நாராயண குருவின் 150ஆம் பிறந்த நாள் விழா
உரத்தநாடு வட்டம் கண்ணந்தங்குடி மேற்கு ஊராட்சி மா.அப்பு_ சாரதாம்பாள் ஆகியோரின் மகனும் அப்போதைய ஒரத்தநாடு நகர செயலாளருமான (தற்போதைய தஞ்சை மாவட்ட திராவிடர் கழக செயலாளர்) வழக்குரைஞர் அ.அருணகிரிக்கும், கண்ணந்தங்குடி மேற்கு(வடக்கு) சரவணன் _ அஞ்சம்மாள் ஆகியோரின் மகள் ஆனந்தி ஆகியோருக்கும்; அ.அருணகிரியின் சகோதரர் அ.திருநாவுக்கரசு, உரத்தநாடு து.மலையப்பன்_ புஷ்பவள்ளி ஆகியோரின் மகள் ம.யசோதாதேவி ஆகியோருக்கும் ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 10.30 மணியளவில் உரத்தநாடு நகர் விசாலாட்சி திருமண அரங்கில் இணையேற்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மணமக்களை வாழ்த்தி கழக செயலவைத் தலைவர் ராஜகிரி கோ.தங்கராசு, கழகத் துணைப் பொதுச் செயலாளர் இரா. குணசேகரன், தஞ்சை கோட்ட பிரச்சாரக்குழு செயலாளர் இராயபுரம் இரா. கோபால், மாநில இளைஞரணி அமைப்பாளர் இரா. ஜெயக்குமார் ஆகியோர் பேசினர். நிறைவாக, இணையர்களை உறுதிமொழி ஏற்கச்செய்து, சுயமரியாதைத் திருமணம் பற்றி விளக்கவுரை ஆற்றினோம்.
திருச்சி மாநகர திராவிடர் கழக மேனாள் தலைவரும் தற்போதைய பொதுக்குழு உறுப்பினருமாகிய பெரியார் பெருந்தொண்டர் போட்டோ மு.பாலு (வயது 76) அவர்கள் 2.8.2004 அன்று பிற்பகல் திருச்சியில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்தினோம். இளம் வயது முதற்கொண்டு கழகத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டு உழைத்தவர் ஆவார். சிறிது காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அப்பொழுது மருத்துவமனைக்குச் சென்று நாம் உடல்நிலை விசாரித்து வந்தோம். கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் அவரது இல்லம் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்கள். மறைந்த அவரது இல்லத்தார்க்கு இரங்கல் செய்தி அனுப்பினோம்.
புலவர் ந,இராமநாதன்
சென்னை, அசோக்நகர் என். மோகன்_ மோ.தர்மா ஆகியோரின் மகனும், மறைந்த தஞ்சை சாமி.நாகராஜன் அவர்களின் பெயரனுமான மோ. ரவிக்கும், திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் கிருட்டினகிரி மு. துக்காராம்_ கி.கல்யாணி ஆகியோரின் மகள் து. சங்கீதாவுக்கும் 29.7.2004 அன்று ஓசூரில் திருமணம் நடந்தது. மணமக்கள் இருவரும் 4.8.2004 அன்று சென்னை, பெரியார் திடலுக்கு வந்து எம்மிடம் வாழ்த்துப் பெற்றனர். கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை அவர்களும், மணமகனின் தந்தை மோகன் அவர்களும் உடன் இருந்து வாழ்த்தினர்.
6.8.2004 மு.க. மேனாள் அமைச்சர் கே.என். நேரு அவர்களின தாயார் கே.என். தனலட்சுமி அம்மாள் சில நாட்களுக்கு முன் திருச்சியில் மறைவுற்ற செய்தியறிந்து, 06.08.2004 அன்று மாலை அவரது இல்லத்திற்குச் சென்று ஆறுதல் கூறினோம். திருச்சி மாநகராட்சி துணை மேயர் அன்பழகன், ‘வீகேயென்’ கண்ணப்பன், பெரியார் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ப. சுப்பிரமணியம் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
பெரியார் பேருரையாளர் பேராசிரியர் புலவர் ந.இராமநாதன் அவர்கள் 10.8.2004 தஞ்சை வட்டம் பூதலூரைச் சார்ந்த சித்திரக்குடி கிராமத்தில் தமது 85ஆம் வயதில் மறைவுற்றார்.
