மூடநம்பிக்கை இருளகற்ற பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்சுவோம்! – மஞ்சை வசந்தன்

2023 ஆகஸ்ட் 16-31,2023 முகப்பு கட்டுரை

மூடநம்பிக்கைகள் மனிதர்களின் மூளைக்கு விலங்கிடுவது மட்டுமல்ல,ஆதிக்கவாதிகளின் அடிக்கட்டுமானமாகவும் அது அமைகிறது என்பதை அனைவரும் ஆழமாய்க் கருத்தில் கொள்ள வேண்டும்.

மூடநம்பிக்கை தனிமனிதர்களின் தன்னம்பிக்கையைக் குறைக்கிறது.. அல்லது தகர்க்கிறது. படிக்கின்ற மாணவராயினும் மருத்துவம் பார்க்கிற
மருத்துவராயினும், பிரச்சனைகளை எதிர்கொள்ளுகின்றவர்களாயினும், நாம்தான் அதைச் சாதிக்கப் போகிறோம் என்று முழுமையாக நம்ப வேண்டும். மாறாக கடவுள், மந்திரம், தாயத்து, கிரகம், ஆசீர்வாதம், பிரார்த்தனை போன்றவற்றின் மூலம் நாம் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை வந்தால், அது அச்செயலின் வெற்றியை வெகுவாகப் பாதிக்கும்.

ஒரு பேருந்து ஓட்டுகின்ற ஓட்டுநர். வாகனத்தை முழுப்பாதுகாப்புடன் செலுத்த வேண்டிய பொறுப்பு
உடையவர். அப்படிப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஓட்டும்போது, கடவுள் பார்த்துக் கொள்வார் என்று ஓட்டினால் பெரும் விபத்தை ஏற்படுத்தும்.
குடும்பம் முன்னேற, வருவாய் பெருக முறையான திட்டமிடல், உழைப்பு, விடாமுயற்சி கட்டாயம். மாறாக பிரார்த்தனை, தாயத்து, முடிகயிறு போன்ற
வற்றால் இவற்றைச் சாதிக்க முயன்றால் தோல்வியே கிடைக்கும். மூடநம்பிக்கை தனிமனிதர்களைப் பாதிப்பது போலவே, சமுதாயத்தையும், தலைமுறையையும் பெரிதும் பாதிக்கிறது.

நம் வாழ்க்கையைக் கடவுள் விதிதான் தீர்மானிக்கிறது. அவர் வித்த விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் அவர்கள் எதையும் பெறமுடியாது, சாதிக்க முடியாது.படிப்பதற்கு மட்டுமே ஒரு ஜாதியினரைக் கடவுள் படைத்தார்; ஆட்சி, போர் செய்ய ஒரு ஜாதியினரைப் படைத்தார்; வணிகம் செய்ய ஒரு ஜாதியினரைப் படைத்தார். அடிமை வேலை செய்ய ஒரு ஜாதியினரைப் படைத்தார் என்ற மூடநம்பிக்கையை இச்சமுதாய மக்கள் மத்தியில் பதியச் செய்ததன் விளைவாய், ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பெரும்பான்மையான மக்கள் கல்வி மறுக்கப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களாய் வாழ்ந்தனர்.

கடவுள் அப்படி யாரையும் படைக்கவில்லை,, அப்படிச் சொல்வது, ஆதிக்க ஜாதியினரின் சதி. எனவே அச்சதியைத் தகர்த்து அனைவரும் அனைத்து உரிமைகளையும் பெறத் தகுதியுடையவர்கள் என்ற விழிப்பு தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்களால் மக்கள் மத்தியில் ஊட்டப்பட்டதன் விளைவாகவும்; அதற்கான சட்டங்களை, வாய்ப்புகளை உருவாக்கியதன் விளைவாக இன்றைக்கு எல்லா மக்களும் கல்வி வாய்ப்பைப் பெறுகின்றனர். எல்லா வகையான பணிகளையும் ஏற்றுச் சாதிக்கின்றனர். படிக்க மட்டுமே படைக்கப்பட்ட ஜாதியினர் என்று சொல்லிக் கொண்டவர்களை விட மிகச் சிறப்பாக அடித்தட்டு மக்கள் படித்துச் சாதிக்கின்றனர்.

