அய்க்கிய நாட்டு மன்றத்தின் தெற்காசியாவின் முக்கிய அதிகாரி ஹிடோகிடென் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சந்தித்து, 27.06.2012 அன்று இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்தும், தனியீழத்தைத் தவிர வேறு வழியில்லை என்பதை வலியுறுத்தியும் 50 நிமிடங்கள் உரையாடினார்.
ஹிடோகிடென் தெற்கு ஆசியாவின் முக்கிய அதிகாரி ஆவார். இவர் முன்னர் மியான்மா (பர்மா) சமாதானத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.அய்க்கியநாட்டுச் சபையின் சிறப்புத் தூதுவராக அங்கு சென்று ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டவர். உலக அரசுகள், முக்கியமாக அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து போன்ற அரசுகள் சேர்ந்து இது போன்ற அதிகாரியை அனுப்பினால் தான் ஈழத் தமிழர்களுக்கு ஒரு முடிவான தீர்வு கிடைக்கும்.
கி.வீரமணி அவர்கள் இலங்கையில் அங்குள்ள இராணுவ ஆதிக்கம், தொடர்ந்து நடக்கும் வன்கொடுமைகள், பத்திரிகைச் சுதந்திரம் இல்லாமை இவற்றை விவரமாக எடுத்துரைத்து தனி ஈழம் ஒன்றே முடிவான தீர்வாக அமைய முடியும் என்பதை எடுத்துச் சொன்னார்.
அங்கு நடக்கும் அத்துணை வன்முறைகளையும் நன்கு அறிந்தவர் இவர். தெற்கு ஆசியா முழுவதற்கும் இவர் பொறுப்பானவர். தெற்கு ஆசியாவின் அரசியல் விவகாரங் களுக்குத் தலைமை அதிகாரியாவார். இலங்கையில் நடக்கும் கொடுமைகளை நன்கு அறிந்தவர்.
இத்தனைக் காலமும் தீவிரவாதம் என்று இலங்கை அரசு சொன்னதை நம்பிய அமெரிக்கா மற்ற நாடுகள் இப்போதுதான் முழு உண்மையைப் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.இது மக்கள் போராட்டம்.
மக்கள் தங்கள் மொழி, இனம், படிப்பு, வேலை வாய்ப்பு என்று அனைத்து உரிமைகளுக்காகவும் போராடினர். இவற்றை அடைய அவர்கள் பெரும் விலையை உயிராக, மானமாக, வதை யாகக் கொடுத்துள்ளனர் என்பதை உலகம் இப்போது தான் உணரத் தொடங்கியுள்ளது என்பதையும் கிழக்கு தைமூர், கோசோவா போன்ற நாடுகளின் விடுதலை போன்று ஈழத்தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தினார். டெசோ இயக்கத்தைப் பற்றியும் எடுத்துச் சொன்னார்.
மேலும், உலக அரசுகளை, முக்கியமாக இந்திய அரசையும் நீங்கள் அதை உணர வைக்கவும், செயல்படவும் செய்யுங்கள் என்று கூறினார். அப்போது தான் அய்க்கிய நாட்டுச் சபை எதையும் செய்ய முடியும் என்பதை எடுத்துக் கூறினார்.
ஆகவே உலகெங்கும் வாழுந்தமிழர்கள் தாம் வாழும் நாடுகளின் அரசுகளிடம் உண்மைகளை உணரச் செய்வோம். அவர்களின் கண்களையும், உள்ளங்களையும் திறக்கப் பாடுபடுவோம். டெசோவின் முயற்சியே அது தான் என்று கூறி விடை பெற்றார்.
திரு ஹிடோகிடென் அய்க்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரத் துறையின் மூத்த அரசியல் விவகார அதிகாரியாக தற்போது இருக்கிறார். தெற்கு ஆசியா மற்றும் அய்க்கிய நாடுகள் -ஆசிய உறவுகள் (குறிப்பாக மியான்மா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ்) பற்றிய பகுதிகளில் நிபுணத்துவம் பெற்றவராவார்.
அரசியல் விவகாரத் துறையின் ஆசிய பசிபிக் பகுதியில் தெற்கு ஆசியாவின் குழுத் தலைவராக அவர் இப்போது பணியாற்றி வருகிறார். நேபாளத்தில் அய்க்கிய நாடுகள் மேற்கொண்டுள்ள செயல் திட்டத்திற்கு அரசியல் மற்றும் அடிப்படையான ஆதரவு அளிக்கும் முயற்சிகளில் அவர் இப்போது ஈடுபட்டுள்ளார்.
இதற்கு முன், அமைதி மற்றும் பாதுகாப்பு பகுதியில் அய்க்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பை பலப்படுத்தும் பணியில் பணியாற்றி வந்துள்ளார். அதன் மூலம் 2006 இல் அய்க்கிய நாடுகளில் நோக்குநராக அவர் ஆனார். 2001–_05 காலத்தில் மியான்மருக்கான அய்க்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் சிறப்புத் தூதுவரின் மூத்த ஆலோசகராக அவர் இருந்தார்.
இக்காலகட்டத்தில் மியான்மார் நாட்டில் அமைதி நிலவவும், மக்களாட்சி மலரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவர் தனது முதுகலைப் பட்டத்தை கார்னல் பட்டப் பள்ளியிலும், பட்டப்படிப்பை சேடன் ஹால் பல்கலைக் கழகத்திலும் பெற்றவர். மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்பே ஃபூ ஜென் கேத்தலிக் பல்கலைக் கழகத்திலும் பயின்றவர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவரிடம் தமிமிழக் கோரிக்கை எடுத்துக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.