* சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்திட வலியுறுத்தி தி.மு.க.வும், ராமன் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க கோரி அ.தி.மு.க.வும் மார்ச் 26 அன்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
* முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் மார்ச் 29 அன்று அடையாளம் தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டார்.
* மின் கட்டணத்தைத் தமிழக அரசு மார்ச் 30 அன்று 37 விழுக்காடு அளவுக்கு கடுமையாக உயர்த்தியது.
* தமிழக அரசு உயர்த்திய சொத்து வழிகாட்டி மதிப்பு ஏப்ரல் 1 அன்று நடைமுறைக்கு வந்தது.
* சட்டமன்ற புதுக்கோட்டைத் தொகுதி உறுப்பினர் முத்துக்குமரன் (இ.கம்யூ) ஏப்ரல் 1 அன்று சாலை விபத்தில் உயிரிழந்தார்.
* ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில்(பர்மா) ஏப்ரல் 1 அன்று நடைபெற்ற 45 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 40 தொகுதிகளை எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக முன்னணி (NLD) வென்றது. இக்கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைகிறார்.
* கடந்த ஜனவரி 16 ஆம் நாள் அன்று நள்ளிரவு டெல்லியை நோக்கி இந்திய ராணுவப்படைகள் நகர்ந்தன என்று ஏப்ரல் 3 அன்று டெல்லி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானதால் டெல்லி பரபரப்பானது. இச்செய்தியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் ஏப்ரல் 5 அன்றும் ராணுவத் தளபதி வி.கே.சிங் ஏப்ரல் 6 அன்றும் மறுத்தனர்.
* அ.தி.மு.க.அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்களில் நலப்பணியாளர்கள் ஒருவர் ஏப்ரல் 5 அன்று தஞ்சையில் தற்கொலை செய்துகொண்டார். இதுவரை கடந்த 6 மாதங்களில் இவர்களில் 20 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
* தங்கத்தின் மீது விதிக்கப்பட்ட புதிய வரியை நீக்கிக்கொள்வதாக மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து நகைவணிகர்கள் வேலை நிறுத்தத்தை விலக்கிக்கொண்டனர்.
* பாகிஸ்தான் பிரதமர் ஆசிப் அலி சர்தாரி ஏப்ரல் 8 அன்று புதுடெல்லி வந்து இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங்கை சந்தித்தார். இந்திய – பாகிஸ்தான் சிக்கலுக்கு சுமூகத் தீர்வு ஏற்படும் என இருவரும் அறிவித்தனர்.