அலெக்சாண்டர் கிரகாம் பெல்
உலகம் மாறி இருக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதன் இன்று உயிர் பெற்று வந்தால், இன்றைய உலகம் அவனுக்குப் புரியாது. அவ்வளவு புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகத்தை மாற்றி இருக்கிறது.
1847 மார்ச் 3, தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல் அவர்களின் பிறந்த நாள். 177 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். இன்று செல்பேசியை, தொலைபேசியை உபயோகிக்கும் பலருக்கு இவரின் பெயர் தெரியாது. ஆனால், உலகத்தின் மாற்றத்தில் மிகப்பெரும் பங்கு இவருக்கு இருக்கிறது. அலெக்சாண்டர் கிரகாம் பெல்லின் மனைவிக்குக் காது கேட்காது. அவரின் தாயாருக்கும் காது கேட்காது. காது கேட்காத தனது மனைவி மற்றும் தாயாரின் காரணமாகச் செவிப்புலன் பற்றியும், பேச்சைப் பற்றியும் காது கேட்காமல் இருப்பவர்களை எப்படியாவது கேட்கவைக்க முடியுமா என்பது பற்றியும் தனது வாழ்க்கையின் பெரும்பகுதி நேரத்தைச் செலவு செய்து ஆராய்ச்சிகள் செய்தார். அந்த ஆராய்ச்சியில் தற்செயலாக 1876இல் தொலைபேசியைக் கண்டு பிடித்தார். 1877இல் பெல் என்னும் தொலைபேசி நிறுவனத்தை நிறுவினார். உலகம் முழுவதும் தொலைபேசி நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருந்தார். பல இலட்சம் பேர் அதன் மூலம் வேலை வாய்ப்புப் பெறக் காரணமாக இருந்தார். அதற்கான அடிப்படை ஆராய்ச்சி மனப்பான்மை,அறிவியல் துணை கொண்டு தேடுதல். அலெக்சாண்டர் கிரகாம் பெல் அவர்களின் மூலமாக இன்றைய உலகம் மாறி இருப்பது கண்கூடு.
மருத்துவத்தில் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. சில பத்தாண்டுகளுக்கு முன்பு இதய வால்வுகள் பழுதுபட்டால் மாற்று இல்லை. ஆனால், இன்றைக்கு இதய வால்வுகளை மாற்றும் மருத்துவம் வந்திருக்கிறது. இதய அடைப்புகள் ஏற்பட்டால் ஸ்டென்ட் என்பதன் மூலமாக அந்த அடைப்புகளை எடுத்துவிட்டு, அவர்களை நலமாக வாழவைக்கும் முறை வந்திருக்கிறது. பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் பல இலட்சம் பேரை நலமாக வாழவைத்துக் கொண்டிருக்கிறது.
எத்தனையோ கண்டுபிடிப்புகள்,உறுப்பு மாற்று சிகிச்சைகள் வந்தாலும் மூளையில் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்வதற்கான வழிமுறை மிகக் குறைவாகவே இருந்தது. கடந்த 10,15 ஆண்டுகளில் மூளையைப் பற்றிப் பல ஆராய்ச்சிகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.
ஆனால் பக்கவாதம், வலிப்பு போன்ற நோய்கள் மூளையின் பாதிப்பால், மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுபவை.
அண்மையில் எலான் மஸ்க் என்பவரின் ‘நியூராலிங்க் ஸ்டார்ட்அப்’ பற்றி நிறையச் செய்திகள் வருகின்றன. நியூராலிங்க் என்பது மூளையையும் கணினியையும் இணைக்கும் ஒரு தொழில்நுட்பம்(Brain-computer interfaces (BCIs).மூளைக்குள் ஏற்படும் மின்னியல் சமிஞ்கைகளைப் புரிந்து கொண்டு அதனைக் கணினி கொண்டு இயக்குவதாகும். நான் இப்போது மூளையைப் பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்றால் என் மூளைக்கு நான் மூளையைப் பற்றி எழுதவேண்டும் என்ற கட்டளையைக் கொடுக்கிறேன். என் கைகள் சரியாக மூளையின் கட்டளையைப் பின்பற்ற முடிவதால் நான் சிந்திப்பதை இப்போது எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
இன்னொருவர் மூளையைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், அவருக்குப் பக்கவாதம். அவரது மூளை சிந்தனை செய்வதையும், சொல்வதையும் கைகளால் செயல்படுத்த முடியாது. இந்த இடத்தில் நியூராலிங்க் தொழில்நுட்பம் அவரது மூளை என்ன நினைக்கிறது, சொல்கிறது என்பதை மூளையோடு இணைக்கப்பட்டிருக்கும் கணினிக்கு அனுப்புகிறது. உடனே அந்தக் கணினி அந்தக் கட்டளையை எடுத்துக்கொண்டு ‘இதனை எழுதி அனுப்பு’ என்று செயல்படுத்துகிறது.
நான் எனது கால்களை நடக்கச்சொல்கிறேன் என்று மூளை கட்டளை இடுகிறது. கால் நடக்கிறது.இன்னொருவருக்கு கால் நன்றாக இருக்கிறது. ஆனால், காலை நடக்கச்சொல்லும் கட்டளையை மூளை பிறப்பித்தால் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் உடல் இல்லை. எனவே காலை நடக்கச் சொல்லவேண்டும் என்று மூளை சொன்னவுடன் அதனோடு இணைக்கப்பட்டிருக்கும் கணினி அந்தக் கட்டளையை எடுத்துக்கொள்கிறது. பின்பு காலுக்கு அந்தக் கட்டளையைக் கணினி கொடுக்கிறது. கால் நடக்கிறது.
