உயரிய குறிக்கோள், கொள்கை உடையார்
அயோத்தி தாச பண்டிதர்; போற்றும்
ஆய்வு நாட்டம் அறிந்த மருத்துவர்
ஓய்வே இன்றி இனநலன் காத்தவர்;
சுயமரி யாதை உணர்வை ஊட்டிய
நயத்தகு எழுச்சி மறவர்! நாட்டில்
இந்து மதத்தைச் சார்ந்த மொழியாம்
இந்தியோ பொதுமொழி ஆகா என்றவர்!
வேதப் புரட்டுகள் விதைத்து வந்தோர்
ஆதிக் கத்தைத் தகர்க்கத் துணிந்தவர்!
ஒடுக்கப் பட்டோர் உயர்நிலை எய்திடப்
படிக்கப் பள்ளிகள் திறக்கவும் பள்ளியில்
நண்பகல் உணவை நல்கவும் அந்நாள்
எண்ணிய சிந்தனை யாளர்! இல்லாக்
கடவுளர் பெயரால் பிழைப்பு நடத்தும்
இடக்கர் புன்செயல் எதிர்த்தபோ ராளி!
சாதி மதங்கள் சமயச் சழக்கினை
மோதி மிதித்தவர்! தீண்டா மைக்கே
எதிராய்க் களத்தினில் இருந்தவர்: நாளும்
புதுமை உணர்வைப் புகுத்தி வந்தவர்!
ஆரியப் பார்ப்பனர் தம்மை எதிர்ப்போர்
வீரிய நோக்குடன் சாதி உணர்வோ
இல்லா தவராய் இருந்திடத் தூண்டினர்;
வெல்லும் வழிகள் விளம்பி வந்தவர்;
அடிப்படைப் பொருள்கள் வரிகளை உயர்த்திய
முடிவால் ஆங்கி லேயரை எதிர்த்து
மதுபா னங்கள் வரியை உயர்த்திடப்
பதமாய் நல்வழி பகர்ந்தவர்; வாழ்வில்
தாழ்த்தப் பட்டோர் தலைநிமிர்ந் தென்றும்
வாழ்ந்திட உழைத்தவர்; சட்ட மேதையாம்
அண்ணல் அம்பேத்கர் மனத்தில் மாண்புற
என்றும் தனியிடம் பெற்றுச் சிறந்தவர்
அயோத்தி தாச பண்டிதர்! நெஞ்சில்
உயர்ந்தவர் நினைவைப் போற்றுவோம் இனிதே!