தில்லை மறைமுதல்வன்
அப்போது முன்னிரவு முடிந்து கொண்டிருக்கும் வேளை.
இருளினூடே நின்று கொண்டிருந்த ஜகந்நாதரின் ஆலயத்தினுள்ளே பிரகாசமான விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
ஆலயத்தின் உயர்ந்த சுவர்களிலும், பருமனான தூண்களிலும் சிற்பிகளின் கைவண்ணம் தவழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் அந்தக் சிற்பங்கள் புகையும் அழுக்கும் இருளும் பட்டு மங்கி இருந்தன.
கர்ப்பக்கிருகத்தில் சிற்பி வடித்த சிலைக்குள்ளே உலகைக் காத்து ரட்சிக்கும் ஆண்டவன் ஒளிந்து கொண்டிருந்தார். அவருக்கு முன்னே, பிரகாரத்தில், அவ்வூரின் ஆண்களும், பெண்களும்
முதியவரும் குழந்தைகளும், கற்றோரும் மற்றோரும் குழுமியிருந்தனர். அவர்களின் கவனமெல்லாம் கர்ப்பக்கிருகத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த அலங்கார மேடைமீது பதிந்திருந்தன.
கோயில் மணி ஒலித்தது
உடனே ஓசைகள் அடங்கி நிசப்தம் நிலவியது. எல்லோரது கண்களும் மேடைமீது மொய்த்தன. சிற்றடியிலிட்ட செழுஞ் சிலம்பு ‘கலீர் கலீர்’ என்று சப்திக்க, திரையை விலக்கிக் கொண்டு மேடைமீது வந்து நின்றாள் பத்மாவதி. ஆடலுக்குரிய அலங்காரமெல்லாம் கைத்தட்டாக முடித்திருந்த அவள், கூடியிருந்தவர்களை வணங்கினாள்.
கோயில் தூணில் துவளும் சிற்பம் போலும், கவிதையின் அழகு போலும் அவள் விளங்கினாள்.
அவள் அழகை வியந்து மகிழக்கூட அங்கிருந்த பலருக்குத் துணிச்சலில்லை. ஏனெனில் அவள் வெறும் ஆடலழகி அல்ல. இளம் பிராயத்திலேயே ஜகந்நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டவள்; தேவதாசி. அதனால் அவள் அழகில் ஏதோ ஒரு புனிதத் தன்மை இருப்பது போலவும், அந்த அழகை இச்சையோடு பார்ப்பது பெரும் பாவம் எனவும் அவர்கள் கருதினார்கள். இறைவனின் சேவைக்குக் காணிக்கையாக்கப்பட்டவள் வாழ் நாளெல்லாம் கன்னியாகவே இருக்க வேண்டுமென்ற சம்பிரதாயம் நிலவி வந்த நாட்கள் அவை!
ஆட்டம் ஆரம்பமாயிற்று. பின்னணி கீதம் அவள் ஆட்டத்துக்கு மெருகேற்றிற்று என்று சொல்வதைவிட, அந்தப் பின்னணி இசைக்கே அவள் ஆடல் உயிர் பெற்றது என்று சொல்லலாம்; அத்தனை அற்புதமாக இருந்தது அவள் ஆடல்.
தாளமோ, பாதம் மிதிக்கும் ஜதியோ கொஞ்சம்கூடத் தவறவில்லை. கைமுத்திரையும் பாத கதியும் சுத்தமாக, முழுமையாக விழுந்தன.
அங்கிருந்தவர்களெல்லாம் மெய்மறந்து விட்டனர். அவளையும் அவள் ஆட்டத்தையும் தவிர வேறெதுவும் அப்போது அவர்களது உணர்வுகளில் தங்கி இருக்கவில்லை. பிரகாரத்தின் ஒரு மூலையில், தூணில் சாய்ந்தவண்ணம் அமர்ந்திருந்த அந்த இளைஞன்கூட அவள் ஆடலிலே தன்னையே இழந்திருந்தான்.
கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருந்தாலும் கூட எல்லோரையும்விட்டு விலகி அவன் தனியே அமர்ந்திருப்பது, போலத் தோன்றிற்று.விழி பிதுங்கும் வியப்போடும் மிரட்சி-யோடும் அவன் பத்மாவதியின் ஆட்டத்தை இரசித்தான்.
ஆட்டம் முடிந்தபோது பின்னிரவு முடியும் தருணமாகிவிட்டது. குழந்தைகளெல்லாம் உறங்கிவிட்டன.
