பெண்கள் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளவும், அடிமை மற்றும் ஆதிக்கத் தளையிலிருந்து விடுவித்துக் கொள்வதும், அவர்கள் தங்களது நிலையை, தகுதியை, அறிவை, படிப்பை உயர்த்திக்கொள்வதும் தற்சார்பு நிலையை அடைவதும் அவசியம். சார்ந்தே வாழ வேண்டும் என்ற நிலைதான் ஒருவரை மற்றவருக்கு அடிமையாக்குகிறது. அந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தித்தான் ஆதிக்கம் செலுத்துகின்றவர்களும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். எனவே, சுயமாகச் சம்பாதிக்கின்ற தகுதியை, வாய்ப்பைப் பெண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
உயர்கல்வி படித்த பெண்கள் கூட, திருமணமானவுடன் தனது தகுதிகள் அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு அடுப்படியில் முடங்குவதோடு சமைப்பது, துவைப்பது, பிள்ளை வளர்ப்பது, கணவனுக்குப் பணி செய்வது என்ற வட்டத்துக்குள் சுருங்கும்போது அவர்கள் இயல்பாகவே அடிமையாகிறார்கள். அவர்கள் அத்தனைத் தகுதிகள் இருந்தும் ஆணைச் சார்ந்தே வாழ வேண்டும் என்ற அவலத்திற்கு ஆளாகிறார்கள்.
அவர்களுக்குள்ள திறமையை, தகுதியை, அவர்கள் வெளிப்படுத்த, வினையாற்ற, சாதிக்கத் தவறவே கூடாது. அவ்வாறு செய்யத் தவறுவது அவர்களைத் தாழ்த்தி, வீழ்த்துவதோடு, அவர்களால் இந்த நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் கிடைக்க வேண்டிய பயனும் கிடைக்காமல் போகிறது. அவர்களுக்காக அரசு செய்த செலவும் அடுத்தவர்கள் ஏற்ற பணியும், உழைப்பும் பயனற்றுப் போகின்றன.
பொருளாதார ரீதியிலும் சொத்துரிமையிலும், பெண் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளும் போது அவளுக்கு ஆணே அடங்கிப் போகிறான். ஆணின் ஆதிக்கம் அப்படிப்பட்ட பெண்களிடம் செல்லுபடியாவதில்லை.
சேலம், தர்மபுரி, போன்ற மாவட்டங்களில் பெண்களே வயல் மற்றும் பண்ணை நிருவாகங்களைக் கவனிக்கின்றனர். அவர்களின் ஆணைக்கிணங்கியே, அங்கு ஆண் தொழிலாளர்கள் பணிந்து வேலை செய்கின்றனர். பெண் பதவியில் வரும்போது, அதற்குக் கீழ் நிலையிலுள்ள ஆண்கள் பணிந்து கட்டளையேற்றே பணி செய்கின்றனர்.
இந்திரா காந்தி பிரதமராக இருக்கும் போது, இந்த நாட்டிலுள்ள அத்தனை ஆண்களும், அறிவுஜீவிகளும், அதிகாரிகளும் எப்படி பணிந்து பணியாற்றினார்கள் என்பதை நாடு அறியும்; வரலாறு உணர்த்தும், ஆண்களின் ஆதிக்கம் என்பது அங்கு அடிச்சுவடு இல்லாமல் அற்றுப் போகின்ற இரகசியம் அதுதான். ஆம், பெண்ணின் தகுதிதான்.
முதல்வராயிருந்த ஜெயலலிதாவிடம் ஆண்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது ஆணாதிக்கத்தின் தகர்வு பெண்ணின் தகுதி உயர்வில் இருக்கிறது என்பதைக் காட்டுகின்றது.
பெண் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்வது ஒன்றுதான் பெண்ணின் விடுதலைக்கும், பெண்ணின் உயர்விற்கும், ஆணாதிக்க ஒழிப்பிற்கும் அடித்தளம் அமைக்கும். அதைவிடுத்து, பெண்ணின் உரிமைகள் அனைத்தும் ஆணின் கட்டுக்குள் இருப்பதாகவும் அவனிடமிருந்து அதைப் பெண்கள் கெஞ்சிப் பெறவேண்டும் என்பதாகவும் கொள்வது தவறு. பிச்சை பெறுவதல்ல – பெண்ணுரிமையும், பெண்கள் முன்னேற்றமும்.
உரிமை என்பது எவரிடமிருந்தும் எவரும் பெற வேண்டியது இல்லை, அவரவர்களே எடுத்துக் கொள்ள வேண்டியது.