ஆங்கில ஆட்சியின் போதும், நாடு விடுதலையடைந்த பின்பும் எல்லா மக்களும் சமமான வாய்ப்
பைப் பெற்று, கல்வி, வேலை வாய்ப்பு, ஆட்சி அதிகாரம், தொழில் வணிகங்கள், ஆய்வு, கலை, இலக்கியம் என்று எல்லாவற்றிலும் எல்லா மக்களும்
சாதித்து உயர்ந்துவரும் நிலை உருவாயிற்று.

ஆனால், மதம் என்ற மூடநம்பிக்கையில் சிக்குண்ட மக்கள், மதவெறி அமைப்புகளின் மூளைச்சலவையால் சிந்தனையிழந்து, உணர்ச்சி வயப்பட்டு அவர்களை ஆட்சியில் அமர்த்தியதன் விளைவாய், இன்று அந்த ‘மதவெறிக் கூட்டம் ஆட்சி அதிகாரங்களைப் பயன்படுத்தி மீண்டும் மூடநம்பிக்கைகளை, மதவெறி உணர்வுகளை, ஜாதிய பற்று வளர்ச்சியை, பழைய வர்ணாஸ்ரம தர்ம வாழ்வியலைக் கொண்டு வர சதிசெய்து, அதை மெல்ல மெல்ல நடைமுறைப்படுத்தவும் செய்கின்றனர். இதற்கு வாய்ப்பாக அரசியல் சட்டத்தையே தகர்த்துவிட்டு, பழைய சாஸ்திர, சனாதன நெறிமுறைகளைச் சட்டமாக்கி செயற்படுத்த முனைகின்றனர்.

கோயில் கட்டுதல், வழிபாடு செய்தல் புனித நீராடல், சடங்குகள் செய்தல், சோதிடம், வாஸ்து போன்ற மூடநம்பிக்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த தங்களின் சங்பரிவார அமைப்புகளையும், பாடத்திட்டங்களையும் கல்வி முறையையும் முழுமையாகப் பயன்படுத்துகின்றனர்.
அறிவியல் முலாம்பூசும் அவலம்

அப்பட்டமான மூடநம்பிக்கைகளுக்கெல்லாம் அறிவியல் முலாம்பூசும் அவலச் செயலை ஆர்.எஸ்.எஸ்ஸும், பி.ஜே.பி. அரசும் செய்து வருகின்றன.
புராண கதைகளுக்கெல்லாம் அறிவியல் விளக்கங்களைக் கூறும் அடிமுட்டாள்தனம் அரங்கேறி வருகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வினாயகர் புராணம் கூறுகிறது. குளோனிங் முறையை மகாபாரதம் கூறுகிறது என்று ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்களே கூறும் கேலிக் கூத்துகள் அடிக்கடி நடக்கின்றன.
மனித உடலுக்கு யானைத் தலையை உறுப்பு மாற்று செய்ய முடியாது, வெட்டி வைத்தால் உறுப்பு பொருந்தாது. கருசிதைந்து வந்த உதிரத்தில்
குழந்தை உண்டாகாது என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் இக்கருத்தைக் கூறுகின்றனர்.