கரந்தை தமிழ்க்கல்லூரி, காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லூரி ஆகியவற்றில் முதல்வராக இருந்த காலத்திலிருந்து, தந்தை பெரியாரியலில் ஆழ்ந்து கற்றுத் துறை போகிய அறிஞராக விளக்கமுற்றார்கள். ஏராளமான மாணவர்களை இத்திசையில் உருவாக்கினார்.
ஓய்வு பெற்றபின் சென்னை பெரியார் திடலையே உறைவிடமாக்கிக் கொண்டு 20 ஆண்டுகளுக்குமேல் பெரியாரியல் பணிகளை மேற்கொண்டார்.
பெரியார் அஞ்சல் வழிக் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்று பெரியார் சிந்தனைகள் பட்டயம் வகுப்புகளை நடத்தி ஏராளமான மாணவர்களை உருவாக்கினார்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் அணுக்கத் தோழராக விளங்கி, கவிஞரின் கவிதைகளுக்குத் தலை சான்ற விரிவுரையாளர் இவர்தான் என்று அனைவரும் ஏற்கும் நிலைக்கு உரியார்!
மூப்பின் காரணமாக அய்ந்து ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊருக்குச் சென்றார். தந்தை பெரியார் பற்றி ஓர் அரிய நூல் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தருணத்திலேயே இறுதி மூச்சையும் துறந்தார்.
வட்டாரத்திலே செம்மாந்தவராக, பெரியாரியல் சிந்தனையில் பேருரையாளராக விளங்கினார் _ கருஞ்சட்டை மாவீரராகவே உலவினார்.
அவர் மறைந்தாலும் அவர் பணியும், தொண்டும், ஆழமான எழுத்துகளும் என்றென்றைக்கும் நம்மோடு நிறைந்து நிற்கும். அவர்தம் தொண்டுக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!!
வாழ்க பெரும்புலவர் இராமநாதனார்! என்று எமது இரங்கலுரையில் குறிப்பிட்டிருந்தோம். அவரது நூற்றாண்டு விழாவை தஞ்சையில் திராவிடர் கழகம் நடத்தியது.
திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் மானமிகு ‘ராஜகிரி கோ. தங்கராசு, தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் மானமிகு கு.வடுகநாதன் ஆகியோர் தலைமைக் கழகத்தின் சார்பில் தோழர்களுடன் சென்று இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழக சேலம் மாவட்ட மேனாள் தலைவர் புலவர் பி. அண்ணாமலை அவர்களின்70ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, 15.8.2004 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் மன்றத்தில் தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் புலவர் அண்ணாமலை மகன் அ.ச. இளவழகன் வரவேற்றுப் பேசினார்.
அடுத்து புலவர் அண்ணாமலை _ சரசு ஆகியோரின் மகள் வழக்குரைஞர் அருள்மொழியின் மகள் குயில்மொழி புரட்சிக் கவிஞரின் பாடலான “நூலைப்படி, சங்கத் தமிழ் நூலைப்படி என்ற பாடலை மிக அழகாகப் பாடினார்.
புலவர் பி. அண்ணாமலை அவர்களின்70ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 15.8.2004
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க. பார்வதி, பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் மற்றும் சுயமரியாதைத் திருமண நிலைய மாநில அமைப்பாளர் திருமகள், கவிஞர் முனியமுத்து, சென்னை கோட்டப் பிரச்சார அமைப்புக் குழுத் தலைவர் ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், புலவர் சுவை. மருதவாணன் (புலவர் அண்ணாமலை அவர்களின் தம்பி), கவிஞர் ஈரோடு தமிழன்பன், கழகத் துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை ஆகியோர் உரையாற்றினர்.