சிறிது நேரத்திற்கெல்லாம் கூட்டம் கலைந்து விட்டது. அவன் மட்டும் தூணில் செதுக்கிய சிலையோடு சிலையாக அமர்ந்திருந்தான். பிறகு அவசர அவசரமாக எழுந்து செல்ல ஆரம்பித்தான். அப்போது இனிமை பெற்றெடுத்த ஒரு குரல் அவனைத் தடுத்து நிறுத்திற்று.
“என் ஆடல் உனக்குப் பிடித்திருக்கிறதா?”
திரும்பிப் பார்த்த அவன் முன்னே மங்கிய இருளில் பத்மாவதி நின்றிருந்தாள்.
“ஆமாம், அழகியதொரு கனவைப்போல நீ ஆடினாய். ஆடலரங்கத்திற்குப் பதிலாக எங்கள் இதயங்களில் ஆடினாய்; எங்கள் உணர்வுகளில் ஆடினாய். நீ அழுவது போல் முகபாவனை காட்டினாய்; நாங்கள் உண்மையாகவே அழுதோம்.”
“அழகாகப் பேசுகிறாயே…”
“ஆனால் அழகே நீயாயிருக்கிறாய். நீ ஒரு அப்சரஸ்.”
“பாடாப் புதுமையும் தேயாக்களியும் பெற்றெடுத்த தேவமாது அல்ல நான்; மனிதப் பிறவிதான். நீ யார்?”
“நான் யாரென்று தெரிந்துகொள்வது அவ்வளவு முக்கியமா?”
‘ஆமாம்! தினமும் எல்லோருக்கும் முன்பாக வந்துவிடுகிறாய். எல்லோரும் சென்றபிறகு போகிறாய். உனக்குத் தெரியாது; ஆனால் நான் திரைக்குப் பின்னாலிருந்து கவனித்துத்தான் வருகிறேன்.”
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது; கூச்சமாகவும் இருந்தது.
“நீ யாரென்று இன்னமும் சொல்ல-வில்லையே?”
“சொல்வதற்கு அதிகமாக எதுவுமில்லை. வேதங்களைப் படித்துவரும் மாணவன்.”
“உன் பெயரென்ன?”
“ஜெயதேவ்!”
“ஜெயதேவ்! அழகான பெயர்!”
அகன்ற மிருதுவான விழிகளால், உணர்ச்சியின் பதப்பேறிய விழிகளால், நிலவெறிக்கும் விழிகளால் அவனது கண்களைத் துருவிப் பார்த்தாள். அந்தப் பார்வையை எதிர்த்து நிற்க அவனிடம் சக்தியில்லை!
“நான் போக வேண்டும்” என்று சொல்லி விட்டு அவசர அவசரமாக வெளியேறினான் ஜெயதேவ்.
அடுத்த நாள் அவள் ஆட வந்தபோது அவனைக் காணவில்லை. அர்த்தமில்லாமல் அழுகை அழுகையாய் வந்தது. அன்று அவள் முகம் ஒரே சோகமயமாக இருந்தது.
வழக்கம்போல் ஆட்டம் முடிந்ததும் எல்லோரும் தங்கள் தங்கள் இடங்களுக்குச் சென்றனர். ஆனால் பத்மாவதி ஆற்றங்கரையருகே இருந்த தோட்டத்தை நோக்கி ஓடினாள். விடியற்காலைகளில் ஜெயதேவ் அங்கு வருவான் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது!
அங்கே மரத்தடியில் அவன் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும் அவள் திடுக்கிட்டாள். அருகே சென்று முகத்தில் கிடந்த தலைமுடியை ஒதுக்கிவிட்டாள். சூடிய மலர்ச்சரம்போல அவன் முகம் வதங்கியிருந்தது.
சட்டென்று அவன் விழித்துக் கொண்டான். முதலில் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“நீயா? இங்கெங்கே வந்தாய்?”
“உன்னைப் பார்க்கத்தான். இரவு நீ ஏன் வரவில்லை?”
“………………………………………..”
“நீ வராததால் எனக்கு எவ்வளவு ஏமாற்றம் தெரியுமா? உன்மீது எனக்கு ஆத்திரங்கூட வந்தது. உன்னோடு சண்டை போட வேண்டுமென்றுதான் ஓடி வந்தேன்.”இன்னும் கொஞ்ச நேரமிருந்தால் அழுது விடுவாள் போலிருந்தது.