“மூளை என்று பொதுவாகச் சொன்னாலும் அது ஒற்றை உறுப்பு அல்ல. அது ஒரு பன்மைக் கூட்டமைப்பு. கை என்று சொன்னாலும் அது விரல்களும், உள்ளங்கையும், மணிக்கட்டும் சேர்ந்த பகுதியே என்பதைப் போலவே மூளையும் பொதுவாகச் சுட்டப்படும் பெயர். பெருமூளை, சிறுமூளை, முதுகுத்தண்டு, தண்டுவடம், மூளை நடுப்பகுதி என்று அய்ந்து முக்கியப் பகுதிகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. தண்டுவடம் வரிசையான எலும்பு வளையங்கள் குருத்தெலும்புகளால் பிணைக்கப்பட்ட பகுதி. கழுத்தின் மேற்புறத்தில் அது மண்டையோட்டின் பெரிய துவாரத்தின் வழியாகச் சென்று மூளையாக மருவுகிறது.”(மூளைக்குள் சுற்றுலா, வெ.இறையன்பு, பக்கம் 61) தண்டுவடத்தில் ஒரு பிரச்சனை என்றால் மூளை இடும் கட்டளை கால்களுக்குச் சென்று சேர்வதில்லை. இந்த இடத்தில் நியூராலிங்க் ஸ்டார்ட் அப், கணினியின் மூலமாக மூளையின் கட்டளையைத் தண்டுவடத்திற்குப் பதிலாகக் கால்களுக்கு கடத்தும் வேலையைச் செய்து கால்களை இயங்க வைக்கும்.
தொலைபேசியைக் கண்டு பிடித்ததால் ஏற்பட்ட மாற்றங்களைப் போல, உலகத்தில் பல்வேறு அதிசயங்கள் இந்த மனித மூளைக்குள் எலக்ட்ரானிக் சிப் பொருத்துவதால் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
எலான் மஸ்க் மனித மூளைக்குள் எலக்ட்ரானிக் சிப் பொருத்தும் நியூராலிங்க் ஸ்டார்ட் அப் ஆராய்ச்சிக்கு அமெரிக்க அரசாங்கத்திடம் அனுமதி பெற்றார் என்பது சில மாதங்களுக்கு முன் வந்த செய்தி. குரங்குகள் மற்றும் பல விலங்குகளின் மூளைகளில் சிப் பொருத்துவதைப் பற்றிய ஆராய்ச்சிகளை 2014 முதல் இந்த நியூராலிங்க் நிறுவனம் செய்து வருகிறது.
ஜனவரி 2024இல் ஒரு மனித நோயாளிக்கு மூளையில் ஒரு சிப்பை வெற்றிகரமாகப் பொருத்தியதாகவும் அவர் குணமடைந்து வருவதாகவும் இப்போது அது வெற்றிகரமாகி
யிருக்கிறது என்றும் எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார்.
“முன்னேற்றம் நன்றாக உள்ளது, என்றும் நோயாளி முழுமையாகக் குணமடைந்து விட்டதாகவும் தெரிகிறது, நரம்பியல் விளைவுகள் நமக்குத் தெரியும். ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, நோயாளி சிந்திப்பதன் மூலம் ஒரு சுட்டியைத் திரையைச் சுற்றி நகர்த்த முடியும், ”என்று எலான் மஸ்க் சமூக ஊடக தளமான Xஇல் ஒரு ஸ்பேஸ் நிகழ்வில் கூறியிருக்கிறார்.
மேலும் தன்னுடைய அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “முதல் மனித நோயாளி விரைவில் நியூராலிங்க் கருவியைப் பெறுவார். இது இறுதியில் உடல் இயக்கத்தை முழுவதுமாக மீட்டெடுக்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்த ஆய்வு ஸ்டீபன் ஹாக்கிங்கிற்குக் கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்” எனவும் பதிவிட்டுள்ளார்.
ஸ்டீபன் ஹாக்கிங்கின் கன்னத்தில் இருக்கும் சில தசைகள் தவிர உடல் பாகங்கள் பலவும் அவருக்கு வேலை செய்யாத நிலையில், ஈக்வலைஸர் என்ற கம்ப்யூட்டர் புரோக்ராம் உதவியோடு கன்னத் தசைகளின் அசைவுகள் மூலம் கம்ப்யூட்டர் குரலில் மட்டுமே ஸ்டீபன் ஹாக்கிங் பேசி வந்தார். 2018இல் மறைந்தார். மார்ச் 14 ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் நினைவு நாள்.
இந்த மூளையில் பொருத்தப்படும் சிப் தொழில் நுட்பம் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் அவர்களுக்கு மட்டும் கிடைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள் என்று எலான் மஸ்க் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். ஆம். நியூராலிங்க் கருவி கிடைத்திருந்தால் ஸ்டீபன் ஹாக்கிங் தன் கால்களால் நடந்திருக்கவும், கைகளைப் பயன்படுத்தவும் முடிந்திருக்கும் அல்லவா!
ஆம், மூளைப் பாதிப்பினால் பல்வேறு வகையான நோய்களுக்கு ஆட்பட்டிருக்கும் பலருக்கு இந்த நியூராலிங்க் தொழில் நுட்பம் விடிவு தரும். கண் பார்வையற்றவர்களுக்குப் பார்வை தரும் எனப் பல்வேறு செய்திகள் வருகின்றன. இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளைப் பற்றியும்
பலர் பேசுகின்றனர். ஆனால், நாம் புதிய நியூராலிங்க்
தொழில் நுட்பத்தை வரவேற்போம்.♦