வாஸ்து என்ற அப்பட்டமான மூடநம்பிக்கையையும் சோதிடம் என்ற அறிவியலுக்கு எதிரான கணிப்பு முறையையும் பல்கலைக் கழகங்களில் பாடமாக ஆக்கியுள்ள அவலமும் நடந்துள்ளது.வர்ணாஸ்ரம அடிப்படையில் மனைத்தேர்வு, வாஸ்து புருஷன் என்ற மூடக்கருத்தின் அடிப்படையில் வீடு அமைத்தல் இன்றைய கட்டடக் கலைக்கு அறவே பொருந்தாது என்ற எளிய அறிவுகூட இல்லாமல் இக்காரியங்களைச் செய்கின்றனர்.
வாஸ்து சாஸ்திரம் உருவானபோது கட்டடங்கள் கட்டும் முறையே இல்லை. குடிசைகள்தான் அமைக்கப்பட்டன. கழிவறை வீட்டிற்குள் வைக்கும்
முறை அப்போது இல்லை. ஆனால் இன்றைக்குக் கழிவறைக்குக்கூட வாஸ்து சாஸ்திர விதிகளைக் கூறுகிறார்கள். இது எவ்வளவு பெரிய மோசடி!

சூரியன் நிலையாக நின்று சுழல்கிறது என்பது அறிவியல். ஆனால் சூரியன் ஒவ்வொரு கிரகத்திற்கும் இடம் பெயருகிறது என்கிறது சோதிடம். இன்றைக்குப் புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. அப்படியிருக்க பழைய ஒன்பது கணக்கு எப்படிச் சரியாகும். அதிலும் சூரியன் கிரகம் அல்ல. அது நட்சத்திரம். கோளுக்கும் நட்சத்திற்கு வேறுபாடு தெரியாதவர்களால் உருவாக்கப்பட்ட சோதிடத்தைப் பல்கலைக் கழகங்களில் பாடமாக்குவது பைத்தியக்காரத்தனமல்லவா?

ஆதிக்கம் காக்கும் கேடயம்

மூடநம்பிக்கைகள் என்று நன்கு தெரிந்தும், அறிவியலுக்கு எதிரானது என்று புரிந்தும், தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த, மக்களைச் சிந்திக்க விடாமல் செய்ய, அவர்களை அடிமையாகவே வைத்திருக்க தெரிந்தே இத்தவறை சங்பரிவாரங்களும், அதன் ஆட்சியாளர்களும் செய்கின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தந்தை பெரியாரின் முயற்சியால், பரப்புரையால் பெருமளவிற்கு மூடநம்பிக்கைகள் அகன்றன. ஆனால், தொலைக்காட்சி போன்ற காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும், சமூக ஊடகங்களும் சுயநலத்திற்காக மூடநம்பிக்கைகளை முனைந்து பரப்புகின்ற காரணத்தால், மீண்டும் மூடநம்பிக்கைகள் தலையெடுக்கின்றன.

காட்டுமிராண்டிச் செயல்கள்

தலையில் தேங்காய் உடைத்தல், நெருப்பில் நடத்தல், அலகுகள் குத்துதல் போன்ற காட்டு மிராண்டி காலச் செயல்களை இன்றைக்கும் பக்தியின் பேரால் செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தலையில் தேங்காய் உடைப்பதால் மூளை பெரிதும் பாதிக்கப்படும். அதன் விளைவுகள் பின்னாளில்தான் தெரியும்.

குழந்தைகளைக்கூட தூக்கிக்கொண்டு தீயில் இறங்கும் கொடுமை நடக்கிறது. சில நேர்வுகளில் தீயில் வீழ்ந்து உடல் வெந்து கருகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட தீங்குகள் விளைந்தாலும் மதவாத சக்திகள் இப்படிப்பட்ட மூடச்செயல்களைஎதிராக பிரச்சாரம் செய்து மக்களுக்கு விழிப்பூட்டும் பகுத்தறிவாளர்களைக் கொல்லும் பாதகச் செயலையும் பதற்றமின்றிச் செய்கின்றனர்.

