இந்து என்ற சொல்..

ஏப்ரல் 16-30

– ம.கிருச்ணமூர்த்தி

அறநிலையத்துறைப் பணிக்கு தேர்வாணையம் நடத்தும் தேர்வில் ஆறுமுகநாவலர் எழுதிய இந்து மத இணைப்பு விளக்கம் எனும் நூலிலிருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும்.  அதில் இந்து மதம் பற்றி ஒரு விளக்கம். இந்து=இம்+து. அதாவது மற்ற உயிர்கள் இம்சிக்கப்படும்போது அதைத் தனக்கு வந்த துன்பமாக நினைத்துத் துக்கப்படுபவன் இந்து என்று எழுதியிருக்கிறார் ஆறுமுக நாவலர்-என்ற தகவலை உண்மை டிசம்பர் 16.31 -_ 2011 இதழில் படித்து அதிர்ந்து போனேன். ஜாதி, சமய சழக்கை விட்டேனடி என்று பாடிய இராமலிங்க அடிகள்மீது வழக்குத் தொடுத்த பேரறிவாளர்தான் இந்த ஆறுமுக நாவலர். தமிழ், வடமொழியைக் கற்றவராயினும் தமிழ்த் தன்மான உணர்வு அற்றவர் ஆறுமுக நாவலர்.

இந்து என்ற சொல் முதலில் வடமொழியும் அல்ல. தமிழும் அல்ல. அது அராபியர்களால் வெளிப்படுத்தப்பட்ட சொல். அரபிச் சொல். அதை எப்படி நாவலர் வடசொல்லாக்கி பதம் பிரித்துச் சொல்ல இயலும்? அத்துடன் பதம் பிரித்துச் சொல்லப்பட்ட விளக்கத்தில் கடுகளவாவது உண்மை உள்ளதா? எத்தனை முரண்?

ஆரியர்கள் அக்காலத்தே யாகங்கள் நடத்தி ஆடு, மாடு, குதிரைகளைப் பொசுக்கித் தின்றதை ரிக் வேதம் கூறுவதையும், குதிரைக் கறியை எவ்வாறு வெட்ட வேண்டும், வாட்ட வேண்டும், யார் யாருக்கு எந்தெந்த உறுப்புகளைத் தரவேண்டும் என்றெல்லாம் ரிக் வேதம் கூறுவதை வடமொழிப் புலமையாளர் நாவலர் அறிந்தாரில்லையா?

எப்படியெல்லாம் தமிழனை பார்ப்பனீயத்திற்கு அடங்கி ஒடுங்கி ஆதரவுக் கரம் நீட்டி, தமிழ்ச் சமுதாயத்தைக் கேவலப்படுத்தியுள்ளார்கள் என்று அறிய மனம் கொதிக்கிறது.

இந்து என்ற சொற்பிறப்பும் இவ் இந்துக்கள் என்ன குணநலன்களை உடையவர்கள் என்பதையும் கஜினி முகமதுவுடன் வந்த அல்பரூணி என்பவரின் கூற்றை அருணனின் எழுத்திலிருந்து எடுத்துக் காட்டலாம்.

ஜவஹர்லால் நேரு அழுத்தந்திருத்தமாக எழுதியிருக்கிறார். பிராமணியமும் பவுத்தமும் ஒன்றின் மீது ஒன்று வினை மற்றும் எதிர்வினை ஆற்றின. இவற்றின் இடையே தர்க்கரீதியான முரண்பாடுகள் இருந்தபோதிலும் அல்லது அவற்றின் காரணமாகவும் ஒன்றையொன்று நெருங்கி. தத்துவத் துறையிலும் சரி, வெகு மக்கள் நம்பிக்கையிலும் சரி. இரண்டு துறைகளிலும் போட்டியாளர்களாக இயங்கியவை பிராமணியமும் பவுத்தமும் என்கிறார். கருத்தளவிலும் இவை இயங்கின, நடைமுறை வாழ்விலும் இவை இயங்கின.