நூற்றாண்டுக் காலம் வாழ்க்கை இணையர்களான புலவர் பி. அண்ணாமலை, சரசு ஆகிய இணையர்கள் கொள்கை வழிகாட்டிகளாகத் திகழ்ந்திருக்கின்றார்கள்.
“நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்” என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்னதற்கேற்ப ஒரு நல்ல பல்கலைக் கழகத்தை உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கக் கூடியவர்களுக்கு இங்கே விழா நடைபெறுகின்றது. புலவர், அடலேறு என்று சொல்லக்கூடிய அளவுக்கு சிறப்பானவர் புலவர் அண்ணாமலை அவர்கள்.
என்றைக்கும் தந்தை பெரியார் கொள்கைதான் எனக்கு என்பதிலே மாறுபாடு இல்லாமல் இன்றைக்கும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கக்கூடிய புலவர் அண்ணாமலை அவர்களும், தமிழ் மறவர்தான் என்பதை அன்றைக்கு எடுத்துச் சொன்னோம். விழாக்குழு சார்பாகச் செய்வதைவிட திராவிடர் கழகத்தின் சார்பிலேயே அவர்களுக்கு அந்தச் சிறப்பைச் செய்வதுதான் மிகப் பெரிய பெருமை என்று அறிவித்த நிலையிலே, இன்றைக்கு அவர்களுக்கு 70ஆம் அகவையைக் காணக்கூடிய நிலையிலே, 50ஆம் ஆண்டு திருமண நாளை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற இந்தக் கால கட்டத்திலே ‘தமிழ் மறவர்’ என்ற சிறப்பான விருதினை திராவிடர் கழகம் அவர்களுக்கு வழங்கிப் பெருமைப்படுத்துகிறது.
சேலத்தில் மாநாடு நடத்துவதற்கு புலவர் அவர்களைத் தலைவராக நியமித்து நடத்தினோம். அந்த மாநாட்டின் ஒரு பணிக்காக ஈடுபட்டதால் காவல்துறையினர் இவரைக் கைது செய்து கையில் விலங்கு மாட்டி அழைத்துப் போனார்கள். இதைப்பற்றி ஆத்திரப்பட்டு நாம் ‘விடுதலை’யிலே கண்டித்து எழுதினோம்; பேசினோம்.
“நாங்கள் கொடுத்த விருது “தமிழ் மறவர்” என்பதற்கு என்ன அடையாளம் என்றால், இந்த விருதுக்கு (Justification) ஜஸ்டிபிகேசன் எங்கே” இருக்கிறதென்றால், இந்தப் புத்தகத்திலே உள்ள இந்தக் கைவிலங்கிடப்பட்ட படத்தில் இருக்கிறது.
இரு இணையர்களுக்குப் பாராட்டு விழா என்று நினைக்காதீர்கள்; இந்த இயக்கம் பெற்றிருக்கிற வெற்றிக்கு ஓர் அளவுகோல் என்று நாம் பறைசாற்றுகின்ற விழா! இது வெறும் பாராட்டு விழா அல்ல; கொள்கை வெற்றியைப் பறைசாற்றுகின்ற விழா! இப்படிப்பட்ட விழாக்களை வேர்களுக்கு விழுதுகள் எடுக்கின்றன என்று எமது உரையில் குறிப்பிட்டேன்.
மேலவாளாடி மே.க. தமிழரசன் மறைவு செய்தியறிந்து துயருற்றோம். அவரது பணி பற்றி இரங்கல் அறிக்கை வெளியிட்டோம்.
தனியார் துறைகளில் இடஒதுக்கீடு மாநாடு மற்றும் இந்தியாவில் முதன் முதலில் தனியார் துறைகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்திய மகாராட்டிர முதலமைச்சர் சுசில்குமார் ஷிண்டே அவர்களுக்குப் பாராட்டு விழா சென்னையில் ராஜா முத்தையா மன்றத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 27.08.2004 காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு நாம் ஆற்றிய உரையில்,
“இந்தியாவிலேயே தனியார்த் துறைகளில் இடஒதுக்கீட்டை சட்டரீதியாக 52 சதவிகித இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்த மகாராட்டிர முதலமைச்சர் சுசில்குமார் ஷிண்டே அவர்களே, உங்களை திராவிடர் கழகத்தின் சார்பில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களின் சார்பாக பாராட்டி நன்றி தெரிவித்து அன்புடன் வரவேற்கிறோம்.”
