அய்யாவின் அடிச்சுவட்டில்…இயக்க வரலாறான தன் வரலாறு (306)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் டிசம்பர் 16-31 2022

டில்லி பெரியார் மய்யம் இடிப்புக்கு சைதையில் வி.பி.சிங் கலந்துகொண்ட கண்டனக் கூட்டம்!
கி.வீரமணி

டில்லியில் பெரியார் மய்யம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள், 15.12.2001 அன்று சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அங்கு எனது தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அன்று மாலை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் வி.பி.சிங் அவர்கள் ஆற்றிய உரை உணர்வுபூர்வமானது, வரலாற்றுச் சிறப்புமிக்கது. பெரியார் மீதும், நமது இயக்கத்தின்மீது அவர் கொண்டிருந்த அளவற்ற பற்றையும், பிணைப்பையும் அது வெளிப்படுத்தியதோடு, அநீதிக்கு எதிரான அவரது ஆவேசத்தையும் அது வெளிப்படுத்துவதாய் அமைந்தது. அவ்வுரை வருமாறு:
பெரியார் மய்யம் எதற்காகக் கட்டப்பட்டிருக்கிறதென்றால், கல்விக்காகக் கட்டப்பட்டிருக்கின்றது. பெரியார் மய்யம் எதற்காகக் கட்டப்பட்டிருக்கிறது என்று சொன்னால், அங்கு மருத்துவ வசதிக்காகக் கட்டப்பட்டிருக்கின்றது. இப்படி ஏழை, எளிய மக்களுக்காக தொண்டுள்ளத்தோடு, நல்ல காரியங்களுக்-காகக் கட்டப்பட்டிருப்பது, டில்லி பெரியார் மய்யம்.

ஆனால் டில்லி ‘பெருநகர வளர்ச்சிக்குழுமம் எப்படிக் கட்டடம் கட்டியிருக்-கின்றார்கள் என்பதை நீங்கள் தெரிந்து-கொள்ள வேண்டும். அங்கே ஒரு கிளப் கட்டியிருக்கின்றார்கள். பலர் அங்கு வந்து குடிப்பதற்கும் நாட்டியத்தைப் பார்த்து ரசிப்பதற்கும், கூத்தடிப்பதற்கும் இப்படி ஒரு கட்டடத்தை அங்கு சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டியிருக்கின்றார்கள். இரவு முழுக்க இசை நிகழ்ச்சி நடனம் நடத்திக் கூத்தடிக்கின்றார்கள். அதனால் யாருமே தூங்கக்கூட முடிவதில்லை.
இப்படிப்பட்ட நிலையிலே டில்லி பெருநகர வளர்ச்சிக் குழுமம் தொடர்ந்து நடைபெற்றால் – நான் டில்லி பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு ஒரு எச்சரிக்கை விடுக்க விரும்புகின்றேன். உங்களுடைய கட்டடத்தை நாங்களே ஆயுதங்களைக் கைகளில் ஏந்தி தகர்த்தெறிவோம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

நீதி என்றால் அது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.
வீரமணி அவர்களே! நான் ஒன்றை உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். அந்தக் கட்டடம் இடிக்கப்
பட்ட சமயத்திலே நான் லக்னோவில் இருந்தேன். நான் மட்டும் அன்றைக்கு டில்லியில் இருந்திருந்தால் டில்லி பெரியார் மய்ய கட்டடத்தை இடிக்கும் அந்த புல்டோசர் முன்னால் நின்றிருப்பேன் (பலத்த கைதட்டல்)
நான் டில்லியில் இல்லாதபொழுது மய்ய அரசாங்கம் இடிக்கின்ற வேலையை செய்கின்றது.
நான் லக்னோவில் இருந்தபொழுது டில்லி பெரியார் மய்யத்தை இடித்தார்கள். அதேபோன்று நான் மும்பையில் இருந்த பொழுது அங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் வீடுகளை இடித்தார்கள். இந்த மாதிரி காரியத்தைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

நான் காலையில் ஒரு வேளை வந்து தடுத்து விடுவேனோ என்று நினைத்து இரவிலேயே இடித்துத் தள்ளி முடித்துவிடுகின்றார்கள்.
இங்கு கட்டடம் என்பது பெரிதல்ல. பெரியார் என்பவர் சிமெண்டும், செங்
கல்லும் அல்ல; தந்தை பெரியார் என்பவர் ஒரு தத்துவம்; பெரியார் என்பவர் ஒரு கொள்கை; பெரியார் என்பவர் ஒரு தொலைநோக்கு; பெரியார் என்பவர் ஒடுக்
கப்பட்ட மக்களின் குரலாகத் திகழ்பவர்.
எங்கெல்லாம் அநீதி நிகழ்கிறதோ அங்கெல்லாம் பெரியார் இருக்கிறார். எத்தனை கோயில்களை நீங்கள் இடிக்க வேண்டும் என்று கருதுகின்றீர்க-ள்?
பயங்கரவாதத்தை எதிர்த்து நாம் போராடத்தான் போகிறோம்.
குண்டுகளை வைத்தல்ல, – கருத்துகளை வைத்துத்தான் தீர்வு காணமுடியும்.
ஆனால் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