புகழ்பெற்ற மார்க்சிய வரலாற்றாளர் டி.டி.கோசாம்பி பிராமணியத்தை பல கூறுகளைக் கொண்ட தொகுப்பு எனும் பொருளிலேயே குறிப்பிடுகிறார். இன்னும் வாழுகிற சமஸ்கிருத இலக்கியமானது பிராமணர்களால் இயற்றப் பட்டவை அல்லது அவர்கள் வசம் இருந்தவை அல்லது ஏதேனும் ஒருவகையில் பிராமணிய முத்திரை கொண்டவை என்கிறார். இன்னொரு இடத்தில் பிராமணியத்தின் இதரக் கூறுகளும் ஆரியருக்கு முந்திய அம்சங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன என்கிறார்.

இந்து தர்மம் அல்லது இந்து மதம் என்று ஏன் இதைக் குறிப்பிடக்கூடாது என்கிற சந்தேகம் எழலாம். இந்து என்கிற சொல்லே மிகவும் பிற்காலத்தில் எழுந்தது. பிராமணியம் என்பதுதான் பிராமணியவாதிகள் ஆதிநாளில் தங்களுக்கு கொடுத்துக் கொண்ட பெயர். இந்து மதம் என்பதோ வெளியிலிருந்து வந்த படையெடுப் பாளர்கள் இவர்களுக்கு வைத்த பெயர். ஆப்கானிஸ்தானத்திலிருந்து இந்த பூமிக்கு படை நடத்தி வந்தவர்கள் சிந்து நதியைத் தாண்டி வந்தார்கள். சிந்து என்பது மருவி இந்து ஆகியிருக்கலாம். இது கி.பி.11ஆம் நூற்றாண்டு வாக்கில் நடந்த சங்கதி.

முஸ்லிம் நூலாசிரியர்களின் எழுத்துக்களில் தான் இந்துக்கள் என்கிற சொல்லாடலைச் சந்திக்கிறோம். கஜினி முகமது இங்கே படையெடுத்து வந்தபோது கூடவே ஒரு வரலாற்றாளரைக் கூட்டி வந்தான். அவர்தான் அல்பேருணி (கி.பி.973-_1048)-. வென்ற கஜினி முகமது கொள்ளையடித்த செல்வத்துடன் திரும்பிப் போனான். ஆனால், அல்பேரூணி இங்கேயே தங்கினார். 13 ஆண்டுகள் தங்கியவர் சமஸ்கிருதம் பயின்றார். அதிலிருந்த நூல்கள் பலவற்றை அரேபிய மொழியில் பெயர்த்தார். அரேபிய மொழியாக்கத்தில் இருந்த கிரேக்க இலக்கியங்களை சமஸ்கிருதத்தில் தந்தார். இப்படியாக இந்த மண்ணின் மக்களுக்கு மேற்குலகச் சிந்தனைகள் அறிமுகமாயின ஒரு முஸ்லிமின் புண்ணியத்தால்! பிராமணியவாதி களுக்குத்தான் வெளியிலிருந்து கற்றுக் கொள்ள ஏதுமில்லை என்கிற நினைப்பு இருந்ததே! பேரூணி எழுதிய புகழ்பெற்ற நூல் கிதாப் உல் ஹிந்த் என்பது. அதாவது ஹிந்த் என்கிற சொல் எழுத்துலகில் புகுந்தது. இவருடைய எழுத்துக்களில்தான் இந்துக்கள் என்பதையும் தரிசிக்கிறோம்! அவர் எழுதியிருக்கிறார்.