“உன்னைப் பார்த்தால் என் தவிப்பு அதிகமாகி விடுகிறது. குழப்பமான எண்ணங்களுக்கு மத்தியிலுள்ள அந்தப் பாதையைக் கண்டுபிடிக்க முயன்று, அது முடியாமல் பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறது.”
“என்ன சொல்கிறாய் ஜெயதேவ்?”
“அது எனக்கே புரியவில்லை. உன்னைக் கண்ட பிறகு, உன் ஆடல்களைக் கண்டபிறகு இதுவரை உலகம் கண்டிராத ஒரு சாதனையை, என்றென்றும் மறக்க முடியாத படைப்பை, காலங்காலமாக வாழும் உன்னத சிருஷ்டியை உருவாக்க வேண்டுமென்று உள்ளம் அடித்துக் கொள்கிறது.”
“அது என்னவென்று உனக்குத் தெரிய-வில்லையா?”
“இல்லை. அதை என்னால் உணர முடிகிறது. ஆனால் வெளியிடத்தான் முடியவில்லை. ஏழையான நான், உன் காலடியில் செல்வத்தைக் குவித்து வைக்க முடியாத நான், வெறும் அன்பைத் தவிர வேறு எதுவுமற்ற நான் உன்னை விரும்புகிறேன்; இந்த எண்ணமே என்னைக் கோழையாக்கிவிடுகிறது.”
“நான் செல்வத்தை வேண்டவில்லை. உன்னைத்தான் விரும்புகிறேன். வெட்கத்தை விட்டுவிட்டுச் சொல்கிறேன் ஜெயதேவ், நீதான் எனக்கு வேண்டும்.”
சேலாடும் அந்தச் செல்ல விழிகளில் கண்ணீர் முத்துக்கோத்தது.
ஜெயதேவ் அவளது செக்கச் சிவந்த அதரங்களில் ஆசையின் நடுக்கத்தோடும், அளவற்ற வலிமையோடும், இளமையின் மயக்கத்தோடும், மதங்கொண்ட வெறியோடும் முத்தமிட்டான்.
நாட்கள் உதிர்ந்தன.
ஜெயதேவனுக்கும் பத்மாவதிக்கும் ஒவ்வொரு நாளும் வசந்தம் தந்த புத்தழகுகளாக விளங்கின.
கரை தழுவிச் சுழித்தோடும் வெள்ளம்போல அவர்களது ஆசை பிரவாகித்துச் சென்றது.
இந்த விஷயம் மெல்ல மெல்ல ஊரெங்கும் பரவிற்று. செய்தி கேட்டவர்கள் ஏதோ கேட்கத் தகாததைக் கேட்டுவிட்டது போலவும், அப்படிக் கேட்டதாலேயே ஏதோ யாவும் புரிந்துவிட்டதுபோலவும் துடித்தார்கள். ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவளைக் காமுறுவது பாவத்திலும் பெரும் பாவம், அதனால் ஊருக்கு நாசம் சம்பவிக்கும் என்றெல்லாம் பண்டிதர்களும் புரோகிதர்களும் பயமுறுத்தினார்கள். அவர்களின் வாக்கே ஊராருக்கு வேதம். அதனால் ஊராரும் ஒத்துப் பாடினர்.
பத்மாவதியின் தந்தைக்கு விஷயம் எட்டியபோது அவர் உடல் கோபத்தால் ஆடியது. அது தகாத செய்கை என்பதனால் மட்டுமல்ல. அதனால் ஆலயத்திலிருந்து கிடைத்த வந்த வாழ்க்கை வசதிகள் எல்லாம் பறிபோய்விடுமே என்பதனாலும் அவருக்கு மகள்மீது ஆத்திரமேற்பட்டது.
‘என்னால் முடியாது; ஜெயதேவைப் பிரிந்திருக்க என்னால் முடியாது” என்றாள் அவள்.
“சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லி என்ன பயன்? உன் நன்மைக்கும் ஊரார் நன்மைக்குந்தான் சொல்லுகிறேன்.”
“ஜெயதேவால் எனக்கும் ஊராருக்கும் என்ன தீங்கு நேர்ந்துவிடப் போகிறது? அன்பு பாவமானதல்லவே!”
