விவசாய முதலமைச்சர் என்று அழைக்கப்பட்டவர் – ஓமந்தூர் ராமசாமி. அரசியலில் நேர்மை, உண்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஓமந்தூர் ராமசாமி.ஓமந்தூர் பி. ராமசாமி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் என்னும் சிற்றூரில் 1.2.1895இல் பிறந்தார். ஓமந்தூர் ராமசாமி அவர்களின் பெற்றோர் முத்துராம ரெட்டியார், அரங்கநாயகி அம்மாள் ஆவர். 1910ஆம் ஆண்டு சிங்காரத்தம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 1912ஆம் ஆண்டு அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினார். தென் ஆர்க்காடு மாவட்ட காங்கிரஸ் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார். மது ஒழிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு கள்ளுக்கடை, சாராயக்கடைகள் முன்பு நடந்த போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தினார். உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டம், அந்நியத் துணி புறக்கணிப்புப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்று கைதாகி சிறை சென்றார்.
ஓமந்தூர் ராமசாமி அவர்கள் 1947ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி தமிழ்நாடு முதல் அமைச்சராகப் பதவி ஏற்றார். ‘‘நாம் ஏற்றிருக்கும் பதவி நமக்கு வேண்டியவர்களுக்கும் பெரிய மனிதர்களுக்கும் சலுகை காட்டுவதற்காக அல்ல’’ என்ற கருத்தை அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் வலியுறுத்தினார்.
விவசாய மேம்பாட்டிற்கான பல திட்டங்களைக் கொண்டு வந்ததால் விவசாய முதல் அமைச்சர் என்று அழைக்கப்பட்டார்.