சொஸ்தம் செய்வதற்கு மருந்து இல்லாத ஒரு வியாதியாக மடமை இருந்தது என்றே நாம் சொல்ல முடியும். தங்களுடையதைத் தவிர, வேறு நாடு இல்லை, தங்களுடையதைத் தவிர, வேறு தேசம் இல்லை; தங்களுடையவரைத் தவிர வேறு ராஜாக்கள் இல்லை; தங்களுடையதைத் தவிர வேறு மதம் இல்லை, தங்களுடையதைத் தவிர வேறு ஞானம் இல்லை என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இவர்கள் இறுமாப்பு கொண்டவர்கள், முட்டாள்தனமான வெற்றுப் பெருமையாளர்கள், சுய அகந்தையாளர்கள், அசமந்தங்கள். தாங்கள் அறிந்ததைப் பிறருக்குச் சொல்லித் தருவதில் கருமிகள்.

தங்களது சொந்த மக்களுக்குள்ளேயே பிற ஜாதியைச் சார்ந்தவர்களிடமிருந்து அதை (அறிவை) மறைப்பதற்கு முடிந்த அளவுக்கு முயற்சி செய்கிறவர்கள். அந்நியர்களிடமிருந்து அதை மறைப்பதற்கு இன்னும் அதிக அளவு முயற்சி செய்கிறவர்கள். குரசன் மற்றும்  பெர்சிசில் உள்ள ஏதேனும் ஞானம் அல்லது எந்தவொரு ஞானி பற்றி நீங்கள் சொல்ல ஆரம்பித்தால் உங்களையொரு முட்டாளாகவும் பொய்யராகவும் இவர்கள் நினைப்பார்கள். அந்த அளவுக்கு இறுமாப்போடு இருப்பார்கள். இவர்கள் வெளி நாடுகளுக்குச் சென்று அங்குள்ளவர்களுடன் கலந்தால் விரைவில் மனம் மாறுவார்கள். இந்தத் தலைமுறையினரைப் போல இவர்களது மூதாதையர்கள் இவ்வளவு குறுகிய மனத்தவராக இருந்ததில்லை. இங்கு இந்துக்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகிறது. இந்தத் துணைக் கண்டத்தின் வெகு மக்களை அல்ல, இதன் பிராமணியவாதிகளையே அப்படி விளித்திருக்கிறார். – (காலந்தோறும் பிராமணியம் – அருணன்)

அய்ரோப்பியர்கள் நம் நாட்டிற்கு வந்த பின் அபே.ஜெ.துபுவா என்ற பிரஞ்சுக்காரர் எழுதிய இந்திய மக்கள் _ மதம், பழக்கவழக்கங்கள் _ நிறுவனங்கள் என்ற நூலிலிருந்து ஒரு சிறு துளியையும் படியுங்கள்:

மூடநம்பிக்கை ஆழமாக வேரோடி இருக்கும் நாட்டில், பிராமணனுக்கு நல்ல வாய்ப்புகள் உளளன. பிரயாணம், நோய், சண்டைச் சச்சரவு, சகுனம், கெட்ட கனவு போன்ற ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் மக்களிடையே உள்ளன. இவை எல்லாவற்றிற்கும் பிராம்மணனையேஅனைவரும் நாடுவர். பஞ்சாங்கத்தைப் பார்த்து எதற்கும் ஒரு வரி சொல்லக்கூடிய திறமை அவனுக்கு இருந்தது. நல்ல நாள், கிரகங்களின் போக்கு, அதிர்ஷ்டநேரம் போன்ற எல்லாவற்றையும் ஆராய்ந்து அவன் தீர்வு சொல்வான். அவர்களுக்கு கொடுக்கப்படும் சன்மானத்தைப் பொறுத்து தீர்வுகள் கூறப்படும். போலி மருத்துவர் போல எந்த நோய்க்கும் ஒரு மருந்தைக் கூறுவான். தங்களிடம் வருபவர்கள் நன்றாக சன்மானம் அளிப்பார்கள் என்று தெரிந்துகொண்டால், அவர்களுக்குப் பொருந்துமாறு ஏதாவது கதையைச் சொல்லி விடுவார்கள். ஏமாற்றுவதால் லாபம் கிடைக்குமென்றால் அவர்கள் அதற்காகத் தயங்குவதில்லை.

