நமது ‘விடுதலை’ ஆசிரியர் அவர்கள் மலாயாநாடு சென்று சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள மக்களால் நல்லவண்ணம் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக உடல்நலத்தோடு திரும்பிவந்ததை முன்னிட்டு நமது ‘விடுதலை’ அலுவலகத்தில் பணியாற்றக் கூடியவர்கள் இந்த வரவேற்பினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது மிக்க மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். இந்த வரவேற்பு விழாவானது ‘விடுதலை’ அலுவலகத்திலுள்ளவர்களால் நடத்தப்படுகிற விழாவானதால் இந்த விழாவில் நானும் மணியம்மையும் பங்கேற்றுக் கொள்கிறோம்.
ஆசிரியர் அவர்கள் மலாயா நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்லும் போதும் அவரை வழி அனுப்ப முடியாது பெரிதும் ஏமாற்றமடைந்தேன். அதுபோலவே அவர் திரும்பி வரும்போதும் அவரை வரவேற்க நான் இருக்க முடியாமல் போய்விட்டது! அம்மாதான் இருந்தார்கள். நான் ஏன் இருக்க முடியாமல் போன தென்றால், முன்கூட்டியே ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டியவனாகிவிட்டேன். என்னைப் பொறுத்த வரை நான் ஏற்றுக்கொண்ட காரியங்களுக்குத் தவறாமல் போவது என்று பொதுவாழ்வில் ஈடுபட்ட அன்று முதல் எனது பழக்கமாக – கடமையாகக் கொண்டிருக்கின்றேன். ஆதலால், என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. இது எனக்குக் குறையாகவே இருந்தது. ஆசிரியர் அவர்கள் கடிதப்படி 4ஆம் தேதி எதிர்பார்த்தோம். ஆனால், என்ன காரணத்தாலோ 4ஆம் தேதி வரமுடியாமல் 5ஆம் தேதியே வரவேண்டியதாயிற்று. நான் 5ஆம் தேதிக்கு தர்மபுரியில் எனது தலைமையில் நடைபெற இருந்த நமது நண்பர் ஒருவரின் தங்கை திருமணத்திற்குச் செல்ல வேண்டியவனானேன். அதனால் முதல் நாள் வரை இருந்தவன் மறுநாள் தங்கியிருந்து ஆசிரியரை வரவேற்க முடியாமலே போய்விட்டது. 4ஆம் தேதியாக இருந்தால் கண்டிப்பாக நானும் சென்றிருப்பேன்;
மலாயா போயும் அங்கு எல்லா இடங்களிலும் நமது இயக்கப் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்கள். அவருடன் அவர் துணைவியாரும் குழந்தைகளும் சென்றிருந்தார்கள்;
அவர் ஆசிரியராயிருந்து நடத்தும் ‘விடுதலை’யில் தொண்டாற்றும் தோழர்கள் அனைவரும் அவரை வரவேற்பதன் மூலம் தங்கள் அன்பைக் காட்டிக் கொள்கிறார்கள்.
************
நமது ஆசிரியர் வந்து 6 வருஷமாகிறது. ஆனால், நமது ஆபீசானது ஆரம்பித்து 20 வருடங்களுக்கு மேலாகவே நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
ஆசிரியர் பொறுப்பிலிருந்தவர்கள் ஏதோ சொந்தக் காரணங்களுக்காக விலகிச் சென்றார்களே தவிர, மற்றபடி இங்கு பணியிலிருந்தவர்கள் வயதான காரணத்தாலும், உடல்நலம் குன்றி வேலை செய்ய முடியாத நிலையில் போயிருக்கின்றார்கள். மேலான வாழ்வு கிடைத்துப் போயிருக்கிறார்களே தவிர, மற்றபடி நாம் யாரையும் போகச் சொல்லியோ அல்லது பிடிக்காமலோ போனவர்கள் கிடையாது.
************
இந்த நிறுவனம் லாபகரமான தொழிலல்ல. பொதுத் தொண்டில் இது ஒரு பகுதி என்பதைத் தவிர இதனால் மாதம் ஒன்றுக்கு ரூ.3,000க்கு குறையாமல் நஷ்டமாகிறது என்பது உங்களுக்கும் தெரியும். தாயை ஒளித்த சூல் இல்லை என்பது போல உங்களிடம் நான் மறைக்க வேண்டியதில்லை.
இது ஒரு பொதுத்தொண்டு- செய்ய வேண்டிய தொண்டு என்பதால் செய்கிறோம். இதில் ஆசிரியராக இருக்கிறவருக்குச் சம்பளமில்லை. மற்றபடி எந்த வசதியும் அவருக்கில்லை. வேறு இடமாக இருந்தால் எவ்வளவோ வசதிகள் இருக்கும்.
நல்ல கல்வி அறிவுள்ளவர், தொழில் ஆற்றலுள்ளவர், பொறுப்பானவர். அவர் நினைத்திருந்தால் – ஆசைப்பட்டிருந்தால் நமது இயக்கம், அவருக்குள்ள செல்வாக்கு இதெல்லாம் கொண்டு முனுசீப்பாகி இருப்பார். வக்கீல் தொழில் செய்திருந்தாலும் நல்ல அளவுக்குப் பணம் சம்பாதித்திருப்பார். அதையெல்லாம் விட்டு, பொதுத் தொண்டு செய்யவேண்டுமென்ற கருத்துடன் செய்து வருகிறார். தங்களுடைய வாழ்வு தங்களுக்காகவே இருக்கக்கூடாது. பொதுமக்களுக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டுமென்கிற தன்னலமற்ற தன்மைக்காகவும் நிறைய பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்;
அவர் மலாயா சென்றது, தொண்டை முக்கியமாகக் கொண்டும் மற்ற நிலைமையும் தெரிந்துகொண்டு வரவே ஆகும். அவருக்கு நீங்களெல்லாம் வரவேற்பளிப்பது மிகவும் பொருத்தமும் கடமையும் ஆகும் என்று சொல்லிப் பாராட்டுகிறேன். இந்த உணர்ச்சி கடைசிவரை உங்களிடத்திலே இருக்க வேண்டும். நம்மிடத்திலே ஒன்றும் முறையல்ல; கிட்டத்தட்ட நமது மானேஜர் அவர்களும் இந்தக் கருத்துக்காகத்தான் இருந்துகொண்டிருக்கிறார். மற்றபடி எந்த லாபமும் கிடையாது.
இதில் எனக்குத் தலைமை வகிக்கும் பணியைக் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.