நரேந்திர தபோல்கர்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவரும் எழுத்தாளருமான நரேந்திர தபோல்கர் பூனேவில்
உடற்பயிற்சிக்காக நடந்து சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் செய்ததெல்லாம் இரண்டே இரண்டுதான். ஒன்று, மகாராஷ்டிரா மூடநம்பிக்கை ஒழிப்புக் கழகத்தைத் தொடங்கினார். மற்றொன்று, அதன் வழியாக மூடநம்பிக்கை ஒழிப்பு தொடர்பான மசோதா ஒன்றை மகாராஷ்டிர சட்டப்பேரவையில் கொண்டுவர முனைந்தார். அந்த மசோதா இந்துமதப் பாரம்பரியத்துக்கு எதிரானது என்று ஆளும் பி.ஜே.பி.யும் சிவசேனாவும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, மசோதா கிடப்பில் போடப்பட்டது. அந்தச் சமயத்தில்தான் தபோல்கர் படுகொலையும் செய்யப்பட்டார்.

இதையடுத்து தபோல்கரைச் சுட்ட துப்பாக்கிக் குண்டுகளை வைத்து, மகாராஷ்டிர போலீஸார் கடந்த 2014இல் நகோரி மற்றும் கண்டேல்வால் ஆகிய இரண்டு ஆயுதக் கடத்தல் நபர்களைக் கைது செய்தார்கள். அதன்பிறகு, அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். சி.பி.அய். விசாரித்த இந்த வழக்கில், சனாதன் சன்ஸ்தா என்கிற மதச்சார்பு அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் வீரேந்திர சிங் தாவ்டே கைது செய்யப்பட்டார். தாவ்டேவுடன் வினய் பவார் மற்றும் சாரங் அகோல்கர் ஆகிய இருவரையும் வழக்கில் முதன்மைக் குற்றவாளிகளாகச் சி.பி.அய். அறிவித்தது. அதோடு மட்டுமல்லாமல், அவர்கள் இருவரும்தான் தபோல்கரைச் சுட்டதாகவும் சொன்னது. மேலும் அவர்கள் இருவரையும் பற்றித் துப்பு கொடுப்பவர்களுக்கு அய்ந்து லட்சம் ரூபாய் சன்மானம் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. சி.பி.அய். குற்றப்பத்திரிகையில்கூட அவர்கள்தான் குற்றவாளிகள் என்றும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. தாவ்டே குற்றவாளி
எனக் குறிப்பிடப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தார். அவருக்கும் சி.பி.அய். முதன்மைக் குற்றவாளியாகக் குறிப்பிட்ட அகோல்கருக்கும் தொடர்பு இருந்தது என்று சஞ்சய் சத்வில்கர் என்கிற இந்துத்துவ செயற்பாட்டாளர் ஒருவரும் சாட்சியம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கவுரி லங்கேஷ்

கன்னட வார இதழான ‘லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியரான கவுரி லங்கேஷ் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி பசவன்குடியில் உள்ள லங்கேஷ் பத்திரிகை அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குச் சென்றபோது வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் சுடப்பட்டார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கவுரி லங்கேஷின் மார்பு. கழுத்து, வயிறு பகுதியில் மூன்று இடங்களில் குண்டு பாய்ந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் இருவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

விசாரணையில் இந்துத்துவ அமைப்பின் முக்கிய நிர்வாகி நவீன்குமார் என்பதும் ஸ்ரீராம் சேனாவைச் சேர்ந்த சுஜித்குமார் (எ) பிரவீன், பரசுராம், வாக்மோர் உள்ளிட்ட அய்ந்து பேர் குறித்த விவரம் கிடைத்தது. பிரவீனைக் கைது செய்து விசாரித்தபோது, கவுரி லங்கேஷைக் கொல்ல ‘ஆபரேஷன் அம்மா’ என்ற திட்டத்தை வகுத்ததும், அதை நிறைவேற்றச் சிந்தகியைச் சேர்ந்த பரசுராம் வாக்மோரைத் தேர்வுசெய்து பெல்காமில் துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

குற்றவாளிகளிடமிருந்து முக்கியமான டைரி ஒன்றையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். அதில் 10 முற்போக்கு எழுத்தாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற வழுவான ஆதாரங்களைச் சிறப்புப் புலனாய்வு டீம் சேகரித்துள்ளது.