இத்தகைய மாநாட்டினை திராவிடர் கழகம் நடத்திட எண்ணியது. இப்பொழுது பாட்டாளி மக்கள் கட்சி இதனை நடத்தியுள்ளது.
தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு கூடாது என்பவர்கள் யார் என்றால், இட ஒதுக்கீடு பொதுத் துறைகளிலும் கூடாது என்று சொல்லி வந்தவர்கள்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.
90 சதவிகித மக்களான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் பிரிவு மக்களான நாம் இப்பொழுது இட ஒதுக்கீட்டுக்காகப் போராடுகிறோம்.
பொதுத்துறைகள் தனியார் துறைக்கு மாறும்போது, பொதுத்துறையில் இருந்த அதே இட ஒதுக்கீடு தனியார் துறைகளிலும் கொண்டு வருவதில் என்ன தவறு? என்ன தடை? கொண்டு வருவதுதானே நியாயம்!
தனியார் துறை ஆதிக்கம் உள்ள நாடு உலகிலேயே அமெரிக்காதான். அங்கு இடஒதுக்கீடு இருக்கிறதே, அதற்குப் பெயர் Affirmative Action என்பதாகும்.
தனியார் துறைகளில் அமெரிக்காவில் இட ஒதுக்கீடு அமலில் உள்ளதால், அங்கு தகுதி, திறமை போய்விட்டதா?
டாக்டர் பி.எம்.சுந்தரவதனன் சிலையைத் திறந்து வைக்கிறார் ஆசிரியர்.
பொதுத் துறைகளில் இந்தியாவில் இடஒதுக்கீடு இருப்பதாலும் என்ன இங்கு கெட்டுவிட்டது?” என்று தனியார் துறையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தினோம்.
தஞ்சாவூரில் 23.8.2004 அன்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் மற்றும் அக்கட்சித் தோழர்களின் நடைப் பயணத்தை வரவேற்று நாம் உரையாற்றினோம்.
அவ்வுரையில், “உங்களுடைய நடைப்பயணம் ஒருக்காலும் நிச்சயமாக வீணாகாது. மாவோவின் நடைப் பயணம் எப்படி சீனத்தில் ஒரு மிகப் பெரிய புரட்சியை உண்டாக்கியதோ; அதைவிட அமைதிப் புரட்சியை இங்கே உருவாக்க நீங்கள் திட்டமிட்ட முயற்சி இருக்கிறதே, உங்கள் நடைப்பயணம் இருக்கிறதே அது மிகவும் பயன்படப் போகிறது.
நீங்கள் செல்லக்கூடிய_ சென்று அடையும் இந்த நடைப்பயணத் தூரத்தைவிட, செல்லவேண்டிய தூரம் ஏராளம் உண்டு. உங்களைக் காராக்கிரகங்கள் அழைப்பதுண்டு. வேலூர் சிறைவாசத்தை, கோட்டையின் வாசத்தை விட அதிகமாக நேசித்த நல்ல வலிமை உள்ளம் படைத்த என்னுடைய அருமைச் சகோதரை வரவேற்பதில் உள்ளம் நெகிழ்வதால், எனக்கு வார்த்தைகள் வரவில்லை. உங்களுக்கு அல்லல் என்பது புதிதல்ல. வைகோ அவர்கள், தொடக்க காலத்திலிருந்தே தந்தை பெரியாரிடம் நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டார் என்பதற்கு அடையாளமே எதிர்நீச்சல் போடுவது என்பதுதான் சிறந்த ஆனால், இந்த எதிர்நீச்சல் வீரர், பாக்ஜலசந்தியை கடந்து வந்த சகோதரியைவிட தீவிரமாக அதிலே வெற்றி பெற்று கரையேறி நிற்கக் கூடிய திண்மை படைத்தவர்.