பிராமணன் என்றால் யார் என்று எனக்குப் பழக்கமான ஒருவரிடம் கேட்டேன். பொய்யும், ஏமாற்று வேலையும் நிறைந்த எலும்புப் புற்று போன்றவன் என்று பதில் வந்தது. இதைவிட சிறப்பாக ஒருவனை வர்ணிக்க முடியாது. இந்துக்கள் உண்மையை மறைப்பதில் வல்லவர்கள். ஆனால், பொய் சொல்வதில் பிராமணனை மிஞ்ச எவரும் கிடையாது. அக்குணம் அவர்களிடம் அவ்வளவு ஆழமாக ஊறிவிட்டது. வெட்கப்படுவதற்குப் பதிலாக அவர்கள் பெருமைப்படுவார்கள்.

ஒரு நாள் என்னிடம் இரு பிராமணர்கள் வந்தனர். மக்களின் ஏமாளித்தனத்தில் நம்பிக்கை வைத்தவர்கள். கிறிஸ்தவம் பற்றி பேச்சு வந்தது. பல கடவுள் கோட்பாட்டைவிட, கிறிஸ்தவம் சிறந்தது என்பதை இருவரும் ஒப்புக் கொண்டனர். நீங்கள் கூறுவது உண்மை என்று அவர்கள் அடிக்கடி கூறினர். நான் கூறியது உண்மை என்றால், நீங்கள் உங்கள் மக்களுக்கு உபதேசிப்பது பொய், அப்போது நீங்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் என்று நான் கூறினேன். நீங்கள் கூறும் இதுவும் உண்மைதான் என்றனர். எங்களுக்கு வாழ வழி கிடைக்கிறது. அதனால் பொய் கூறுகிறோம்; நீங்கள் கூறும் உண்மையை அவர்களிடம் கூற ஆரம்பித்தால் எங்கள் வயிற்றுக்கு எதுவும் கிடைக்காது என்றனர்.

போலிப் புகழ்ச்சி அவர்களது மற்றொரு குணம். இயற்கையாகவே அவர்கள் கெஞ்சும் குணம் படைத்தவர்கள். தங்களுக்கு ஏதாவது இலாபம் கிடைக்குமென்றால் அவர்கள் கூனிக் குறுகி கெஞ்சவும் தயங்கமாட்டார்கள். சில பணக்காரர்கள், வியாபாரிகள் ஆகியோரை குறிவைத்துக் கொள்வார்கள். இந்துக்கள் பொதுவாகவே தற்பெருமை கொண்டவர்கள். இதை பிராமணர்கள் தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களை அளவுக்கு மீறி புகழ்ந்து லாபம் அடைவார்கள். அவர்களைப் பாடுவார்கள்; அவர்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் எதையாவது நினைவு கூர்ந்து அவர்களைப் புகழ்ந்து பேசுவார்கள். சில சமயங்களில் ஆசி கூறுவார்கள். பல்லாண்டுகள் அவர்கள் வாழ்ந்து எல்லா நலன்களையும் பெறுவார்கள் என்று கூறுவார்கள். இதைக் கேட்பவர்களுக்குப் பெருமை ஏற்படுவது சகஜம். இதனால் புகழ்பவர்களுக்கு நிறைய வெகுமதிகளை அள்ளி வழங்குவார்கள்.

மேலும் இப்படிப்பட்ட கோணல் கருத்துகளை தமிழகத்து அறநிலையத்துறை தேடிக் கண்டுபிடித்து மற நிலையமாகப் பணியாற்றுவது மிகவும் கண்டிக்கத்தக்கதன்றோ. ஒட்டுமொத்தத் தமிழர்களும் இதனை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டியது கட்டாயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *