்சியாளர் அம்பேத்கர் முயற்சிகள் காரணம் என்றால், தமிழ்நாட்டில் சுசீந்திரம் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், திருச்சி மலைக்கோட்டை கோயில், மயிலாடுதுறை கோயில், சென்னை திரு வல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், ஈரோடு ஈஸ்வரன் கோயில் நுழைவுக்கு தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும்தான் காரணம்.
ஈரோடு ஈஸ்வரன் கோவிலுக்குள் 1929 ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்ததிலிருந்து, தமிழ்நாட்டின் பல கோயில்களுக்குள் சுயமரியாதை இயக்கத்துக்காரர்கள் நுழைய முடிவு செய்தார்கள். இந்த நிலையில்தான், 1939 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு, ‘கோயிலுக்குள் வருகிறவர்கள் அனைவரையும் அரசு பாதுகாக்கும்’ என்று உத்தரவாதம் பெறப்பட்டது.
கேரள சமூகச் சீர்திருத்தவாதிகளான டி.கே.மாதவன், கே.பி.கேசவ மேனன், கே.கேளப்பன், மன்னத்து பத்மநாபன், ஜார்ஜ் ஜோசப், டாக்டர் பல்ப்பு, பத்மநாபன் போன்றவர்களும், தமிழ்நாட்டு சமூகச் சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார், கோவை அய்யாமுத்து, எம்பெருமாள் நாயுடு, தங்கப்பெருமாள், நாகம்மாள், கண்ணம்மாள் போன்றோரும் ஒன்றாகச் சேர்ந்து நடத்திய போராட்டம்தான் வைக்கம் போராட்டம். தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்டவர்கள் பட்டியல் மிக நீளமானது. தமிழ்நாட்டில் இதற்காக நிதி கொடுத்தவர்கள் அதிகம்.
மாபெரும் எடுத்துக்காட்டு
வைக்கம் போராட்டம்!
சமூகச் சீர்திருத்தப் போராட்டங்களில் இதுபோன்ற ஒருங்கிணைப்புகள் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதற்கு மாபெரும் எடுத்துக்காட்டு வைக்கம் போராட்டம்.
100 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததைவிட, இப்போது சமூகரீதியாகவும், அரசியல் வழியிலும், பொருளாதாரச் சூழலிலும் முன்னேறி இருக்கிறோம். ஆனால், இவை போதாது. இன்னும் நாம் முன்னேறிப் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.
உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி, ஏழை – பணக்காரன், ஆண் – பெண் ஆகிய பாகுபாடுகளுக்கு எதிரான நம்முடைய போராட்டத்தை நாம் தொடர வேண்டும். முன்பு இருந்ததை விட வேகமாகச் செயல்பட வேண்டும்.
நவீன வளர்ச்சியால் இந்தப் பாகுபாடுகளை முழுமையாக நீக்க முடியவில்லை. அதற்கு மனதளவில் மக்கள் மாற வேண்டியது அவசியம். அனைத்தையும் சட்டம் போட்டு மட்டுமே தடுக்க முடியாது. சட்டம் தேவைதான், அதைவிட மனமாற்றமும் நிச்சயம் முக்கியம். யாரையும் தாழ்த்திப் பார்க்காத சமத்துவ எண்ணம் மக்களின் மனதில் வளர வேண்டும். பகுத்தறிவுச் சிந்தனைகள் வளர வேண்டும். அறிவியல் கண்ணோட்டத்தோடு எதையும் அணுகும் பார்வை வளர வேண்டும்!
(தமிழாக்கம்: தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், சிறீ நாராயணகுரு, மகாத்மா ஜோதிபா புலே, சாவித்ரிபாய் புலே, அய்யன்காளி, காரல் மார்க்ஸ் போன்றவர்களின் கருத்துகளும் உழைப்பும் ஒவ்வொரு மனிதனையும் சென்றடைய வேண்டும்.)