பெண்ணுரிமையும் ஒரு போர்தான். ஆனால், அது ஆணோடு மோதுகின்ற போர் அல்ல. அவளின் தகுதியை ஆற்றலை அவள் உயர்த்திக் கொள்ளுகின்ற முயற்சியில் எதிர்ப்படுகின்ற – எதிர்த்து நிற்கின்ற தடைகளை மோதிச் சாய்த்து முன்னேறிச் செல்கின்ற போர்.
அதிகாரம் பெண்ணுக்கு வந்தால், பதவியில் பெண்கள் அமர்ந்தால், ஆண்மையும் அழியும் – பெண்மையும் அழியும். பெண்கள் உள்ளத் துணிவோடு உணர்வு பெற்று எழுந்து விட்டால் பெண்மையும் அழியும். ஆண்மையும் அழியும். அப்படிப்பட்ட உயர்நிலையிலுள்ள பெண்களைப் பார்க்கும் ஆண்களுக்கு அவள் பெண் என்பது தெரியவில்லை (பெண்மை தெரிவதில்லை). அவளின் ஆளுமையும் அதிகாரமும் மட்டுமே தெரிகிறது. அவன் அடங்கிப் போகிறான்; ஆதிக்கம் அற்றுப் போகிறது.
பெண்ணின் உயர்வு என்பது அவள் கல்வி கற்பதிலும், வேலை பெறுவதிலும் அதிகாரப் பீடங்களைக் கைப்பற்றுவதிலுமே அடங்கியுள்ளது. அப்படி பெண்கள் முயன்று முன்னேறி, உயர்நிலை எட்டி, பணிக்குச் செல்லும்போது அந்நிலை அடைய இயலாத பெண்கள், தங்கள் இயலாமையை மறைத்துத் தாங்கள் வேலைக்குச் செல்லாததைக் குலப்பெருமையாகப் பேசுவதுண்டு. இங்குப் பெண்களே பெண்ணுக்கு எதிரியாகின்றனர்.
“எங்க குடும்பத்தில் எவ்வளவு படிச்சாலும் வீட்டோடு இருப்பது தான் பெருமைன்னு நினைப்போம்” “எங்க குலத்துல வேலைக்குப் போறத பெரியவா விரும்பமாட்டா” என்று இயலாமையைப் பெருமையாகப் பீற்றும் பெண்கள் – வேலைக்குச் செல்லும் பெண்களை மறைமுகமாகக் கேவலப்படுத்துகிறார்கள் என்று பொருள். வேலைக்குப் போகாமல் வீட்டோடு இருப்பது பெருமையென்றால் வேலைக்குப் போவது கேவலம் என்றாகிறது!
இப்படிப்பட்ட விமர்சனங்கள் முன்னேறும் பெண்களுக்கு முன்னிற்கும் தடைகள், இப்படிப்பட்ட அற்ப விமர்சனங்களை அலட்சியப்படுத்துவதே, முன்னேறும் பெண்ணின் முயற்சிக்கு வழிவகுக்கும்.
“என் கணவன் சொல்வது தான் எல்லாம்” என்று சொல்லிக் கொள்வதில்கூட, சில பெண்கள் பெருமை கொள்வதுண்டு அப்படியென்றால் அவளுக்கென்று சொந்த அறிவில்லை என்று கொள்ள வேண்டுமே தவிர, அதைப் பெருமையாகக் கொள்ளக் கூடாது. குறிப்பாக, உயர்நிலை அதிகாரத்தில் பெண்கள் அமரும்போது, அவர்களை நோக்கி அவதூறுகளும் வதந்திகளும், விமர்சனங்களும் வரும்.
பெண்களுடைய உயர்வை, வளர்ச்சியைச் சகிக்கமுடியாதவர்கள், அவர்களுக்குக் கீழே வேலை செய்கின்ற ஆண்கள், தன்னுடைய விருப்பத்திற்கு இடங்கொடுக்காததால் வெறுப்படைந்த மேலதிகாரி என்று பல தரப்பு எதிர்ப்பும், தாக்குதலும், தரமற்ற விமர்சனங்களும் உயர்நிலைப் பதவியிலுள்ள பெண்களுக்கு உடன் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.
இவற்றிற்கெல்லாம் பெண் முக்கியத்துவம் கொடுத்தோ, கருத்தில் எடுத்துக் கொண்டோ செயல்பட்டால் அவள் வேலையை விட்டு ஓட வேண்டியே வரும். இவற்றையெல்லாம், “சுற்றுச் சூழல் மாசுகள்” என்று புறக்கணித்து விட்டு, புதிய வேகத்துடன் முன்னேறிச் செல்ல வேண்டும்.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், உயர் அதிகாரத்தில் உள்ள பெண்களின் நடத்தையை, குறிப்பாகப் பாலியல் நடத்தையை, எதிரிகள் குறிவைப்பர். அதுவே விமர்சிக்கப்படும்.