கவுரி லங்கேஷ் வழக்கில் கைதாகியுள்ள பரசுராம், வாக்மோர், பிரவீன்குமார், நவீன்குமார் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்யவும், அவர்களது குடும்பத்தினருக்கு நிதி வழங்கவும் ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் நிதி திரட்டுவதாகத் தகவல் கசிய ஆரம்பித்துள்ளது. தகவல்கள் வெளிவந்துள்ளன.

கல்புர்கி

கர்நாடகத்தில் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவர் உருவாக்கிய வீரசைவம் அல்லது லிங்காயத்து மதக் கொள்கை என்பது இந்து மதத்தின் கொள்கைக்கும் வழிபாட்டு முறைக்கும் முற்றிலும் எதிரானது. பசவரின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட பார்ப்பன ஜாதியப்படியில் மேல்நிலையில் இருந்தவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் அவரது மதத்தில் இணைந்து அவர்களுக்கிடையே திருமண உறவும் நிலவியது. இருப்பினும், குமரி மாவட்டத்தில் அய்யா வைகுந்தரை தன்னுள் அடக்கிக் கொண்டதைப் போலவே, பசவரையும் லிங்காயத்துகளையும் பார்ப்பனியம் காலப்போக்கில் உட்செரித்துக் கொண்டது. இந்துத்துவ ஜாதிய அமைப்பை எதிர்த்து உருவாகிய. லிங்காயத்துக்கள் பின்னாளில் பார்ப்பனியத்துடன் சங்கமித்து தாழ்த்தப்பட்டோரை மிருகத்தனமாக ஒடுக்கும் ஆதிக்க ஜாதியாக மாறிப் போயினர்.

பசவரின் வீரசைவம் என்பது பார்ப்பனியத்தின் வேதங்களையும் ஜாதிமைப்பு முறையையும் நிராகரித்ததையும், பசவர் ஒற்றைக் கோட்பாட்டைக் கொண்டவராகவும் உருவ வழிபாட்டை நிராகரித்தவராக இருந்ததையும், அவரது கொள்கைகளை ஏற்று அவரது புதிய மதத்தில் இணைந்தவர்களே லிங்காயத்துகள் என்பதையும் தனது ஆய்வு நூலான ‘மார்கா’வில் கல்புர்கி நிரூபித்துக் காட்டினார். பசவரின் வச்சனா எனும் இசைக் கவிதைகளை ஆய்வு செய்த கல்புர்கி, லிங்காயத்துகளின் இன்னொரு கடவுளான சென்னபசவர், தாழ்த்தப்பட்டவருக்கும் பசவரின் சகோதரிக்கும் பிறந்தவர் என்றும் கூறினார். இந்த ஆய்வு முடிவுகள் 1989இல் வெளியானதும் லிங்காயத்துகள் போராட்டங்களை நடத்தி அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர். எழுத்தாளர் பெருமாள் முருகனை மிரட்டியது போலவே கல்புர்கிக்கும் நெருக்குதல் கொடுத்து அவருடைய நூலின் சில பகுதிகளை நீக்கம் செய்ய வைத்தனர். என் ஜாதியை கல்புர்கி இழிவுபடுத்திவிட்டார் என்று கிளம்பிய லிங்காயத்து ஜாதிவெறியர்களைத் திரட்டிக் கொண்டு இந்துவெறியர்கள் தமது நோக்கங்களை ஈடேற்றி வருகின்றனர்.

