ஊடகங்களின் பொய்யான கருத்துத் திணிப்பு
முறியடிக்கப்படும்!
1. கே : தங்களின் தேர்தல் பரப்புரைப் பயணம் – மக்கள் எழுச்சி மகிழ்ச்சியளிக்கிறதா?
– சு. கார்த்திகேயன், சேலம்.
ப : மகிழ்ச்சியோடு, இந்தியா – தி.மு.க. கூட்டணி மக்களின் கொள்கைக் கூட்டணியாக வெற்றிபெறுவதற்கும் பாடுபடுவதற்கும் பெருமக்கள் ஆதரவு பரவலாகவே எழுச்சியுடன் காணப்படுகிறது. ஜூன் 5ஆம் தேதிக்குப் பிறகு, பி.ஜே.பி., மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாகவே இது அமையும் என்பதும் ‘பளிச்’சிடுகிறது!”
2. கே : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, திராவிட மாடல் இந்தியாவெங்கும் எதிரொலிப்பதை உறுதி செய்வதாகக் கொள்ளலாமா?
– காமராஜ், ஆத்தூர்.
ப : ஆம். அதனால்தான் வெகுண்டு எழுந்துள்ள பிரதமர் மோடி ராஜஸ்தானில் 6.4.2024 அன்று, அது முஸ்லிம் – பாகிஸ்தான் ஆதரவு என்று பல பொய் வசை புராணம் பாடி, நிலை குலைந்து ஆடியுள்ளாரே! அறிக்கை அவர்களைக் கலக்குகிறது என்பது இதன்மூலம் தெரிகிறது.
3. கே : நாட்டைச் சுரண்டும் ஊழல் பேர்வழிகள் தப்ப முடியாது என்ற பிரதமர் மோடியின் ஆவேசம் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– என். ரங்கநாயகி, உடுமலைப்பேட்டை.
ப : அதைத்தான் வரும் தேர்தல் முடிவுக்குப் பின் மக்கள் தீர்ப்பு சொல்லக் காத்திருக்கிறது. பிரதமர் மோடியின் வாக்கை ஒரு சுய விமர்சனமாக எடுத்துக் கொள்ளலாம்.
அடானி, அம்பானி, டாட்டா, பிர்லா போன்ற பெரு முதலாளிகளை மடியில் வைத்துக் கொண்டு இப்படிப் பேசுவது எவ்வளவு பெரிய வித்தை!
4. கே : குஜராத்தில் எழுந்துள்ள ஷத்திரியர் போராட்டம் பி.ஜே.பி.க்குப் பின்னடைவை உண்டாக்குமா?
– வெ. பாபுஜி, சவுகார்பேட்டை.
ப : குஜராத்தில் ஜாதி மோதல் என்ற ஆபத்து, முன்பு மணிப்பூரில் சங்கிகளால் உருவாக்கப்பட்டது போன்ற ஓர் ஆபத்தான நிலவரம், பா.ஜ.கவினரையும் மோடியையும் அது நிலைகுலையச் செய்துள்ளது. பாதிப்பை உண்டாக்கும்!
5. கே : கச்சத்தீவை மீண்டும் பெறுவது குறித்து தங்கள் கருத்து என்ன?
– கு. ராசா, காஞ்சிபுரம்.
ப : கச்சத்தீவு பிரச்சினை, மோடி, ஜெய்சங்கர் போன்றோரின் திசை திருப்பும் பிரச்சாரம், தேர்தல் பத்திரம், மற்ற மெகா ஊழல் பற்றி மக்களிடம் எதிர்க் கட்சியினர் பேசாமல், இதுபற்றியே பேசச் செய்யும் தந்திரம். தேர்தல் லாபம் அடைய திட்டமிட்டே செய்யப்படும் ஓர் ஏற்பாடு’ என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
6. கே : ஊடகங்கள் பொய்யான பா.ஜ.க. ஆதரவுக் கருத்துகளைப் பரப்புவதால், நாடு முழுவதும் இந்தியா கூட்டணி, ஊடகங்களின் கருத்துத் திணிப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது உடனடிப் பணியல்லவா?
– பெ. நிர்மலா, புதுக்கோட்டை.
ப : இந்தியா கூட்டணியினரால் அதுபற்றிய செய்திகள் சிறப்பாக எடுத்துச் சொல்லப்பட்டு வருகிறதே!
7. கே : பிரதமரின் ‘ரோடு ஷோ’ வாணவேடிக்கை வகைதானே?
– வி. காஞ்சனா, இராணிப்பேட்டை.
ப : நிச்சயம் – ‘ஷோ’தான்! வாக்குப்பெட்டியில் ‘நோ’தான்!
8. கே: முதல் கட்டத் தேர்தல் முடிந்த மாநிலங்களில் உள்ள இந்தியா கூட்டணித் தலைவர்கள் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை வலியுறுத்துவீர்களா?
– பொன். குமார், சூளை.
ப : நாம் சொல்ல வேண்டியதில்லை. திட்டமிட்ட செயற்பாடு. நிச்சயம் களத்தில் கடைசி வரை செல்வார்கள்; சிறப்பாகவே நடைபெறும்- வாளா இருக்க மாட்டார்கள்!