எனவே, பெண்கள் வதந்திக்கும் விமர்சனத் திற்கும் இடம் கொடுக்காத வகையில் தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வது நல்லது. அதையுந்தாண்டி விமர்சனம் வந்தால் மாசாக, தூசாக எண்ணி அலட்சியப்படுத்தி விட்டு தன் அலுவல்களைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
ஒரு பெண் அலுவலர் உழைத்து முன்னேறி உயர்பதவிக்குச் சென்றால் கூட “இவளுக்குப் புரமோஷன் எப்படிக் கிடைத்தது தெரியுமா? அதுதான் சேர்மனோடு இவளுக்கு… அதாய்யா எல்லாம் சேர்மன் கைங்கரியந்தான்”! என்று இல்லாத ஒரு பழியைச் கூச்ச நாச்சமின்றிச் சுமத்துவார்கள். இப்படிப்பட்ட பழியெல்லாம் தனக்கு வந்துவிடாமல் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு வாழ்ந்துவிட வேண்டும் என்ற எண்ணமே பெண்ணை வீட்டிற்குள் முடக்கிப் போடுகிறது. வியாபாரம் நடத்துகின்ற பெண்ணோடு வாடிக்கையாளனைத் தொடர்புபடுத்துவர்.
மேனேஜரோடு டைப்பிஸ்ட்டைத் தொடர்புபடுத்துவர்.
நர்ஸோடு டாக்டரைத் தொடர்புபடுத்துவர்.
இப்படிப்பட்ட பழிகள் பெண்களின் உயர்விற்குச் சவால்கள்தான் என்றாலும், சளைக்காமல், தளர்ந்து போகாமல், பெண் தொடர்ந்து செயல்படுதலே அவளை உயர்த்தும், மாறாக இப்படிப்பட்ட பழியும், அவப்பெயரும் தனக்கு வந்துவிடக் கூடாது என்று ஒருபெண் ஒதுங்குவாளேயானால் அவள் வீட்டுக்குள் அடைபட்டே ஆகவேண்டும்.
அப்படி அஞ்சும் பெண்கள் ஒன்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். வீட்டில் இருந்தாலும் பக்கத்து வீட்டுப் பையனோடு சேர்த்துப் பழி போடுவார்கள் என்பதைப் பெண்கள் உணர்ந்து கொண்டால், பழிக்கஞ்சும் கோழைத்தனம் தானே விலகும்.
“உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி” என்பதை உறுதியாய்க் கொள்ள வேண்டும். முடிந்த மட்டும் எந்தச் சூழலால் பழியும் வதந்தியும் விமர்சனங்களும் வரும் என்பதை ஊகித்தறிந்து அவற்றை விலக்கிச் செயல்படுதல் பெண்ணுக்குக் கவசமாய் அமையும். பெண்ணின் கண்டிப்பும், கட்டுப்பாடும், செருக்கற்ற தீரமும் பிறரை மதித்து நடக்கின்ற பாங்கும் பெண்களை இந்த இழிவிலிருந்து காக்கும்.
மேலும், வேலைக்குப் போகின்ற பெண்கள் பொதுவாகவே ஒழுக்கக் குறைவாக இருப்பார்கள் என்பது போன்ற ஒரு பொதுவான – தவறான கருத்து பரப்பப்படுகிறது.
வெளிவட்டாரப் பழக்கம் என்பது ஒருவரின் மனக்கட்டுப்பாட்டைத் தகர்த்து விடமுடியாது. கட்டுப்பாடுடைய ஒருவர் எத்தகைய சூழலிலும் ஒழுக்கமாக இருக்க முடியும். தவறான ஒருவரைக் கட்டுக்காவலில் வைத்திருந்தாலும் தவறு செய்து விடுவார்.
எனவே, ஒழுக்கம் என்பது வெளிப்பழக்கத்தால் சிதைவதும் இல்லை, கட்டுப்பாடு கலந்து பழகுவதால் கரைவதும் இல்லை.
சபலம் உள்ளவர்களுக்கே சுற்றுச்சூழல் துணை நிற்கும்.
பணியாற்றுகின்றபோது கூட, படித்தவர்களிடமிருந்துதான் பெண்களுக்கு விமர்சனங்களும் தொல்லைகளும் வருகின்றனவே ஒழிய, பாமர மக்களிடமிருந்து வருவதில்லை. சாதாரணமக்கள் பெண்களின் தலைமையை எளிதில் ஏற்றுக்கொள்கின்றார்கள். பணியாற்றுகின்ற வேளையில் செய்யப்படுகின்ற ஒரே செயலுக்கு ஆண் ஒருமாதிரி விமர்சிக்கப்படுவதும் பெண் வேறுமாதிரி விமர்சிக்கப்படுவதும் இன்றைய நடப்பாகும்.