உங்கள் கால்கள் சோராது. அப்படிச் சோர்ந்தால், எங்கள் தோள்கள் அதைத் தாங்கும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லி, உங்கள் பயணம் வெற்றியடைய வேண்டும் வாழ்த்தி வரவேற்கிறோம். எதிரிலே இருப்பவர்கள் மட்டுமல்ல. எதிரிலே இல்லாதவர்கள்கூட, உங்களை உலகம் முழுவதும் அன்போடு பாராட்டி வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்; வெற்றிக்குத் தோள் கொடுக்கக் காத்திருக்கிறார்கள். தமிழ் கூறும் நல்லுலகம் மட்டுமல்ல, மனிதநேயமும், பொது நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். நாடாளுமன்றம் செல்ல மாட்டேன். மக்கள் மன்றத்தை இப்போது நான் சந்திப்பேன் என்ற உங்கள் உறுதி இருக்கிறதே, அது பெரியாரின் பால பாடத்தில் ஒன்று என்பதை நாங்கள் அறிவோம். எனவே நாம் சிந்திக்க வேண்டிய இடத்தில் சிந்தித்து, சந்திக்க வேண்டிய இடத்திலே சந்திப்போம் என்று உணர்வு பொங்க உரையாற்றினோம்.
தமிழகத்தில் சமூகநீதி கிடைக்க பாடுபட்ட பலரில் ஒருவரும், தந்தை பெரியார் அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவருமான சென்னை பிரபல மருத்துவ. மேதை டாக்டர் பி.எம். சுந்தரவதனன் அவர்களின் சிலை திறப்பு விழா மிகச் சிறப்பாக நடந்தது.
சென்னை துளுவவேளாளர் சங்கம் சார்பில் டாக்டர் பி.எம். சுந்தரவதனன் உருவச் சிலை திறப்பு விழா 28.8.2004 சனிக்கிழமையன்று மாலை 5.30 மணியளவில், இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையிலுள்ள “நல்வாழ்வு” மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் என். சண்முகம் தலைமையில் நடந்தது. சங்கத் துணைத் தலைவர் டி.கோவிந்தராஜுலு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். டாக்டர் பி.எம். சுந்தரவதனன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை வழக்கறிஞர் டி.எஸ்.ராமரத்தினம் கூறினார். “அறுவை சிகிச்சை நிபுணரும், பேராசிரியரும்” எனும் பொருளில் மருத்துவர் என். ரங்கபஷ்யம் சிறப்புரையாற்றினார். அடுத்து “சிறந்த மனித நேயத் தலைவர் டாக்டர் பி.எம். சுந்தரவதனன்” எனும் பொருளில் பெங்களூர் பொறியாளர் எஸ். உதயகுமார், அவர்களும் “சமூகநீதி ஆர்வலர்” என்னும் தலைப்பில் நெய்வேலி வி. சுந்தரமூர்த்தியும் ஆகியோர் பேசினர்.
சுந்தரவதனன் அவர்களின் மார்பளவு வெண்கலச் சிலையினை நாம் திறந்து வைத்து, “டாக்டர் பி.எம். சுந்தரவதனன் அவர்களின் சிறப்பான தொண்டுகளையும்; பிற்படுத்தப்பட்டவர்களுக்காக அவர் சமூக நலப்பணி ஆற்றியதையும்; மருத்துவ உலகில் மனித நேயப் பண்பாளராக தன்னை ஈடுபடுத்தியமைபற்றியும்; குணங்களையும், தந்தை பெரியாரிடத்தில் மிக நெருக்கமாக பாசமுடன் பழகி வந்ததையும் எடுத்துக்கூறி விளக்கமாகப் பேசினோம். இறுதியில் டாக்டர் பி.எம்.சுந்தரவதனன் அவர்களின் மகன் டாக்டர் பி.எஸ். திருவதனன் நன்றி கூறினார்.