மதத் தீவிரவாதம் இருக்கிறதே அது வன்முறையைக் காட்டிலும் மிகப் பயங்கரமானது என்பதை உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
மதத் தீவிரவாதத்தில் ஓர் உறுதியான நிலையை நாம் எடுத்தாக வேண்டும். இங்குதான் தந்தை பெரியாரின் கருத்துகள் மிக முக்கியமானதொரு கருத்தாக இருக்கின்றது.
குண்டுகளை வைத்து நாம் எதற்கும் தீர்வு காண முடியாது. ஆனால் கருத்து
களை வைத்துத்தான் எதற்கும் நாம் தீர்வு கண்டாக வேண்டும்.
நான் சில நேரங்களிலே கடவுளைப் பார்த்து தொழ விரும்புகிறேன். ‘கடவுளே! எங்களை எல்லாம் மதத்திலிருந்து விடுவிக்கச் செய்யுங்கள் என்று தொழ விரும்புகிறேன்.

நான் குறிப்பாக வீரமணி அவர்களுக்கும், திராவிடர் கழகத் தொண்டர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்
துக் கொள்கின்றேன். ஏனென்றால், அறிவார்ந்த முறையிலே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அதற்காக உங்களை நான் பாராட்டக் கடமைப்-பட்டிருக்கின்றேன்.
டில்லியில் பெரியார் மய்யம் இடிக்கப்பட்டது என்பது ஒரு கட்சிப்
பிரச்சினை அல்ல. இது ஒரு பொதுப்பிரச்சினை. நான் ஒன்றைச் சொல்லிக்-கொள்ள விரும்புகின்றேன். எல்லா கட்சிக்காரர்களையும் சந்திப்போம்.
எல்லா கட்சிக்காரர்களும் ஒன்று சேர்ந்து நாம் பிரதமரைச் சந்திப்போம். நானும் வருகின்றேன்.
அந்தக் குழு பிரதமரோடு பேசட்டும்! ஆரிய சமாஜத்தினுடைய கட்டடம் இடிக்கப்பட்டது. பிரதமர் அவர்கள் அந்த விசயத்தில் உடனே தலையிட்டார். உடனடியாக ஆரிய சமாஜக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. அதே போன்று பெரியார் மய்யம் இடிக்கப்பட்டது. இதில் பிரதமர் வாஜ்பேயி தலையிட வேண்டும். இடித்த டில்லி பெரியார் மய்யக் கட்டடத்தை பிரதமர் மீண்டும் அப்படியே கட்டித் தரவேண்டும்.

இந்தக் கோரிக்கையை நாம் வைக்கின்றோம். இந்தக் கோரிக்கையை வைத்தபின்னால்கூட மத்திய ஆட்சியில் உள்ள பி.ஜே.பி. அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொன்னால், நாம் வேறுவிதமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டியிருக்கும். வீரமணி அவர்கள் சட்டப் புத்தகத்தில் உள்ள சட்டநடவடிக்கையை எடுத்து என்னிடத்திலே படித்துப் பார்க்கும்படி காட்டினார்கள்.
ஒரு கட்டடத்தை இடிக்கவேண்டும் என்று சொன்னால் அந்தக் கட்டடத்தை கட்டியவர்களுக்கு, கட்டட உரிமையாளர்களுக்கு, 30 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்கிற சட்டத்தை அவர்கள் காட்டினார்கள். நான் அந்தச் சட்டப்படி போக விரும்பவில்லை. நான் எந்தச் சட்டப்படி போக வேண்டும் என்று விரும்புகிறேன் என்று சொன்னால்,
மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி. அரசாங்கத்திற்கு டில்லியில் உள்ள பெரியார் மய்யத்தை அதற்குள் கட்டி முடித்துத்தர வேண்டும் என்று ஒரு அவகாசத்தைக் கொடுப்போம்.

