எங்கள் கருத்து நம் மக்களுக்குப் புதுமையாகவும் தோன்றும்; சில சமயங்களில் கசப்பாகவும் இருக்கலாம். காதணி விழா என்பது காது குத்தி நகை போடுவதாகும். இந்தக் காதணி விழாவானது உலகிலேயே இந்துக்கள் என்று சொல்லப்படும் நமக்குத்தான் ஆகும். எந்த முறையில் நமக்கு இது சம்பந்தப்பட்டு உள்ளது என்றால், மத சம்பந்தமான கருத்தில்தான் ஆகும்.
உலகில் ஒவ்வொரு மதக்காரர்களுக்கும் ஒவ்வொரு அடையாளமுண்டு. ஆனால், கிறித்துவ மதக்காரர்களுக்குப் பார்த்ததும் கண்டுகொள்ளும் படியான அடையாளம் இருக்காது. இஸ்லாமியர்களுக்குச் சில அடையாளம் இருக்கின்றது. அதுபோலத்தான் இந்துக்கள் என்று உணர்த்தும் வண்ணம் உள்ள அடையாளங்களில் காது குத்திக் கொள்வதும் ஒன்று.
இப்படிக் காது குத்திக் கொள்ளுவது மதத்தை மட்டும் குறிப்பிடாமல், ஜாதியையும் கண்டுகொள்ள அடையாளமாக உள்ளது. தென் மாவட்டங்களில் நாடார், சைவர், மறவர், தாழ்த்தப்பட்டவர் என்று கண்டுகொள்ள – காது ஓட்டையையும், நகையையும் கொண்டே கண்டுகொள்ளலாம். இப்படிப்பட்ட சமுதாயத்தினர்கள்கூட இன்றைக்குப் பெரிய ஓட்டையினைக் கத்தரித்து இன்று அறுவை சிகிச்சை மூலம் ஒட்ட வைத்து, சிறு ஓட்டையாக்கிக் கொண்டார்கள்!
இந்துக்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் காதுகளில் ஓட்டை போட்டுக் கொள்வது முக்கயமாக உள்ளது. ஆண்களுக்கு உச்சிக்குடுமி முக்கியம். வடநாட்டில் சோட்டி என்று சொல்லுவார்கள்.
நமது நாட்டில் பார்ப்பானும், இரண்டொரு மேல் ஜாதிக்காரனும்தான் உச்சிக் குடுமி வைத்து இருக்கின்றார்கள். ஆனால், வடநாட்டில் கிராப்பு வைத்திருந்தாலும் ஒவ்வொரு இந்துவும் உச்சிக்குடுமி அவசியம் வைத்து இருப்பான்.
கான்பூரில் நான் ஒரு தாழ்த்தப்பட்ட மக்கள் கூட்டத்தில் பேசும்போது ‘‘நீங்கள் இந்துக்கள் என்று காட்டிக்கொள்ள உச்சிக்குடுமி (சோட்டி) வைத்துள்ளீர்கள். இந்து மதத்தின் காரணமாகத்தான் நீங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் – இழி மக்கள். எனவே, ஜாதி இழிவு நீங்க வேண்டுமானால் உங்கள் உச்சிக் குடுமியைக் கத்தரித்துக் கொள்ளவேண்டும்’’ என்றேன்.உடனே கூட்டத்தில் இருந்த நூற்றுக்கணக்கானவர் தங்கள் தங்கள் உச்சிக் குடுமியைக் கத்தரித்துக் கொண்டார்கள்.
தோழர்களே, இப்படி காது குத்திக்கொள்வது, முஸ்லிம் ஆதிக்கம் நம் நாட்டில் இருந்தபோது முஸ்லிம்கள் நம் பெண்களைத் தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள் என்ற கருத்தில்தான் குத்த ஆரம்பித்தார்கள். நம் பழக்க வழக்கம் – அனுபவம் எல்லாம் மதத்தை அவசியம் வைத்துத்தான்.
சில பேருக்கு மாமிசம் என்றால் வெறுப்பு. சில பேருக்கு மாமிசம் இல்லாவிட்டால் சாப்பாடே பிடிக்காது. என்றாலும் இரண்டு பேருடைய ஒழுக்கம், நாணயத்தில் நாம் ஒன்றும் வித்தியாசம் அதனால் கண்டுகொள்வது இல்லை. ஆனால், மாமிசம் சாப்பிடாதது மூலம் தான் உயர்ஜாதி என்று காட்டிக்கொள்ள இப்படிச் செய்கின்றான்.
மாமிசம் சாப்பிடுபவனை மட்டம் என்று நினைக்கின்றான். இன்றைக்கு மாமிசம் சாப்பிடாத ஜாதிக்காரனும் – இன்றைக்கு மாமிசம் சாப்பிட ஆரம்பித்துள்ளான். கேட்டால் சீர்திருத்தம் என்பார்கள்.