“நீ தேவதாசி. கடவுளின் அடிமை. ஆண்டவனுக்குப் பக்தியோடு சேவை செய்வது உன்னுடைய இலட்சியம். பரிசுத்தத்தின் சின்னமாகத் திகழ வேண்டியவள் நீ.”
“ஆனால், என்னுடைய உணர்ச்சிகள்…?”
“மண்ணாக வேண்டியதுதான். மனிதனைப் பிடிக்கும் ஆசாபாசங்கள் உன்னை அணுகக்கூடாது. நீ அவர்களின் இச்சைக்கு அடிமைப்படக்கூடாது-”
கைகளால் முகத்தை மூடிக் கொண்டு அவள் விம்மி விம்மி அழுதாள்.
“முட்டாள் பெண்ணே! உனக்கு என்ன சொன்னாலும் புரியவில்லையே நீயும் நானும் சும்மா இருந்தாலும் ஊரார் அவனை விட்டு வைக்கப் போவதில்லை.”
அவர் சொன்னது உண்மைதான். அவர்கள் அவனைச் சும்மா விட்டு வைக்கவில்லை. அவனைக் கண்டாலே கண்ணை மூடிக்கொண்டனர். அவன் நடந்துசென்ற பாதையில் போகவும் பயந்தனர். அவனைக் கேலியாலும், கிண்டலாலும், வசையாலும் தாக்கினர். தெருவுக்குத் தெரு அவனைத் துரத்தியடித்தனர். அவனுக்கு உணவும் நீரும் அளிக்கக் கூட மறுத்துவிட்டனர்.
அவன் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டதுதான் ஆச்சரியம்!
எதிர்த்து ஒரு பார்வையோ பேச்சோ அவனிடமிருந்து கிளம்பவில்லை. ஏளனத்துக்கும், பயமுறுத்தலுக்கும் கவலைப்படாதவன் போல் தென்பட்டான். போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் அப்பாற்பட்டவன் போல்_ ஊராரின் செய்கைகள் ஏதோ தனக்குச் சம்பந்தமில்லாத விஷயங்கள் போல் அவன் நடந்து கொண்டான்.
ஆனால் பத்மாவதியைப் பார்க்க முடியாததுதான் அவனுக்குப் பெரிய ஏமாற்றமாக, பொறுத்துக்கொள்ள முடியாத வேதனையாக இருந்தது.
அன்றும் ஜகந்நாதர் ஆலயத்தில் ஊரார் திரண்டிருந்தனர். ஆனால் பத்மாவதியின் நாட்டியத்தைக் காண்பதற்காக அல்ல; ஜெயதேவின் விசாரணையைக் காண்பதற்காக! மதத் தலைவர்களைக் கொண்ட விசாரணைச் சபைகள் நீதி வழங்கும் மன்றங்களாகவும், சாஸ்திரங்கள் சட்டங்களாகவும் ஆண்டுகொண்டிருந்த காலம் அது!
ஜெயதேவின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பு சத்யாசாரன் என்ற வயதான தலைமைக் குருவிடம் விடப்பட்டிருந்தது. பழி வாங்க வேண்டுமென்ற வெறி அங்கிருந்த
ஒவ்வொருவரையுமே ஆட்டிப் படைத்தது.
கடைசியில் சத்யாசாரன் எழுந்து விசாரணைச் சபையின் முடிவைச் சொன்னார்.
“ஜெயதேவ்! நாளை சூரியன் உதிக்கும்போது நீ இந்த ஊரின் எல்லையைவிட்டு வெளியேறிவிட வேண்டுமென்று இந்தச் சபை ஆணையிடுகிறது. மீறி இருந்தால் மக்கள் முன்னிலையில், முச்சந்தியில் உயிரோடு எரிக்கப்படுவாய்.”
கொஞ்சங்கூடக் கலங்காமல் ஜெயதேவ் அவரைப் பார்த்துக் கேட்டான்.
“எதற்காக நான் ஊரைவிட்டுச் செல்ல வேண்டும்? நான் யாருக்கு என்ன குற்றம் செய்தேன்?”
“கோயில் நாட்டியக்காரியைக் காதலித்தாய் நீ”
“ஆமாம், ஆண் பெண்ணை விரும்புவது அதிசயமோ?”
அந்தக்கிழ வேதியரின் குரூரம் பாய்ந்த கண்கள் அவனைச் சுட்டெரித்து விடுவதுபோலப் பார்த்தன.
“அவளைக் காதலிக்க உனக்கு யோக்கியதை கிடையாது.”
