கடவுள் என்பது ஒரு பொருளா?- தந்தை பெரியார்

2024 பெரியார் பேசுகிறார் ஜுலை 16-31

அறிஞர்களே! நீங்களும் நாங்களும் இன்று 1968ஆம் ஆண்டில் பகுத்தறிவு விஞ்ஞானக் காலத்தில் வசிக்கிறோம்; அதன் பயனாய் நான் கடவுள் இல்லை என்றும் அது அறிவில்லாத காலத்து முட்டாள் மனிதனது கற்பனை என்றும் சொல்லுகிறேன். இந்தப்படி நான் 50, 60 வருஷங்களாகச் சொல்லி வருகிறேன்.

மக்கள் பக்குவப்படாத (காட்டுமிராண்டி) காலம்

நான் சொல்லுவது ஒருபுறம் இருந்தாலும் கடவுளைப் பற்றி மக்கள் அறிய நேர்ந்தது சுமார் “3000 ஆண்டு”க்கு மேல் “5000 ஆண்டுக்குள்” இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். நீங்களும் இதில் ஒரு 1000 அல்லது 500 ஆண்டுகள் வித்தியாசமாய்க் காணலாம். எப்படி ஆனாலும் அந்த 3000 ஆண்டுக்கு மேற்பட்ட காலம் பொதுவாக மக்கள் பக்குவப்படாத (காட்டுமிராண்டி) காலம் என்பதை நீங்கள் மறுக்க முடியாது.

மாற்றப்பட– _ மறுக்கப்பட வேண்டியவைகளே!

அந்தக் காலத்தில் மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட, நடந்துகொண்டு வந்த, பயன்படுத்திக்கொண்டு வந்த, எண்ணிக் கொண்டு நம்பிக்கொண்டு வந்தவைகளில் இன்று மனிதன் (உணவு, உறக்கம், கல்வி என்பதைத் தவிர, கடவுள் என்பதைத் தவிர) வேறு எதைப் பின்பற்றி வருகிறான்? பயன்படுத்தி அனுபவித்துக் கொண்டு வருகிறான்? என்று சிந்திப்போமேயானால் அவையெல்லாம் மாற்றப்பட வேண்டிய, கைவிடப்படவேண்டிய, மறுக்கவேண்டிய காரியங்களாகவே இருந்து வருகின்றன.

இன்றியமையாதவைகளில் மாறி வருகிறோம்

சாதாரணமாக மனிதனுக்கு உடை, உணவு, உறைவிடம், ஊர்தி ஆகிய இன்றியமையாத இந்நான்கில் காலத்துக்குக் காலம் மாறுதல் அடைந்துகொண்டே வருகிறோம். இவற்றுள் எதற்கும் நம்மை யாரும் கட்டாயப்படுத்தாமலே நாமே மாற்றிக்கொண்டு வருகிறோம். இந்த மாற்றமும் இதோடு நிற்கப் போவதில்லை. மேலும், நாளுக்கு நாள், ஆண்டுகளுக்கு ஆண்டு மாறிக்கொண்டே போக வேண்டியவைகளாகவும் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் மனிதன் கடவுளைப் பற்றிய கருத்தில் மாத்திரம் சிந்தனை அற்ற மூடனாக, முழுமூடனாகவே இருந்து வருகிறான் என்றால் காரணம் என்ன?

மருந்து வியாபாரியும் டாக்டரும்

ஒரு மருந்து வியாபாரி ஒரு மருந்தை ஒரு டாக்டரிடம் (வைத்தியனிடம்) கொடுத்து “இது இன்ன வியாதியைக் குணப்படுத்தும், வாங்கிப் பயன்படுத்துங்கள்” என்றால் அந்த டாக்டர் வியாபாரி பேச்சைக் கேட்டு உடனே வாங்கி நோயாளிக்குக் கொடுப்பாரா? எந்த டாக்டருமே கொடுக்க மாட்டார். மருந்தை வாங்கினவுடன், இதில் என்ன என்ன வஸ்து எவ்வளவு எவ்வளவு சேர்ந்திருக்கிறது என்றுதான் கேட்பார். அதற்கு வியாபாரி டாக்டரைப் பார்த்து “அதெல்லாம் கேட்கக்கூடாது. அதைப் புரிந்துகொள்ள உனக்கு சக்தியும் கிடையாது; அந்த மருந்தும் அதைப் பற்றி எவனும் புரிந்துகொள்ள முடியாத தன்மையுடையது. ஆதலால் (நான் சொல்லுவதை) நம்பி வாங்கி காயலாக்காரனுக்குக் கொடு” என்றால் உலகில் எந்த டாக்டர் அந்த மருந்தை வாங்கி காயலாக்காரனுக்குக் கொடுப்பார்?

