கருத்து முதல் வாதம் – பொருள் முதல் வாதம்
இந்தியத் தத்துவம் ஆரம்பத்தில் இருந்த இரு பிரிவுகளாகப் பிரிந்து நின்றன, நிற்கின்றன. ஒரு பிரிவினர் எண்ணம் (கருத்து) முதல்வாதிகள் (IDEALISTS) எனப்படுவோர். மற்றொரு பிரிவினர் பொருள்முதல்வாதிகள் (MATERIALISTS) எனப்படுவோர். வேதமோதிகள் என்றும் வேதமறுப்பாளர்கள் (நாத்திகர்கள் _ கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள்) என்றும் கூறலாம்.
எண்ணம் முதலில் தோன்றியது எனவும், எண்ணம் செயல்வடிவம் பெறுவதற்கான முயற்சிகளில் கடவுள் ஈடுபட்டு, உலகைப் படைத்தது எனும் நம்பிக்கை கொண்டோர் கருத்துமுதல்வாதிகள். என்றாலும், அவர்களே இந்த உலகம் பொய்; சாவுக்குப்பின் மனித ஆத்மா செல்லவிருக்கும் மறுஉலகம்தான் மெய் என்றும் கூறுபவர்கள்.
பொருள்முதல்வாதம் மேற்கண்ட கருத்துமுதல்வாதத் தத்துவத்திற்கு நேர் முரணானது. கடவுள்! இல்லை, எனவே அதன் எண்ணமே உலகப் படைப்புக்கு அடிப்படை என்பதும் பொய், இயற்கையாக உருவான உலகம் மெய், ஆன்மா கிடையாது, இறப்புக்குப் பின் மறுஉலகமோ, மறுபிறப்போ அடைவதில்லை எனத் தெளிவாகக் கூறுபவர்கள் பொருள்முதல்வாதிகள்.
ஆதியில் எங்கும் நீர் நிறைந்திருந்ததாம். அதில் ஓர் ஆள் தூங்கிக் கொண்டிருந்தானாம்! நீரிலிருந்து ஒரு முட்டை தோன்றியதாம்! அதன் உள்ளே பிரம்மம் இருந்ததாம். இரண்ய கர்ப்பம் என்று இதை ரிக் வேதம் கூறுகிறது. பிரம்மம்தான் படைப்புக் கடவுளாம். நீரில் தூங்கியதுதான் நாராயணன் எனும் கடவுளாம். சிவன் பற்றிய குறிப்பு எங்கும் காணோம்.
முட்டையின் மேல்பகுதி ஆகாயமாம். சுவர்க்கம் இங்கேதானாம். கீழ்ப்பகுதி பூமியாம்! அதற்கும் கீழே நரகமாம். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பிரம்மாவால் படைக்கப்பட்டனராம்! ஆணுக்குப் பெயர் சுயம்பு மனு. பெண்ணுக்குப் பெயர் சதரூபை. இப்பெற்றோரின் பிள்ளை மனு. இந்த மனுவிலிருந்து வளர்ந்த வம்சத்தினர் என்பதால் மானவர் அல்லது மானிடர் எனப் பெயராம்.
ஏழு தீவுகளாம். சுற்றிலும் ஏழு கடல்களாம். ஏழு மலைகளாம். பூமிக்கு அடியில் அதல, விதல, நிதல, சுதல, தலாதல, ரசாதல, பாதாள எனப்படும் ஏழு உலகங்களாம். அங்கே வைத்தியர், தானவர், நாகர் ஆகியோர் வசிக்கின்றனராம். இவர்களைப் படைத்தது யார் எனும் விவரம் தரப்படவில்லை.
கருத்துமுதல்வாதிகள் உலகம் முழுக்க இருக்கின்றனர். கருத்துமுதல்வாதம் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கின்றதா என்றால்… இல்லை! மேல் உலகம் யுருத்_வா என்றும் அதில்தான் தேவர்கள் வசிக்கின்றனர் என்றும் கீழ்உலகில் அதோ _ எனும் நரகம் இருக்கின்றது என்றும் பாபம் செய்தவர்கள் தள்ளப்படும் நரகம் இதுதான் என்றும் சமணம் (ஜைன) கூறுகிறது. கடவுளை மறுத்தாலும் ஆன்மா, பாவம், புண்ணியம், கர்மவினைப்பயன் என்ற கசுமாலங்களை எல்லாம் நம்பும் சமணம், புண்ணியம் செய்பவர்களின் ஆன்மா! தேவர் வசிக்கும் யுருத்வானவத்தாண்டி அதற்கும் மேலே சென்று அசைவற்று அப்படியே நிரந்தரமாக நிற்குமாம். (ஈர்ப்பு விசை இல்லாத பகுதியில் எடைஇன்றி, அசைவு இன்றி இருக்கும் நிலையைச் சொல்கிறார்களோ?)
ஆனால், கடவுளை மறுக்கும் பொருள்முதல்வாதம் உலகம் முழுக்க ஒரேமாதிரியாகத்தான் கருதப்படுகிறது, கூறப்படுகிறது, எழுதப்படுகிறது, கடைப்பிடிக்கப்படுகிறது. பிரபஞ்சம் எப்படி உருவானது? சூரியன் எனும் நெருப்புக் கோள நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு நட்சத்திரம் சுற்றி வந்து கொண்டிருந்தபோது, கடும் வேகத்தின் காரணமாக உடைந்து, வெடித்ததன் விளைவாக அதன் துண்டுகள் வெகுதூரத்திற்குச் சிதறி எஞ்சிய வாயு மட்டுமே சூரியனைச் சுற்றிவரும் நிலை உண்டானது. அதிலிருந்துதான் சூரியச் சுற்றுக் கிரகங்கள் ஏற்பட்டன எனும் உத்தேசக் கருத்து (HYPOTHESIS) உள்ளது.
பலகோடி ஆண்டுகளுக்குமுன் நடந்த நிகழ்வு என்பதால் நேரிடை சாட்சியோ, சான்றோ, பதிவோ, ஆதாரங்களோ? எதுவும் இல்லாத நிலையில் அறிவியல் இந்த முடிவுக்கு வருகிறது. கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஃபிரெட் ஹாய்ல் (FRED HOYLE) இக்கருத்தை வெளியிட்டவர்.
சூரியனைச் சுற்றிய நட்சத்திரம் வெடித்த நிகழ்வுதான் பெருவெடி (BING BANG) என்று அறிவியல் கூறுகிறது. அண்மையில் இந்தப் பெருவெடியினை அறிவியலாளர்கள் சுவிட்ஜர்லாந்து நாட்டில் பூமிக்கு அடியில் செயற்கையகச் செய்ததும் அதனால் வாயு வெளிப்பட்டதும் அறிவிக்கப்பட்டதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். பாழாய்ப்போன கடவுள் துகள் என்று அறிவியலாளர் கூறியதையும் நினைவு கூர்க!
மேலும்....