“ஏன் இல்லை? கடவுள் காதல் புரியமுடியு
மானால் நான் மட்டும் ஏன் காதலிக்கக்கூடாது.”
“பாவி, உன் நாக்கு அழுகவில்லையா இன்னும் அவள் ஆண்டவனுக்கு சூடப்பட்ட மலர். அவள் மீது எவர் ஆசை வைத்தாலும் அது பாவம். தெய்வத்தையே கேலி செய்வதாக அர்த்தம். இந்தச் சம்பிரதாயத்தை மீறுவது மன்னிக்க முடியாத குற்றம்.”
“நீங்கள் சொல்லும் சம்பிரதாயங்களைவிட என் ஆசைகளும் உணர்ச்சிகளுமே எனக்கு முக்கியம்.”
“அப்படியானால் தலைமுறை தலைமுறை-யாகப் பாதுகாக்கப்பட்டு வந்த சாஸ்திர விதிகள் என்னாவது?”
“அவையெல்லாம் நாமாக ஏற்படுத்திக்-கொண்டவைதானே?”
“இப்படிக் குதர்க்கம் பேசியே நீ அழிந்துபோகப் போகிறாய்.”
“நாம் எல்லோருமே ஒரு நாள் அழியப் போகிறவர்கள்தானே.”
இப்போது அவன்தான் பூனை. அவர்கள் எலியானார்கள். இத்தனை நாட்களாக அவனுள் திரண்டிருந்த ஆத்திரம் பீறிட்டுக் கிளம்பியது.
“என்னைப் பாவி என்கிறீர்கள். ஆனால் ஒழுக்கம் பேசும் உங்களைப்போன்ற சுத்தாத்-மாக்களிடமிருந்துதான் பாவங்களே பிறக்கின்றன. அதனால்தான் உயிரும் உணர்ச்சியுமுள்ள ஒரு பெண்ணை உயிரும் உணர்ச்சியுமற்ற கடவுள் சிலைக்கு அர்ப்பணித்துவிட்டு வறட்டு வேதாந்தம் படிக்கிறீர்கள். நான் எங்கும் போகமாட்டேன். எனக்கு யாரை வேண்டுமானாலும் காதலிக்கவும் வாழவும் சாகவும் உரிமை உண்டு. தைரியமிருந்தால் என்னை எது வேண்டுமானாலும் செய்துகொள்-ளுங்கள்.”
எவருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் வெளியேறினான் ஜெயதேவ். அவனுடைய முரட்டுத் தைரியம் அவர்களை ஊமைகளாக்கி-விட்டது.
ஆலயத்தைவிட்டு வெளியேறிய ஜெயதேவ் நேரே பத்மாவதியின் இல்லத்துக்குச் சென்றான்.
“பத்மாவதி” என்று அழைத்தான்.
வீட்டைவிட்டு வெளியே போகமுடியாமல் சிறை வைக்கப்பட்டிருந்த அவள் ஜன்னல் வழியாக அவனைச் சந்தித்தாள்.
“ஜெயதேவ், நீ போய்விடு, அவர்கள் உன்னைக் கொன்றுவிடுவார்கள்” _சொல்லும்போதே அழுதுவிட்டாள்.
“அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. உன்னைக் காதலிப்பது பாவமென்கிறார்கள். காதல் என்றால் என்ன என்பதை அவர்களுக்குக் காட்டப் போகிறேன்.”
அவனுடைய குருட்டுத்தனமான நம்பிக்கையைக் கண்டு அவளுக்குப் பயமாக இருந்தது.
“நீ என்ன செய்யப்போகிறாய்?”
“இதுநாள் வரை புரியாமலிருந்தது. இன்று எனக்குப் புரிந்துவிட்டது. என்னையே நான் கண்டுபிடித்துவிட்டேன்.”
ஜன்னல் வழியாக அவள் கையை எடுத்து முத்தமிட்டுவிட்டு, ஆற்றங்கரையோரமிருந்த தனது குடிசையை நோக்கி அவசர அவசரமாகச் சென்றான் ஜெயதேவ்.
இரவியும் இரவும் மாறி மாறி வந்தன. செம்பரிதியும் வட்ட நிலாவும் தோன்றித் தோன்றி மறைந்தன. காலையில் மலர்கள் பூத்தும், மாலையில் வாடி உதிர்ந்தும் வீழ்ந்தன. ஜெயதேவ் எழுத்தாணியின் கிறுகிறுத்த ஒலியில் அமிழ்ந்து கிடந்தான்.