தோழர்களே, நம் கடவுளை எடுத்துக் கொண்டால் மாமிசம் சாப்பிடாத கடவுளே கிடையாது. நம் கடவுளைத் திருப்திப்படுத்த ஆடு, மாடுகளைப் போட்டு பொசுக்கி யாகம் பண்ணித் தின்று இருக்கின்றார்கள். இராமன் மாமிசம் தின்று இருக்கின்றான். கறியை சுவைத்துச் சுவைத்துப் பார்த்து சீதைக்கு ஊட்டியிருக்கின்றான்! மற்றும் இன்ன இன்ன மாமிசம் சிரார்த்தத்தில் வைத்துத் தானம் கொடுத்தால், இத்தனை இத்தனை திருப்தி – பிதிர்கள் அடைவார்கள் என்றெல்லாம் கூறப்படுகின்றது.
மாமிசம் சாப்பிடாதவன் எத்தனை பேர்கள் இதனை உணர்ந்துள்ளான்? முட்டாள்தனமாக மாமிசம் சாப்பிடுபவன் கீழ் என்கின்றான்.
எனவே, இன்றைய தினம் உள்ள கஷ்டம் மதத் தொல்லைதான். மத சம்பிரதாயங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு காப்பாற்றப்படுகின்ற
னவோ அத்தனைக்கு அத்தனை ஜாதி நிலைக்கின்றது என்பதுதான் பொருள்.
கோமுட்டிச் செட்டியார், வைசியர் என்று சொல்லிக் கொள்ளலாம்; வாணியச் செட்டியார், வைசியச் செட்டியார் என்று சொல்லிக் கொள்ளலாம்; படையாட்சிகள், க்ஷத்திரியர் என்று சொல்லிக் கொள்ளலாம். இப்படிச் சொல்லிக் கொள்வதன் மூலம் பார்ப்பானுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. இலாபம்தான். எப்படி என்றால், இப்படி தங்கள் தங்களை வைசியர் என்றும், க்ஷத்திரியர் என்றும் கூறிக்கொள்வதனால் ஜாதிப் பாகுபாடானது நிலைக்கின்றதே என்றுதான் திருப்தி அடைகின்றான்.
இப்படி வைசியர் என்றும், க்ஷத்திரியர் என்றும் தங்களை அழைத்துக் கொண்டாலும், பாப்பான் இவர்களை எல்லாம் சூத்திரர்கள் என்றுதான் எண்ணிக்கொண்டு நடத்துகின்றார்கள்; மதிக்கின்றார்கள். இவர்களுடைய கலியாணம், கருமாதிகளுக்கு எல்லாம் பார்ப்பான் மேல் ஜாதி என்று அழைத்துத்தானே நடத்துகின்றார்கள்? இன்றைக்குப் பார்ப்பானைக் கூப்பிட்டுக் கலியாணம், கருமாதி பண்ணாத ஜாதிக்காரர்கள் கூட பணம் காரணமாகப் பார்ப்பானைக் கூப்பிட்டுக் காரியம் நடத்தினால்தான் பெருமை என்று எண்ணி அழைக்கின்றான்! தோழர்களே, நமது மதம், சாஸ்திரம் என்று கூறப்படுகின்றது எல்லாம் நமக்கு அந்நியமானதே ஒழிய, நமக்குச் சம்பந்தப்பட்டது அல்ல! சாஸ்திரங்கள், ஆதாரங்கள் எல்லாம் மான ஈனமற்ற ஜாதிக்காரர்களுக்குச் சம்பந்தப்பட்டதே ஒழிய, நமக்கு சம்பந்தப்பட்டது அல்ல. நமக்கு ஏதாவது சம்பந்தம் உள்ளது என்றால், நம்மை இழிவுபடுத்த வேண்டுமானால் சம்பந்தப்படுத்தி உள்ளார்கள்.
மதம் போய் விட்டால் நமக்கு வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது என்று பார்ப்பான் சொல்லுகின்றான். காரணம், பார்ப்பான் மதத்தின் காரணமாகவே பிழைக்கின்றான். ஆதிக்கக்காரனாக இருக்கின்றான். எனவே, மக்கள் அந்தக் காரியத்தையும் பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டும். மற்ற நாட்டுக்காரனைப் பார்த்துத் திருத்திக் கொள்ளவேண்டும்.
தோழர்களே, 45 கோடி மக்களைக் கொண்ட நாடாக இருந்தும் நாம் இன்னும் வல்லரசு நாடாக ஆகவில்லையே! நம்மை விடக் குறைந்த மக்களைக் கொண்ட ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா இவர்கள்தானே வல்லரசுகளாக இன்று உள்ளார்கள். நாம் 45 கோடி மக்களாக இருந்தும் அவர்களிடம் பிச்சைக்குக் கையேந்தி நிற்கின்ற பிச்சைக்கார நாடாகத்தானே இருக்கின்றோம்?
எனவே, நம் வளர்ச்சிக்குத் தடையாகவும், கேடாகவும் இருப்பது நம் மூடநம்பிக்கைகள்தான் காரணம் ஆகும். இவற்றை விட்டடொழிக்க வேண்டும்.
( 20.04.1966 அன்று மேட்டுப்பாளையத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரை)
– ‘விடுதலை’ 06.05.1966