கல்புர்கியின் இறுதி ஊர்வலம்

இந்துவெறி காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து தார்வாட் நகரில் பெருந்திரளான உழைக்கும் மக்கள் பங்கேற்ற கல்புர்கியின் இறுதி ஊர்வலம் நடந்தது.
லிங்காயத்துகளின் பார்ப்பனமயமாதலைத் தொடர்ந்து விமர்சித்து வந்த கல்புர்கி, கர்நாடகத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், கல்புர்கியின் வீட்டின் மீது இந்துவெறியர்கள் கல்வீசித் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
நாத்திகப் பிரச்சாரம் செய்தாலோ, வரலாற்று வகைப்பட்ட கேள்விகளை எழுப்பினாலோ, இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்திவிட்டதாக இந்துவெறியர்கள் அலறுகிறார்கள். அரசு பதவியில் இருக்கும் இந்துவெறியர்கள், மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு விரோதமாக அரசு நிகழ்ச்சிகளையே மதச் சடங்குகளாக்குகிறார்கள். மத நம்பிக்கையை அரசு மேடையில் நின்று பிரச்சாரம் செல்கிறார்கள். அவர்களுக்கு அந்த உரிமை உண்டாம். ஆனால், பகுத்தறிவாளர்கள் தங்களது நாத்திகக் கருத்தை மனதுக்குள்ளே வைத்துக் கொள்ள வேண்டுமாம். வெளியே பேசினால் அது இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்துமாம். அறிவியல் வழிபட்ட நாத்திகக் கருத்தை தனிப்பட்ட நம்பிக்கை போல வைத்துக்கொள்ளச் சொல்லி, இந்துத்துவக் கருத்துகளை தாராளமாக வெளியில் பேசுவதையே மதச்சார்பின்மையாக மாற்றிவருகிறது பார்ப்பன பாசிசம்.

பன்சாரே

கல்புர்கி கொலைக்கு முன் கடந்த பிப்ரவரி 16 அன்று மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் 82 வயதான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான கோவிந்த் பன்சாரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். “சிவாஜி யார்?’’ என்ற பன்சாரோவின் நூல், சிவாஜியை இந்துத்துவ பேராண்மையின் சின்னமாகக் காட்டும் சிவசேனா – ஆர்.எஸ்.எஸ். புரட்டல்களைத் தோலுரித்துக் காட்டியது. இந்து மதத்தையும் ஜாதியையும் இழிவுபடுத்திவிட்டதாக மூட நம்பிக்கை எதிர்ப்பாளர்கள் மீது தொடர்ந்து அவதூறு வழக்கு தொடுப்பதோடு வெளிப்படையாக மிரட்டல்கள் நடத்தி வரும் “சனாதன் சன்ஸ்தா’’ என்ற இந்துவெறி பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளையும், கோட்சேவுக்கு சிலை எழுப்புவதையும் எதிர்த்து நின்றவர்தான் பன்சாரே. பன்சாரே கொலையையொட்டி சனாதன் சன்ஸ்தா என்ற இந்துவெறி அமைப்பைச் சேர்ந்த சமீர் கெய்க்வாட் என்பவனை மகாராஷ்டிர போலீசு கைது செய்துள்ளபோதிலும், அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களைக் கைது செய்யவோ, அப்பயங்கரவாத அமைப்பைத் தடை செய்யவோ முன்வரவில்லை.

எனவே, இப்படிப்பட்ட மனித விரோதக் கும்பல்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பெரும் எதிரணியைக் கட்டமைத்து, அவர்களின் சதிகளை முறியடித்து, பகுத்தறிவை மக்கள் மத்தியில் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கட்டாயக் கடமையாகும். இதை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியவர்கள் தமது அறிக்கையில் கீழ்க்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள அடிப்படைக் கடமைகளுள் முக்கியமான அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், கேள்வி கேட்கும் உணர்வு, சீர்திருத்தம் ஆகியவற்றை ஒவ்வொரு குடிமகனும் கடைப்பிடித்துப் பரப்ப வேண்டும் என்பதாகும்.

சுயநலத்திற்காக ஊக்குவிக்கின்றன. மூடநம்பிக்கைகளை வளர்ப்பது மட்டுமல்ல, மூடநம்பிக்கைகளுக்கு It shall be the duty of every citizen of India, to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform.-Article 51 a(h), the Constitution of India

தடைக்கற்களைப் போடுவது ஏன்?