ஒரு முறை இருந்தாக வேண்டும்

ஒரு மருந்து என்றால் அதற்கு ஒரு முறை இருக்க வேண்டும்; அதில் சேர்க்கப்பட்ட பண்டங்களுக்குத் தெளிவு வேண்டும்; அப்பண்டங்களின் தன்மைக்கும் ஆதாரம் வேண்டும். இதை ஆங்கிலத்தில் ஃபார்முலா (Formula) என்று சொல்லுவார்கள்.
அதாவது எந்த வஸ்துவானாலும் வஸ்து என்று சொல்லப்பட்டால் அதற்கு மேற்கண்டபடியான ஒரு (செய்) முறை (Formula) கூட்டுமுறை வேண்டும். அது இயற்கைப் பொருளானாலும் செயற்கைப் பொருளானாலும் அதற்கு முறை இருந்தே தீரும்.
ஆகையால், கடவுள் என்பது ஒரு பொருள் அல்லது ஒரு சக்தி என்று சொல்லப்பட்டாலும் அது பெயர்ச்சொல்லே ஒழிய, வினைச்சொல் அல்ல. பெயர்ச்சொல் ஆன பொருளுக்கு – வஸ்துவுக்கு – வஸ்து நிச்சயத்திற்கு கண்டிப்பாக செய்முறை கூட்டுப்பொருள் தன்மை “ஃபார்முலா” இருந்தே ஆகவேண்டும் அது இல்லாதது வஸ்துவே ஆகமாட்டாது. ஆதலால், கடவுளைப் பற்றிப் பேசுபவர்கள் முட்டாள்களானால் அவர்களிடம் இந்த விளக்கம் செல்லாது; அறிவுள்ளவனானால் இந்த விளக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய
வனாகத்தானே இருக்க முடியும்?

அறிவுக்குப் பொருந்தா விளக்கத்தை நம்புகிறவன் மனிதன் ஆவானா?

இங்ஙனமிருக்க, “கடவுள் என்றால் விளக்கம் கேட்க வேண்டாம்.”
“கடவுள் என்றால் ஆராய்ச்சி செய்ய வேண்டாம்.”
“அது உனக்குப் புரியக்கூடியதல்ல”
“அதை எவனாலும் அறிந்துகொள்ள முடியாது.”
“அது மனோவாக்கு காயங்களுக்கு எட்டாத பொருள்”
“கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நம்பிக்கொள்ள
வேண்டியதுதான் கடவுள் என்பதற்கு விளக்கம்”
என்று சொல்லப்படுவதானால் இந்த முறைப்படி (ஃபார்முலாப்படி) கடவுளை நம்புகிறவன் அவன் எவ்வளவு அறிவுமேதாவி ஆனாலும் அவன் மனிதக்கூட்டில் சேர்க்கப்பட வேண்டியவனாவானா?
அன்றியும் எதற்காக சர்வ சக்தி, சர்வ வியாபகம்,
சர்வக்ஞன் ஆன ஒரு பொருளுக்கு இந்த மாதிரியான நிபந்தனை இருக்கவேண்டும்? அதுவும் சுமார் 5000, 3000 ஆண்டுகளுக்கு முந்திய காலமான காட்டுமிராண்டி (மனிதப் பக்குவமற்ற) காலமல்லாத இந்த – இன்றைய காலங்களில் யாராலாவது இப்படிப்பட்ட ஒரு வஸ்துவைக் கண்டுபிடிக்க முடியுமா என்று கேட்கிறேன்.
“கடவுளை நம்பவேண்டும்” என்பதற்கும், “மந்திரம்
ஜெபித்தால் நோய் நீங்கும்” என்பதற்கும், “பிரார்த்தனை
செய்தால் தேவையான காரியம் கைகூடும்” என்பதற்கும் என்ன வித்தியாசம் கூற முடியும்?

பகுத்தறிவுக்குப் புரியாத சர்வசக்தி உள்ள பொருள் அவசியமா?

“சர்வசக்தி உள்ள ஒரு பொருள் என்பது பகுத்தறி
வுள்ள ஒரு மனிதனால் புரிந்துகொள்ள முடியாததாய் இருக்கவேண்டிய அவசியமென்ன?” என்பதைப் பற்றி மனிதன் சிந்திக்க வேண்டாமா? சர்வசக்தி உள்ள ஒரு கடவுள் இருந்தால் கடவுள் இல்லை என்று
கருதி இருப்பவர்களும் கடவுளைப் புரிந்துகொள்ள முடியாதவர்களுமான ஆறறிவு படைக்கப்பட்ட மனிதர்கள் உலகத்தில் எப்படி இருக்க முடியும்?
மனித வாழ்வில் கடவுளால் என்ன பயன்?
அன்றியும், மனித வாழ்வில் மனிதனுக்கு கடவுள்
எந்த வகையில் என்ன காரியத்திற்குப் பயன்படு
கிறார்? ஒரு சர்வசக்தி உள்ள கடவுள் படைப்பில்,
ஜீவராசிகளுக்கு பிறப்பு – இறப்பு எதற்காக இருக்க வேண்டும்?
நன்மை – தீமை, இன்பம் – துன்பம் எதற்காக இருக்க வேண்டும்?
திருப்தி – கவலை எதற்காக இருக்க வேண்டும்?
இம்சை – சுகம் எதற்காக இருக்க வேண்டும்? இவற்றால் உலகில் யாருக்கு என்ன நன்மை? அல்லது இவற்றிற்கு என்ன தேவை?

சர்வம் முட்டாள்தனமே!

இவை எல்லாம் சர்வம் மடத்தனம், முட்டாள்தனம், அயோக்கியத்தனம், காட்டுமிராண்டித்தனம் என்பதல்லாமல் வேறு என்ன என்பதைச் சிந்தித்துத் தெளியுங்கள்.
— ‘விடுதலை’ தலையங்கம் 13.6.1968