“கடவுள் இல்லை” என்கிறார் பெரியார்! எப்படி அவர் சொல்லலாம்? நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. கடவுள் இல்லாமல் நாம் எப்படி உயிர் வாழ முடியும்? கடவுள் இல்லை என்று சொன்னால் நம் உயிர் போய்விடாதா? என்று கடும் பயத்தில் வாழ்ந்த மக்கள் ஒரு காலத்தில் இருந்தனர். இப்போது அந்த எண்ணம் வெகுவாகக் குறைந்து போனது.
அதேபோல நீ எப்படி கடவுள் இல்லை என்று சொல்லலாம்? உன்னைப் போல நிறைய பேரைப் பார்த்துவிட்டோம், கடைசி காலத்தில் ஆன்மிகத்திற்கு வந்துதான் ஆக வேண்டும் எனப் பந்தயம் காட்டுகிறவர்களும் உண்டு. இவ்வளவு ஏன், ஒரு தாளில் எழுதி உறுதிமொழிக் கையொப்பம் கேட்டவர்கள் எல்லாம் உண்டு! இப்படி விசித்திரமான கொள்கையாளர்களையும், மக்களையும் ஒரு சேர நாம் கண்டு வருகிறோம்!
இங்கே அதேபோன்ற ஓர் அனுபவத்தை, கவலைகள் தோய்ந்த கள நிலவரத்தை நாம் பார்க்க இருக்கிறோம். அதேநேரம் தன்மானமும், சுயமரியாதையும் நிறைந்த ஒரு பக்குவமான, பகுத்தறிவு வெற்றியையும் சந்திக்க இருக்கிறோம்!
ஆம்! படத்தில் இருப்பவர் பன்னீர்செல்வம்! அவரைச் சந்தித்து நேர்காணல் செய்து அறிந்த செய்திகளைத் தொகுத்துத் தருகிறோம்.
மூன்று வயதில் முடக்கம்!
வீட்டிற்கு ஒரே பிள்ளை. பெற்றோர் பெயர் பெரியகருப்பன் – மீனாள். விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைக்குத் திடீரென காய்ச்சல் ஏற்படவே ஓடோடிச் சென்றுள்ளனர் மருத்துவமனைக்கு! அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. ஆமாம், இளம்பிள்ளை வாதம் ஏற்பட்டுள்ளது, இனி இரண்டு கால்களும் வேலை செய்யாது எனச் சொல்லிவிட்டார்கள்.
ஆக ஓடி, ஆடி விளையாடிய பிள்ளையை, மாற்றுத் திறனாளி என அழைக்கும் சூழலுக்குக் கொண்டு வந்துவிட்டது அவரது வாழ்க்கை! என்றாலும் எந்த விதமான மாற்றுத் திறனாளியோ, ஏன், அதிகபட்சம் பார்வையே தெரியாமல் போனாலும், படிப்பு மட்டும் இல்லாமல் இருக்கக் கூடாது என வலியுறுத்துகிற மண் நம் தமிழ் மண்! அந்த வகையிலே தனது 5ஆம் வயதில் முதல் வகுப்பை எட்டுகிறார் பன்னீர்செல்வம். தம் வீட்டிலிருந்து மண்ணிலும், கற்களிலும், தார்ச் சாலைகளிலும் தவழ்ந்து, தவழ்ந்து பள்ளிக்குச் சென்று வருகிறார்.
கம்பு ஊன்றிச் சென்று கல்லூரி முடித்தவர்!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே இருக்கும் திருமணவயல் தான் அவரது சொந்த ஊர். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தேவகோட்டையில் ஒரு பள்ளியில் தங்கிக் கொண்டே படிக்கிறார். பிறகு ஒன்பது முதல் பனிரண்டாம் வகுப்பு வரை வேறொரு பள்ளியில் படித்து, கல்லூரியில் இளங்கலை வணிகவியலும் முடிக்கிறார். தவழத் தொடங்கிய அவரது வாழ்க்கை, பிற்பாடு கம்பு ஊன்றி நடக்கும் நிலைக்கு வருகிறது.
தங்கள் கிராமத்தில் 5ஆம் வகுப்பு வரை தான் படிக்க முடியும், தம் மகனுக்கு அது போதாது என, அவரின் அம்மா வீட்டையே தேவகோட்டை நகருக்கு மாற்றி வந்துவிட்டார்; தம் மகனையும்
பட்டதாரி ஆக்கிவிட்டார்!
ஒரு நாத்திகர் மலர்கிறார்!
மாற்றுத் திறனாளிகள் குறித்து நாமும் சிந்தித்திருப்போம் அல்லவா? அவசரமாகக் கழிவறைக்குச் செல்ல வேண்டி வந்தால் என்ன செய்வார்கள்? அதிகமான படிகள் இருந்தால் எப்படி ஏறுவார்கள்? கல்லூரி முடித்து, வீட்டுக்குச் செல்ல எத்தனை மணி நேரங்கள் பிடிக்கும்? எங்காவது ஒரு கலவரம் நடந்தால் எப்படி அவர்களால் தப்பித்து ஓட முடியும்? இப்படி நினைத்துக் கொண்டே இருந்தால் நமக்கு நிலை கொள்ளாது.
பனிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டு அண்ணன் ஒருவர், அண்ணல் அம்பேத்கர் நூல் ஒன்றை அவரிடம் வாசிக்கக் கொடுக்கிறார். வாசிப்பில் நேசிப்பு ஏற்படவே, தேவகோட்டை நூலகம் செல்லத் தொடங்குகிறார். அங்கு முதன்முதலில் “விடுதலை” நாளிதழைப் பார்க்கிறார், பிறகு படிக்கிறார், தொடர்ந்து சென்று அதை வாசிக்கிறார். ஏதோ ஒரு வேதியியல் மாற்றம் அவருக்குள் ஏற்படுவதை உணர்கிறார். பிறகென்ன… பெரியாரைத் தேடித் தேடி அவரின் மனக்கண்கள் பயணிக்க, ஒரு நாத்திகராக, ஆய்ந்தாழ்ந்து சிந்திக்கும் ஒரு பகுத்தறிவாளராக மலர்கிறார்.
இயக்க வாழ்க்கை!
இப்போது அவருக்கு வயது 49. இங்கே படத்தில் இருப்பது தான் அவரின் தற்போதைய தோற்றம்! கல்லூரியில் படிக்கிற காலத்திலேயே, காரைக்குடியில் கழக நிகழ்ச்சிகள் நடந்தால் போகத் தொடங்கியுள்ளார். யாருடைய அறிமுகமும் இவருக்கு இல்லை. இவர் எந்த நிறுத்தத்தில் பேருந்தில் ஏறுவார், எங்கே இறங்குவார், கூட்டம் நடக்கும் இடத்திற்கு எவ்வளவு தூரம் நடப்பார் என்பதை இப்போது நினைத்தாலும் நமக்கு வியப்பே மிஞ்சும். ஆனால், பன்னீர்செல்வத்தின் கொள்கை உணர்வு எல்லாவற்றையும் விஞ்சும்!
ஒருமுறை 1997இல் காரைக்குடி பெரியார் சிலை அருகில் நடந்த கூட்டத்திற்குச் செல்கிறார். அங்கு சாமி.சமதர்மம் அவர்களது அறிமுகம் கிடைக்கிறது. அவர், அவரைத் தேவகோட்டை தோழர் வி.சி.வில்வம் அவர்களிடம் அறிமுகம் செய்த பிறகே தமது இயக்க வாழ்க்கைத் தொடங்கியதாகப் பன்னீர்செல்வம் நினைவு கூர்கிறார். பிறகு சுற்று வட்டார நிகழ்ச்சிகளுக்குத் தோழர்களின் உதவியோடு சென்று வந்துள்ளார். புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாநாடுகளுக்குச் சென்று வந்ததை எல்லாம் பெருமையோடு மனதில் இருத்துகிறார்!
தாயுடன் போராட்டம்!
இப்படியான நாத்திகர் வாழ்வை அவர் விரும்பியவாறு வாழ்ந்தாலும், இந்தச் சமூகம் அவ்வளவு எளிதில் விட்டுவிடுமா? முதலில் அவரின் தாய் இதை அறவே ஏற்கவில்லை. கடவுள் இல்லை என்று சொல்வதைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இப்படியான நிலையில் தான், தம் தந்தையை இழக்கிறார் பன்னீர்செல்வம். உறவினர்கள், கிராமத்தினர் சூழ்ந்து இருக்க, இறுதிக் காரியங்கள் தொடங்குகின்றன. எந்த ஒன்றிலும் கலந்து கொள்ளாத பன்னீர்செல்வம், இடுகாட்டிற்குச் சென்று மொட்டையும் அடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
நிகழ்வுகள் முடிந்து வீட்டுக்கு வந்த மகனை, கோபம் கொண்டு விளக்கமாற்றால் அடித்துள்ளார் அம்மா! சுயமரியாதை உணர்வு கொண்ட பிள்ளை சிறிது நேரத்தில் காணாமல் போய்விட்டார். கலகம் பிறந்தால்தான் வழி பிறக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம். ஒரே மகன் காணாமல் போய் விட்டானே எனத் தாய் கதறியுள்ளார். இரண்டு, மூன்று தினங்கள் கழித்து, பன்னீர்செல்வம் வீடு திரும்பியுள்ளார். கட்டி அரவணைத்த அம்மா, ஒரு சமாதான முயற்சி மேற்கொண்டுள்ளார்.
சமூகம் எப்போது மாறும்?