அதற்குள்ளாக மத்திய அரசு கட்டித்தரவேண்டும் என்று நாம் கேட்போம்.
அரசாங்கம் சமூக நீதிப்படி, ஜனநாயக நெறிப்படி, உண்மைப்படி பெரியார் மய்யத்தைக் கட்டித் தர வேண்டும் என்று சொன்னால் மிக அமைதியாக, மிகப் பொறுமையாக, சட்டரீதியாக நாம் ஒரு காரியத்தைச் செய்வோம். டில்லிக்குச் சென்று பெரியார் மய்யத்தைக் கட்டி முடிப்பதற்கு _ கரசேவை செய்வதற்கு நாமே ஆரம்பித்துவிடுவோம்.
நம்பிக்கை என்பதைப்பற்றி பேசு-கின்றீர்கள். அப்படியானால் கோடிக்-கணக்கான மக்களுக்குப் பெரியார் அவர்களும் ஓர் நம்பிக்கை தானே? ஆகையினாலே பெரியார் மய்யம் கட்டும் கரசேவையைத் தொடங்கும் பொழுது முதல் கரசேவை யார் செய்வார்கள் என்று சொன்னால், நான்தான் அந்த முதல் கரசேவையைச் செய்வேன்.

இப்படி இருந்த கட்டடத்தை (கட்டடத்தின் முன்பு இருந்த தோற்றப் புகைப்படம்) இப்படி ஆக்கிவிட்டார்கள். நாம் இப்படி இருக்கின்ற (கட்டடம் இடிந்துபோன நிலையில் உள்ளதை) இடத்தை மீண்டும் இப்படி ஆக்கிக் காட்டுவோம். இதில் நாம் உறுதியாக இருப்போம். இடிக்கப்படாத பெரியார் மய்யக் கட்டடத்தையும் இடிக்கப்பட்ட கட்டடத்தின் படத்தையும் பொது மக்களிடம் காட்டிப் பேசினார்.
பயங்கர வன்முறை என்று சொல்லக்-கூடியது பாம் நொலியில் உள்ள கட்டடத்தை மட்டுமே தரை மட்டமாக்கக் கூடியது. ஆனால் மத பயங்கரவாதம் என்பது ஒரு மனிதனின் இதயத்தையே தாக்கி அழிக்கக் கூடியதாகும்.
பயங்கரவாதம் என்ற குண்டுகளை வைத்து எதையும் நாம் முடித்துவிட முடியாது. ஆனால் கருத்துகளை வைத்துத்தான் ஒரு தீர்வு காண முடியும். இப்பொழுது மதத்தின் பெயராலே நாம் ரத்தத்தைச் சிந்திக் கொண்டிருக்கின்றோம்.

இந்த நிலையிலிருந்து நம்மைக் காப்-பாற்றக் கூடியது எது என்று சொன்னால் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்றும்.
நான் தமிழகத்து மக்களைப் பாராட்ட விரும்புகிறேன். டில்லி பெரியார் மய்யம் இடிக்கப்பட்டுவிட்டது. இவ்வளவு காரியங்கள் நடந்துவிட்டன. ஆனால் நீங்கள் ஆத்திரப்படவில்லை. நீங்கள் அமைதியாகச் சிந்தித்தீர்கள். என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கைகளை முறையாக ஒழுங்காக எடுத்திருக்கின்றீர்கள். அரசாங்கமே இடித்த தவறை திருத்திக் கொள்ளட்டும் என்று சொல்லக்கூடிய வகையிலே நீங்கள் காரியம் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.
மதத் தீவிரவாதத்தைப் பற்றி உறுதியாக ஒரு நிலையைச் செய்து கொண்டிருக்கின்றீர்கள். அதற்காக தமிழக மக்களை நான்
பாராட்டுகின்றேன்.

கட்டடத்தைக் கட்டுவது என்பது ஒரு காரியம். ஆனால் அதுவே முடிந்த முடிவான காரியமல்ல. அதற்கு மேலாக கருத்து இருக்கிறது. அதற்கு மேலாக
மனிதாபிமானம் என்ற நீண்ட தொலை நோக்குப் பார்வை இருக்கிறது.
நான் இங்கே ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சொல்ல விரும்புகிறேன்.
டில்லி பெரியார் மய்யக் கட்டடத்தை இடித்துவிட்டாலும்கூட, வீரமணி அவர்கள் ஓர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதே பாம்நொலி கிராமத்திலே ஏழை -_ எளிய மக்களுக்காக டில்லி பெரியார் மய்யம் எந்தப் பணியைச் செய்து கொண்டி
ருந்ததோ அந்தப் பணியை இன்றைக்கும் அங்கு தொடர்ந்து நடக்குமாறு செய்திருக்கிறார்கள். ஆகையினாலே அப்படிப்பட்ட காரியத்-தைச் செய்த வீரமணி அவர்களை நான் பாராட்டுகின்றேன். எனக்களித்த வாய்ப்புக்கு நன்றி கூறி முடித்துக் கொள்கின்றேன். இவ்வாறு வி.பி.சிங் உரையாற்றினார்.