அதற்காகத்தான், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற கொள்கையை அரசியல் கொள்கையாக மட்டுமல்ல, ஆட்சியின் கொள்கையாகவே தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ அரசில் அறிவித்திருக்கிறோம்.
தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, தெருவில் நடந்தால் தீட்டு என்ற காலத்தி லிருந்து கருவறைக்குள் அனைத்து ஜாதியின
ரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலையை நோக்கி இன்று அடைந்திருக்கிறோம்! தமிழ்நாட்டைப் போலவே கேரளத்திலும் பல புரட்சிகரமான முற்போக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
வைக்கம் போராட்டத்திற்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவது அந்தப் போராளிகளைப் போற்றுவதற்காக மட்டுமல்ல! அவர்கள் விரும்பிய சமநிலைச் சமுதாயத்தை அமைப்பதற்கான நம்முடைய கடமையில் முன்னேறிச் செல்ல!
ஆதிக்கமற்ற சமத்துவ சமுதாயம் அமைத்தே தீருவோம்!
வைக்கம் என்பது ஒரு தனிப்பட்ட வெற்றி அல்ல; தொடர் வெற்றிகளுக்கான தொடக்கம்! அந்த தொடர் வெற்றியை எல்லா துறையிலும் அடைய நாம் உறுதியோடு உழைப்போம்! எத்தகைய தடைகள் வந்தாலும், அவற்றை உடைப்போம்! கொண்ட கொள்கையில் வெல்வோம்! ஆதிக்கமற்ற சமத்துவ சமுதாயம் அமைத்தே தீருவோம்! வாழ்க பெரியாரின்
புகழ்! வாழ்க பெரியாரின் புகழ்!
நன்றி! வணக்கம்!
என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். இந்த எழுச்சி எதிர்காலத்தில் வளரும் எந்த மண்ணில் நூறாண்டுகளுக்கு முன் வீதியில் நடக்கக் கூடாது என்று உயர் ஜாதியினர் தடை விதித்தனரோ, எந்த மண்ணில் அதை எதிர்த்துப் போராடிய தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களைச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்தனரோ அதே மண்ணில், அம்மண்ணின் அரசாங்கமே இன்று தமிழ்நாடு அரசோடு இணைந்து, அப்போராட்டத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிப் பெருமை சேர்த்
துள்ளது, வரலாறு எதிர்காலத் தலைமுறைக்குத் தரும் மிகப் பெரிய பாடமாகும்.
எந்த ஆதிக்கமும் நின்று நிலைக்காது; எந்த ஒடுக்குமுறையும் ஒழிக்கப்பட்டே தீரும், ஒடுக்கப்பட்டவர்கள் எழுச்சி சமத்துவத்தைச் சமைத்தே தீரும் என்பன இந்த நூற்றாண்டு விழா தெரிவிக்கும் பாடமாகும். ஒடுக்கப் பெறுவோர் உரிமை மறுக்கப்படு வோர் இதிலிருந்து எதிர்காலத்தில் எழுச்சி பெறுவர். ஒடுக்க முற்படுவோர் இதிலிருந்து பாடம்
பெறுவர். வைக்கத்தில் பெரியார் போராட்ட நினைவிடமும், நூலகமும் என்றென்றும் நின்று எழுச்சியூட்டும். அது இந்தியா முழுமைக்கும் பரவும். ஆதிக்கம் செலுத்த முற்படுவோரின் செயல் திட்டங்களை அடித்து நொறுக்கும். அதன் விளைவாய் ஜாதி ஒழிக்கப்பட்ட சமுதாயம் மலரும். சமத்துவமும் மனிதநேயமும் மலரும்!
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளேடு (21.12.2024) கூறியுள்ளளது போல், ‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும் இணைந்து நடத்தியது தென்னிந்திய அரசியலில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மேலும் இந்திய வரலாற்றில் பல அத்தியாயங்களை எதிர்காலத்தில் உருவாக்கும். பெரியார் கண்ட சமுதாயம் உறுதியாய் அமையும்!’’