மாநில உரிமைகள் காப்பாற்ற – உயர்
மனித நேயமும் தழைத்தோங்க
நானிலம் வியக்கக் களம்நிற்பார் – என்றும்
நமது முதல்வர் தளபதியார்!
சட்டம் ஒழுங்கு சரியாக – யார்க்கும்
சமூக நீதி கிடைத்திடவே
திட்டம் பலவும் நிறைவேற்றி – வளம்
திகழ்ந்திட முதல்வர் உழைக்கின்றார்!
பெரியார் அண்ணா கலைஞர்வழி – நாளும்
பெருமித நடையும் போடுபவர்!
நரியார் கொட்டம் ஒடுங்கிடவே – வேண்டும்
நற்பணி தேர்ந்து நாடுபவர்!
கூட்டாட் சிக்கே உலைவைக்கும் – நச்சுக்
கொள்கை உடையோர் நடத்துகிற
ஆட்டம் பொழுதும் கண்டுமனம் – குமுறி
அரிமா போலும் ஆர்த்தெழுவார்!
எழுபதில் சுவடும் பதிக்கின்றார் – நமது
எழுச்சித் திராவிட நாயகனும்
விழுமியம் நாட்டில் சேர்த்திடுவார் – உலகே
வியக்கும் வெற்றிகள் குவித்திடுவார் !
முதல்வருள் முதல்வர் இவரேதான் – புகழ்
முத்து வேலரின் பெயரனிவர்!
பதவிகள் பலவும் படிப்படியாய் – உழைப்பால்
பாங்குறச் சிறந்த கலைஞர்மகன்!
மதத்தை மடமைச் சழக்குகளைத் – தமிழ்
மண்ணில் விதைக்கத் துடிக்கின்ற
எதற்கும் ஆகார் தீங்கழித்தே
இனமா னத்தைக் காத்திடுவார்!
துறைகள் அனைத்தும் முன்னேற்றம் – காணத்
தொடர்ந்து களப்பணி செய்கின்றார்!
முறையாய் மக்கள் குறைபோக்கும் – நமது
முதல்வரை வாழ்த்தி மகிழ்வோமே!