இந்திய தேசிய லீக் தலைவர் அப்துல் லத்தீப் அவர்கள் மறைவுற்ற செய்தி என்னை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியது. அவரது உடல்
அவரது இல்லத்திற்கு 17.12.2001 அன்று காலை 10:15 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது. செய்தியறிந்து உடனடியாக காலை 10:30 மணிக்கு லத்தீப் உடல் வைக்கப்பட்டிருந்த அவரது இல்லத்துக்குச் சென்று அவரது உடலைப் பார்த்து, தாங்க முடியாத துக்கத்துடன் கண்ணீர் சிந்தியபடி அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினோம்.
அதையொட்டி, Òஇந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ்நாடு தலைவரும், வாணியம்பாடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், நீங்காத பெரியார் பற்றாளருமான பன்மொழிப் புலவர் மானமிகு அப்துல் லத்தீப் அவர்கள் இன்று காலை 7:30 மணியளவில் சென்னை பொது மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி நமக்கு இடி விழுந்ததைப்போல இப்போதுதான் (காலை 9:50 மணிக்கு) கிடைத்தது.

நமது கழகக் குடும்பத்தில் முக்கியமான ஒருவரை இழந்து துடிக்கும் உணர்வு நம்மை மாளாத் துயரத்தில் தள்ளுகிறது!
அவருடன் நமக்குள்ள சகோதர பாசம் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்டது.
கடைசியாக அவர் கலந்துகொண்டு சிங்கம்போல் சைதையில் வி.பி. சிங் அவரின்முன், பெரியார் மய்யம் இடிக்கப்-பட்டதைக் கண்டு வேதனையுடன் முழங்கினார்.
அநீதியை எதிர்த்துப் போர் முழக்கம் செய்தபோது அவரது உடல் நலமில்லை என்றாலும்கூட, கடமையாற்றிடத் துடித்த நிலையிலேயே அவர் அந்த நிகழ்ச்சியைத் தவிர்க்க விரும்பாமல் வந்தார்.
பண்புடனும், பாசத்துடனும் எப்போதும் நம்மிடம் பழகுபவர்.

இஸ்லாமிய சமூகத்திற்கு மட்டும் அவர் தலைவர் அல்ல: திராவிடத்தின் தீரமிக்கத் தலைவர்களில் ஒருவர்.
அவரது பேரிழப்பால் தமிழ்நாட்டில் பொதுவாழ்வில் ஏற்பட்டுள்ள பள்ளம் எளிதில் எவராலும் நிரப்பப்பட முடியாத ஒன்று.
திராவிடர் கழகம் அவருக்கு தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
அவர்தம் குடும்பத்தினர், இஸ்லாமிய சமூகத்தினர் ஆகிய அனைவரது துயரத்தில் பங்குகொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டோம்.

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் தலைமையில் தூதுக்குழு 20.12.2001 மதியம் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பெரியார் மய்யம் சட்ட விரோதமாக- நியாய விரோதமாக இடிக்கப்பட்டதை எடுத்து விளக்கி, அது உருவாக்கப்பட அரசு உதவிட வேண்டும் என்று மனு
அளிக்கப்பட்டு வேண்டுகோளும் வைக்கப்பட்டது.
மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டவர்கள்:
1. திரு.வி.பி.சிங், முன்னாள் பிரதமர்
2. திரு. கான்சிராம், செயல் தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி
3. திரு டி. ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
4. திரு சந்திரஜித் யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர்- சமூகநீதி மய்யத் தலைவர்
5. திரு.கே.ஆர். கணேஷ், முன்னாள் மத்திய அமைச்சர்
6. திரு.கே. எர்ரன் நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர்- நாடாளுமன்ற தெலுங்கு தேசக் கட்சி தலைவர்.
7. திரு.பி.எச். பாண்டியன், நாடாளுமன்ற அ.இ.அ.தி.மு.க. கட்சித் தலைவர்
8. திரு.எஸ்.எஸ். சந்திரன், அ.இ.அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்
9. கே. மலைச்சாமி, நாடாளுமன்ற அ.இ.அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்
10. திரு. சோமநாத் சட்டர்ஜி, நாடாளுமன்ற மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்
11. திரு. வைகோ, நாடாளுமன்ற ம.தி.மு.க. தலைவர்
12. திரு. இரா. செழியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
13. திரு. கா. ஜெகவீரபாண்டியன், தலைவர், சமூகநீதிக் கட்சி.
14. திரு. கி.வீரமணி, செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்(பெரியார் அறக்கட்டளை).