ஆனால், நம் நாட்டில் அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வேண்டியிருப்பது போலவே, அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றவும் போராட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அறிவியல் மனப்பான்மையைப் பரப்புவதற்கான களங்களில் ஈடுபடும் போதெல்லாம் அரசின் இயந்திரங்களே அதற்குத் தடைக்கற்களைப் போடுகின்றன. பொதுக்கூட்டங்களுக்கும், பேரணிகளுக்கும் அனுமதி வழங்குவதில் எவ்வளவு இடையூறுகளை ஏற்படுத்த முடியுமோ அத்தனை வகை இடையூறுகளையும் காவல்துறையினர் ஏற்படுத்துகின்றனர். ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்களுக்குச் சென்று அனுமதி பெற்றுவர வேண்டிய சூழல்களெல்லாம் உருவாக்கப்பட்டதுண்டு.

மூடநம்பிக்கை ஊர்வலங்கள் மதத்தின் பெயரால், கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் நாளும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. அவற்றை மக்களுக்கு எடுத்துக்காட்டி விளக்கி, மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிகளை, செயல்விளக்க நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்று நாம் முனையும் போதெல்லாம் தடைகளைக் கொண்டு வந்து நிறுத்துபவை அரசு இயந்திரங்களே!

அறிவியல் மனப்பான்மை வளர்க்கும்‘திராவிட மாடல் ஆட்சி’!
ஆனால், இன்று நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்திடவும். மக்களுக்கு அறிவுப் பாதையைத் திறந்து விடவும். ஏராளமான புதிய புத்தகங்களை அரசு நிறுவனங்கள் மூலம் வெளியிடுதல், நாடு முழுவதும் புத்தகக் கண்காட்சிகளுக்கு ஆதரவு, பள்ளி மாணவர்களிடம் அறிவியல் பரப்புரை, அனைத்துக்கும் முத்தாய்ப்பாக மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என “அறிவுத் திருப்பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாற்றம் அனைத்துத் தரப்பினராலும் உணரப்பட வேண்டியதாகும்  குறிப்பாகக் காவல்துறையினரால்!

செய்தி ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் மூடநம்பிக்கைகளுக்குத் தரும் விளம்பரம் அருவெறுக்கத் தக்கது.
கடந்த வாரம் கூட திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு வயது குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு ராஜா என்பவர், அம்மன் கோவில் தீமிதி
விழாவில் பங்கேற்றபோது தடுக்கி விழுந்ததில் அந்தக் குழந்தைக்கு 36 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் செய்தியை அறிந்து நெஞ்சம் பதறவில்லையா? இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தக் காட்டுமிராண்டித்தனங்கள் தொடர்வது? இவை குறித்தெல்லாம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டியது ஊடகங்களின் கடமை இல்லையா?

சூரிய மறைப்பு, சந்திர மறைப்பு போன்ற இயற்கை வானியல் நிழ்வுகள் நடக்கும்போதெல்லாம் அவற்றை முறியடிக்கும் விதமாக அறிவியல் விளக்க நிகழ்ச்சிகளை நாம் நடத்தினாலும், புதிது புதிதாக ‘உலக்கை நிற்கிறது’. ‘பாத்திரத்தில் தண்ணீர்’ என்று ஏதாவது ஒன்றுக்கு அதிக முக்கியத்துவம் தந்து விளம்பரப்படுத்துபவை அறிவியல் கண்டுபிடிப்புகளால் உருவான தொலைக்காட்சிகளும், ஊடகங்களுமே என்பது எத்தகைய முரண்?
அரசமைப்புச் சட்டமும் (1950, அதில் 51ஏ(ஹெச்) என்ற இந்தப் பிரிவும் (1976) வருவதற்கு முன்பிருந்தே இந்தப் பணியைத் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும், தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டு, பொன் விழா கண்டுள்ள பகுத்தறிவாளர் கழகமும் தொடர்ந்து செய்து வருகின்றன. இவ்வியக்கங்களின் இடைவிடாத பணி காரணமாக சுற்றிச் சூழ்ந்திருக்கும் மூடநம்பிக்கைப் பிரச்சாரங்களையும் ஊடகங்கள் அவற்றிற்குத் தரும் அதீத விளம்பரங்களையும் கடந்து அடிப்படையான மனமாற்றம், அறிவு வளர்ச்சி பெருமளவில் நந்து வருவதை நம்மால் கண்கூடாகக் காண முடிகிறது. பெரியார் தொண்டர்களின் உழைப்பு ஒருபோதும் வீண் போவதில்லை என்ற ஊக்கத்தோடு நம் பணியைத் தொடரவேண்டும்.

