Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கேட்டுத் தொலைப்பாயா ? ! – திருப்பத்தூர் ம. கவிதா

குழந்தை சுமந்தாள்
பத்தியமிரு என்றனர்
பத்து மாதம் இருந்தாள்
முடித்தாளில்லை…
குழந்தை வளர்க்க
வாய்மூடி மவுனியாய்
பத்தியம் தொடர்ந்தாள்
முடித்தாளில்லை…
பிள்ளைகள் படிக்க
இருபத்து ஆண்டுகள்
பத்தியம் தொடர்ந்தாள்
முடித்தாளா? இல்லை!
மகளுக்கு மகனுக்கு
நல்லபடி மணம் முடிக்க
வாய்ப்பூட்டுப் போட்டு
பத்தியம் தொடர்ந்தாள்!

பத்தியத்திற்குள் இருந்திருந்து
பழகிப் போய்விட்டது அவளுக்கு!
விருப்பையும் காட்டாமல்
வெறுப்பையும் காட்டாமல்
வெறுமனே கடக்கிறது
கிடைத்தற்கரிய ஒரே வாழ்வு!
இளமை இப்போது வற்றி
இறுக்கி அண்டும் நோயால்
மீண்டும் பத்தியக்காரியாய்
மருத்துவர்கள் சொல்படி!
பாவம் பைத்தியக்காரி!
என்ன அவள் வாழ்ந்தாள்?
அட மனசாட்சியற்ற
மனித சமூகமே…
வீட்டுப் பெண்களின்
விருப்பங்கள் என்னென்ன
கேட்டுத் தொலைப்பாயா?! 