30.12.2001 அன்று காலை திருச்சி சென்ற நான், என் துணைவியார், மற்றும் திருமதி. தங்காத்தாளுடன் சில முக்கியஸ்தர்களும் திருச்சி பெரியார் மாளிகையிலிருந்து புறப்பட்டு பிச்சாண்டார்கோவில் சென்று சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களது தந்தையார் பி.வி. சோமசுந்தரம் அவர்களது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதுடன், பி.வி. சோமசுந்தரம் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து அவரது பொதுநலத் தொண்டுகளை நினைவுகூர்ந்து இரங்கலுரையாற்றினேன்.
அதே நாளில் மாலை 6:00 மணிக்கு தஞ்சை காமராஜ் மார்க்கெட் அருகிலுள்ள வி.எஸ். மகால் மண்டபத்தில் பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி மறைந்த தஞ்சை சாமி. நாகராசன் அவர்களின் உருவப் படத்தைத் திறந்து வைத்து நினைவுரையாற்றினேன்.

பாணாவரத்தில் தந்தை பெரியார் முழுஉருவச் சிலையைத் திறந்து வைப்பதற்காக சென்னையிலிருந்து 6.1.2002 அன்று பிற்பகல் வெள்ளக்கோடு சென்றடைந்தோம். அங்கு காஞ்சி மாவட்டச் செயலாளர் டி.ஏ.ஜி. அசோகன் சால்வை அணிவித்து வரவேற்றார். பேருந்து நிலையத்தில் கல்வெட்டைத் திறந்து வைத்துக் கொடியேற்றினோம்.
தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழாவில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்
கள் பவானி கருணாகரன், ஆர். விஸ்வநாதன், கழகத் துணைப்பொதுச் செயலாளர் துரை. சக்ரவர்த்தி, பாணா
வரம் பெரியண்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் மணி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். நிறைவாக எமது உரையில் தந்தை பெரியாரின் பணிகளையும், கொள்கைகளையும் அவரால் தமிழகம் பெற்ற பலன்களையும் எடுத்துக் கூறினேன்.
வேலூர் மாவட்டம், பாணாவரம் எண் 33, அரசினர் மருத்துவமனை சாலையில் பாணாவரம் மா. பெரியண்ணன் _ராணி ஆகியோரது ‘தந்தை பெரியார் இல்லத்தை’ 6.1.2002 ஞாயிறு மாலை 5:00 மணியளவில் திறந்து வைத்து சிறப்புரையாற்றினேன். இல்லத்தின் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகத்தை’ திராவிடர் கழகத் துணைப்பொதுச் செயலாளர் துரை.சக்ரவர்த்தி திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் செயலாளரும் நடிகமணி டி.வி. நாராயணசாமியின் மருமகனுமான ஜி. இராமகிருஷ்ணன் -_ ராணி இராமகிருஷ்ணன் ஆகியோரின் மகள் டாக்டர் ஆர். விஜயலட்சுமிக்கும் தேனி மாவட்டம் என். ராமசாமி _ஆர். தவமணி ஆகியோரின் மகன் சதீஷ்குமாருக்கும் 20.1.2002 அன்று சென்னை எழும்பூர் இராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் இணையேற்பு விழா நடைபெற்றது. மணமக்களைப் பாராட்டியும் சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கியும் உரையாற்றினோம். தமிழ்நாடு சட்டப்-பேரவைத் தலைவர் டாக்டர் கா. காளிமுத்து
தமிழ்நாடு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினர்.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் ஆறாம் ஆண்டு விழா நிகழ்வாக சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியாரின் கொள்கை பற்றிய “புதுயுகத்தின் பூபாளம்” என்ற நாடகம் நடைபெற்றது. இந்நாடகம் மூலைமுடுக்குகளிலெல்லாம் வரவேண்டும் என்று இந்நிகழ்வில் கலந்துகொண்ட நீதியரசர் கே.எஸ். பக்தவத்சலம் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டார். எமது உரையில், பழமை, புதுமை இரண்டையும் கலந்து இரண்டு மணி நேரத்துக்குமேல் நேரம் போனதே தெரியாத அளவுக்கு _ ‘புதுயுகத்தின் பூபாளம்’ என்ற
இந்த நாடகத்தை அருள்தந்தை ஜார்ஜ் அவர்கள் நடத்தியிருக்கிறார்கள் என்று சொன்னால் இது சாதாரணப் பணி அல்ல, மிகப் பெரிய சாதனை என்று பாராட்டினோம்.