சென்னையைச் சேர்ந்த ஆறு வயதான மாணவி சஞ்சனா வில் அம்பு எய்தல் விளையாட்டில் சர்வதேச அளவில் பல சாதனைகள் புரிந்து வருகிறார். பி.சஞ்சனா தன் மூன்று வயதிலேயே வில் அம்பு எய்தல் விளையாட்டில் 8 மீட்டர் தொலைவு இலக்காக வைத்து 1,111 அம்புகளை எய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அவர் மூன்றரை மணி நேரத்தில் இந்தச் சாதனையை செய்தார். சஞ்சனா 5 முறை வில்வித்தை விளையாட்டில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கின்னஸ் சாதனை படைத்த பி. சஞ்சனாவை அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் சஞ்சனாவின் விளையாட்டுத் திறமையை மேம்படுத்தும் வகையில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வில்லினை வழங்கினார். தற்போது எட்டு வயதுடைய சஞ்சனா போட்டிகளில் பங்கேற்க பயிற்சிப் பெற்று வருகிறார்.
வில் வித்தை விளையாட்டு வீராங்கனை பி.சஞ்சனா கூறுகையில், என் இரண்டாவது பிறந்த நாளுக்கு என் அப்பாவின் நண்பர் பிளாஸ்ட்டிக் வில் ஒன்று பரிசாக வழங்கினார். அந்த வில்லை எப்போதும் நான் கையில் வைத்துக் கொண்டிருப்பேன். என் பெற்றோர் எனக்குத் தெரியாமல் அந்த வில்லை உடைத்துவிட்டு என் அறையில் (Room) போட்டுவிட்டனர். உடைந்த வில்லினை நான் பேப்பர் போட்டு ஒட்டினேன். சிறிது காலம் கழித்து என் தந்தை என்னை கடைக்கு அழைத்துச் சென்றார். வில் மட்டும் வாங்கிக்கொடுக்காமல் ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டே இருப்பார். கலர் நல்லா இல்லை, பணம் ரொம்ப அதிகமா இருக்கு என சொல்லிக்கொண்டே இருப்பார். நான் உண்டியலில் பணம் சேர்த்து வைத்திருக்கிறேன், நானே வாங்கிக்கொள்கிறேன் என்று நான் சொன்ன போதுதான், என் அப்பா- அம்மாவிற்கு எனக்கு வில் விளையாட்டில்(வில் வித்தை) விருப்பம், ஆர்வம் உள்ளது எனத் தெரிந்துகொண்டனர். பிறகு நான் பயிற்சி பெற பலரிடம் கேட்டனர். சிறிய வயதுதான் ஆகிறது, 10 வயதிற்கு மேல் வாங்க என சொன்னார்கள். இணையதளத்தில் எல்லாம் தேடிப் பார்த்தோம் சரியான இடம் கிடைக்கவில்லை. என் தந்தையின் நண்பர் வழிகாட்டுதலின்படி பயிற்சியாளரிடம் வில் ஏய்தல் பயிற்சி கற்றுக்கொள்ள ஆலோசனை வழங்கினார்.
நானும் என் பெற்றோரும் போய் பயிற்சியாளரைப் பார்த்தோம். என்னைப் பார்த்ததும் பயிற்சியாளர் என் கண்ணைப் பார்த்துச் சொன்னார். நிச்சயம் இவர் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வார். உயர்நிலைக்குச் செல்வார் எனக் கூறினார். பயிற்சியாளர் ஒரு வில் கொடுத்தார். அதை வைத்து shoot செய்தேன். வில்லைக் கொடுமா எனக் கேட்டார், அந்த வில்லை நானே வைத்துக்கொண்டு கொடுக்கமாட்டேன் எனச் சொன்னேன். அதற்கு அவர் நீயே இந்த வில்லை வைத்துக்கொள் என்றார் எனக் கூறும் இவர், தற்போது 4ஆம் வகுப்பு படிக்கிறார். கல்வியிலும் சிறந்து விளங்குகிறார். தன் எதிர்கால இலக்குப் பற்றிக் கூறுகையில் “நான் 356 விருதுகளைப் பெற்றுள்ளேன். எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று தங்கம் வெல்ல வேண்டும் என்பது எனது இலக்கு. அதுவே எனக்காக உழைத்த என் பெற்றோர், பயிற்சியாளர்களுக்க நான் தரும் பிரதிப்பலன் ஆகும்” எனக் கூறுகிறார். படிப்பிலும் விளையாட்டிலும் சாதனைகளை புரிந்துவரும் இவர் பெண்களுக்கு முன்னுதாரணமாகவும், பெற்றோர்களுக்கும் நமக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் சாதனையாளர் ஆவார். n