வெளி உலகமே அவனுக்கு மறந்துவிட்டது. வெறிபிடித்தவன்போல ஏட்டுச் சுவடிகளில் எழுதிக் கொண்டே போனான். உறக்கமின்றி, அயர்வின்றி, பசியின்றி எழுதினான்.
ஒரு நாள் இரவு, நெஞ்சில் தேங்கிக்கிடந்த உணர்ச்சிகளும் வேகமும் தணிந்தபின்னர், எழுத்தாணியையும் ஏட்டுச் சுவடிகளையும் விட்டெறிந்து விட்டுப் படுக்கையில் விழுந்தான்.
மீண்டும் கண்விழித்தபோது அவனுக்கு எல்லாமே மாறியிருந்தன. இடமும் புதிதாக இருந்தது. சுற்றியிருந்தவர்களும் புதிதாக இருந்தனர். அந்தப் புதிய முகங்களிடையே ஒரு பழகிய முகமும் இருந்தது. பத்மாவதிதான் அது!
ஒன்றும் புரியாமல் அவன் குழம்பிக்-கொண்டிருந்தபோது யாரோ நடந்துவரும் ஓசை கேட்டது. திரும்பிப் பார்த்தான்.
வங்காள மன்னரான இலட்சுமணாசன் புன்னகை தவழும் முகத்தோடு அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார். எழுந்திருக்க முயன்றான் முடியவில்லை.
“பரவாயில்லை. மூன்று தினங்களுக்குப் பின்னர் இன்று தான் கண்விழித்திருக்கிறீர்.”
மன்னரின் வார்த்தைகளைக் கேட்டு அவனுக்குத் திகைப்பாயிருந்தது.
“ஜெயதேவரே, நான் எல்லாவற்றையும் கேள்விப்பட்டேன். விசாரணை சபையின் முடிவை மாற்றிக்கொள்ளச் சொல்லியிருக்கிறேன். உமக்கு எந்தக் கவலையும் வேண்டாம். நீர் எழுதிய கவிதைகளே உமது காதலுக்கு வெற்றியைத் தேடித் தந்துவிட்டன.”
இப்போது அவனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது.
“அந்தக் கவிதைகளுக்குப் பெயரென்ன?”
“கீத கோவிந்தம்”
“அழகான கவிதைகள். உணர்ச்சிகளின் காவியம் அது. படித்துப் படித்து பரவச-மானேன். இனிமேல் நீர்தான் அரசவைக் கவிஞர். இலட்சுமணாசனின் ராஜசபையை அலங்கரிக்கும் இரத்தினம்.”
“தங்கள் அன்பு என்னைப் பிரமிக்க வைக்கிறது.”
“கவிஞரே, அடுத்த கிழமை அரசவைக்கு வாரும்.”
அரசனும் மற்றவர்களும் சென்றனர். பத்மாவதி குளிர்ச்சி நிரம்பிய கண்களால் ஜெயதேவனைத் தழுவினாள்.
“இதெல்லாம் உண்மையா? நம்புவதற்கு எனக்குக் கஷ்டமாக இருக்கிறது!”
“ஆமாம் ஜெயதேவ் | இதெல்லாம் உண்மை
தான். நாட்டைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த அரசர் தற்செயலாக இங்கே வந்தார். உன்னைக் காண வந்தவர் உன் கவிதைகளைப் படித்தார். உனது கவிதைகளின் அருமை பெருமைகளின் முன்னே சாஸ்திரங்கள் பணிந்துவிட்டன. இப்போது நாடெங்கும் உனது பாடல்கள் பாடப்படுகின்றன.”
“ஆனால் அதற்குக் காரணமே நீதான்.ஏனெனில் அந்தப் பாட்டே நீதான். நீ ஆடிய போதும், நான் உன்னைக் காதலித்தபோதும், நீ என்னிடமிருந்து பிரிக்கப்பட்டபோதும் நான் பிறரால் விரட்டியடிக்கப்பட்ட போதும் நான் அந்தப் பாடல்களைப் பாடக் கற்றுக்கொண்டேன். உன் மனதுக்கு வேண்டுமானால் எனது பாடல்கள் கீத கோவிந்தமாக இருக்கலாம். ஆனால், நீதான் எனக்கு கீதகோவிந்தம்!”
அவள் கன்னஞ்சிவந்து தலைகுனிந்தாள்.♦