நாட்டின் உயரிய பதவிகளில் முதன்மையானதாக அய்.ஏ.எஸ். கருதப்படுகிறது. இதற்காக ஒன்றிய அரசு நடத்தும் யு.பி.எஸ்.சி. எனும் குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெறுவது சவால் நிறைந்தாகும். ஆனால் எந்த ஒரு தேர்விலும் ஆர்வமும் விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் வெற்றிக்கனியை எளிதில் எட்டிப் பிடித்துவிடலாம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள அக்காள்- தங்கை சகோதரிகள். இதன்மூலம் ஒரே குடும்பத்தில் இரண்டு அய்.ஏ.எஸ். அதிகாரிகள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த முந்திரி விவசாயி ராமநாதன். இவரது துணைவியார் இளவரசி. கடலூரில் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவர்களது இளைய மகள் அய்ஸ்வர்யா கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த குடிமைப்பணி தேர்வில் தமிழ்நாடு அளவில் இரண்டாம் இடமும் தேசிய அளவில் 47ஆம் இடமும் பிடித்து சாதனை படைத்தார். தற்போது இவர் சென்னை பொன்னேரியில் துணை ஆட்சியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவரது மூத்த சகோதரி சுஷ்மிதா நடந்து முடிந்த 2022ஆம் ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி.
தேர்வில் அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 528ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். சகோதரிகள் இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒன்றாகவே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வந்துள்ளனர். இதில் தங்கை முதலில் தேர்ச்சி பெற்ற நிலையில் தற்போது மூத்த சகோதரி ஆறாவது முறையாகத் தேர்வு எழுதி அய்.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றுள்ளார். ஒரே குடும்பத்தில் அக்காள்- தங்கை சகோதரிகள் இருவரும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள சாதனை நிகழ்வுக்குப் பாராட்டுகள் குவிந்து
வருகின்றன.
வெற்றி குறித்து சுஷ்மிதா அளித்த பேட்டியில், “நான் எனது பள்ளிப் படிப்பை கடலூர் செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளியிலும் விவசாயத்தில் பொறியியல் பட்டப் படிப்பை அண்ணா பல்கலைக்கழகத்திலும் முடித்தேன். கிராமத்தில் பிறந்த எங்களை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதவும் அதற்காக ஊக்கமளித்து முழுவதுமாக தயார்படுத்தியதும் எங்களது பெற்றோர்தான். பெண்களுக்குக் கல்வி முக்கியம்; வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு கல்விதான் முக்கியப் படிக்கட்டு. கல்வி மூலம் தான் முன்னேற்றம் அடைய முடியும் என எனது அம்மா கூறுவார்கள். கிராமத்தில் இருந்து வந்த நான் கல்வி மூலம்தான் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளேன். என்னைப் போலவே கிராமத்தில் உள்ள அனைவரும் குறிப்பாக பெண்கள் கல்வி பயில வேண்டும். கல்வி பயில்வதில் பல சவால்கள் இருந்தாலும் அனைவரும் கல்வி பயில அரசு பல முன்னெடுப்புகளைச் செய்துள்ளது. முக்கியமாக தமிழ்நாடு அரசின் இலவசப் பாடப் புத்தகம், மதிய உணவு, உதவித் தொகை போன்ற கல்வித் திட்டங்களைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும். பெண்கள் வளர்ச்சிக்காகவும் கிராமப்புற வளர்ச்சிக்காகவும் பாடுபடுவதுதான் எனது முழு நோக்கம்” எனத் தெரிவித்தார்.
எந்த ஒரு தேர்வாக இருந்தாலும் விடாமுயற்சியும் குறிக்கோள் வைத்து ஆர்வத்துடன் படித்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழும் இந்தச் சாதனைச் சகோதரிகளை நாமும் வாழ்த்துவோம்.