ஓர் ஆண் தன் மேலதிகாரியிடம் பவ்வியமாக நடந்து காரியம் சாதித்தால் அது அவனது சாமர்த்தியம் என்று பாராட்டப்படுகிறது. அதையே ஒரு பெண் செய்தால், அவளது நடத்தை சந்தேகிக்கப்படுகிறது.
மேலதிகாரியோடு ஓர் ஆண் நெருக்கமாக இருந்தால், அவனுக்கு அது செல்வாக்காகக் கொள்ளப்படுகிறது. பெருமையாக எண்ணப்படுகிறது. அதேபோல் ஒரு பெண் இருந்தால் தவறாக விமர்சிக்கப்படுகிறது. எனவே, பெண்ணுக்கு இது போன்ற இடையூறுகள் இருந்தாலும், இவற்றையெல்லாம் தடைகளாக எண்ணித்தான் தாண்டவேண்டுமே தவிர, மடைகளாக மருண்டுவிடக் கூடாது. பெண்ணின் உயர்வு என்பது தடையோட்டந்தான்! தாண்டித்தான் சாதனை படைக்க வேண்டும்!
மேலும் இதுவரை இருட்டறையில் முடக்கப்பட்ட பெண்கள் வெளியுலகத் தொடர்பு என்னும் வெளிச்சத்திற்கு வரும்போது கூச்சம் இருக்கவே செய்யும்.
இருட்டறையில் இருந்து வெளியில் வந்தவன். வெளிச்சத்திற்கு வரும்போது சற்று பார்வை தடுமாறுவது போலத்தான் இதுவும். தொடர்ந்து செயல்படும்போது சரியாகி விடும் என்பது பெண்ணின் தடுமாற்றத்திற்கும் பொருந்தும். கூச்சம் என்பது குறுகிய காலமே. தயங்காது தொடர்ந்தால் மெல்ல மெல்ல வெல்ல முடியும்.
குறிப்பாக, ஒரு மனிதனின் உயர்வும் தாழ்வும், அவனது மனப்பான்மையின் அடிப்படையில் அமையும். தாழ்வு மனப்பான்மை உடையவர்கள் வாழ்வில் உயர்வதும் வெற்றி பெறுவதும் இயலாது. பெண்கள் இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை பெற்றுவிடுவது அவர்களின் உயர்வுக்குப் பெருந்தடையாகும்.
காலங்காலமாக வைக்கப்பட்ட, நடத்தப்பட்ட விதத்தால் பெண்களுக்கு இத்தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது என்றாலும், ஏன் நாமும் மனிதர்தானே! நமக்கும் உணர்வுகள் உண்டே! நமக்கும் ஆற்றலும் ஆசைகளும் உண்டே என்ற கேள்விகளை உள்ளுக்குள் உரசும்போது அவள் சூடேற்றப்படுகிறாள். அச்சூட்டில் அவளது தாழ்வு மனப்பான்மை தகர்ந்துபோகும்.
எளிதில் உணர்ச்சி வசப்படுவதும், கலங்கிப் போவதும், தளர்ந்து போவதும் பெண்களுக்கு இயல்பு என்ற கருத்தைப் பெண்கள் தகர்ப்பதுதான் பெண்ணைப் பெரும் நிலைக்கு உயர்த்தும்.
உடலாலும், உள்ளத்தாலும் பெண் மென்மையானவள் என்ற மனப்பான்மை மாற வேண்டும்; மாற்றிக் கொள்ள வேண்டும்.
முயன்றால் இரண்டும் வலிமை பெறும். ஆண்களே அஞ்சும் அளவிற்கு உறுதிபெறும். இவை வெறும் ஊக்க வார்த்தைகள் அல்ல; உண்மை நிலைகள். வென்று காட்டிய வீராங்கனைகள் அலுவலக, அரசியல் ஆளுமைகள் ஏராளம்! ஒவ்வொரு பெண்ணும் இவர்களை உதாரணமாகக் கொண்டால் உள்ளத்திலும், உடலிலும், உறுதி ஏறும். உயர்ந்து வாழ உந்துதல் கிட்டும்.
பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள் பெண்களின் தற்சார்புக்கும், தடைத்தகர்ப்புக்கும் பெரிதும் துணை செய்யும். ஒவ்வொரு பெண்ணும் அவற்றைக் கட்டாயம் படிக்கவேண்டும்.
பெண்களின் ஆளுமைகளை வளர்க்கும் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து உரமும், தெளிவும் ஏற்றிக் கொள்ளவேண்டும்; தங்களைக் காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறு பெண்கள் தங்களைத் தகஅமைத்துக்கொள்வதே அவர்கள் உயர்வு பெற முதற்படி!
உணர்ந்து செயல்படுங்கள்! உயர்வு பெறுங்கள். வாழ்த்துகள். ♦