சென்னையில் 30.8.2004 அன்று நடைபெற்ற நாராயண குரு 150ஆம் பிறந்த விழாவில், கலந்துகொண்டோம். அப்போது நாம் ஆற்றிய உரையில், “இன்றைய நாள் நம்முடைய வாழ்நாளிலேயே ஒரு சிறப்பான பெருமை மிகுந்த நாளாகும். ஏனென்றால், சிறீ நாராயண குருதேவர் அவர்கள் ஒரு மாமனிதர். இந்த நாட்டிலே அவர் ஒரு பெரிய புரட்சியாளர்”
எப்படி கேரள மண்ணிலே ஒரு அமைதியான புரட்சியை இருபதாம் நூற்றாண்டிலேயே நாராயண குரு அவர்கள் உருவாக்கினார்களோ அதுபோல் 19ஆம் நூற்றாண்டிலேயே முதன்முதலில் ஓர் அமைதிப் புரட்சியை உருவாக்கியவர் ஜோதிபாபுலே அவர்கள். அவர்களுக்குத்தான் இந்தியாவில் முதன் முறையாக “மகாத்மா” என்ற ஒரு பட்டம் 1885ஆம் ஆண்டில் மக்களாலே வழங்கப்பட்டது.
இந்தியாவிலே 5 மாபெரும் சமூகப் புரட்சி-யாளர்கள் புரட்சியாளர்கள் உண்டென்றால், ஜோதிபா புலே, சாகுமகராஜ், நாராயணகுரு, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆவர். ஆகியோர் ஆவார். நம் கைகளில் 5 விரல்கள் எப்படி இருக்கின்றனவோ, அதுபோல இந்திய சமூகப் புரட்சியாளர்கள் என்று சொன்னால், மேலே கையைத் தூக்கிக் காட்டினால் இந்த அய்ந்து பேருடைய முகமும் சாதனைகளும், சரித்திரமும் நமக்குத் தெரியும். என்றென்றும் வழிகாட்டிகளாக, மறக்க முடியாதவர்களாக இவர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்வதற்காகச் சொல்கிறேன். குருதேவர்
அவர்களுடைய 150ஆம் பிறந்த நாளில் இளைய தலைமுறைக்கு நினைவுபடுத்த வேண்டிய வரலாற்றுச் சுவடுகள் ஏராளம் உண்டு. அந்த வரலாற்றுச் சுவடுகளில் மிக முக்கியமானவர் குருதேவர் ஆவார்கள். தலைவர் மட்டும் இருந்தால் போதாது. தளபதிகள் தேவை. அப்படிப்பட்ட நாராயணகுரு அவர்களுக்கு ஒரு தளகர்த்தராக குரு தேவருடைய சிந்தனையெல்லாம் கல்வித்துறைகளிலும், மற்ற துறைகளிலும் மிகப் பெரிய அளவிற்கு பரப்பக் கூடியவராக அமைந்தவர் டாக்டர் பல்பு அவர்கள் ஆவார்.
1924இல் வைக்கம் போராட்டத்திற்கு முன்னால் குருதேவர் அவர்கள் மிகப் பெரிய புரட்சியை ஏன் உருவாக்கினார். காரணம் என்ன? நாராயணகுரு அவர்களுடைய தத்துவத்தைப் பற்றிச் சொல்லுவதற்கு சுவாமி தர்ம தீர்த்தர் அவர்கள் எழுதிய வெளியிட்டிருக்கிற ஒரு சிறிய நூல் ‘கேப்சூல்’ மாதிரி இருக்கிறது. பல்வேறு செய்திகளை உள்ளடக்கியதாக அந்நூல் உள்ளது.
2004லும் ஜாதி ஒழிப்பைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், குருதேவர் அவர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்னாலே, அதுவும் கேரளத்து மண்ணிலே, மூடநம்பிக்கை அதிகமாக ஊறித் திளைத்த மண்ணிலே ஜாதி ஒழிப்புப் பெரும் புரட்சி செய்தார்கள்” என்று குறிப்பிட்டோம்.
(நினைவுகள் நீளும்)