கேரளாவின் திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இந்து கோவில்களின் அர்ச்சகர் பணியிடங்களில் 50 சதவிகித பணியிடங்களை பார்ப்பனர் அல்லாதோரை நிரப்ப தேவஸ்தானம் முடிவு செய்து ஒரு பெரும் மாற்றத்திற்கு வழி கோலியுள்ளது. திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கு உட்பட்டு கேரளாவில் 2,000 கோவில்கள் உள்ளன. கடந்த 6 மாதத்திற்கு முன்பு அர்ச்சகர் பணியிடங்களுக்கான நேர் காணல்கள் அனைத்து ஜாதியினரைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கும் நடத்தப்பட்டு, 199 அர்ச்சகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 40 சதவிகிதம் பேர் பார்ப்பனர் அல்லாதோர் ஆவர் என தேவஸ்தான போர்டு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலும் இந்து அறநிலையத்துறைக் கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க தமிழக அரசு முடிவெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.