பகுத்தறிவாளர் கழகம் புது முறுக்கோடு செயல்பட்டு வருவதும் பாராட்டுக்குரியது. அதன் செயல்வீரர்களான பொறுப்பாளர்கள் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு அமைப்புகளை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
நாளும் நடக்க வேண்டிய பகுத்தறிவுப் பரப்புரையை இன்னும் பொருத்தமாக நடத்த வேண்டிய இன்னொரு நாள்தான் ஆகஸ்ட் 20.

டாக்டர் நரேந்திர தபோல்கரின்நினைவு நாளில்…

அறிவியல் மனப்பான்மையைப் பரப்பவும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரவும் தொடர்ந்து பாடுபட்டுவந்த “மகாராட்டிர அந்தர்ஸ்ரத்த நிர்மூலன் சமிதி’’யின் தலைவர் டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்கள் இந்துத்துவ பயங்கரவாதிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நாள் தான் ஆகஸ்ட் 20. அதனை தேசிய அறிவியல் மனப்பான்மை நாளாக முன்னெடுத்து, இந்திய பகுத்தறிவாளர் இயக்கங்களின் கூட்டமைப்பு (FIRA) தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அறியாமை இருள் விரட்ட பகுத்தறிவு விளக்க நிகழ்ச்சிகள் – நாடெங்கும் நடத்துங்கள்!
அதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகளை 20.8.2023 அன்று தொடங்கி 31.8.2023 அன்று வரை நடத்திட பகுத்தறிவாளர் கழகம் திட்டமிட்டுள்ளது. அரங்கக் கூட்டங்களாகவும், கருத்தரங்குகளாகவும் வாய்ப்பிருக்கும் இடங்களில் தெருமுனைக் கூட்டங்களாகவும், கருத்தரங்குகளாகவும், ‘மந்திரமா? தந்திரமா?’ அறிவியல் விளக்க நிகழ்ச்சிகளாகவும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பகுத்தறிவாளர்களையும், அறிவியல் சிந்தனையாளர்களையும், கல்வியாளர்களையும், மாணவர்களையும் ஒருங்கிணைத்து இந்த நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்துவதுடன், பகுத்தறிவாளர் கழகத்தின் பணிகளில் இத்தகையோரை இணைத்துச் செயல்படுவதற்கும் இந்நிகழ்ச்சியை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

அறிவியல் மனப்பான்மையை உருவாக்குவோம்! அறியாமை இருளை விரட்டுவோம்!’’ என்று ஆசிரியர் அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
எனவே, ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலுக்கும், வழிகாட்டலுக்கும் இணங்க நாம் ஒவ்வொருவரும் மூடநம்பிக்கைகளை ஒழிக்கவும், பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பரப்பவும் பெருமளவிற்கு முயற்சிகளை கூட்டாகவும், தனிப்பட்ட நிலையிலும் மேற்கொள்ள வேண்டியது கட்டாயக் கடமையாகும். மதவாத பாசிச சக்திகளை முறியடிக்கவும், மக்களாட்சி, அரசியல் சாசனம், மதச் சார்பின்மை, சமூக நல்லிணக்கம், சமூகநீதி, சமத்துவம் காக்கவும் அது பெரிதும் உதவும்! ♦