நீ எந்தக் கொள்கையிலும் இரு; கடவுள் இல்லை என்பதிலும் உறுதியாய் இரு! ஆனால், அதை மனசிலேயே வைத்துக் கொள், வெளியில் பேசாதே என்று கூறியுள்ளார். கால ஓட்டத்தில் தாயும் மறைந்து விட, தனியொருவராய் வாழ்ந்துள்ளார் பன்னீர். இப்படியான நிலையில் ஆரோக்கிய செல்வி என்கிற பெண், நமது பன்னீர்செல்வத்தைத் திருமணம் செய்துகொள்ள முன் வருகிறார். அதுவும் நல்லபடியாக 2000ஆம் ஆண்டில் முடிந்தது! ஒரு பையன், பெயர் சாக்ரடீஸ், இயந்திரவியல் பொறியியல் (Mechanical Engineering) முடித்து, பெங்களூரில் வேலை செய்கிறார். ஒரு மகள், பெயர் நிவேதா, காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் ஆடை வடிவமைப்பு (Fashion Technology) தொடர்பான கல்வி பயில்கிறார்.
பன்னீர்செல்வம், தேவகோட்டை வட்டாட்சியர் அலுவலக வாயிலில் படிவம் பூர்த்தி செய்தல், விண்ணப்பங்கள் எழுதிக் கொடுத்தால் பணியைச் செய்து வருகிறார். சற்றொப்ப 25 ஆண்டுகளுக்கு மேலாக இதே பணி தான். அவருக்கு அருகில் இருப்பவர்கள் சொல்கிறார்கள், “பன்னீர் செல்வம் எப்போது பார்த்தாலும் கொள்கைதான் பேசிக் கொண்டிருப்பார், யாரும் கேட்பதில்லையே என வருந்துவார், இந்தச் சமூகம் எப்போது மாறும் என ஏங்குவார்” என்கிறார்கள். நாம் அவரது ஏக்கத்தை எதிர்பார்ப்பை இந்த நேர்காணலில் பதிவு செய்தால், அவரோ இந்தச் சமூகத்தை நினைத்துக் கவலைப்படுகிறார்.
பெரியார் கருத்தின் வீரியம் பாரீர்!
“தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டேன்போன்
சின்னதொரு கடுகு போல் உள்ளங் கொண்டோன்” என்கிறார் பாரதிதாசன்! மாற்றுத் திறனாளியாக இருந்தாலும், சமூக உணர்வில் எவ்வளவு உயர்ந்து நிற்கிறார் தோழர் பன்னீர்செல்வம்!
பெரியார் சிந்தனை ஒரு மனிதனை எப்படி வாழ வைக்கிறது பாருங்கள்!
நீ இப்படியெல்லாம் பேசுவதால்தான் கடவுள் உன்னை நொண்டியாக ஆக்கிவிட்டார் என இவரின் மனதில் சொல் அம்புகளை ஏவியவர்கள் பலராம்! இவர் பதற்றப்படவே மாட்டாராம்! “கடவுள் நம்பிக்கைக்கும், காலுக்கும் தொடர்பில்லை; அது போலியோ வைரஸ் மூலம் வருவது. இதை மருத்துவர்கள் தான் சரி செய்ய முடியுமே தவிர, கடவுளால் குணப்படுத்த முடியாது; கடவுள் என்று இருந்தால் என்னை நடக்க வைக்கட்டும் பார்க்கலாம் என்பாராம்! இன்னொரு நண்பர், கண்டதேவி தேர் ஓடாத காரணத்தால் தான் மழை பெய்யவில்லை என்றாராம். அப்படியானால் வானிலை அறிக்கையில் இதை ஏன் சொல்லவில்லை என்று இவர் கேட்டாராம்.
பன்னீர் செல்வங்கள் பரவட்டும்!
இப்படியாக அவரது விவாதங்கள் சுவையாகவும், நறுக்கென்றும் உள்ளது. இப்படியான நிலையில் இவரைக் கோபப்படுத்தும் பொருட்டு ஒருவர், பெரியாரின் சொத்துகளை எல்லாம் உங்கள் ஆசிரியர் தானே வைத்துள்ளார் என்றாராம். அதற்கு பன்னீர்செல்வம் சொன்னாராம், “பெரியார் மூன்று, நான்கு நிறுவனங்களை மட்டுமே தொடங்கினார். ஆசிரியர் தான் இப்போது இருக்கும் அனைத்தையும் உருவாக்கினார். எனவே பெரியாரின் சொத்தைப் பன்மடங்கு பெருக்கியவரே ஆசிரியர் தான் எனப் பதில் அளித்துள்ளார்.
ஊனமுற்றோர் என்னும் பதத்தை இனி பயன்படுத்தக்கூடாது என, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ‘மாற்றுத் திறனாளி’ என்கிற பெயரைச் சூட்டினார். நம்முடைய பன்னீர்செல்வம்
திறனாளிகளில் ஒரு மாற்றத்தை உருவாக்கியவர்!
“பணம் பாதாளம் வரை பாயும், ஈட்டி எட்டியவரை பாயும், எங்கள் அய்யா பெரியாரின் கொள்கை அண்ட, பிண்ட சராசரங்களையும் தாண்டி, அதற்கு அப்பாலும் பாயும்” என்பார் பட்டுக்கோட்டைஅழகிரி! அதற்கு எடுத்துக்காட்டுகளாக இருப்பவர்கள் நம் பன்னீர்செல்வம் போன்றவர்கள்! ♦